வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, March 31, 2012

எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்



அண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத் தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.
பவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை  ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.
மக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பன ரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர் களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
இரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக்  கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மான மும் தோற்றுப் போனது.
(குடிஅரசு 13.10.1929)
நெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே!
1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(ச)ட்சியாகப் பார்க்க முடிகிறது.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.
வி.பி. இராமன் போன்ற பார்ப் பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.
என்னை நம்பி யாரும் வர வில்லையே! என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.
ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.
ஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.
அதன் அப்பட்டமான அடை யாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.
இப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).
அண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி?
அண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா?
இராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா?
தீ பரவட்டும்! என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா? தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா?
டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர் களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும்  இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும்  கொளுத்துவதா கூடாதா? என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்?
திராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா? அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?
அந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா? பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா?
புலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும்! -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது.  தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.
இராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல,  தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே!
இராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.
சச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
திராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா? இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும்? உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
இது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு?
ஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.
கடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்!
அண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்?
திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா? இது அசல் ஊடுருவல் அல்லவா?
இப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் அறிவு நாணயம் என்பது.
இறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.
அய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
--- நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 31-03-2012


Thursday, March 22, 2012

ஆ.ராசா மாதிரி யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லையா?

இன்றைய (22-03-2012) தி(இ)னமணி தலையங்கம் படிச்சேன்....."புத்தி கொள்முதல்..." என்ற தலைப்பில் இந்திய அரசின் தாராளமயக் கொள்கையின் தவறினால் அரசுக்கு ஏற்ப்பட்ட வரி இழப்பு பற்றி எழுதியுள்ளது....அதாவது, பன்னாட்டு நிறுவனமாகிய ஹட்ச் நிறுவனம் தனது பங்குகளை வோடபோன் நிறுவனத்துக்கு 1,100 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ததில், அந்த பங்கு பரிவர்த்தனைக்கு வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை....காரணம் என்ன என்றால் இந்தப் பங்குப் பரிவர்த்தனை கேமேன் தீவில் நடைபெற்றதாம்....இப்படி வெளிநாட்டில் நடைபெற்றதால், வரி செலுத்த வேண்டியதில்லை என்றது வோடபோன்....ஆனால், இந்தியாவில் செயல்பட்ட ஹட்ச் எஸ்ஸர் நிறுவனத்தில் 67% பங்குகள் வைத்திருந்ததால்......ஹட்ச்எஸ்ஸர் நிறுவனம் வோடபோன் நிறுவனத்துக்கு மாறியதால் கிடைத்த லாபத்துக்கேற்ற வரியைக் கேட்டது இந்திய வருமான வரித்துறை...இப்படி தவறான ஒரு கொள்கையை அரசு வைத்துகொண்டு வோடபோன் நிறுவனத்திடம் வரி கேட்பது நியாயம் அல்ல என்று சொல்லி உச்சநீதி மன்றம் தீர்பளித்துள்ளது....இதனால்இந்திய நடுவண் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 11000 கோடி.

சரி விசயத்துக்கு வரேன்........இந்த இழப்பீட்டுக்கு ஆ.ராசா மாதிரி யாரையாவது கைய காமிச்சுட்டு எஸ்கேப் ஆக மத்திய அரசுக்கு யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லை போலும்....அதனால் வேறு வழியில்லாமல் உச்சநீதி மன்றத்திடம் குட்டு வாங்கி கொண்டுள்ளது......இப்படி 11000 கோடி இழந்து தான் ....தவறான தாராளமயக் கொள்கையினை இந்திய அரசு "புத்தி கொள்முதல்" செய்துள்ளதாக இனமணி சொல்லுகிறது.......நமது கேள்வி என்ன என்றால், 2 - ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் 'முதலில் வந்தவருக்கு முதலில் முன்னுரிமை' என்ற தவறனா தொலைதொடர்பு கொள்கையினால் தானே 22000 கோடி (அதுலயும் பீலா 1750000 கோடி என்று....நான் குறிபிட்டுள்ளது சி.எ.ஜி இறுதியாக உச்சநீதி மன்றத்தில் கொடுத்த தொகை ) இழப்பு ஏற்பட்டு பல பணமுதலைகள் பணம் பார்த்தார்கள்.....அப்போ வோடபோன் நிறுவனம் மாறி அவர்களும் அரசு பணத்தை அனுபவித்திருக்கிறார்கள்......தவறு நிறுவனங்கள் மீதோ அந்த துறையின் அமைச்சர்கள் மீதோ அல்ல...தவறு நடுவண் அரசின் தவறான தொலை தொடர்பு கொள்கையில்தான்.........இதற்க்கு எதுக்கு எங்க ஆ.ராசாவை குற்றம் சொல்லுரிங்க?....அப்போ மட்டும் இந்த இனமணி "இழப்பு" என்று சொல்லமால் "ஊழல்" என்று தம்பட்டம் அடித்தது......இப்போ "புத்தி கொள்முதல்..." என்று அரசுக்கு அறிவுரை சொல்லுது.......தோழர்களே, ஒருகுலத்துக்கு ஒரு நீதி எழுதும் இது போன்ற பார்ப்பன பத்திரிகைகள் மூலம் நாம் புத்தி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.
 


Wednesday, March 21, 2012

உன் சாதி பற்றி கேட்டால் ஏன் பொத்துக்கொண்டு வருது?


ஒரு நண்பர் ஒருவர் சொன்னார்...என்னாங்க வீடு வாடகைக்கு கேட்டு போனா...நீங்க என்ன சாதி என்று கேட்கிறாங்க.....நான் சொல்ல மறுத்த போது...நாங்க 'பிராமின்ஸ்' (பார்ப்பான்) க்கு மட்டும்தான் வீடு கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.....இன்னமும் இப்படி இருக்கா என்று சொல்லிகிட்டே தன் பர்சை திறந்து யாருக்கோ பணம் எடுத்து கொடுத்தார்........அப்படி பர்சை திறக்கும் போது, ஒரு பக்கம் கீதை கிருஷ்ணன் போட்டாவை வச்சு இருந்தார்........நான் கேட்டேன் இப்படி கிருஷ்ணன் போட்டவா நீங்க வச்சுகிட்டு அவர்களை தவறு என்று சொல்லுரிங்க என்று கேட்டேன்....சாதிக்கும், கிருஷ்ணனுக்கும் என்னாங்க தொடர்பு.....சும்மா போங்க என்று என்னிடம் விவாதம் செய்து சண்டைக்கு வருகிறார்.....இப்படித்தான் நிறைய பேரு திரிகிறார்கள்........சரி கீதை கிருஷ்ணன் யோகிதை என்ன? அவனின் கீதை உபதேசன் என்ன".....கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம் என்ன:

"நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 )

இப்படி பட்ட கிருஷ்ணனுக்கு ஒரு பக்கம் பக்த்தனாக இருந்துகொண்டு...சாதி பற்றி இவரிடம் பார்ப்பான் கேட்டால் பொத்துக்கொண்டு வருதாம்...பார்ப்பான் அவனுடைய வருணாசிரமத்தை பாதுகாத்து கொண்டுதான் நம்மிடம் பேசுகிறான்....பார்ப்பான் கிருஷ்ணன் போட்டவ வச்சு இருக்கான் என்றால் அவனுக்கு சாதகமா பேசினவன் கிருஷ்ணன்.....நீ என்ன___க்கு அது வச்சுகிட்டு...உன் சாதி பற்றி கேட்ட கோபப்படுரே?...கிருஷ்ணன் கும்புடுற நீ உன் சாதிய சொல்லு.....சாதிய ஏற்றுக்கொண்டு உன் குலத்தொழிலை செய்....ஏன் பொத்துக்கொண்டு வருது?..நீங்கள் ஒழுங்கா இருந்த அவன் உன்னை இப்படி கேட்பான? பார்ப்பன பாரதி கூட கிருஷ்ணனை நம்பியவர் தானே.....ஆனா மறுபக்கம் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடுவது எந்த அர்த்தத்தில்? யாரை ஏமாற்ற? இப்படி சாதி ஒழிப்பு பற்றி பேசுபவர்கள் மரியாதையாக சாதி ஒழிப்பு பற்றி பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.


Monday, March 19, 2012

தமிழன் யார்?


பார்ப்பான் தமிழன் இல்லை என்றால் நம்மிடம் சண்டைக்கு வரும் மரமண்டைகள் ஏராளம்.....இதோ அவர்களுக்காக "தமிழன் யார்?" என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன விளக்கத்தை பதிவு செய்கிறேன்....

தமிழை தாய் மொழியாக கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பெசுகின்றவனாகலாம், தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீட்டுக்காரனாக இருக்கலாம்.இக்காரணங்களை கொண்டு அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும். அவனை நோக்கி உன் தாய்
மொழி எது என்று கேட்டால் அதற்கவன், என் தாய்மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி அல்லது பிரான்சு அல்லது ஆங்கிலம் என்பானானால் அவனை தமிழன் பட்டியலில் சேர்ப்பது இழுக்கு.

தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கம் கொண்ட என் நண்பர் ஒருவர் இரண்டாவது உலகப்போர் நடந்தபோது சென்னையில் இருந்த வடநாட்டார், தம் வடநாட்டை நோக்கி ஓடிவிட்டார்கள். அப்போதும் தென்னாட்டை விட்டு பார்ப்பனர்கள் ஓடவில்லை. ஆதலால் பார்ப்பனர் தமிழரே என்று கூறினார்.

நண்பர் முடிவு தீய விளைவுக்குரியது. புறாப் பண்ணை விட்டுக் கழுகு நகரவில்லையானால் கழுகு புறாவாகி விடாது.


மேலே சொன்ன கருத்து நான் சொன்னது இல்லீங்க தோழர்களே......"தமிழன் யார்?" என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கட்டுரையில் (குயில், 1-06-1958) இருந்துதான் மேற்கண்ட பகுதி......தமிழர்களே, இப்பொழுதாவது உணருகின்றீர்களா யார் தமிழன் என்று?

பார்ப்பான் தமிழன் இல்லை என்று என்னுடைய விளக்கத்தையும் தருகிறேன்.....

பார்ப்பானை தமிழன் என்று சொல்லாதீர்கள்.......எந்த பார்ப்பானாவது 'தமிழ்ச்செல்வன்', 'தமிழரசு', 'கனிமொழி','கயல்விழி' என்று தன் வீட்டுப் பிள்ளைக்கு பெயர் வைத்து இருக்கிறனா? (நம்ம ஆளு சொறன இல்லமா சம்ஸ்கிருத பேரு வைப்பான்..அது வேற விஷயம்..) அப்படி வைத்து இருந்தால் அந்த பார்ப்பானை என்னிடம் காண்பியுங்கள்......எந்த பார்ப்பனாவது "வீடு" என்று சொல்கிறானா? ஆத்துல....சூ....என்றுதானே பேசுறான்....அப்புறம் எப்படி பார்ப்பானை தமிழன் என்று சொல்லுரிங்க?.....நாலு பார்ப்பான் சேர்ந்துகிட்டு தமிழ்ல கட்டுரை எழுதினா அவன் தமிழன் ஆயிடுவான? தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் இல்லை..தமிழை தாய்மொழியாக கொண்டவனே தமிழன்...நன்றாக சிந்தியுங்கள் தோழர்களே....இனியும் பார்ப்பனக் கூட்டத்திடம் ஏமாறாதீர்கள்!!!!

மேலும் "தமிழன் யார்" என்பதற்கு பாவேந்தர் சொல்லுகிறார் பாருங்கள்...
தமிழ்நாடு தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேரும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே!


Saturday, March 17, 2012

பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர் பாரதிதாசன்



சிலர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பற்றி நாம் எதாவது சொன்னால்....ஏங்க, அவரே பாரதியின் மீது பற்று வைத்து தானே தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று நம்மிடம் வினா எழுப்புகிறார்கள்...அவர் பாரதியின் கவிதை நடை மீது பற்றுகொண்டு தன் பேரைத்தான் மாற்றிக்கொண்டாரே ஒழிய....மற்றபடி பாரதியின் கருத்துக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.....புரசிக்கவிஞர் பெரியாரின் மேடை பேச்சுகளை அப்படியே கவியாக வடித்த திராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதியாவார்.....1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட்சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.....இதோ அவர் சுத்த அக்கமார்க் திராவிடர் கழகக்காரர் என்பதற்கு இதோ ஒரு மிக மிக மிக சிறிய சான்று....

கடவுள் இல்லை என்பான் யாரடா?
தில்லை கண்டு பாரடா!


என்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக

இல்லை என்பேன் நானடா - அத்
தில்லை கண்டு தானடா!


என்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதிதாசன்.

எனவே பாரதி போல ஒரு இடத்தில் தான் "காளி" பக்தன் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர்......சாதி ஒழிய கவிதை மட்டும் போதாது....சமுக களத்தில் நின்று களமாட வேண்டும்...அதனை பெரியார் வழியில் நின்று செம்மையாக செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


Wednesday, March 14, 2012

தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது?

அமெரிக்க கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான போர் குற்ற தீர்மானத்தை ஆதரிக்க...ஒரு முடிவு எடுக்காமல் மத்திய அரசு டிமிக்கி கொடுத்து வருகிறது...பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை கைகழுவிட்டு....கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு நேசக்கரம் நீட்டி அந்த கொடுங்கோலனை போற்குற்றவாளி என்ற போர்வையில் இருந்து காப்பாற்ற தலைகீழ் நிற்கிறது ஆளும் காங்கிரஸ்...இதும் மிகவும் கண்டிக்கத்தக்க மனிதநேயமற்ற கொடுரமான செயல்......

ஈழத்தமிழர் விவகாரத்திலும் சரி...தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள மீனவர்களால் தாக்கப்படும் போதும் சரி......காங்கிரஸ் நடுவண் அரசு தமிழகத்துக்கும்,தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் இது நாள் வரை கொஞ்சம் கூட மதிப்பளிப்பதில்லை.....அறிஞர் அண்ணா கூறியது போல "திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டோமே ஒழிய அதற்க்கான காரணங்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது" என்ற கூற்று இன்றைய மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது........அன்று அண்ணா சூடிய தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் இந்த தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது என்று மத்திய அரசு நினைக்கிறது போலும்....அப்படி நினைத்தால் அதற்க்கு நாம் பொறுப்பல்ல.....கூடிய சீக்கிரம் அதற்க்கான தீர்வு கொடுக்கட்டும்....நாமும் டெல்லியிடம் கையேந்த தேவை இல்லை.
 


Tuesday, March 13, 2012

திராவிடர், திராவிடம், திராவிட நாடு


திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவி டர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
நன்றி: விடுதலை,13-03-2012


Monday, March 12, 2012

திராவிடர், திராவிடம், திராவிட நாடு


தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும்  - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலியார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம்  தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே!  பெரியார் அவர்களே!  தோழர்களே!   தாய்மார்களே!   நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள்  என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.
நன்றி விடுதலை: 12-03-2012



Wednesday, March 07, 2012

இப்படி இருந்தா, ஆணுக்கு நிகராக பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே!


உலக மகளிர் தினம் என்றால் கூட.....ஒரு குறிப்பிட்ட பெண்கள் கூட்டம், புதிய பட்டு புடவை கட்டி, தலை நிறைய பூ வச்சுகிட்டு, நகைய மாட்டிகிட்டு......கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து....அலுவலகம் செல்வார்களாம்...இன்னும் சில  பெண்கள், ஒரே கலர் புடவை கட்டிக்கிட்டு ஆபீஸ் வர அறிவுரை சொல்லுது.....இதற்க்கு பெயர் மகளிர் தினமாம்.......இப்படி மகளிர் தினம் கொண்டாடும் பெண்களே...இன்னும் ஏலே ஏழு தலைமுறைக்கு முயற்ச்சித்தாலும் ஆணுக்கு நிகராக பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே.

இந்த அருமையான தினத்தில் ஆணுக்கு நிகர் சம உரிமை பெற உறுதி கொள்ளுங்கள்.....அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை கேள்வி கேளுங்கள்...அரசியல்,சமுகம், பொருளாதாரம் பற்றிய பகுத்தறிவை வளர்த்துகொண்டு பொது வெளி விவாதங்கள் செய்யுங்கள்.......தந்தை பெரியார் சொன்னது போல, ஆணுக்கு என்ன என்ன உரிமை இருக்கோ அத்துனையும் பெண்ணுக்கும் வேண்டும் என்று உறுதி மொழி எடுங்கள்......

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெண் குழந்தை இந்த புவிக்கு
வரும்போது எப்படி வரவேற்கிறார் பாருங்கள்...

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!

எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

ஒவ்வொரு பெண்களும் புரட்சிகவிஞர் வரிகளை அசை போட்டு அவர் சொன்னது போல புரட்சி பெண்ணாக இருக்க இந்த மகளிர் தினத்தில் உறுதி
எடுங்கள்........எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.


Tuesday, March 06, 2012

சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா?


நம்ம ஆளுகள பார்த்து, இந்து என்று சொல்லிக்கிட்டு சூத்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு திரிகிறாயே....வெட்கமா இல்லையா? என்று கேட்டால்....நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க என்று ஒரு குரூப் பதில் சொல்லுது.......இன்னொரு குருப் 'சூத்திரனா'? அப்படி என்றால் என்ன? என்று கேட்குது....

அதேசமயம், பல பேர பார்த்தீங்கன்னா, எங்க வீட்டு ஓனர் "பிராமின்"..ஆனா பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டார்........இன்னும் பலர், எங்க மேனேஜர் 'பிராமின்' தெரியுமா?. என்று அப்படியே பூரிப்பா சொல்லுவானுக.......சரி, சாதியே ஒழிஞ்சு போச்சுன்னா, இது (பார்ப்பன அடையாளம்) மட்டும் எப்படி தெரியுது? அவர்களை எப்படி 'பிராமின்' என்று கண்டு பிடிக்குரிங்க?...அங்கேதான் பார்ப்பனியத்தின் பிராடுத்தனத்தை புரிஞ்சுக்கணும்....மற்ற சாதிக்காரன் எவனாவது தான் யார் என்பதை கண்டுபிடிக்க லேபில் ஒட்டிகிட்டு இப்படி திரியுரானா?....இன்றைக்கும் சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா? இப்போ சொல்லுங்க யார் ஏமாளிகள்? 

இப்படி நம்மை ஏமாற்றி கொண்டு திரியுற பார்ப்பனக் கூட்டம் தான்......கலைஞர், பேராசிரியரும் இவர்களை திட்டுகிறார்கள் என்று மத்திய, மாநில அரசிடம் நியாம் கேட்கிறது.......ஏய் நியாய மற்ற பார்ப்பன கூட்டமே....இன்னும் நாங்க ஏமாற...நாங்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்ல...சாக்கிரதை!!!


Thursday, March 01, 2012

கலைஞரை பற்றி காமராசர் சொன்னது....

கலைஞரை பற்றி காமராசர் சொன்னது....

ஒரு முறை ஸ்தாபனக் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தி.மு.கழகம் நெருக்கடி நிலையைக் கண்டித்த போதிலும், திமுக அரசு இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி மனக் கசப்புடன் பேசினார். கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். அதைக் கேட்டதும் காமராசுக்கு கோபம் வந்து விட்டது.

அட சும்மாக் கெடப்பா ரொம்பத் தெரிஞ்சவன் போல... இந்த நேரத்துலே எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் கருணாநிதி நடத்துக்கிட்டாரு. அது ஒம் மூளைக்கி எப்படி எட்டும்னேன்... சும்மா வீறாப்புக் காட்டினா ஆச்சா... அதுனால என்ன லாபங்கறேன்... அந்தம்மா டி.எம்.கே.கவர்மெண்டை டிஸ்மிஸ் பண்ணும், இப்ப இங்க மிஞ்சியிருக்கிற சுதந்திரமும் இல்லாமல் போகும். வேற என்ன நடக்கும்னேன்? இந்த நேரத்துக்கு இங்க கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிச்சுக்கிட்டு இருக்கறது ரொம்ப அவசியம். அதை மறந்துடாதே. பிரை மினிஸ்டரைப் பத்தி ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு உத்தரவு வருது. அங்கங்க இருக்கற சீப் மினிஸ்டரெல்லாம் அந்த உத்தரவிலேயே தன்னைப் பத்தியும் ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு சேர்த்துக்கறான். பார்க்கப்போனா இப்ப கருணாநிதியைப் பத்தித்தான் கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான். கருணாநிதி நினைச்சா இந்த உத்தரவைப் பயன்படுத்தி அதை தடுக்க முடியும். ஆனா அவரு அப்படிச் செய்யல அதை மறந்துடாதே. கருணாநிதி விரும்பினா ப்ரை மினிஸ்டரோட ஒத்துப் போயி நிம்மதியா இருந்துக்கிட்டிருக்க முடியும். அதையும் அவரு செய்யல. இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிட்டா ஆச்சா என பொரிந்து தள்ளினார் காமராசர். கொஞ்ச நேரத்துக்கு அறையில் ஒரே நிசப்தமாக இருந்தது.

(ஆதாரம், மதுரைமணி, 2.6.2008)


Tamil 10 top sites [www.tamil10 .com ]