வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 09, 2010

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந் தான் என்று ஒரு நீதிபதி கூறலாமா?

புண்ணுக்குப் புனுகு பூசுவதா?
அலகாபாத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர்

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (8.10.2010) இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் புதிய நீதி தேவன்களின் மயக்கம் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சாரப் பிழிவு.
தொடக்கத்திலேயே இவ்வாரம் வெளிவந்த அவுட் லுக் (11.10.2010) இதழினைக் கையில் எடுத்துக்கொண்டு தமது விவாதத்தினைத் தொடங்கினார்.

First or Last? எனும் தலைப்பில் வினோத் மேத்தா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதியை எடுத்து விளக்கினார்.

ராமஜென்ம பூமியை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தலாம் என்ற நப்பாசையுடன் காய் களை நகர்த்திய சங் பரிவார்க் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு படிப்படியாகக் குறைந்தே வந்திருக்கிறது. அதன் ஆசையை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர்.

1999 இல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது அது வாங்கிய வாக்குகள் 23 சதவிகிதம்; இதன் பொருள்- 77 சதவிகித மக்கள் ராமன் கோயில் பிரச்சினையில் எதிராக இருந்தனர் என்பதே! 2009 ஆம் ஆண்டில் பி.ஜே.பி. பெற்ற வாக்குகள் வெறும் 18 விழுக்காடுதான்; இதன் பொருள்- 82 விழுக்காடு மக்கள் ராமன் ஜென்மபூமிக்கு எதிராக வாக்களித்து விட்டனர்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையி லான பிரச்சினை என்று பெரிதுபடுத்தி குளிர் காயலாம் என்று நினைத்தார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது முஸ்லிம்களுக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே உள்ள பிரச்சினை தான் என்று அவுட்லுக் எழுதியுள்ளதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.

(உண்மையைச் சொல்லப்போனால், பி.ஜே.பி.யோ, சங் பரிவார் வட்டாரமோ அனைத்து இந்துக்களுக்கும் பிரதிநிதிகள் என்று யார் சொன்னார்கள்? யார் ஏற்றுக் கொண்டனர்? கோடானு கோடி தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிவிட்டு, அவர் களுக்கும் சேர்த்து இவர்கள்தான் பிரதிநிதிகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா? இந்து என்று சொல்கிறார்களே, அதில்தான் எத்துணை எத்துணைப் பிரிவு! பாபர் மசூதிப் பிரச்சினையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையிட்டு சமரசம் செய்யச் சென்றபோது நீ சைவப் பிரிவைச் சேர்ந்த ஆசாமி; ராமர், வைணவர் பற்றிய சமாச்சாரம் - உம் வேலையைப் பாரு! என்று ராம் ஜென்மபூமி நியாஸ் தலைவர் கூறவில்லையா? இந்த நிலையில், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று பி.ஜே.பி.யோ, சங் பரிவார்களோ எப்படி மார் தட்டிக்கொண்டு முன்வர முடியும்?)

ராமனைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்பது இனி நடக்காத காரியம். நீதிபதி களுக்குத்தான் மயக்கம்; சில அரசியல் தலை வர்களுக்கோ தயக்கம். ஆனால், மக்கள் தெளி வாகத்தான் இருக்கிறார்கள் - மக்களைத் தெளிவுபடுத்த எங்களைப் போன்ற இயக்கம் இருக்கிறது.

1992 இல் பாபர் மசூதியை இடித்துக் கலவரத்தை உண்டாக்கியதுபோல இப்பொழுதும் செய்யலாம் என்று நினைத்தால், அதில் தோல்வி நிச்சயம். அப்பொழுது இருந்ததைவிட இப் பொழுது மக்கள் முதிர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றார் தமிழர் தலைவர்.
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா - சகோ தரத்துவத்துடன் வாழ்கின்றனர். அதிலும் குறிப் பாகத் தமிழ்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமா னது என்றும் சட்ட ரீதியாக எடுத்துக்காட்டினார்.

We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic என்று கூறப்பட்டுள்ளது.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானமாகும். இதில் யாரும் கை வைக்க முடியாது.

ஆனால், அலகாபாத் நீதிபதிகளின் தீர்ப்பு இதனைத் தகர்க்கும் நிலையில் உள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந் தான் என்று ஒரு நீதிபதி கூறலாமா? அதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் தீர்ப்பு அளிப்பதற்கு ஆவணங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் (Court of Law) செயல்படவேண்டிய நீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் (Court of Faith) மத ரீதியில் ராமன் பிறந்த இடம் என்று கூறியிருப்பது கண்டிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு எதிரான செயலேயாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞரான தமிழர் தலைவர்.

8700 பக்கங்களைக் கொண்டது மூவரின் தீர்ப்பு. தீர்ப்புகள் அதிக பக்கங்களில் இருந்தாலே அதில் குழப்பங்கள் அதிகம் என்று பொருள் - தடுமாற்றங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தையும் எடுத்துக்காட்டத் தவற வில்லை தமிழர் தலைவர். நீதிமன்றங்கள் சட்ட கோர்ட்டுகளே தவிர, நியாயக் கோர்ட்டுகள் அல்ல என்பார். இப்பொழுது அந்த நிலைக்கும் ஆபத்து வந்து நீதிமன்றம் நம்பிக்கை அடிப்படை யானதாக ஆகிவிட்டது என்று தமிழர் தலைவர் சொன்னபோது அரங்கம் மிகவும் ரசித்தது.

பாபர் மசூதி பிரச்சினையாக்கப்பட்டு சிக்க லாக்கிய பின்னணி என்ன? அதற்குக் காரணம் யார் என்பதை சர்வபல்லி டாக்டர் கோபால் (மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் மகன்) ‘‘Anatomy of a Confrontation’’ (1990) என்ற நூலை ஆதாரப்படுத்தி அதிலிருந்து பல தகவல்களை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.
1528 ஆம் ஆண்டிலேயே பிரச்சினை கிளப் பப்பட்டது (1853-இல் அயோத்தியில் முதன் முதல் வன்முறை வெடித்தது - 75 பேர் பலி!).

1949 இல் மிக மோசமான அத்துமீறல் என்பது பாபர் மசூதிக்குள் அவ்வாண்டு டிசம்பர் 22 இரவு நேரத்தில் குழந்தை ராமன் பொம்மையைக் கொண்டு போய் வைத்தது ஒரு கும்பல்.
பிரதமர் நேரு அதிர்ந்து போனார்; உடனடி யாக அந்தப் பொம்மைகளைத் தூக்கி எறியச் சொன்னார். அப்பொழுது துணைப் பிரதமராக சர்தார் பட்டேல், உ.பி. முதல் அமைச்சராக இருந்த கோவிந்த வல்லபாய் பந்த் அதற்கு ஒத்து ழைப்புக் கொடுக்கவில்லை. மாவட்ட மாஜிஸ்டி ரேட்டாக இருந்த நய்யார் என்பவர் ராமர் சிலையை எடுத்தால் பிரச்சினைகள் ஏற்படும், கலவரம் வெடிக்கும் என்று கூறினார். (ஆதாரம்: சர்வபல்லி டாக்டர் கோபால் நூல் - ஏ.ஜி. நூராணி கட்டுரை).

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தப்பும் வாய்ப்பு

அலகாபாத் தீர்ப்பின் காரணமாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிகளானவர்கள் தண்டனையி லிருந்து தப்பித்து விடக்கூடிய ஆபத்து இருக் கிறது என்பதைத் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினார்.

தாம் நடத்திய ர(த்)த யாத்திரையை அத்வானி நியாயப்படுத்திப் பேச ஆரம்பித்துவிட்டார்.
(லிபரான் ஆணையம், முன்னாள் பிரதமர் வாஜ்பேயி உள்பட 68 பேர்களை குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளது) நாடாளுமன்றத்தி லேயே பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர், சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாக ஆமாம், நாங்கள் தான் இடித்தோம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று பேசும் துணிவு ஏற்பட்டுவிட்டதே!

பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமன் பிறந்த இடம் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார் என்றால் என்றால், அதனை ஆதாரமாகக் கொண்டு, பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்த மாட்டார் களா குற்றவாளிகள்? இதற்கு இடம் அளித் துள்ளதா, இல்லையா அலகாபாத் உயர்நீதிமன் றம்? 1994 இல் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
It was an act of National shame தேசிய அவமானம் என்று சொல்லவில்லையா?

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங் களைக் கொண்ட தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டியபோது, அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் அப்படியே அதிர்ந்து போனார்கள்.

இதுபற்றி நான் மட்டுமல்ல, பிரபல வழக்கறி ஞர்கள் எல்லாம் சுட்டிக் காட்டியும் உள்ளார்கள்.

அத்துமீறி இரவோடு இரவாக இன்னொரு மத வழிபாட்டு இடத்தில் தமது கடவுள் சிலை களை வைப்பதும், அந்தக் குற்றத்தைக் கண்டு கொள்ளாமல், அப்படி வைக்கப்பட்ட சிலையை வழிபடுவதற்கு வழி செய்து கொடுப்பதும், அதற்குப் பின்னர் அந்த சிலை வைக்கப்பட்ட இடம்தான் அவர் பிறந்த இடம் என்று அடம் பிடிப்பதும் எந்த வகையில் சட்ட சம்மதமானது - நியாய வழிப்பட்டது என்பதைத் தமிழர் தலைவர் மிகவும் நேர்த்தியாக, கல்லும் உருகும் வண்ணம் எடுத்துக் கூறினார்.

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ரொமீலா தாப்பர் இந்து ஏட்டில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை முக்கியமாக எடுத்துக்காட்டினார்.

தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏ.எஸ்.ஏ) நடத்திய அகழ்வு ஆய்வுகளும், அதனுடைய முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பிற தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் இதனைப் பலமாக மறுதலித்துள்ளனர் என்று ரொமீலா தாப்பர் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டினார்.

இந்த வரலாற்றுப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ள இன்னொரு முக்கிய கருத்தையும் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.

அலகாபாத் தீர்ப்பு நீதிமன்றத்தில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது தங்களை ஒரு சமூகம் என்று கூறிக் கொள்ளும், ஒரு வணங்கப்படும் ஒரு புனிதமான அல்லது ஓரளவு புனிதமான ஒரு நபரின் பிறந்த இடம் என்று கூறி, அந்த நிலத்தின் மீது உரிமை கொண் டாடுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்து கிறது. ஒரு பொருத்தமான சொத்து காணப் பட்டால், அல்லது தேவைப்படும் ஒரு தகராறை உருவாக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய பல ஜென்ம பூமிகள் இப்பொழுது தோன்றும். வரலாற்று நினைவுச் சின்னங்களை திட்டமிட்டுத் தகர்ப்பது கண்டனம் செய்யப்படாததால், மேற்கொண்டு அத்தகையவற்றை தொடர்ந்து தகர்ப்பதை எது தடுத்து நிறுத்த முடியும்? என்று வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் கூறியது உண்மையிலும் உண்மையே!
இப்பொழுது அடுத்த கலவரத்துக்குக் கத்தியைத் தீட்ட ஆரம்பித்துவிட்டனர். சுப்பிரமணிய சாமி என்ற அரசியல் தரகர் அடுத்து எங்களது பயணம் மதுரா, காசி என்று கூறியுள்ளாரே - கிருஷ்ண ஜென்ம பூமி, விசுவநாதர் ஜென்மபூமியை மீட்போம் என்று வி.எச்.பி. தயாராகி விட்டதே! இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணத்தைத் தந்ததுதான் அலகாபாத் தீர்ப்பு என்றார் விடுதலை ஆசிரியர்.

இந்தத் தீர்ப்பின்மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட உள்ள ஒரு பெரிய ஆபத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ராமன் பெயரைச் சொல்லி முடக்கப்பட்டுள்ளது. அலகாபாத் தீர்ப்புக்குப் பின் அதன் நிலை என்னவென்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நீதிபதிகளே கடவுள்கள் தானாகத் தோன்றும் (சுயம்பு) என்று கூறும் நிலையில், சட்டத்துக்கும், ஆதாரங்களுக்கும் என்னதான் மரியாதை?
மசூதிக்குரிய இலக்கணத்தில் கட்டப்படவில்லை என்று ஒரு நீதிபதி சொல்கிறார் என்றால் என்ன பொருள்?

மெயின் வழக்கைத் தள்ளுபடி செய்தபின் நிலத்தைப் பங்கீடு செய்து கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

பிரபல எழுத்தாளர் ஏ.ஜி. நூராணி சொல்கிறார் - 17 ஆம் நூற்றாண்டுவரை எந்த இடத்திலும் ராமன் கோயில் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். அப்படியிருக்கும் பொழுது ராமர் ஜென்மபூமியில் கோயில் எங்கே இருந்து வந்து குதித்தது?
1993 இல் என்ன முடிவு எடுக்கப்பட்டது - ஏற்கெனவே எந்த நிலையில் வழிபாட்டு நிறுவனங்கள் இருந்தனவோ அதில் மாற்றம் கூடாது என்று எடுக்கப்பட்ட முடிவு என் னாயிற்று? அதைச் சரியாக மத்திய அரசு கடைபிடித்தி ருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.
இன்னொரு முக்கியமான தகவலை நினைவுபடுத்திப் பேசினார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 146 இன்படி குடியரசுத் தலைவரால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலைப்பாடுபற்றி கருத்துக் கேட்கப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன கூறினார்கள்? இது போன்ற பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளிக்கப்பட்டதே. உச்சநீதிமன்றமே மறுத்துவிட்ட ஒன்றின்மீது ஒரு உயர் நீதிமன்றம் எப்படி தீர்ப்புச் சொல்லலாம் என்று ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வினா எழுப்பினார் ஆசிரியர்.

அரசமைப்புச் சட்டம் 25 ஆவது பிரிவையும் தவறான முறையில் நீதிபதிகள் பயன்படுத்தியதையும் திராவிடர் கழகத் தலைவர் விளக்கினார். மொத்தத்தில் புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் செய்துள்ளது.
இறுதியாக தமிழர் தலைவர் கூறியது:

எந்த மதத்துக்காகவும் வக்காலத்து வாங்கி நாங்கள் பேச வரவில்லை. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள் நாங்கள். நாட்டின் நலன் கருதி ஒரு தீர்ப்பு, பிற்காலத்தில் புதிய அபாயம் ஏற்படும் வகையில் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி யோடும்தான் பேச முன்வந்தோம். உச்சநீதிமன்றம் - ஏற்பட்டுள்ள ஒரு இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அந்தக் கடமையைச் செய்யவேண்டும் என்று கூறி முடித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தொடக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், மறுநாளே திராவிடர் கழகத் தலைவர் விடுத்த அறிக்கையையும், அலகாபாத் தீர்ப்பு வெளியானதற்கு மறு நாளே காலந் தாழ்த்தாது தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையையும் எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார்.

பல துறைகளைச் சார்ந்த பெருமக்கள் ஏராளம் வந்திருந்தனர். நடிகவேள் ராதா மன்றமே நிறைந்து வழிந்தது.

------------------- நன்றி விடுதலை (09-10-2010)

1 comment:

நிஜாம் கான் said...

மிக்க நன்றி தோழரே! ஐயாவின் கூட்டத்தில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]