வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, May 14, 2010

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா?

நாளேடுகளில் இரண்டு வகையான திருமணங்-கள், விளைவுகள்பற்றி தகவல்கள் வெளி வந்துள்ளன.


ஒன்று கருநாடக மாநிலத்தில் நடந்தது. கோலார் தங்கவயலைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 25 வயது -5 அடி 7 அங்குலம் உயரம் உள்ள மண-மகனுக்கும், ஆந்திர மாநிலம் குப்பம் குடிபள்ளி மண்டலத்தில் உள்ள பஜனவாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது_ 2 அடி 4 அங்குலம் உயரமுள்ள ஜி.பாரதிக்கும் நடைபெற்ற திருமணம்.

மணமகனும், மணமகளும் வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம். இருவரும் சிறுவயது முதலே பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.

பாரதியை மருமகளாக ஏற்க மணமகனின் பெற்றோர் உடன்படவில்லை. மணமக்களின் உறுதிக்கு முன்னால் அவர்கள் உறுதி தளர்ந்து போய்விட்டது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்தது என்பது வரவேற்கத்தகுந்த நற்செய்தியாகும்.

இன்னொரு தகவல்_ ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வெளிவந்ததாகும். அம்மாநிலம் கோதர்மா பகுதியைச் சேர்ந்தவர் நிருபமா. இவர் பத்திரிகை-யாளர். வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை தன் மகள் காதலிக்கிறார் என்று அறிந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தம் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். முடிவு, பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! பெண் படித்தவர்_ அதுவும் பத்திரிகையாளர். உலக அனுபவம் அறிந்தவர். அத்தகு ஒரு பெண்ணுக்குத் தனது துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை இல்லையா?

அப்படியே கோபம் வந்தாலும் பெற்ற மகளையே_ கொலை செய்யும் அளவுக்கு அது வெறி பிடித்துக் கிளம்பவேண்டுமா?

இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் அவர்களை ஆட்டிப்படைக்கும் ஜாதி வெறிதானே? எந்த அளவுக்கு ஜாதி என்ற நோய் மனித சமூ-கத்தைச் சீரழித்து இருக்கிறது _ மனித மூளையைக் கொடூரக் கொடுவாளாக மாற்றியிருக்கிறது?

இவ்வளவுக்கும் ஜாதி என்பதற்கு எந்தவிதமான அடையாளம் தான் உண்டா? யாரோ, எந்தக் காலத்திலேயோ உருவாக்கி வைத்து, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதைத் தவிர ஜாதிக்கென்று உள்ள தனித்தன்மை என்ன?

ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வதால் குழந்தை பிறப்பதில்லையா? ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கப் போகும் நலன்களும், வளங்களும்தான் என்ன?

மனிதனுக்கும் மாட்டுக்குமா திருமணம் நடந்தது? மனிதர்களுக்குள்தானே நடக்கிறது. போதிய வயது அடைந்த நிலையில் நடக்கும் திருமணத்தைத் தடை செய்ய பெற்றோராக இருந்தாலும் உரிமை ஏது?

இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களுக்குத்தான் குறைச்சலா? எழுத்தாளர்கள் கிடையாதா? சிந்தனையாளர்களும் ஒழிந்து போய்விட்டார்களா?

இவர்களுக்கெல்லாம் சமுதாயப் பொறுப்பு என்பது கிடையவே கிடையாதா? அறிவையும், ஆற்றலையும் செயல்படுத்தும் கடமையைச் செய்ய முன்வந்தால் இந்த நோய்கள் மனிதர்களை அண்டுமா?

மதம்,- கடவுள்,- பக்தி, நம்பிக்கை என்னும் சங்கிலி-களால் இவர்கள் கட்டப்பட்டுக் கிடப்பதால் இவற்-றைக் கடந்து சிந்திக்கவோ செயல்படவோ முடியாத கைதிகள் ஆகிவிட்டார்கள் என்றுதானே பொருள்?

இதற்கு என்னதான் விடிவு? தொடக்கப் பள்ளி முதல் மாணவர்களுக்கு நற்சிந்தனை, நற்பழக்கம், நன்னடத்தை, தன்னம்பிக்கை, தர்க்கம், பொதுப் பார்வை, மனித நேயம், பகுத்தறிவு இன்னோரன்ன வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும் பட்சத்தில் இத்தகு கொடூரங்களுக்கு இடமே இருக்க முடியாது.

மதச்சார்பற்ற கல்வி என்பது கண்டிப்பாக-வேண்டும். மதத்தின் துளி கல்விப் பாலில் கலந்து-விட்டால், மனிதனை மதம் கொள்ளவே செய்யும்.

சுதந்திர நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்-கும் பாதுகாப்பு என்பது மிகவும் கேவலமானதாகும்.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இதுவரை ஆளவந்தார்கள், சட்ட விற்பன்னர்கள் பதில் சொல்லவில்லையே!

ஜார்கண்ட் மாநிலத்தில் பத்திரிகையாளரான, படித்த பெண்ணையே ஜாதி பலி கொண்டுவிட்டதே. இதற்குப் பிறகும் குறட்டையா? மகாமகா வெட்கக்-கேடு!

---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]