Wednesday, July 07, 2010
அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடுக!...கரூர் திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்..
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் உள்பட மத வன்முறையாளர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் உள்பட எட்டு தீர்மானங்கள் கரூர் மணடல மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
6.7.2010 செவ்வாய் மாலை கரூரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக வட்டார மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1 (அ):
உலகத் தமிழ்ச செம்மொழி மாநாடு:
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை வரலாற்றுப் பெருமையுடன் நடத்தியதற்காகவும், மாநாட்டின் நிறைவுரையில் ஆக்கப் பூர்வமான 16 அம்சத் திட்டங்களை அறிவித்ததுடன், - மாநாடு நிறைவுற்ற நிலையில் சற்றும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அந்தத் திட்டங்களை நிறைவேற்றிட முனைப்புக் காட்டும் முதலமைச்சர் மானமிகு- மாண்புமிகு கலைஞர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும், வெற்றிக்குக் காரணமான அனைத்துத் தரப்பினரையும் இம்மாநாடு பாராட்டி மகிழ்கிறது.
தீர்மானம் 1 (ஆ):
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக! செம்மொழிச் செல்வமும், அறநெறி அமுதமுமான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவித்திட வேண்டும் என்று நடுவண் அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் உரிய வகையில் முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 1 (இ):
உயர்நீதிமன்றத்தில்
தமிழ் பயன்பாடடு மொழியாக ஆக்குக!
தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் பயன்பாட்டு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. நீதிமன்றங்களில் தமிழில் வாதாடத் தேவையான சட்டச் சொல் அகராதி ஒன்றையும் தொகுத்து வெளியிட ஆவன செய்யுமாறும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 (அ) :
அறிவியல் மனப்பான்மை
வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் எந்தவித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்கள், கோயில்கள் இருக்கக் கூடாது; அப்படி இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசு ஆணைகளும், உயர்நீதிமன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இருப்பதால், அவற்றைச் செயல்படுத்துவதில் மதச்சார்பற்ற மாநில, மத்திய அரசுகள் தயக்கம் காட்டிடத் தேவையில்லை என்றும் உடனடியாக மதச் சின்னங்களை அகற்றவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2 (ஆ):
அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடுக!
அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள நிலையில்- அதற்கு மாறாக, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும், ஏடுகளும், அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி, மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருவதை மத்தியஅரசு தடை செய்யவேண்டும் என்றும், இந்த வகையில் ஊடகங்களுக்குத் தெளிவான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பிறப்பிக்கவேண்டும் என்றும் இம்மாநாடு நடுவண் அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 (இ):
கோபுரச் சின்னத்தை அகற்றுக!
மதச்சார்பற்ற அரசின் இலச்சினையாக கோபுரச் சின்னம் தமிழ்நாட்டில் இருப்பதை மாற்றி திருவள்ளுவர் உருவத்தினை தமிழ்நாடு அரசின் இலச்சினையாகக் கொண்டு வர ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3:
வேலைவாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!
வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமை-யாக்கவேண்டும் என்றும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டினைச் செயல்படுத்த புதிய சட்டம் ஒன்றையும் கொண்டு வரவேண்டும் என்றும் மத்திய அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4:
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை
அனுமதிக்கக் கூடாது
தேசிய உயர் கல்வி ஆணையம் என்ற பெயரால் மாநில உரிமைகளைப் பறிக்கும்_இனம், மொழி, பண்பாடுகளைப் புறந்தள்ளும்_இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி என்ற தவறான கல்வித் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதுபோலவே வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் முடிவைக் கைவிடவேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டுக்கு இடம் இல்லை என்பதிலிருந்தே இத்தகு பல்கலைக் கழகங்கள் சமூக நீதிக்கு எதிரானவை என்பதையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் 5 (அ):
பொதுத்துறைப் பங்குகளை விற்கக்கூடாது
இலாபம் கொழிக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார்க்கு விற்கக் கூடாது என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 (ஆ):
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக!
விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும், குறிப்பாக பெட்ரோல், டீசல், மண்-ணெண்ணெய், எரிவாயு முதலிய இன்றிமையாத பொருள்களின் விலையை ஏற்றுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும் என்றும் நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6:
ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை
இலங்கையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இனவெறி ஆட்டம் நடந்து ஓராண்டு முடிந்த நிலையிலும் கூட, இலங்கை அரசு இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும். இன்னும் முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். வெறும் வருத்தம் தெரிவிக்கும் நிலையிலிருந்து மத்திய அரசு விடுபட்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்குமாறு இலங்கை அரசுக்கு நிர்பந்தம் கொடுப்பதுடன், ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு வழிகோல அனைத்து முயற்சிகளையும் உள்ளார்ந்தத்-துடன் எடுக்கவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழின மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதற்கும் தக்கதோர் முடிவு காணவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
1872 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இதுவரை 14 முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை 6 முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 ஆவது கணக்கெடுப்பு இருகட்டங்களாக நடைபெறும் என்று இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளபபட வேண்டும் என்ற கருத்து இந்தியா முழுமையிலும் பரவலாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய புள்ளி விவரம் எடுக்கப்படாத நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றிய வழக்குகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு விரோதமான வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.
இதுவரை இந்திய அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டு ஆணையங்களும் (காகா கலேல்கர் தலைமையிலான ஆணையம், மற்றும் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம்), அதேபோல திட்டக்குழு ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் திரட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இத்தகைய புள்ளி விவரங்கள் தேவை என்று வலியுறுத்தி உள்ளனர். இத்தலைவர்களின் வற்புறுத்தலை ஏற்று, பிரதமர் சமூகநீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்திலேயே கருத்துத் தெரிவித்தார்.
இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், மத்தியஅரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து திட்டவட்டமாக அறிவிப்பு செய்யாமல், காலம் கடத்துவதற்கு இம்மாநாடு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது என்கிற எண்ணமும் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை மத்திய அரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
மேலும் காலந்தாழ்த்தாமல் 2011 பிப்ரவரியில் இரண்டாம் கட்டமாக எடுக்கப்படவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள-வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருள்கள்பற்றி எல்லாம் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய ஒரே ஒரு புள்ளி விவரத்தைச் சேகரிப்பதில் எந்தவித சுமையும் ஏற்படப் போவதில்லை.
இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் பற்றிய ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியப் படுத்துமேயானால், அகில இந்திய அளவில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த_- மற்றும் சமூகநீதி உணர்வுடையவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது.
தீர்மானம் 8:
மத வன்முறைகளில் ஈடுபடும் இந்துத்வா சக்திகள் மீது நடவடிக்கை தேவை
நாட்டில் பெருகி வரும் பயங்கரவாதம், வன்முறை என்பது ஏதோ சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ள செயல்கள் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை உள்ள உளவுத்துறை அதிகாரிகளால் பரப்பப்படுகிறது. தவறு செய்கிற சமூக விரோதிகள், எக்கட்சி, எம்மதத்தவராக இருப்பினும் சட்டம் வேறுபாடு காட்டாமல், அதன் கடமையை தயவு தாட்சண்யம் பாராமல் நிறைவேற்றவேண்டும்.
பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளத்தினர்பற்றி லிபரான் ஆணையம் தந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதோடு, (1) மாலேகான் குண்டு வெடிப்பு (2) மெக்கா மசூதி குண்டு வெடிப்புகள் (2007) அய்தராபாத்தில் (3) கோவா குண்டு வெடிப்பு (4) மோடாசா தர்கா மற்றும் ஆஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றிற்கு மூல காரணமான குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸின் அதிதீவிர அமைப்பான அபிநவபாரத் உறுப்பினர்கள், அத்துடன் பாகிஸ்தானிகள் பயணம் செய்த 68 பேர் பலி (18.2.2007); அரியானாவில் சம்ஜூரன எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு ஆகிய எவற்றின் மீதும் இதுவரை சரியான, கடுமையான, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்ச கத்திற்கும், மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டி, இராணு வத்தின் வெடிமருந்து, ஆயுதங்களையே பயன்படுத்தி அந்த அபநவபாரத் அமைப்பினர் செய்துள்ள அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் வந்தும், அவர்கள் எவர் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது சட்டம், நீதியின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தாகும். எனவே சட்டம் விருப்பு, வெறுப்பின்றி தனது கடமையைச் செய்ய இம்மாநாடு வலியுறுத்துகிறது.
வன்முறை நக்சலைக் காட்டிவிட்டு திசை திருப்பி, இக்கூட்டம் தாங்கள் தப்பித்துக் கொள்ள உடந்தையாக உள்ள அதிகார வர்க்கம், ஊடகங்களையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
----------- நன்றி விடுதலை (07.07.2010)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment