Thursday, December 17, 2009
வீட்டிற்கோர் புத்தகச் சாலை
பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமல்ல; ஏற்கனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்து போகச் செய்வதற்குப் பலப் புத்தகங்கள் தேவை. நமது மக்களுக்கு கைலாயக் காட்சிகள், வைகுந்த மகாத்மியம், வரலட்சுமி நோன்பின் மகிமை, நாரதரின் தம்புரு, நந்தியின் மிருதங்கம், சித்ராபுத்திரரின் குறிப்பேடு, நரக லோகம், அட்டைக்குழி, அரணைக்குழிகள், மோட்சத்தின் மோகனம், இந்திரச் சபையின் அலங்காரம், அங்கு ஆடிப்பாடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும்; ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும், அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வயானைக்கும் ஏசல் நடந்தது தெரியும், நத்திதுர்க மலை எங்கே? தெரியாது என்பர், நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலைக் கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை? சொல்லத் தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன? கணக்கு அறியார். தாராபுரம் எந்த திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர், பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாநகரத்தின் வருமானம் என்ன? அறியார்கள். அறிந்துகொள்ளவும் முயலமாட்டார்கள். அனுமந்த் பரபாவம் தெரியும், அரசமரத்தைச் சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதுக் கூடத் தெரியும். பேய், பில்லி, சூன்யம் பற்றியக் கதைகள் கூறத் தெரியும். அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலை கண்டுபிடித்தது யார் என்பது தெரியாது. அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக்கப்போகும் கருணாநந்த ஸ்வாமிகளின் கால் பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும்.
இது நம் மக்களின் மனவளம். இவர்களில் பெரும்பாலோர், இவர்களைக் கொண்டுள்ள நம் நாடு, அழிவுச்சக்தியில் அணுகுண்டு உற்பத்தியும், ஆக்க வேலைச் சக்தியில் சந்திர மண்டலத்திற்குச் சென்று வரும் ஆராய்ச்சியும், நடத்திக்கொண்டுவரும் உலகிலே ஓர் பகுதி, சரியா? நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட யாரும் இந்நிலை சரியென்று கூற மாட்டார்கள். சரியல்லதான். ஆனால் என்ன செய்வது என்று கேட்பர்? வீட்டிற்கோர் புத்தகச் சாலை அமைக்கவேண்டும். மக்கள் மனதிலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல, அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
(அறிஞர் அண்ணா சொற்பொழிவு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment