வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 05, 2009

சாதி இழிவிற்குக் காரணம்......


பேசும் சக்தியோடும் கை, கால், கண், மூக்கு, வாய்களான பஞ்சேந்திரியங்களோடும் காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள்தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், ராட்சதர் என்றாலும், மனிதர் என்றாலும், பேய் பிசாசு என்றாலும் மற்றும் வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனிதச் சுபாவ கணம் உள்ளவர்கள் தான். இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவித்ப பேதங்களும், உயர்வு தாழ்வுகளும் கிடையாது. கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற தென்றால் அது வேத, சாத்திர, புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகள் தான். இது வாய்மை, மெய்ம்மை, உண்மை, சத்தியம், தத்துவம் ஆகும். நம்புங்கள்!


சூத்திரன் நிலை

1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)

2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு ; அதி. 8. விதி 414)

3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)

4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)

5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)

பறையர்கள் என்ற பட்டம் மாறி. ஆதித் திராவிடர்கள் ஆகி இப்போது அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

அரசனும் செல்வந்தனும் சாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு, தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான்.

சாதி இருப்பதனால் தான் நீ இந்து; உன் மதம் இந்து மதம்; உனது சாத்திரம் மனுதர்மம், உஉபநிடதம் என்று இருக்கிறது. இவைகளை யெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு நான் எப்படிச் சூத்திரன் என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? சூத்திரன் என்பதை உள்ளபடியே நீ வெறுப்பதானால் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டாமா?

இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீசு கொடுங்கள். “கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர் சாதியாக்கி விட்டாய். ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீ யல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீசு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள்.

தங்களுக்குள் சாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் - ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் எப்படிச் சாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

உண்மைச் சுய ஆட்சி வரவில்லை; இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது; இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா?

நாம் பிறக்கும் போது இந்துச் சம்பிரதாயப்படிக் கீழ்ச் சாதியாய்ப் பிறந்தது என்னமோ உண்மைதான். அந்த இழிவுக்கு நாம் பொறுப்பாளியல்ல. அதை மாற்றிக் கொண்டு பிறக்கவும் நம்மிடம் யாதொரு சக்தியும் இருந்ததில்லை. ஆனால், நாம் சாகும்போது இழிவான சாதியாய் இல்லாமலும் நம் பின்சந்ததி இழிவான பிறப்பாய்க் கருத்ப்படாமலும் இருக்கும்படியாக நடந்துகொள்ளத் தக்க சக்தி நம்மிடம் இருக்கிறது. அதை நாம் செய்யாவிட்டால் நாம் இழிவை நீக்கிக் கொள்ள ஆசைப்பட்டவர்களாவோமா?

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையாலேயே ஒழிந்ததாக ஆகாது.

- பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பு (நன்றி: தந்தைபெரியார் இணையம்)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]