வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 04, 2009

பெரியார் நூல்கள் நாட்டுடைமை:யாரும் கவலைப்படத் தேவையில்லை

தந்தை பெரியார் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதித் தாருங்கள். தினமணி வெளியிடுகிறதா என்று பார்ப்போம். அதே நேரத்தில் பெரியார் கண்ட இயக்கத்தையும் தந்தை பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட தலைவரைக் குறித்தும் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடு யாரேனும் ஒருவர் கட்டுரை எழுதினால்,அதனை எடுப்பாக வெளியிட தினமணி தயாராக இருக்கிறது.
பார்ப்பனர்களைப்பற்றியும், பார்ப்பனர்களுக்குத் துணை போகக் கூடிய நபர்களைப் பற்றியும் இதன் மூலம் நன்றாகவே அடையாளம் காண முடியும்.
திரு எஸ்.வி. ராஜதுரைஎன்பார் எழுதிய கட்டுரை இந்த வகையில்தான் தினமணியில் (26.2.2009) வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல் - என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தலைப்பே குழப்பமாக உள்ளது; உள்ளடக்கத்தைக் கேட்கவும் வேண்டுமா?
பெரியாரின் பேச்சுகள் காலவரிசைப்படி வெளியிடப்பட வேண்டுமா? தலைப்பு வாரியாக வெளியிடப்பட வேண்டுமா என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
காலவரிசைப்படி என்று கூறி ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் பெரிய பெரிய தொகுதிகளாக அதிக விலை போட்டு வெளியிட்டால் அது கண்டிப்பாக அலமாரியில் தான் தூங்கிக் கொண்டிருக்கும்!
ஏதோ அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன்படக் கூடும். ஆனால் வெகு மக்களுக்குத் தந்தை பெரியார் அவர்களின் கருத்து போய்ச் சேராது.
தலைப்பு வாரியாகப் போட்டு, 300 பக்கங்களுக்கு மிகைப்படாமல் மலிவு விலையில் வெளியிடும்போதுதான் கடைகோடி பொது மக்களுக்கும் போய்ச் சேர முடியும்.
திராவிடர் கழகம், பெரியார் கொள்கைகள் மக்களுக்குப் போய் சேருவதைப்பற்றி கவலை கொண்டுள்ள இயக்கமாகும். வேறு சிலருக்கோ பெரியார் கொள்கை பொது மக்களுக்குப் போய் சேர்ந்துவிடக் கூடாது; அது அலமாரிகளில் முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது அல்லது போதிய புரிதல் இல்லாமல் அப்படி கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரியாரைப்பற்றி கவலைப்படுவதுபோல காட்டிக் கொள்ளும் இவர்கள், தந்தை பெரியார் காலத்தில் உயிருடன் உலவவில்லையா? அந்தக் கால கட்டத்தில் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது உதவிகரமாக இருந்தவர்கள் தானா? இப்பொழுது என்ன திடீர் பக்தி பீறிட்டுக் கிளம்புகிறது என்று தெரியவில்லை.
அதுவும் இவர் யார் என்றால், பெரியார் திடலில் உள்ள நூலகம் - ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி நூல் எழுதி முடித்து, விற்பனையாக்கி அந்த நூலகத்தையே குறைகூறும், தலை சிறந்த நன்றிக்குரிய பெரும்பண்பு படைத்தவர்! இவருக்குத் தோழி யார் என்றால் ஒரு பார்ப்பன அம்மையார். இதுதான் இவர் பெரியாரின் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட தன்மையின் இலட்சணம்!
பெரியார் கொள்கையை அது பிறந்தகத்திடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று அந்தப் பார்ப்பன அம்மையார் எழுதுகிறார்.
பெரியார் கொள்கைக்காக அந்த அம்மையார் அரும்பாடுபட்டு உழைத்திருக்கின்றார் என்று நம்புவோமாக! நாளைக்கே பெரியாரின் கொள்கைகளை மீட்டு பட்டிதொட்டி எங்கும் பெரியார் கொள்கையைப் பரப்பிட அபாரத் திட்டங்களையும் தூக்க முடியாமல் கழுத்து வலிக்க சுமந்து கொண்டு நிற்கிறார் என்று கூட நம்புவோமாக! போராட்டங்களை முன்னெடுத்து சிறைச்சாலைக்குக்கூட சிரித்தமுகத்துடன் கிளம்ப இவர்கள் தயாராக இருப்பதாகவும் நம்புவோமாக!
எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பெரியார் கண்ட இயக்கத்தையும், அதன் தலைவரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டு இருக்கிறார்கள் பார்த்தீர்களா?
பெரியார் எழுத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
இவர்கள் எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள்? முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அதன் தலைவர் வீரமணி எப்படியெல்லாம் செயல்பட்டு வருகிறார் என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் எதற்கு இவர்களுக்கு இந்த வீண் வேலை?
2008 பிப்ரவரி 18-ஆம் நாள் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80-ஆம் ஆண்டு விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களே - திராவிடர் கழகம் பெரியார் நூல்களை - கருத்துகளை வெளியிட்டு வருவது குறித்து தெளிவாகக் கூறினாரே!
உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்துக்குத் தரக்கூடிய இந்த ஆற்றல் நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் - இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் - என்று கூறி விட்டாரே!
இவ்வளவு தெளிவாக இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சரிடம் இவர்கள் வேண்டுகோள் வைப்பது - அவர்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்தும்.
கால வரிசை கால வரிசை என்று கிளிப்பிள்ளைபோல பாடம் படிக்கிறார்களே, கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை போன்ற தலைப்பில் வெளியிடப்படும் தொகுதிகளில் அடங்கியுள்ள கட்டுரைகள் எல்லாமே கால வரிசைப்படி தொகுக்கப்பட்டவைதான் என்பதை மறைக்கப் பார்ப்பது - ஏன்?
இன்னொன்றையும் சொல்கிறார்கள் - பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகிய அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் காலவரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதல்ல - என்று எழுதுகிறார் திருவாளர் ராஜதுரை. இந்த வகையைச் சார்ந்தவர்களுக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடா?
பெரியாரின் நூல்களில் அவரின் எழுத்துகள்; பேச்சுகள் இல்லையா? இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோமே எல்லாம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு இருக்கவில்லையா?
எதையோ நினைத்துக் கொண்டு - அவலை நினைத்து உரலை இடித்த கதையாக கதைக்கிறார்களே தவிர அவற்றில் நியாயமோ, தர்க்கமோ, கொள்கை நோக்கோ, உண்மையோ அறவே கிடையாது.
பெரியார் என்ற முழுப் புரட்சியாளரின் ஒவ்வொரு எழுத்தும் மிக முக்கியமானவை, ஒரு அரைப்புள்ளிகூட முக்கியத்துவம் வாய்ந்தது.
தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த இன எதிரிகளோ நாணயமற்றவர்கள்; எதையும் திரித்து வெளியிடும் திரிநூலர்கள்; அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க சிலர் புறப்பட்டுள்ளார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
சேலத்தில் 1971-இல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்ணுரிமைபற்றிய புரட்சிகரமான தீர்மானத்தை இந்து தினமணி துக்ளக் உட்பட எப்படியெல்லாம் திரித்து ளியிட்டன!
தந்தை பெரியார் உயிரோடு இருக்கும்போதே இந்த வேலையைச் செய்தவர்கள், பெரியாரின் எழுத்துகளை, பேச்சுகளை யாரும் வெளியிடலாம் என்று திறந்து விட்டால் சகட்டுமேனிக்குத் திரிபு வேலையைச் செய்திட உரிமம் அளித்ததுபோல ஆகிவிடாதா? அப்படி திரித்து வெளியிட்டால் மறுத்து எழுதுவதுதானே நமது வேலை என்று தங்கள் விவாதத்துக்கு முட்டுக்கால் கொடுக்கிறார்கள் - எந்தெந்த இடங்களில் எல்லாம் இவை நடக்கின்றன என்று, அறிவது சாத்தியப்படக் கூடியதுதானா? பட்டுப்புடவையை இரவல் கொடுத்து சீமாட்டி செல்லும் இடமெல்லாம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை என்று தந்தை பெரியார் சொன்னதுதான் இங்கு நினைவிற்கு வருகிறது.
இந்து போன்ற ஏடுகள் தந்தை பெரியாரின் தீர்மானத்தை திரித்து வெளியிட்ட போது இவர்கள் எல்லாம் உயிரோடு இல்லையா? அல்லது பிறக்கவேயில்லையா? எந்தவகையில் தந்தை பெரியாருக்குத் துணையாக நின்றவர்கள் இவர்கள்? தமிழர் தலைவர்தான் நீதிமன்றம் வரை சென்று இந்துவை மன்னிப்பு வாங்கச் செய்தார் என்ற வரலாறெல்லாம் தெரியுமா?
ஏதோ இந்து ஏடு கண்ணுக்குத் தெரிந்து எழுதியது - எதிர்த்தோம் முடிந்தது; மூலைமுடுக்கில் நடக்கும் எத்துவேலைகள் எல்லாம் நம் கவனத்துக்கு வருமா?
பாரதியார் அப்படி ஒன்றும் புரட்சிவாதியல்ல; அப்படியிருந்தும் பாரதியார் நூல்களை வெளியிடுபவர்கள் பாரதியார் கருத்துகளைத் திரித்து வெளியிட்டுள்ளதாக, பாரதியாரின் பெயர்த்தி விஜயபாரதி என்பவர் குமுறியுள்ளாரே! தஞ்சைப் பல்கலைக் கழகம் 1970-இல் பதிப்பித்து வெளியிட்டுள்ள பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு எனும் நூலில் பாரதி எழுதாத படைப்புகள் அவர் எழுதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளாரே! (Sunday Express) - 18.1.2009)
இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள் ராஜதுரைகள்? நம் கண் முன்னே காணும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் பொன் மொழிகள் என்ற ஒரு நூலை திருச்சியில் தனியார் பதிப்பகத்தார் வெளியிட்டனர். அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகளுக்காக தந்தை பெரியார் தண்டனை விதிக்கப்பட்டாரே! சிறை சென்றாரே! அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகள் தமது ஒப்புதலைப் பெற்றவையில்லை - சரியானவை என்றும் கூற முடியாது - அவர்களாகவே வெளியிட்டது என்று தந்தை பெரியார் கூறிடவில்லையா?
பகுத்தறிவுவாதியான புத்தர் கருத்துகளையே பாட பேதம் செய்துள்ளனரே - இந்த வரலாற்றுப் பாடத்தைத் தெரிந்து கொண்டவர்கள் மாபெரும் புரட்சியாளரான தந்தை பெரியார் கருத்துகளை வெளியிடும்போது போதிய பாதுகாப்பும், விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெற்றிருக்க வேண்டாமா?
தந்தை பெரியார் நூல்களை விற்பதால் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தா பேசுகிறோம்? இன்னும் சொல்லப் போனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் போல மலிவான விலையில் நூல்களை வெளியிடுவோர் யார்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிவிடலாமா? எழுதிவிடலாமா?
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். அந்த நிறுவனத்திலிருந்து பெரியார் இட்ட கட்டளைப்படி நூல்கள் முறையாக வெளியிடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செறிவான ஏற்பாடுகளும் இருந்து வருகின்றன.
பல தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியிருக்கலாம். தந்தை பெரியார் அவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை - காரணம் தொலைநோக்கோடு தந்தை பெரியார் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து வைத்துள்ளார். அதற்கேற்றவர்களையும் தயாரித்துஅறிமுகப்படுத்தியும் இருந்தார். அதன்படி செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.
எனவே, இந்த வகையில் யாருடைய அறிவுரையும் எங்களுக்குத் தேவைப்படவில்லை.
இடைஇடையே இது போல் வந்து போகும் குறும்புகளையும், குறுக்குச் சால்களையும் கடந்துதான் இந்த இயக்கமும், இயக்கத் தலைமையும் இலட்சியப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.
எதை எந்த நேரத்தில் எப்படிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும், திட்டமும் இயக்கத்திடம் நிரம்பவே இருக்கின்றன. எங்கள் பயணம் தொடரும். பெரியார் கருத்து நாட்டு மக்களுக்கு உரியதுதான். அந்தக் கருத்துகளை நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.
எத்தனையோ விளக்கங்களை எடுத்துக் கூறியிருந்தும் வீம்புக்காக இந்தப் பிரச்சனையை சிலர் கூறிக் கொண்டிருப்பதும், அதற்குப் பார்ப்பன ஊடகங்கள் மூக்கைச் சொரிந்து விடுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.

----------------------------------- நன்றி - விடுதலை

Tamil 10 top sites [www.tamil10 .com ]