வால்மீகி இராமாயணத்தைக் கம்பன் மாற்றி அதாவது, இராமன், சீதை முதலியவர்களை வால்மீகி, முறையே அயோக்கியர்களாகவும், இழிகுலப் பெண் போலவும் பல இடங்களில் சித்தரித்திருப்பதை அடியோடு புரட்டி, இராமனை கடவுளாகவும், சீதையைக் கடவுள் மனைவியாகவும் சித்தரித்துத் தமிழ் மக்களை அவ்விருவரையும் கடவுள்களாகக் கருதி வணங்கும்படி செய்து விட்டான் என்று சுயமரியாதைக்காரர்கள் சொல்லும் குறைபாட்டிற்கு தோழர் சோமசுந்தர பாரதியார் போன்ற சில கலாரசிகர்கள் சுயமரியாதைக் காரர்களை கல்வி அறிவற்றவர்கள் என்றும் இராமாயணத்தைப் படிக்காமல் பிதற்றுகிறார்கள் என்றும் கம்பன் இராமனை ஒரு தமிழ் மகனாகவும் சீதையை ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் சித்தரித்து அதாவது தமிழர்களுடைய பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் மேன்மைகளையும் எடுத்துக் காட்டுவதற்காக அப்படி எழுதினாரே தவிர மற்றபடி ஆரியக் கூலியாக இருந்து எழுதியதல்ல என்றும் கூறுகிறார்கள். சுயமரியாதைக்காரர்களுக்கு இந்த ரசிகர்களைப் போன்ற படிப்பு இல்லாமல் இருக்கலாம், அதற்காக சுயமரியாதைக்காரர்கள் சங்கடப்படுவ தில்லை. ரசிகர்களிடம் நற்சாட்சிப் பத்திரம் கேட்கவும் இல்லை.
கம்பன் வால்மீகி இராமாயணத்தை மாற்றி எழுதியது தமிழர் மேன்மையை விளக்கவா? என்றும், இதைப் பாரதியார் போன்றவர்கள் உண்மையாய், மெய்யாய், வாய்மையாய், சொல்லுகிறார்களா? அல்லது உண்மைக் கம்பனைப் போல் சொல்லுகிறார்களா? என்றும் அறிய ஆசைப்படுகிறேன். இதற்குப் பதில் அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவ்வளவு படித்தவர்கள் எவ்வளவும் படிக்காதவர்களை மதித்துப் பதில் சொல்லுவது அவர்களது மானத்துக்கும், மரியாதைக்கும், பெருமைக் கும், படிப்புக்கும் இழுக்காகுமல்லவா? ஆதலால் பொது மக்கள் பார்த்து இதுதானா தமிழ் மக்கள் தன்மை? கம்பன் சீதையைத் தமிழ்ப் பெண்ணாகத்தான் சித்தரித்தானா என்பவற்றைத் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு
நல்குவதென் இனி நங்கை கொங்கையைப்
புல்குவ பூணும் அக் கொங்கை போன்றன;
அல்குலின் அணிகளும் அங்குலாயின ;
பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே.
இதுதான் கம்பர் சீதையைத் தமிழ்ப் பெண்ணாகச் சித்தரிக்கும் காட்சியாம். அதாவது சீதையை இராவணன் தூக்கிப் போகும்போது தேரில் இராவணன் மடிமேலிருந்த படியே சீதை தனது நகைகளைக் கழற்றி மேலாடையில் போட்டுக்கட்டி எறிந்துவிடுகிறாள். அதை வானரங்கள் எடுத்து வைத்திருந்து இராமனுக்கு காட்டுகின்றன. இராமன் அவைகளைப் பார்த்தவுடன் அந்த நகைகள் இராமனுக்கு அளிக்கும் காட்சித் தமிழ்ப் பெண்ணின் சடையில்லை, சடையலங்காரம், நெத்திச்சுட்டி, வங்கி, வாளி, மோதிரம், பாதரசம், பாடகம், தண்டை, பீலி, சுத்து, முதலிய கண்களுக்குத் தெரியும்படியான நகைகளைக் கம்பன் விட்டுவிட்டு கொங்கைகள் பூண்ட நகையையும், அல்குல் பூண்ட நகையையும் மாத்திரம் விளக்கிக் காட்டியதோடு அவைகள் அந்தந்த அவையவங்கள் போலவே காட்சி தந்தன என்கிறார்.
அணி என்பது காண்பவர்களுக்குக் காட்சியளிப்ப தற்கு அதாவது பார்வைக்கு அழகாய் இருப்பதற்கு ஆகவே நகை அணிவதாகும். அல்குலுக்கு அணிகள் உண்டா? அதுகாணும் படியான அவயவமா? அல்குலுக்கு மறைவு கட்டுவார்கள். அதுவும் குழந்தைப் பருவத்தில்தான் கட்டுவார்கள். ஆடை உடுக்கும் பருவம் வந்தவுடன் அதை அவிழ்த்து விடுவார்கள். சீதையோ வயிறு சரிந்த கிழவி என்று லட்சுமணனே சாட்சிப் பிரமாணமாகக் கூறியி ருக்கிறான். சூர்ப்பநகையும் சீதை எதிரிலேயே இராமனிடம் வயிறு சரிந்தவள் என்று கூறியிருக்கிறாள்.இந்த நிலையில் இந்தக் கிழவிக்கு அல்குல் அணியோ,மறைவோ தேவையிருந்து இருந்திருக்குமா?அய்யா! இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். அப்படியானால் இராவணன் மடிமேல் இருக்கும்போது சீதை இராவணனுக்குத் தெரியாமலோ இராவணன் அந்த நகை இருந்த இடத்தைப் பார்க்காமலோ கவனிக்காமலோ இருக்கும்படியாவது அந்த நகையைக் கழட்டவோ அவிழ்த் தெடுக்கவோ முடியுமா? இந்த லட்சணத்தில் சீதை இந்த நகைகளைக் கழட்டிக் கழட்டித் தனது மேலாடையில் போட்டு பிறகு மூட்டையாகக் கட்டி நிலத்தில் போட்டாள் என்று இருக்கிறது. இந்தக் காட்சியை சற்று மனதில் நினைத்துப் பாருங்கள். மேலாடையும் இல்லாமல் கொங்கைப் புல்குவ பூணுகளையும் கழற்றி விட்டு அப்புறம் அல்குல் அணியையும் கழட்டுவதோ அவிழ்ப்பதோ செய்திருந் தால் அந்தக்காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
கம்பர் சித்தரித்தது போன்ற காரியம் தேரின் மேல் நடந்திருக்குமானால் அங்கு அப்போது என்ன நடந்திருக்கும்? இராவணன் உடனே தேரை நிறுத்தி சீதையைக் கட்டிப்பிடிக்கும்படி செய்திருக்குமா இருக் காதா என்று கேட்கிறேன். அப்படி நடந்திருக்கவில்லை யானால் இராவணனின் மனோதிடமும், மேன்மையான குணமும் குன்றின் மேல் (லட்சம் காண்டில் பவர் எலக்ட் டிரிக்) விளக்குப்போல் விளங்குகிறதா? இல்லையா? என்று கேட்கிறேன்.
இந்த இடத்திற்கு ஏற்றது போல் வால்மீகி என்ன சொல்லுகிறார் என்றால், இலங்கை போய்ச்சேரும் போது சீதை மோகமுற்றிருந்தாள் என்று சொல்லுகிறார். எனவே கம்பர் சொன்னபடி காரியம் நடந்திருந்தால் வால்மீகி சொல்லுகிறபடி இருவருக்கும் மோகம் ஏற்பட்டிருப்பதில் ஆட்சேபணை சொல்ல இடமில்லை.
ஆகவே கம்பன் வருணனைப் புலவனே தவிர, நல்ல பொருள்சுவை அறிந்த ஒரு அறிவுப் புலவனல்ல என்பதற்கு இப்படிப்பட்ட கவிகள் இன்னும் அநேகம் காட்டலாம் என்பதோடு அவனுக்கு இராமாயணம் பாடும்போது தமிழ்ச்சொரணை கடுகளவு இருந்ததாகச் சொல்லுவதற்கில்லை என்பதற்கு ஆகவே இதை எடுத்துக் காட்டுகிறேன்.
(குடிஅரசு - கட்டுரை - 25.12.1943)
No comments:
Post a Comment