சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டம் குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில்
அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென்னை பெரியார் திடலில்
கூட்டப்பட்டது (8.5.2007) அக்கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு
ஒன்று உருவாக்கப்பட்டது.
அக்கூட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க.,
காங்கிரஸ், பா.ம.க., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்
(மார்க்சிஸ்ட்) கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர்
பேரவைகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துகளை
எடுத்துரைத்தனர்.
இந்த அமைப்பின் சார்பாக சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி
அவென்யூவில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. (16.5.2007)
அக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்
தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர்
தோழர் என்.வரதராஜன் ஆகியோர் பேசியது என்ன? (வக்கனை தெரிந்து கொள்ள படத்தை பார்த்து
படிக்கவும்)
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி செயலாளரும்- இந்திய கம்யூனிஸ்டு
(மார்க்சிஸ்ட்)கட்சியின் மாநில செயலாளரும் யார் மீது குற்றஞ்சுமத்தினார்கள்? இராமன்
பாலத்தை இடிக்கலாமா இந்துக்களின் மனதைப் புண்படுத்தலாமா (Dr.நமது எம்.ஜி.ஆர்
26.7.2008) என்று சொல்லும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத்தானே
கண்டித்தனர் - எதிர்த்தனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்திற்குச்
சென்று தடை வாங்கியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா. இப்பொழுது
தா.பாண்டியன் என்ன சொல்கிறார்? இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்டு
கட்சி என்ன சொல்லுகிறது?
அன்று ஜெயலலிதா மீது வைத்த குற்றச் சாற்றுகள்
கூட்டணி என்னும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா? 30 வயது மகன் அப்பாவைப்
பார்த்து நீதான் என் அப்பனா? என்று தோழர் தா.பாண்டியன் கேட்ட கேள்வி என்னாயிற்று?
முதல் அமைச்சர் கலைஞர் முதல் கப்பலைத் தொடங்கி வைப்பார் என்றவர் தோழர்
தா.பாண்டியன்-இப்பொழுது யார் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று கர்ச்சிக்கிறார்?
அந்தத் திட்டமே கூடாது என்பவரை முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தாண்டிக்
குதிக்கிறார். ராமன் பாலத்தைச் சொல்லி ஒரு மக்கள் நலத்திட்டத்தை எதிர்ப்பது வெட்கக்
கேடு என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வீறு கொண்டு
பேசினார். இன்றைக்கு நிலை என்ன? அவர் அன்று சொன்ன அந்த வெட்கக்கேட்டுடன் கூட்டணி
வைத்துள்ளனரே!
இவர்களுக்கு நாடு பெரிதா? நாலு சீட்டுகள் பெரியதா? தமிழக
வாக்காளப் பெரு மக்களே, சிந்திப்பீர்! நாட்டு நலனுக்கு வளர்ச்சிக்குக் குந்தகம்
விளைவிக்கும் கூட்டத்திற்குப் பாடம் கற்பிப்பீர்! கற்பிப்பீர்!!
--- விடுதலை, 07-04-2011
No comments:
Post a Comment