வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 24, 2010

அய்யா தமிழர் தலைவர் அவர்களின் களத்திலே ஒரு மாணவனாக தொடங்கினேன்...தொல்.திருமா

தமிழினத்திற்காக 24 மணிநேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற தலைவர், உழைத்துக்கொண்டிருக்கிற தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறி விளக்கவுரையாற்றினார்.


சென்னை_புரசைவாக்கம் தாணா தெருவில் 16.4.2010 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை வருமாறு:

தி.க. எடுத்த தொலைநோக்குப் பார்வை

ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டிருந்தபோது தொலைநோக்குப் பார்வையோடு தெளிவான முடிவெடுத்து ஈழவிடுதலைப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கக் கூடிய வலிமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத்தான் உண்டு என்கிற வகையிலே அந்த இயக்கத்தைத் தொடக்கத்திலிருந்து ஆதரித்து வந்த பெருமை தமிழர் தலைவர் அய்யா அவர்களையே சாரும்.

அதிலும் இன்னும் குறிப்பாக அன்று நடந்த போராட்டத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து அவர்களின் மகள் திருமணம் என்று கருதுகின்றேன். அந்தத் திருமணம் எழும்பூரில் நடைபெறுகிற அந்த நாளில்தான் தமிழர் தலைவர் அவர்கள் ஒரு ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தார்.

ரயில் மறியல் போராட்டம்

ரயில் மறியல் போராட்டம் அன்றைக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து, ஈழத்தமிழர்களுக்கு எதிரான_ஒடுக்க முறைகளைக் கண்டித்து அப்பொழுது, பெரியார் திடலிலே அந்தப் போராட்டத்திற்கான வியூகங்களை எல்லாம் வகுத்தளித்து மாணவர்கள், இளைஞர்கள் ஆங்காங்கே சென்று இங்கே ஓடுகிற அந்த மின்சார ரயிலை எப்படி நிறுத்துவது? பிரச்சினை இல்லாமல், வன்முறை இல்லாமல் எப்படி அந்த போராட்டங்களில் பங்கேற்பது என்று குறித்து வழிகாட்டுதல் தரப்பட்டது. அப்படிப்பட்ட அந்த வழிகாட்டுதலை ஏற்று, அந்த ஒரு பிரிவிலே, ஒரு டீம் அந்த ஒரு பிரிவிலே நானும் கலந்துகொண்டு அந்த ரயிலை சைதாப்பேட்டையில் நாங்கள் மறித்து நிறுத்தினோம்.

எங்களை காவல் நிலையத்தில் வைத்தார்கள்

ஆறு பேரை கைது செய்தார்கள். எங்களைக் கொண்டு போய் குரோம்பேட்டைக்கு அந்தபுறம் ஒரு காவல் நிலையத்திலே வைத்துவிட்டார்கள்.

பிறகு இரவு 7 மணிக்கு மேல்தான் எங்களை விடுவித்தார்கள். அதன்பிறகு பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் அவர்களை நாங்கள் எல்லாம் சந்தித்து விட்டு விடைபெற்றோம்.

தமிழர் தலைவர் சொன்னார்

அப்படி சந்திக்கின்ற நேரத்தில் எங்களை எல்லாம் தரையிலே உட்கார வைத்து அய்யா அவர்கள் சொன்னார்கள்_இந்த விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வலிமை தம்பி பிரபாகரன் அவர்களுக்கு மட்டும்தான் உண்டு.

அவரை ஆதரிப்பதுதான் ஈழத்தை வெல்லுவதற்கு நாம் உற்றத் துணையாக இருக்க முடியும். ஆகவே இந்த போராட்டங்களை நாம் தொடர்ந்து எடுத்துச்செல்வோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன் என்று அவர் பேசியது இன்னமும் எனக்கு நெஞ்சிலே அப்படியே பசுமையாக நினைவிருக்கிறது. அப்படி நான் முதன்முதலாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டேன்.

தி.க. நடத்திய போராட்டத்தில்தான்

சில மணிநேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டேன் என்று சொன்னால், அது திராவிடர் கழகம் அமைத்த களத்தில்தான்_-போராட்டக் களத்தில்தான் தமிழர் தலைவர் நடத்திய அந்தப் போராட்ட களத்தில்தான் அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில் நடந்த அந்தக் களத்தில்தான் நான் முதல்முறையாக கைது செய்யப்பட்டேன்.

ஆக இதை எல்லாம் நான் தமிழர் தலைவரை வைத்துக்கொண்டு பேசுவதினால் இட்டுக்கட்டிப் பேசுவதாக சிலர் எண்ணக்கூடும். அப்படிப்பட்ட தேவை எதுவும் கிடையாது.

என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் ஆரம்பமே

தமிழர் தலைவர் இல்லாத மேடைகளிலும் இதை நான் பேசியிருக்கின்றேன். இதுதான் என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் தொடக்க நிலை. எப்படி நான் நடை பயின்றேன். அரசியல் கற்றுக்-கொண்டேன். களப்பணிகளை ஆற்றக் கற்றுக்-கொண்டேன் என்பதற்கான செய்திகளாக இங்கே முன் வைப்பதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்படி அய்யா தமிழர் தலைவர் அவர்களின் களத்திலே ஒரு மாணவனாக என் பயணத்தைத் தொடங்கி இன்றைக்கு திராவிடர் மாணவர் கழக இந்த மாநாட்டிலே பங்கேற்று தமிழர் தலைவர் அய்யா அவர்கள் கொடுத்த வாய்ப்பைப் பெற்றதை எண்ணி இறும்பூது எய்துகிறேன்.

தமிழர் தலைவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்

அதற்காக என்றென்றைக்கும் நான் தமிழர் தலைவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டி ருக்கின்றேன். நேற்றைக்கு முதல்நாள் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மூன்று இயக்கமும் என்றைக்கும் இணைந்து நிற்கும் ஒரே களத்தில் நிற்கும் என்று சொன்னார்.

அப்படிச் சொல்லுகிறபொழுது அவர்கள் சொல்லுவதைப் போல நாங்கள் திரிசூலமாக இருப்போம் என்று சொல்லமாட்டோம்.

நாங்கள் முத்தமிழாக இருப்போம் என்று அழகாக அவருக்கே உரிய பாணியில் அந்த இலக்கிய நயத்தோடு, தமிழ் நயத்தோடு சொன்னார்கள். மறக்க முடியாத ஒரு நிகழ்வு

அது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம், மறக்க முடியாத ஒரு நிகழ்வு. தமிழர் தலைவர் அவர்கள் சொன்னதை அப்படியே நம்முடைய தமிழக முதல்வர் அவர்களும் வழிமொழிந்தார்.

நம்முடைய இளவல் அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். இந்த மூன்று இயக்கங்களும் ஒன்றாய் இருந்து களப்பணியாற்றும் என்று சொன்னார்கள்.

அடித்தளம் பெரியாரியம்

ஆக அடித்தளம் என்பது பெரியாரியம் என்பதை உறுதி படுத்துவதற்காக நான் சொல்லுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தார்மீகத் தலைவராக நான் ஏற்றுக்கொண்டு, அவருடைய கருத்தியல்களை இந்த அரசியல் இயக்கத்தின் கோட்பாடாக ஏற்று நான் செயல்பட்டாலும் பெரியாரியம் என்பதுதான் திருமாவளவனின் அரசியலுக்கு அடித்தளம் என்பதை என்றைக்கும் நன்றி உணர்வோடு சொல்ல நான் கடமைப் பட்டவனாக இருக்கின்றேன். இந்த எழுச்சி மிகுந்த மாநாட்டில் நீங்கள் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானங்கள் ஒவ்வொன்றும், போற்றுதலுக்குரியது, பாராட்டுதலுக்குரியது. இந்தத் தீர்மானங்களை விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆதரிக்கிறோம் (பலத்த கைதட்டல்). தேசிய அளவில் ஒரே கல்வி என்கிற திட்டத்தை இந்த மாநாடு கடுமையாக எதிர்த்திருக்கிறது. வரவேற்கத் தகுந்த தீர்மானம்.

இந்தி வாலாக்களாக மாற்ற...

பல மொழிகளைப் பேசுகிற, பல இனங்களை கொண்டிருக்கிற, பல்வேறு கலாச்சார பண்பாட்டுத் தளங்களைப் பெற்றிக்கிற, இந்த தேசத்தில் ஒரே கல்வி என்று சொல்லுவதன் பொருள் என்னவென்றால் எல்லோரையும் இந்தி வாலாக்களாக மாற்றுவது என்பதுதான் அதனுடைய பொருள். எல்லோரையும் எதிர்காலத்தில் இந்தி பேசக்கூடியவர்களாக மாற்றுவதுதான் அதன் பொருள்.

எல்லோரையும் இந்திப் பண்பாட்டுக்குள்ளே கொண்டுவந்து முடிச்சுப் போட வேண்டும். இணைத்துப் போட வேண்டும். பிணைத்துப் போட வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

இரட்டைக் கலாச்சாரம்

ஆகவே நம்முடைய கலாச்சாரத்தை, நம்முடைய பண்பாட்டை விதைப்பதற்கு அது வழிவகுத்துவிடும். உலகில் மூத்த மொழி, முதுமொழி, முதல் மொழி தமிழ் என்பதை நம்முடைய மொழி இயல் வல்லுநர்கள் ஒவ்வொருவரையும் ஆய்ந்தறிந்து சொல்லியிருக்கின்றார்கள்.

இந்தியாவிலே இரட்டைக் கலாச்சாரம்தான். ஒன்று தமிழர் கலாச்சாரம். இன்னொன்று தமிழர் அல்லாத கலாச்சாரம். இரட்டை இனம்தான் ஒன்று தமிழினம். இன்னொன்று தமிழர் அல்லாத இனம். ஆகவேதான் வடவர்கள் எப்பொழுதும் தமிழைப் பகையாகவே கருதுகிறார்கள்.

தமிழர்களைப் பகைவர்களாக.....!

தமிழர்களையும் பகைவர்களாக கருதுகிறார்கள். கன்னடம் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கு இவை எல்லாம் இந்தியை ஒருபோதும் பகையாகக் கருதியது இல்லை. சமஸ்கிருதத்தை ஒரு போதும் பகையாகக் கருதியது இல்லை. வடவர் பண்பாட்டை எதிரானப் பண்பாடாக, மாற்றான பண்பாடாகக் கருதியது இல்லை. அவர்கள் பண்பாடுதான் இவர்கள் பண்பாடு. அவர்கள் பேசுகிற மொழிதான். இவர்கள் பேசுகிற மொழி. இந்திக்கும், அவர்கள் பேசுகிற கன்னட மொழிக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. சமஸ்கிருதம் ஏராளம் கலந்திருக்கும். இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்து....

தெலுங்கிலே சமஸ்கிருதம் ஏராளம் கலந்திருக்கும். மலையாளத்தில் அப்படி சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. அவர்களுடைய பண்பாட்டை அப்படியே அவர்கள் உள்வாங்கிக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொள்கிறார்கள். அதை அங்கீகரித்துக் கொள்கிறார்கள். அதற்கு இணைந்து போகிறார்கள். எப்போதும் எதிர்த்ததில்லை.

இந்திய அளவில் தன்னுடைய தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக போராடிய ஒரே மொழி தமிழ் மொழிதான் (கைதட்டல்). இந்தியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து அதற்காகப் பல உயிர்களை, களப்பலியாக்கி, தனித்தன்மையைக் காப்பாற்று வதற்காக களவாடிய ஒரே இனம் தமிழினம் மட்டும்தான்.

இந்தியாவில் வேறு எந்த இனமும் சமஸ் கிருதத்திற்கு எதிராகவோ, இந்திக்கு எதிராகவோ வாய் திறந்ததும் இல்லை. போராடியதும் இல்லை. இன்றைக்கு அரசியல் ரீதியான ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகத்தான் மும்பையிலே வடநாட்டுக் காரர்களே திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்களே தவிர, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாத அளவிலே இருக்கிறார்கள்.

வெளியே செல்லுங்கள்

குஜராத்காரர்களே வெளியே செல்லுங்கள். உத்திரபிரதேசத்துக்காரர்களே வெளியே செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் அப்படி அல்ல. நமக்கு ஒரு தனி பாரம்பரியம் இருக்கிறது. நமக்கு ஒரு தனி பண்பாட்டுத் தடம் இருக்கிறது.

அதனால் தான் நம்முடைய மொழி உயர் தனி செம்மொழி என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு இதை வைத்துக்கொண்டு மற்றவர்களும் செம்மொழி அந்தஸ்து கேட்டுப் போராடிக்கொண்டி ருக்கின்றார்கள்.

ஆனால் உலக அளவில் மூத்த மொழிகளின் வரிசையில் முதலிடம் பெறுகிற மொழியாக நமது அன்னைத் தமிழ் விளங்குகிறது.

எதிர்த்தார் பகுத்தறிவுப் பகலவன்

அப்படிப்பட்ட இந்தத் தமிழ் மொழியும், தமிழ் இனமும் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சமஸ்கிருத மயமாதலை எதிர்த்தார். இந்தித் திணிப்பை எதிர்த்தார். இந்த இந்தித் திணிப்பிற்கும், சமஸ்கிருத மயமாதலுக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய கருத்தியலாகப் பார்ப்பனீயத்தை எதிர்த்தார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்திருக்கிறார்கள். ஒரே கருத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். இராமனை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார்-அம்பேத்கர்

கிருஷ்ணனைத் தோலுரித்துக்காட்டி யிருக் கிறார்கள். நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் தென்னாட்டு அம்பேத்கர். அவர் வடநாட்டுப் பெரியார் என்று சொல்லக்கூடிய வகையில்தான் இந்த இரண்டு மாமனிதர்களும் மகத்தான தலைவர்களும் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.

எனவே நமக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும், விடுதலை சிறுத்கைள், திராவிடர் கழகம் என்று வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும் நாம் ஒரே இயக்கம்தான். ஒரே கருத்துக்களத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரே போராளிகள்தான்.

கருஞ்சிறுத்தைகள்-விடுதலை சிறுத்தைகள்

கருஞ்சிறுத்தைகள் விடுதலை சிறுத்தைகள் அந்த அளவில்தான், நாம் இங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை இன்றைக்கு அதே வீரியத்தோடு, அதே துணிச்சலோடு இன்னும் சொல்லப்போனால், அதைவிட பன்மடங்கு பாய்ச்சல் நிறைந்த வலிமையோடு தமிழர் தலைவர் அவர்கள் அதை வலுவாக்கியிருக்கிறார். விரிவுபடுத்தி யிருக்கிறார். இன்றைக்கு அய்யா பெரியார் அவர்கள் இருந்தால் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களை உச்சி முகந்து பாராட்டுவார்.

அரசியலிலே வருவார்கள்-போவார்கள்

ஒரு இயக்கத்தைக் கட்டிக்காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியல் கட்சிகளிலே நான்கு பேர் வருவார்கள், போவார்கள். அதற்கு ஆதாய நோக்கம் இருக்கிறது. இந்தக் கட்சியிலே சேர்ந்தால் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம். விரைவிலே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம். அதன் மூலம் விரைவாகப் பணக்காரர் ஆகிவிடலாம். வசதி பெருகிவிடும். பதவி, பவிசு கிடைக்கும் என்ற ஒரு சுயநலம் இருக்கும். அதனால் அரசியல் கட்சிகளில் எளிதாக வந்து மக்கள் சேருவார்கள். அதை வலிமைப்படுத்துவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது.

எதிர்பார்ப்பு இல்லாமல்....

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதவி, பவிசு என்பதில் நாட்டமில்லாமல் நான் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவன் என்று சொல்லுவதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரும் படை இருக்கிறது என்று சொன்னால், எந்த அளவுக்கு அவர் உழைத்திருந்தால் கட்டிக்காப்பாற்ற முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்த்து பிரமிப்படைய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்பு

நாங்கள் எல்லாம் திராவிடர் மாணவர் கழகம் என்பதை பெருமையாகச் சொல்லுகின்ற நேரத்தில் பகுத்தறிவுக் கருத்துக்களை உள்வாங்கி இங்கே மிகச்சிறப்பாக பேசக்கூடிய அளவுக்கு மாணவர்கள் வளர்ச்சி பெற்று வருகிறார்கள். எழுச்சி பெற்று வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்பிலிருந்து வெளிப்படுகிறது.

மாணவர்களை இன்றைக்கு நாம் பார்க்கின்றோம். வளருகிறபோதே, அடி எடுத்து வைக்கிற பொழுதே தலைவராக வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினராகி விடவேண்டும். இந்தத் தொகுதி எனக்கு வரவேண்டும், எப்படியும் அந்தத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்

நெஞ்சாரப் பாராட்டுகிறேன்

என்றெல்லாம் ஒரு மனப்பால் குடித்துதான் அரசியலிலே ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு இடையிலே, தமிழர் தலைவரின் தலைமையை ஏற்று, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்கிறார்கள் என்று சொன்னால், நான் உள்ளபடியே திராவிடர் மாணவர் கழகத்தைச் சார்ந்த அத்துணை மாணவர்களையும் நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் (கைதட்டல்).

இதற்கு நாம் தமிழர் தலைவருக்குத் தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். அடுத்தடுத்த தலைமுறை தந்தை பெரியாருக்குப் பிறகு இப்பொழுது மூன்று தலைமுறை வந்துவிட்டது.

இந்த மூன்று தலைமுறைக்கும், அல்லது நான்கு தலைமுறைக்கும் தலைமை ஏற்று அவர்களை வழி நடத்துவது என்பது போதிய பின்னணி, வலுவான பின்னணி இருந்தால்தான் முடியும். 24 மணிநேரமும் விழிப்பாக இருந்து....

தமிழர் தலைவர் அய்யா அவர்கள் அத்தகைய அறிவு நுண்மான் நுழைபுலம் என்று சொல்லக்கூடிய அறிவு இருக்கின்ற காரணத்தால்தான், 24 மணிநேரமும் இதைப் பற்றி சிந்தித்து உரிய திட்டங்களைத் தீட்டி, இந்த சமூகத்தை எந்நேரமும் விழிப்பாக இருக்கக்கூடிய அளவிற்கு உழைத்து வருகிறார்கள். இயக்கத்தைக் கட்டிக்காத்து வருகிறார்கள்.





(தொடரும்)........(நன்றி விடுதலை 24.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]