வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 17, 2011

உண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா?

ஊழலை ஒழிக்கப் போவதாக உண்ணா விரதம் இருந்தவர்களின் பின்னணி குறித்தும், ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:


ஊழல் ஒழிப்பு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அதை ஒழிக்க சிலர் திடீரென்று அவதாரம் எடுத்து, மலிவான விளம்பரம் தேடு வதும், அதன் மூலம் இந்தியாவின் அடுத்த மகாத் மாக்களாகவும் தங்களை உயர்த்திக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் தினமும் குளித்துக் கொண் டிருக்கவும் ஆன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைக் காண வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது!


உண்ணாவிரதம் பற்றி தந்தை பெரியார்

தந்தை பெரியார் மிகப் பெரிய தொலை நோக் காளர்; புது உலகின் மகத்தான சிந்தனையாளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் அடையாளம் காட்டி விருது வழங்கியது எவ்வளவு பொருத்தமானது என்பதை இப்போது அல்லது இனிவரும் நாள்களில் உலகம் உணர்ந்து கொள்ளும். காந்தியார் பட்டினிப் போராட்டம் - உண்ணா விரதம் - சாகும்வரை உண்ணாவிரதம் என்றெல் லாம் இறங்கிய அக்காலத்திலேயே பெரியார் ஒருவர் தான், இது பயமுறுத்திப் பணிய வைக்கும் விரும்பத்தகாத தவறான முறை (Coercive and Blackmailing) என்று துணிந்து கூறி அதனை வன்மையாகக் கண்டித்ததோடு, அம்முறை மூலம் வருங்காலத்தில் பொது ஒழுக்கக் கேடு வளர அடிகோலி வழிகாட்டியதாகும் என்று கூறியிருக் கிறார். பலரும் அய்யாமீது பாய்ந்தனர்; அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.


பட்டினிப் போர் தொடங்கிய திடீர் தலைவர்கள்!

திடீரென்று அன்னா ஹசாரே என்ற மராட்டிய சமூகப் போராளி - ஒருவர் ஊழலை ஒழிக்கத் தயாராகும் சட்டம் ஒன்றை விரைந்து நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்; ஏற்கெனவே கொண்டு வந்து கிடப்பில் போடப்பட்டதை இப்போது விரைந்து - ஊழலில் யாரையும் விலக்கிடாமல் தண்டிக்கும் வண்ணம் சக்தி வாய்ந்த விதி முறைகளை உள்ளடக்கிய சட்டமாக அதன் வரைவு (Draft Bill) மசோதா அமைந்து, சட்டமாக வரும் குளிர்கால கூட்டத் தொடரில் விரைந்து நிறை வேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புது டில்லிக்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து பட்டினிப் போர் தொடங்கினார்.


பட்டினிப் போரின் அரசியல் பின்னணி!

ஊடகங்கள் அபார விளம்பரம் தந்தன. முக்கியமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடையிலே கவிழ்க்க விரும்பும் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாக - அல்லது இடையில் அது கவிழ்ந்து திடீர்த் தேர்தல் வந்தால், பி.ஜே.பி. போன்ற ஆட்சி வாய்ப்பு இழந்த கட்சிகளுக்கு இது தீனியாகப் பயன்படும் என்ற உள்நோக்கத்தோடு, கோழி திருடியவனும் கும்பலில் சேர்ந்து கூச்சல் போடுகிறான் எனும் கிராமியப் பழமொழிக்கேற்ப, ஊழலில் தினம் தினம் குளித்து எழுவது கர்நாடக பி.ஜே.பி. அரசு; பி.ஜே.பி. ஆதரவு டிரஸ்ட்டுக்கு அரசு பணத்தை அள்ளிக் கொடுத்த அக்கிர மத்திற்காக உச்சநீதிமன்றத்தால் குட்டுவாங்கப்பட்ட அரசு, ஏற்கெனவே அவர்கள் கட்சித் தலைவர் பங்காருகள் டெகல்கா படம் மூலம் ரூபாய் நோட்டு களை வாங்கி வைப்பதை படம் பிடித்துக் காட்டியதை யெல்லாம் மறைத்து விட்டு, ஊழல் ஒழிப்புக் கோரசில் தங்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.



4 நாள் உண்ணாவிரதத்துக்குச் செலவு ரூ.50 லட்சமா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் ஒரு பிரச்சினையைச் சரியாக எழுப்பியுள்ளார்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மட்டும் ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார்? யார்? இதற்காக ரூ.82 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 நாள் உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா?

4 நாள் உண்ணாவிரதத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ள அவர் எப்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு குறிப்பிட்ட தொகைதான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லலாம்? - என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருக்கின்றனர் என்பதும், ஆர்.எஸ்.எஸ். சார்புடைய வர்கள் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறதே!

லஞ்சம் மட்டும்தான் ஊழலா?

அன்னா ஹசாரே என்பவர் நரேந்திரமோடியை வானளாவப் புகழ்கிறார். ஊழல் என்பது வெறும் லஞ்சம் மாத்திரம்தானா? உச்சநீதிமன்றத்தில் பொய் வழக்குகள் - புனை வழக்குகள் போடப்பட்டதற்கான கண்டனத் திற்கு ஆளானால் அது அப்பட்டியலில் வராதோ? நீரோ மன்னன் என்று மோடி உச்சநீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்படவில்லையா?

இந்த லட்சணத்தில் ஊழல் ஒழிப்புக்கு ஜெயலலிதா அம்மையாரும் கோஷ்டி கானத்தில் கலந்து குரல் கொடுப்பதுதான் வேடிக்கை!

அரசியல் கட்சி நடத்தும் எந்தத் தலைவரும் தேர்தல் நிதி வசூலிக்காமல் (பல வழிகளில்) தேர்தல்களில் ஈடுபடுவது - தத்தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது நடைமுறை சாத்தியம்தானா? மனசாட்சியோடு பேசினால் ஊழல் என்பதை சுவாசிக்காமல் (இன்றைய தேர்தல் முறை - செலவு கணக்கு காட்டும் முறை) எவராவது - அவர் எக்கட்சி யினராயினும் - உண்டா? ஊழலின் ஊற்று இங்கேயே இருக்கிறதே!

ஊழல் ஒழிப்புத் தேவைதான்! அதற்கு இப்படி விளம்பர ஸ்டண்ட் அடிப்பது, அதைக் காட்டி அச்சுறுத்தி ஒரு பதவி பெறுவது, அடுத்த ஜூனியர் தேசப் பிதா(?)வாக அவதாரம் தரிப்பது என்பதெல்லாம் சரியானது தானா?

நியாயமாக அவர் பதவியேற்று இருக்கலாமா? அரசியல் சட்டப்படி நாடாளுமன்றத்தின் பணியை - நீதித்துறையின் பணியை, சட்ட முறைக்கு எதிராக தாங்களே ஒரு கும்பல் கூடி குறுக்கு வழியில் நவீன ஊழல் ஒழிப்பு நாயகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வது தவறு அல்லவா?

இதனை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் பி.ஜி. வர்கீஸ் அவர்கள் நேற்று (16.4.2011) எழுதிய சிந்திக்கத் தூண்டும் கட்டுரையில் பல்வேறு கோணங்களில் நம் நாட்டு கிரிக்கெட் ஊழல் - சீரழிவு உட்பட பலவற்றைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்! (அதன் மொழியாக்கம் 2ஆம் பக்கம் காண்க.)

திருமதி ஷர்மிளா தாகூர் அவர்களும் இதே கருத்தினை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

உண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா?

இப்படி ஒருவர் திடீரென்று சாகும் வரை உண்ணாவிரதம் என்றவுடன் அரசு பணிந்து, அவர்கள் கேட்ட வரத்தை உடனே கொடுத்து விடுவது தவறான முன்மாதிரி அல்லவா? இது நாட்டை நாளைக்கு எங்கே இழுத்துச் செல்லும்?

தடி எடுத்து மிரட்டுபவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் என்ற நிலைக்கு அல்லவா கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்று கேட்டிருக்கிறார் - அப்பேட்டியில்.

தந்தை பெரியாரின் தீர்க்கதரிசனம் எவ் வளவு சரியானது என்பதை இன்று நடுநிலை யாளர்கள் பேசத் தொடங்கி, அவரது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதைக் காண முடிகிறது.

ஊழலின் ஊற்றுக் கண்கள் எவை, எவை?

ஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச் சினைதானா? அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.

(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.

(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கை களில் திருத்தம்.

(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.

(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக் கட்டவே முடியாது!

இப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றது தான்.

பனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை!

ஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர்? எத்தனை பேர்? ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்?

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, பகுத்தறிவுடன் நோய் நாடி நோய் முதல் நாடினால் ஒழிய அது ஒழியாது!

 17-04-2011                                                                                    கி.வீரமணி,
                                                                                                       தலைவர் திராவிடர் கழகம்



1 comment:

இறைகற்பனைஇலான் said...

http://nanduonorandu.blogspot.com/2011/04/blog-post_06.html

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]