வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, May 01, 2010

புரட்சிக்கவிஞரின் அறிவியல்பார்வை

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் பாரதிக்குப் பிறகு அறிவியலும், கவிதையுமாகத் தமிழ் பரப்பியவர் புரட்சிக்கவி பாரதிதாசன். எதிலும் சமுதாயக் கண்ணோட்டம், பகுத்தறிவு சீர்திருத்தக் கொள்கைகளுக்குக் குறைவில்லை. பாவேந்தரின் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, சொற்பொழிவு, துணுக்கு போன்ற எல்லா ஊடகங்களிலும் அடிநாதமாக இழையோடும் அறிவியல் கருத்தாழத்தையும், தமிழின் முன்னேற்றத்தையும் எடுத்தெழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


இந்நூற்றாண்டுக் கவியானபடியால் உலகில் நிகழ்ந்து வரும் விஞ்ஞானப் புரட்சியிலும் இரண்டறக் கலந்து, ஏவுகணைகள் முதல் சூரண மருத்துவம் வரை எத்தனையோ துறைகள் இவரது மனதில் உட்கடல் முத்துக்களாகப் பளீரிடுகின்றன. பொதுவாக அறிவியல் தமிழை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். பாமரருக்குப் புரியுமாறு எழுதப்படும் விஞ்ஞானச் செய்தி; மாணவருக்குப் புகட்டத்தகும் அறிவியல் பாடம்; கற்றோருக்கன்றி மற்றோருக்குப் பொருள் விளங்காத உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வுக் குறிப்பு ஆகிய மூன்று தளங்களில் நின்று கவனித்தால் பாவேந்தரின் அறிவியல் கொள்கை களில் விஞ்ஞானத் தகவல் நிலையினின்று உயர்ந்து, அறிவியல் பாட நிலைக்கு எட்டமுயலும் வேகமும், வீரியமும் புலப்படும்.

கால விரைவினைக்
கடக்கும் வானூர்தி
ஞாலப் பரப்பினைச்
சுருக்கிற்று பார்நீ.
தொலைபேசித் தொடர்பு
தோழமை நட்பு
அலைகடல் மலையை
அறிந்து பெட்பு
வானொலி யாலே
வைய மொழிகள்
தேனொலி யாயின
திக்கெலாம் கனிகள்.
ஏவுகணைகள்
கோள்விட்டுக் கோளைத்
தாவின எங்குமே
நாம் செல்வோம் நாளை.

இன்றைக்குச் செவ்வாய்க்கு மனிதன் குடிபெயரும் பிரயத்தனங்கள் வலுவடைந்து வருகின்றன. சந்திரனில் தளம் அமைத்துப் பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வு முகாமிட்டுச் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் தொடரும் பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. பாவேந்தரும் செவ்வாய் உலக யாத்திரை (ஏழைகள் சிரிக்கிறார்கள் -பாரதிதாசன் சிறுகதைத் தொகுப்பு) குறித்து கற்பனை ஓவியம் தீட்டியிருக்கிறார்.

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் ஏவப்பட்ட ரஷ்யாவின், லூனா-_2 எனும் விண்கலம் சந்திரனில் ஆர்க்கிமிடிஸ் குழியின் அருகே தரையை முட்டிற்று. இதுகுறித்துப் பாவேந்தர் நடத்திய குயில் (22.9.59) ஏட்டின் கேட்டலும் கிளத்தலும் பகுதியில் ஒரு வினா _விடை இடம் பெற்றது. வான் இடத்தின் இரண்டாம் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டு பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று என்ற கேள்விக்கு மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று எனப் பதிலிறுக்கிறார். புரட்சிக்கவி, சந்திரனைப் பாம்பு விழுங்குகிற புனைக் கதைகளைப் பொய்யாக்கி இம்மண்ணுலகப் போலிச் சாத்திரங்களை எரித்துவிட்ட விஞ்ஞான வரலாறு - பாவேந்தர் வாக்கில் அங்கதமாக அறிவிக்கப்படுகின்றது.

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் பாரதி. நிலவில் மாந்தர் இறங்கும் நாள் நெடுநாள் ஆகாது என்று தீர்க்கதரிசித்தார், பாரதிதாசனார். கவிஞர் மேலும் வெண்ணிலாவில் தமிழ்ப் பெண் சென்று இறங்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பாவேந்தராகிய ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எனினும் நிலவினில் முதல் மனிதன் கால் வைத்தது இந்திய நேரப்படி 1969 ஜூலை 21ஆம் நாள். பாவேந்தர் மறைந்து சரியாக 5 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்தே விண்வெளி வரலாற்றின் அந்த மகத்தான சாதனை அப்போலோ- 11 எனும் அமெரிக்கத் திட்டத்தினால் நிறைவேறியது.

ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் என்ற தலைப்பில் பகுத்தறிவு மலர் இதழில் பாரதிதாசன் எழுதின கவிதையின் சில வரிகளைக் கவனிப்போம்.

இரோஷிமா நாகசாகி எனும் இரு ஊரில் வைய
விரோதிகள் வீசின ராம் வெடிகுண்டை; எரி மலைத்தீ
சரேலெனக் கவிழ்ந்த தைப் போல் சாவில்பல்லாயி ரம்பேர்
ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலா தழிந்தா ராமே
இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் இரண்டூரின் சுற்றுப்பக்கம்
ஒன்றுமே முளையா தாமே! வாழ்தலும் ஒண்ணா தாமே

அணுகுண்டு எதிர்ப்பை மிக ஆழமாக இதில் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்கள் தெரு கெட்ட தெரு எனும் தலைப்பில் தூய்மையான சுற்றுப்புறம் குறித்து ஆதங்கப்படுவதைக் கேளுங்கள்:

உங்கள் தெரு வீட்டின்முன்னே
மாடு கட்டி இருக்கும் - _அங்கு
உள்ள சாணி சிறுநீரில்
கொசுக்கள் நோயைப் பெருக்கும்.
அங்கங்கேயும் வீட்டெதிரில்
குப்பைக் கூளம் கிடக்கும் _- எனில்
அதனை நாயும் கோழியும்போய்
கிளறிக் காற்றைக் கெடுக்கும்
தங்குழந்தை தெருவில் பகலில்
வெளிக்குப் போகக் கண்டு _- நல்ல
தந்தையரும் இருட்டினிலே
செய்வார் அந்தத் தொண்டு

கிண்டலைப் பாருங்கள்.

புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு என்கிற கொள்கையோடு,

புகைச்சுருட்டால்
மூச்சுக் கருவிகள் முற்றும்நோய் ஏறும், பிள்ளை
முத்தம் தரும்நே ரத்தில் வாய் நாறும்,
ஓய்ச்சல் ஒழிவில் லா(து) இருமல் சீறும் _- நல்.
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்

எனப் புகை சுருட்டுக் கவிதையில், தீமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதுகாறும் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் அறிவியல் தமிழுள்ளமும் ஆழ்ந்த கவிநெஞ்சமும் நுணுகி ஆராயப் பெற்றோம். அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாகத் தமிழ் செழிக்கவேண்டும்.

நன்றி: தீக்கதிர், 26.4.2010

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]