வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, November 20, 2009

கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா?


உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்ச-முடைய-வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.


அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து-கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்-கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்-கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்-கின்றார்களா?

சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை ("குடி அரசு", 6.12.1947). தொகுப்பு: விடுதலை 20.11.09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]