வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, September 19, 2011

என்றும் வேண்டும் திராவிடர் கழகம்

வீழ்ந்த துன்றன் பகைப் புலம்
வாழ்ந்தனர் திராவிட மக்கள் இனிதே!

தாழ்வுற்றுக் கிடந்த திராவிடரின் தலை நிமிரச் செய்த இயக்கம் திராவிடர் கழகம். திராவிடர் சமுதாயத்தின் மானத் தையும், அறிவையும் மீட்டெடுத்திட உருவானதோர் இயக்கம் திராவிடர் கழகம். தந்தை பெரியார் என்ற ஒற்றை மனிதரின் சுயசிந்தனையின் வடிவம்தான் திராவிடர் கழகம். தமிழர்கள் சுய மரியாதையோடு இன்றும், என்றும் வாழ்ந்திட இக்கழகம் நின்று நிலை பெற்றிட வேண்டும். அதற்கான காரணி கள் அன்றைய நாளினைப் போல் இன்றும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. திராவிடர் கழகத்திற்கு முன்னோடியான நீதிக்கட்சி தோன்றிய தற்கான காரணங்களைத் தெரிந்தோ மாயின் இன்றும் நம் இன எதிரிகளாம் ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவே இல்லை என்பது தெரியும்.

இன்றையத் தமிழின இளைஞர்கள், மாணவர்கள் நம் இனநலம் காக்கப் புறப்பட்ட முன்னோடிகள் கடந்து வந்த கரடுமுரடான, முட்புதர்களாலான பாதைகளை, வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். அப்பொ ழுதுதான் முகப்பூச்சுப் பொடிகளால் புனைந்து கொண்டு புவனத்தை ஏமாற்றும் எத்தர்களைப் புரிந்து கொண்டு விலகிச்செல்ல முடியும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்,
என்பார் திருவள்ளுவர்.
பேராசைக் காரனடா பார்ப்பான்...
என்பார் பார்ப்பனப் பாரதியார்.
அன்று, சென்னை நிருவாகசபை அங்கத்தினரான சர். அலெக்சாண்டர் கார்டியூ என்ற வெள்ளையர் சர்வீஸ் கமிசன் முன் சாட்சியமாகச் சொன் னார்,

1892-_க்கும் 1904_க்கும் இடைப்பட்ட காலத்தில் மாகாண சிவில் சர்வீஸ் தேர் வில் வெற்றி பெற்றோர்.

16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள். சென்னை உதவிப் பொறியாளர் தேர்வில் வெற்றி பெற்றோர்

21 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள். துணையாட்சியர் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள்.

1913-இல் மாவட்ட முன்சீப்கள் 128 பேரில் 93 பேர் பார்ப்பனரே இஃது எத்தனைக் கொடுமை என்றார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி யில் ஆங்கிலேயருக்கு மொழிபெயர்ப் பாளர்களாக இருந்தவர்கள் பெரும் பாலோர் பார்ப்பனரல்லாதாரே. கம் பெனியின் இராணுவத்தில் பெரும்பா லோர் சூத்திரரும், பஞ்சமருமேயாவர். ஆனால், ஆட்சிப் பணியில் ஏமாற்றமே. சமஸ்கிருதவழிக் கல்வியைக் கொண்டு வந்து படித்தவர்கள் அனைவரும் பார்ப் பனரே. குறைந்த அளவு முஸ்லிம்கள் அரபு வழியில் பயின்றனர். தாய் மொழிவழிக் கல்வி இந்தியர்க்குச் சரிவராது எனக் கூறி ஆங்கில வழிக் கல்வியை மெக்காலே மூலம் 1835இல் நடைமுறைப்படுத்தினர். அடுத்த புத்தாண்டுக்குள் 17,630 பேர் கற்றுத் தேர்ந்தனர். இதில், இந்துக்கள் 13,699 பேர், முஸ்லிம்கள் 1636 பேர். இவ் விரண்டிலும் பார்ப்பனர்களே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர். குறைந்த அளவிலான 236 பேர் மட்டுமே கிறித்தவர்கள் தேர்வாயினர்.

பார்ப்பான் பால் படியாதீர்; சொற் குக் கீழ்ப்படியாதீர் என்பார் புரட்சிக் கவிஞர்.

1906இல் சென்னை நகராட்சியி லிருந்து ஓர் உறுப்பினரை அனுப்பிட வேண்டுமென்ற சூழலில் டாக்டர் டி.எம். நாயர், சிவஞான முதலியார், பி. தியாக ராசச் செட்டியார், வி.சி. தேசிகாச்சாரி யார் வாக்கு வேண்டி நின்றனர். வருகை தந்த 32 உறுப்பினர்களில் 16 வாக் கினைப் பெற்றோர் சட்டமன்றம் செல்ல வேண்டிய நிலை. முதல் முறை, இரண்டாம் முறையென வாக்குப் பதிவு நடந்து, மீண்டும் மீண்டும் குறைவான வாக்குப் பெற்ற ஆச்சாரியாரை வில கிடச் சொல்ல, அவர் மறுத்தார். அடம் பிடித்தவரால் சட்டமன்றத்திற்கு ஆள் அனுப்ப முடியாமல் போய் விடக் கூடாதே என்று பெருமகனார் டி.எம். நாயர் அவர்கள் விலகிக் கொண்டார். தேசிகாச்சாரி வெற்றி பெற்றார். இரு முறையும் அதிக வாக்குகள் பெற்றவர் நாயரே. நாயர் அவர்கள் ஆன்டிசெப்டிக் என்ற ஆங்கில முதல் மருத்துவ நூல் எழுதிச் சிறப்புப் பெற்ற மகான்.

இந்தியரென்றால் பார்ப்பனர்கள் தான். இந்தியமயமாக்கலென்றால் பார்ப்பனமயமாக்கல்தான். பணி வாய்ப்புப் பார்ப்பனரல்லாதோர்க்குக் கிட்டவில்லை. கிடைத்த குறைந்த இடத்திலும் பார்ப்பனர்களால் தொல் லைகள். வழக்காடும் தொழிலிலும் நெருக்கடிகள். பொறுத்தது போதும் பொங்கி எழு என வழக்கறிஞர்கள் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு தி மெட்ராஸ் நான்பிராமின் அசோஸியேசன் என்ற அமைப்பை உருவாக்கி, ஆயிரம்பேருக்குமேல் சேர்த்தனர்.

இந்நிலையில்தான் 1912இல் மெட் ராஸ் யுனைடெட் லீக் எனும் பார்ப் பனரல்லாதார் சங்கம் அதாவது சென்னை திராவிடர் சங்கம் துணை யாட்சியர் தஞ்சை சரவணப் பிள்ளை, நாராயணசாமி நாயுடு, ஜி. வீராசாமி நாயுடு, பொறியியல் துறை துரைச்சாமி முதலியார் ஆகியோரால் தொடங்கப் பட்டது. தனியார் மருத்துவராகப் பணி யாற்றிய டாக்டர் சி. நடேசனார் செய லாளராகப் பொறுப்பேற்றார். பின் னாளில் தலைவரானார். கருணாகர மேனன், பனகல் அரசர் ராமராய நிங்க ரும் உறுதுணையாகச் செயல்பட்டனர்.

மேல்படிப்பிற்காகச் சென்னை சென்ற திராவிடர் தமிழர்கள் சோறின்றி உறைவிடமின்றித் திண் டாடினர். பெரும்பாலோர் சொந்த ஊர் திரும்பினர். இந்தியாவின் முதல் நிதி யமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட் டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டி.எம். நாரா யணசாமிப் பிள்ளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணிய நாடார் போன்றோர் பார்ப்பனரால் படிக்க வழியின்றித் திகைத்து நின்றோராவர்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல் என்னும் குறள்நெறிக்கேற்ப சி. நடேசனார் அவர்கள் திராவிட மாணவர் விடுதி ஒன்றினைத் திருவல்லிக்கேணி அக்பர் சாகிபுத் தெருவில் நிறுவினார். அவ்விடு தியில், புறக்கணிக்கப்பட்டோரெல்லாம் சேர்ந்து, தங்கிப் படித்துத் திரும்பினர்.

பார்ப்பனரல்லாதார் சங்கத்தைப் பாரதியார் கேலியும், கிண்டலும் செய்து பார்ப்பனப் பாணியில் இந்தியா ஏட்டில் எழுதினார். பார்ப்பனரல்லா தார் சபையைப் பின்பற்றிச் செட்டி யல்லாதார், முதலியல்லாதார், பிள்ளை யல்லாதார், நாயுடு அல்லாதார் சபை களாக ஏற்பட்டு, மற்றோர்க்கு மனப் புண்ணை ஏற்படுத்துமே; பாரத மகா ஜாதி என ஒன்றுபடுதல் வேண்டாமோ என்றார். வேதம் ஓத வேண்டிய பார்ப்பான் வேறொருவர் பணியை ஏன் பறிக்க வேண்டும்? என்று எழுத வக்கில்லாத பாரதியார்.

ஆன்மீகவாதியாக, தெய்வ பக்தி மிக்கவராக, தன் வீட்டுச் சமையலைக் கூடப் பார்ப்பனரைக் கொண்டு சமைத்து உண்ட, தேசியவாதியான பி.டி. தியாகராயர் 1914இல் சென்னை வந்த காந்தியாருக்கு வரவேற்புத் தந்து சிறப்பித்தவர். அவரே, மயிலாப்பூர் கோவில் நிகழ்ச்சிக்குப் பெருந் தொகையினை நன்கொடை தந்தார்; விழாவுக்குச் சென்றார்; தனக்குக் கீழ்ப் பணியாற்றிய குமாஸ்தா பார்ப்பானால் மேடையின்கீழ் அமர வைக்கப்பட்டார்.

சூத்திரனென்பதால் பெருமைக்குரி யோர் அவமதிக்கப்படுவதும், சிறுமைக் குரியோர் மேடையை அணியப்படுத் துவதும் கண்டு வெகுண்டார். பார்ப் பனரல்லாதார் சங்கத்தில் தன்னை அய்க்கியப்படுத்தினார். விளைவு, 20.11.1916இல் சென்னை, வேப்பேரி, எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் இராஜரத்தின முதலியாரை முதல் தலைவராகக் கொண்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தோன்றியது. அலைகடலில் தத்தளித்த திராவிடர் தமிழர்க்குக் கரை விளக்குத் தென் பட்டது. அதுவே, நீதிக்கட்சியாய், திராவிடர் கழகமாய், திராவிட முன்னேற்றக் கழகமாய் இன்று பரிணாமம் பெற்றுள்ளது.

அன்றைய நெருக்கடிகள் இன்றும் ஆரியப் பார்ப்பனர்களால் தொடர் கின்றன. விழிப்போடு செயல்பட வேண்டிய நிலை நம் தமிழர் தலைவ ருக்கும், திராவிடர் கழகத்திற்கும். மக்கள் தொகை பெருகிய நிலையில் கூட்டிட வேண்டிய 69 விழுக்காடு ஒதுக்கீடு, தேவையா? சட்டத்திற்குக் கூடுதல் இல்லையா? கிரீமிலேயர் வைக்கலாமே! என்ற பார்ப்பனீய ஓலங்கள்.

இந்திய அளவிலான 27 விழுக்காடு ஒதுக்கீடு கொடுக்கவே கூடாதென்ற கூக்குரல்கள். தொழிற் கல்வி பயில நுழைவுத் தேர்வு வேண்டு மென்ற காட்டுக் கூச்சல்கள், பொதுத் துறைகளையெல்லாம் தனியார்த் துறைகளாக்கி இடஒதுக்கீட்டை ஒழித்திட எத்தனித்தல். திராவிடர் இயக்க வரலாற்றுச் சாதனைகளையே இந்தத் தலைமுறை தெரியக் கூடாதென்ற வரலாற்று அழிப்புகள். சமச்சீர்க் கல்வி ஏன்? குலக்கல்வியே வேண்டுமென்ற அதிகாரத் திமிர்கள். ஒற்றைப் பார்ப்பனராய் ஏழு கோடித் தமிழர்களையும் இளித்தவாயினராய் எண்ணி ஆட்சி என்ற பெயரில் அலைக்கழித்திடும் அவலங்கள்.

இத்தனையையும் எதிர்கொண்டு திராவிடர்த் தமிழர் நலன் பேணிட வேண்டும் அக்கிரகாரச் சேரியை நோக் கித் திருப்பிடத் தமிழர் தலைவரை விட்டால் ஆளில்லை. அதனால்தான் சொல்கிறோம் ஆரியம் அழியாத வரைத் திராவிடர் கழகம் என்றும் வேண்டும்.

வீழ்ந்தவர் பின்னர் விழித்ததற்கே அடையாளம் -_ வாய்
விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்.

என்றும் வேண்டும் திராவிடர் கழகம்


Saturday, September 17, 2011

தந்தை பெரியார் கூறும் புரட்சிகரமான கருத்துதான் மானுடத்தை வாழ வைக்கும்


19ஆம் நூற்றாண்டில் பிறந்த பெரியார் 20 ஆம் நூற்றாண்டின் முக்கால் பகுதி வரை வாழ்ந்தவர். இந்த 95 அகவையில் அவரின் பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 75.

யார் சொன்ன கருத்தையும் அவர் சொன்னதில்லை. தனக்குத் தோன்றியதை ஜோடனை செய்யாமல் சொக்கத் தங்கமாக எடுத்துரைத்தார்.

திருவள்ளுவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூட நான் சொன்ன கருத்தை வள்ளுவனே சொல்லியிருக்கிறான் என்று எடுத்துச் சொல்லும் அளவுக்குத் தன்னம்பிக்கையும், தன்னறிவும் கை கோத்த காலக் கதிரவன் அவர்.

சென்னை சட்டக் கல்லூரியில் தமிழ் இலக்கியக் கழகத்தவரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டார். விழாவுக்கு தலைமை வகித்தவர் சாதாரணமான வரல்லர். சட்டக்கல்லூரி இயக்குநர் திரு. ஏ.எஸ்.பி. அய்யர். அய்யர் பேசும்போது குறிப்பிட்டார்.

கீழை நாடுகளைப் பற்றி பெர்ட் ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டி ருக்கிறார். நான் அறிந்தவரையில், மேற் கோள்காட்டிப் பேசாமல், தன் அறிவையே முன்னிலைப்படுத்திப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான் என்று பேசினார் (10.2.1960) என்றால் தெரிந்து கொள்ளலாமே ஈரோட்டு ஏந்தலைப் பற்றி.

இவ்வளவுக்கும் இப்படிப் பேசியவர் யாரென்றால், கலெக்டர் மலையப்பன் சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தந்தை பெரியார் அவர்களுக் குத் தண்டனை கொடுத்தவர்! (1957)

கேட்கலாம் _ எல்லா காலத்துக்கும் பொருந்துமா இந்த ஈரோட்டுக் கிழவரின் கருத்துகள் என்று. இன்னும் சொல்லப் போனால், இப்படிக் கேட்கச் சொன்னவரே அவர்தானே! என் கருத்து பிற்காலத்தில் கண்டிக்கப் படலாம் - படட்டும் - அது வரவேற்கத்தக்கதே என்று சிந்தனைக்குத் தாழ்ப்பாள் போடாத தாராள சிந்தனையாள ராயிற்றே தத்துவத் தந்தை பெரியார்!

இன்றைக்கு உலகெங்கும் மதக் கலவரங்கள்! மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல வேறு எந்தக் காரணத்துக்காகவும் சிந்தப்படவில்லை என்பது நிதர்சனமான வரலாறு.

அமெரிக்காவின் ஆட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் விவகாரத்தையே எடுத்துக் கொள்ளலாம்.

2003_ஆம் ஆண்டில் அமெரிக்கா ஈராக்கின் மீது வெறி கொண்டு தாக்கி அப்பாவி மக்கள் பரிதாபகரமான முறையில் பலியானார்கள் . பலியானவர்கள் ஆறைரை லட்சம் பேர் என்று கூறப்படுகிறது. ஈராக் அதிபர் சதாம் உசேனும் தூக்கிலிடப்பட்டார்.

ஆடு _ ஓநாய் கதை போல காரணம் சொல்லி அமெரிக்க அடியாள் இந்தக் கோரக் கொலை நர்த்தனத்தை நடத்தி முடித்தான்.

2003 இல் இந்தக் கொடூரம் அரங்கேற்றம் செய்யப் பட்டபின் எகிப்தில் ஷரம்-_எல் ஷேக் நகரத்தில் ஒரு முக்கிய சந்திப்பு நடந்தது. இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன், பாலஸ்தீன பிரதமர் முகம்மது அபாஸ் - அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரின் அக்கேனா சந்திப்பு அது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னார்: என்னை இயக்குபவர் யார் தெரியுமா? கடவுள்தான் என்னை இயக்குகிறார். எனக்கென்று சில வேலைகளைக் கொடுத்துள்ளார்.

ஜார்ஜ்! ஆப்கானிஸ்தானம் சென்று பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டு என்று கடவுள் என்னிடம் சொன்னார். உடனே அதனை நான் செய்து முடித்தேன்.

அதன் பின்னர் கடவுள் என்னிடம் ஜார்ஜ்! ஈராக்குக்குச் செல். அங்கு நடந்து கொண்டிருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டு என்று கூறினார்; அதனையும் உடனே செய்து முடித்தேன்.

தற்போது மீண்டும் என்னை அனுப்பியிருக்கிறார். பாலஸ்தீனத்துக்கு நாட்டையும், இஸ்ரேலியர்களுக்குப் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடு! மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துஎன்று எனக்குக் கடவுள் சொல்லி யிருக்கிறார். கடவுளின் ஆணைப்படியே இங்கு நான் வந்திருக்கிறேன் என்றார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.

40 ஆவது வயதில் நான் தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவன் என்று அறிவித்துக் கொண்டவர் இவர். ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை தீவிர மதத் தலைவனான நான் கைப்பற்ற வேண்டும் என்று தேர்தலில் பிரச் சாரமே செய்து வெள்ளை மாளிகைக் குள் புகுந்த வேங்கை.

இந்த ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை யாரான சீனியர் ஜார்ஜ் புஷ்சுக்கு உதவி யாளராகவும், இந்த ஜூனியர் ஜார்ஜ் புஷ்சுக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த தௌக்வீட் சில இரகசியங் களை ஜார்ஜ் புஷ் தன்னிடம் பேசியதை எல்லாம் 1998 முதல் ரகசியமாகப் பதிவு செய்து வைத்திருந்து, அதிரடியாக அதனை வெளியிட்டு புஷ்சை அம்பலப்படுத்தினார்.

ஜார்ஜ் பஷ் ஒரு கஞ்சா போதைக் காரர். பழைமைவாத கிறித்துவ மத நம்பிக்கையாளர்களை தனது மத நம்பிக்கையை முன் வைத்துத் தூண்டு பவர். அதனைத் தம் வெற்றிக்குச் சாதகமான வாக்குகளாக மாற்றியவர். மதத்தையும், அரசியலையும் ஒன்றாகக் கலக்க முயற்சித்தவர் என்று அம்பலப்படுத்தப்பட்டார்.

2001 செப்டம்பர் 11 இல் அமெரிக் காவின் உலக வர்த்தக மய்யக் கட் டடமும், பெண்டகனும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டன. அதில் 2752 மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்பது மிகப் பெரிய சோகச் செய்தியாகும்.

யார் அழித்தது, -பின்னணி என்ன என்று உலக மக்கள் சிந்தனையைச் செலவழித்த தருணத்தில் இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான்!- சிலுவைப் போர் மீண்டும் மூண்டு விட்டது; -சந்திக்கத் தயார் என்று சவால் விட்டார் அதிபர் புஷ்.

முசுலிம்களின் அல்கொய்தா இயக் கமும், அதன் தலைவன் ஒசாமா பின்லேடனும்தான் காரணம் என்று கர்ஜித்தார். ஆப்கானிஸ்தானில் ஓடி ஒளிந்து கொண்டார் என்று கூறி அந் நாட்டினை ஆக்கிரமித்து குண்டுமாரி பொழிந்தார். கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ஆப்கானிய மக்கள் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டனர்.

10 ஆண்டுகள் கழிந்து அமெரிக் காவின் அதிபரான ஒபாமா, பின்லே டனை வேட்டையாடினார். பாகிஸ் தானின் அபோடாபாத்தில் அடுக்கு மாடியில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த பின்லேடனை பாகிஸ்தானுக்குத் தெரிவிக்காமலேயே அமெரிக்க விமானங்கள் அத்து மீறி நுழைந்து , தனக்குத் தேவையான படுகொலையை நடத்தி முடித்து, பத்திரமாகத் திரும்பி விட்டன.

மதவாதம் _ எத்தனை லட்ச மக் களைக் கொன்று பழி தீர்த்திருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வுகள் போது மானவையே!

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப் படுகிறார்கள். சீனாவில் கிறிஸ் தவர்களின் உரிமைகள் நசுக்கப் படுகின்றன. நைஜீரியாவில் கிறித்த வர்கள் மீது கொலை வெறித் தாக்குதல். மசூதிமீது குண்டுவீச்சு, ஈராக்கில் கொல்லப்பட்ட கிறிஸ்தவ இளைஞரின் தலை துண்டிப்பு! என்ற செய்திகள் அலை அலையாக வந்து கொண்டே யிருக்கின்றன.

நாட்டிற்குள் நிம்மதியாக வாழவும் முடியாமல், நாட்டை விட்டு வெளி யேறவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றனர் ஈராக் கிறிஸ்தவர்கள் என்ற அந்நாட்டின் பேராயர் பாஸ்கர் வர்தா தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஜி யா_-உல்_-ஹக் ஆட்சியின் போது மதத்துவேஷ எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. இஸ்லாத்துக்கு எதிராக யாராவது கருத்துகள் சொன்னால் அவருக்கு மரண தண்டனை விதிக்க அந்தச் சட்டம் வகை செய்கிறது.

அச்சட்டத்தின் கீழ் பஞ்சாப் மாநிலக் கிறித்தவப் பெண்மணி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர் சிறையில் உள்ளார்.

அவரை விடுவிக்க பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த சல்மான் தசீர் தக்க முயற்சிகளை மேற்கொண்டார். மதவாத சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். மதவெறியாளர்களோ தோள் தட்டினர். இவ்வாண்டு சனவரியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர் வெளியிலிருந்து வந்தவரும் அல்லர் - அவரின் மெய்க் காப்பாளர்தான். (இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட அதே நிலை!)

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சபாஷ் பத்தி என்பவரும் - மதவாதச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய நிலை யில் சுட்டுக் கொல்லப்பட்டார். (2.3.2011)

கிறிஸ்துவின் மீது தாங்கள் கொண் டிருக்கும் விசுவாசத்திற்காக ஆண்டு தோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர் என்று அய்ரோப்பிய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பிரதிநிதி மசிமோ இண்ட்ரோலிஜின் என்பவர் மனம் புழுங்கி தெரிவித் துள்ளார். ஹங்கேரி நாட்டில் நடை பெற்ற அகில உலகக் கருத்தரங்கில் இதனை வெளிப்படுத்தினார். 5 நிமிடத்துக்கு ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு கொல்லப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்தியாவிலோ கேட்கவே வேண் டாம். 450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழி பாட்டுத் தலத்தை பல்லாயிரக்கணக்கில் கூடி பட்டப் பகலில் இடித்து முடித்தனர். இதன் தொடர்ச்சியாக 2000 பேர் கொல்லப்பட்டனர். அதைவிட நாட்டின் மதச்சார்பின்மைக்குக் கொள்ளி வைக்கப்பட்டது.

2002 இல் குஜராத்தில் என்ன நடந் தது? கோத்ராவில் ரயில் எரிக்கப் பட்டது என்ற பெயரால் அம்மாநில முதல் அமைச்சர் (பி.ஜே.பி.) நரேந்திர மோடி தலைமையில் திட்ட வட்டமான வகையில் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் வேட்டையாடப்பட வில்லையா?

2000 இஸ்லாமியர்கள் படுகொலை! கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள் நெருப்பில் தூக்கி எறியப்பட்டன. அந்தத் துடிப்பைக் கண்டு எக்காளமிட்டனர் இந்துத்துவா வெறியர்கள்.

1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மை யினரின் வீடுகள் தரைமட்டமாக் கப்பட்டன. 230 தர்க்காக்கள் இருந்த சுவடு தெரியவில்லை. 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன. ஆயிரம் உணவு விடுதிகள் காணோம். 3800 கோடி ரூபாய் சிறுபான்மை யினருக்கு இழப்பு என்ற நிலைமை.

அதோடு முற்றுப் பெற்று விடவில்லை இந்த மத வெறி. மீண்டும் மீண்டும் காவு வாங்கிக் கொண்டே இருக்கிறது.

எந்த அளவுக்குத் தலை தூக்கி நிற்கிறது? பா.ஜ.க. வின் அதிகாரப் பூர்வமான மக்களைவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பவர் கொஞ்சம் கூடக் கூனிக் குறுகாமல், வெட்கப் படாமல், ஆமாம்! பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம். முடிந்தால் எங்களைக் கைது செய்து பாருங்கள் பார்க்கலாம்! (11.11.2008) என்று சவால் விட்டாரே! நாடாளுமன்றத்தில் பதிவாகியிருக்கிறதே. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 19 ஆண்டு களாகத் தண்டிக்கப் படாமல் சுதந்திரமாகத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் துணைப் பிரதமர் வரை பதவி வகித்து விட்டார்களே! தொடர்ந்து இந்துத் துவா வாதிகளின் வெறித்தனம் நான்கு கால் பாய்ச்சலோடு நடந்து கொண்டே இருக்கிறது.

2002 இல் பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபால் ரயில் நிலையத்தில் அதி பயங்கரமான வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தாப்லிகி ஜமாத்தின் நிகழ்வுகளில் பங்கேற்க வரும் முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்குவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டவை என்று விசா ரணையில் தெரிய வந்தது.

2003 நவம்பர் 21_ஆம் தேதி மகாராட்டிரத்தில் பாப்பானி என்னும் இடத்தில் உள்ள முகமதியா மஸ்ஜித்தில் குண்டு வெடிப்பு. போபாலில் கையாண்ட அதே வகை வெடி மருந்துகள் பறிமுதல். இதிலும் காவிப் படையினரின் கைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2004 ஆகஸ்டு 27 அன்று, அதே மகாராட்டிரத்தில் பூர்ணா பகுதியில் உள்ள மீர்ஜ் உல்உலூம் மதரசாவிலும், ஜால்னா பகுதியில் குலஎத்ரியா மஸ்ஜித்திலும் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதிலும் இந்துத்துவ வாதிகளின் கைவரிசை.

2006 செப்டம்பர் 8 இல் மகாராட் டிர மாநிலம் மாலேகானில் மசூதிகளை ஒட்டி வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 38 அப்பாவி முஸ்லிம்கள் பலியானர்கள்.

முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, அதற்குப் பிறகுதான் உண்மை கண்டறியப்பட்டு காவி வெறியர்கள் கைது செய்யப்பட்டனர்.

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி, அரியானாவில் உள்ள துவானா என்ற கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த இந்தியா _ பாகிஸ்தான் நல்லுறவுக்காக இயக்கப்பட்ட சம்ஜீதா விரைவு ரயிலில் இரண்டு சூட்கேஸ்கள் வெடித்ததால் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா _ பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுப் பேச்சு வார்த்தையை முறியடிக்க வேண்டும் என்ற முரட்டு வெறித்தனத்தினால் இந்துத்துவா வாதிகளின் புத்தி இப்படி மேயப் போய்விட்டது.

அதே ஆண்டு மே 18 இல் உலகப் புகழ் பெற்ற ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு - ஒன்பது பேர் படுகொலை!

2008 செப்டம்பர் 29 அன்று மீண்டும் மாலேகானில் குண்டு வெடிப்பு - 5 முசுலிம்கள் கொல்லப்பட்டனர். இந்த சதியில் சம்பந்தப்பட்ட காவிகள் - ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பது எவ்வளவு பெரிய அபாய கரமான தகவல்!

2009 அக்டோபர் 16 இல் கோவா வில் மர்கோவா என்ற இடத்தில் தீபாவளியன்று குண்டு வெடிப்பில் 5 இஸ்லாமியர்கள் பலி. இந்தக் குண்டு வெடிப்பு சத்தம் அடங்குவதற்குள் குஜராத்தில் மோடாசா எனும் இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு!

இப்படி தொடர் கொலைகள் - அழிவுகள். மதவாதம் பீடித்த மனிதர்களான மாக்களால்!

இதற்கு எதிராக முஸ்லீம்களிலும் தீவிரவாதிகள் வெடித்துக் கிளம்ப வேண்டிய நிலை!

இந்தியா முழுமையும் நடை பெற்றுள்ள மதவாத வன் முறை களுக்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலின் பின்னல் இருப்பது கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. மதம் மக்களை நல்வழிப்படுத் தும் மார்க்கம்; கடவுள் நம்பிக்கை _ கெட்டது செய்ய அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வு என்று கொட்டி அளக்கவில்லையா? இதில் கடுகு மூக்கு முனையளவாவது உண்மை இருக் கிறதா? யதார்த்தத்தில் நாட்டில் நடப்பது என்ன? என்று சிந்திக்க வேண் டியது பொறுப்பான மனிதர்களின் பொன் போன்ற கடமையாகும்.

இப்பொழுது தேவை மதமல்ல. அது மனிதனுக்குப் பிடிக்கப்படக்கூடாது. மதம் யானைக்குப் பிடிக்கலாம், நாய்க் குப் பிடிக்கலாம். மனிதனுக்குப் பிடித் தால் அதே நிலை என்பது சரிதானே?

அதனால்தான் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொன்னார். ஆணித்தரமாகச் சொன் னார், அறிவு துலங்கச் சொன்னார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத் திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங் கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சி தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று புரட்சி ஏடு வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை. அதுபோலவே, இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அது போலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே புரட்சி தோன்றியிருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில் ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டும்.

(புரட்சி - தலையங்கம் 26-11-1933)

என்று தந்தை பெரியார் கூறும் புரட்சிகரமான கருத்தேதான் மானு டத்தை வாழ வைக்கும் - புதிய உலகைப் பூக்க வைக்கும்.

மதங்களால் மானுடம் பகை நெருப்பைக் கக்கி ஒருவரை ஒருவர் எரித்துக் கொண்டது போதும். மதப்போர்வையைத் தன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டிருக்கும் சங்கராச்சாரியார் இங்கு கொலைக் குற்றவாளிகளாக நடமாடுகின்றார்.

லோகக் குரு என்று தூக்கி வைத்து இங்கு ஆடப்படும் சங்கராச்சாரியார் நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்ற குரூரக் குணம் படைத்தவராக இருக்கிறார். கோயில் குருக்கள் கோயில் கரு வறையை கருவை உண்டாக்கும் காமலீலா நடத்தும் பள்ளியறையாகப் பயன்படுத்துகிறான்.

யோகக் குரு என்று கூறிக் கொண்டு காமக் குருவாகக் காட்சி அளிக்கிறான்.

கடவுள் பிறப்பற்றது என்கிறான் - ஆனால் ராமன் பிறந்த நாள் என் கிறான். அவன் பெயரால் பாலம் உண்டு என்கிறான். அதனைக் காட்டி வளர்ச்சித் திட்டத்தை முடக்குகிறான். அந்த மதப்போதை நம் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை புரையோடிக் கிடக்கிறது. ஒற்றுமையை மட்டுமல்ல; மனித குல வளர்ச்சியையும் தடுக்கிறது இந்த மதம்.

மனித அன்பைக் குலைக்கும் - சகோதரத்துவத்தை சாவுக் குழிக்கு அனுப்பும் - ஒற்றுமைக்கு உலை வைக் கும் - வளர்ச்சியைத் தடுக்கும் மதத்திற்கு முற்றாக விடை கொடுப்போம்!

மனித நேயத்தை முன்னிறுத்தி, அறிவை வழி காட்டும் விளக்காக்கி, அன்பை அரவணைக்கும் மலராக்கி, நம் கையில் கொடுத்துள்ள பகுத்தறிவுப் பகலவன் - உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் கருத்தியலைக் கொள்வோம்! காலத்தை வெல்வோம்! தன்னலம் துறந்து தொண்டறம் பேணுவோம்!

அதுதான் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு -_ சுயமரியாதைத் தத்துவம்! மதம் காட்டும் வழிகள் மரணக் குழிக்குத் தான் என்று கண்ட பிறகு மாற்று மார்க்கம் தேவை தானே!

மதமற்ற அந்தப் புத்துலகை உருவாக்குவோம்! ஒன்று பட்ட ஒப்புரவு வாழ்வில் துய்ப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
-------கட்டுரையாளர் கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர், 17-09-2011


தந்தை பெரியார் தேவை -- 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிந்தனை

இன்று தந்தைபெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர்களின் தேசியத் திருநாள்.

ஆயிரம் - ஆயிரம் ஆண்டு காலமாக அடிமைப்படுத்தி வந்த ஆரியத்தின் வேரை வீழ்த்த வந்த வரலாற்று நாயகர்.

1995ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் லக்னோவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக நடத்தியபோது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்ஷிராம் செய்தியாளர்களிடம் மிக அருமையான - உண்மையான கருத்தினை எடுத்து வைத்தார்.

பெரியார் விழாவை ஏன் லக்னோவில் கொண்டாடு கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்: இந்தியாவில் பார்ப்பனீயத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பல தலைவர்கள் போராடியிருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும் பெரியாரால் தான் அதிக அளவுக்கு பார்ப்பன ஆதிக்கம் பாதிக்கப்பட்டது என்ற ஒரு கருத்தை எடுத்து வைத்தார்.

அதன் விளைவாகத்தான் உத்தரப்பிரதேசத்தில் சூத்திரா (Sudra - social unity of dalit and Regessed Association) என்ற அமைப்பு தோன்றியது. ஒரு பாபர் மசூதியை இடித்து அய்ந்தாண்டுகள் பார்ப்பனர்களால் ஆட்சி செய்ய முடியும் என்றால் நூறு ராமன் கோயில்களை இடித்து ஏன் எங்களால் அய்ந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியாது? என்ற கேள்வியை எழுப்பினர்.

தந்தை பெரியார் அவர்களுக்கு விழா கொண்டாடி ராமன் உருவத்திற்குச் செருப்பு மாலை அணிவித்தனர். ஆம், ராம ஜென்மபூமி என்று கூறப்படும் உத்தரப் பிரதேசத்தில் இது நடந்தது என்பதுதான் குறிப்பிடத் தக்கதாகும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல - ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பார் தந்தை பெரியார். பி.ஜே.பி. என்பது ஆரியர்களின் அமைப்புதான் - ஆரிய ஆட்சியை ஏற்படுத்தத்தான் அவர்கள் கட்சியை வைத்துக் கொண்டுள்ளனர். ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று அவர்கள் சொல்லுவதன் பொருள் - மீண்டும் பார்ப்பனர்களின் மனுதர்ம ஆட்சியை உண்டாக்குவதாகும்.

தமிழ்நாட்டில் நாம் குறிப்பிட்டு வந்த இந்தப் போராட்டம் அகில இந்திய அளவில் அது விரிவாகி இருக்கிறது.

இந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டிற்கும் சரி, இந்தியாவுக்கும்சரி தந்தை பெரியார் அவர்களின் தத்துவம் தேவைப்படுகிறது. மக்கள் மத்தியில் தந்தை பெரியார் கருத்துக்கள் வேர்ப்பிடிக்கும்போதுதான் ஆரிய ஆதிக்கமும் அரசியலும் தூக்கி எறியப்படும்.

வெறும் அரசியல் பிரச்சாரத்தால் இது ஆகக் கூடியதல்ல.

பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பது - ஆரியத்தைத் தாங்கிப் பிடிக்கும் கடவுள், மதம், வேதம் இதிகாசம், புராணங்களை வீழ்த்துவதற்காகும். சமூக நீதி என்பது பார்ப்பனர்களின் கைகளில் குடி கொண்டிருக்கும் கல்வி, உத்தியோகங்களை சட்ட ரீதியாகப் பெரும்பான்மை மக்கள் கைப்பற்றுவதாகும்.

இந்த இரண்டும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

இந்த இரண்டு நிலைகளும் பெரியாரியலில் தான் இருக்கின்றன என்கிறபோது, தந்தை பெரியார் தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார்.

சமூக அமைப்பில் கோயில்கள், பார்ப்பனர்களின் ஏகபோகத்தில் நிலை கொண்டுள்ளன. குறிப்பாக மூலவிக்ரகம் இருக்கக்கூடிய கர்ப்பக் கிரகத்திற்குள் நுழையவதும் அர்ச்சனை செய்வதும் பார்ப்பனர்களின் தனி உடைமையாக இருந்து வருகிறது.

கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லும் உரிமை பார்ப்பனர் அல்லாத அனைத்து ஜாதியினருக்கும் வரவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது - அதற்காகப் போராடி யது என்பதும் - பார்ப்பனர்களுக்குள்ள பிராமணத் தன்மையையும், தனி மரியாதையையும் பறிமுதல் செய்வதாகும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் அமாவாசை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில் அர்ச்சகராகவும், கர்ப்பக்கிரகத்திற்கு வெளியில் நின்று கொண்டு ஆராவமுத அய்யர்வாள் சாமி என் பெயரில் அர்ச்சனை செய்யுங்கோ! என்று சொல்லும் நிலை என்பதும் இன்றைய வருணாசிரம சமூக அமைப்பைச் சுக்கல் நூறாக நொறுக்குவதல்லவா!

சுயமரியாதையும், பகுத்தறிவும் வெடித்துக் கிளம்பும் சமுதாயம்தான் பொருளாதாரம் உட்பட அனைத்து நிலையிலும் சமத்துவம் பெற முடியும்.

பெரியார் என்றால் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று மேலோட்டமாகப் பார்ப்பது தவறு; அதற்குள் அடங்கி யிருக்கும் கரு சமூக மாற்றத்திற்கானது - புரட்சிக்கானது.
பெரியாரே ஒளி! அதனை நாடெங்கும் கொண்டு செல்ல இந்நாளில் சூளூரைப்போம்!

அதனை எடுத்துச் செல்லுவதில் நமது வெளியீடு களுக்கு முதன்மையான இடம் உண்டு; விடுதலைக்கு மிக முக்கியத்துவம் உண்டு. திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய 50 ஆயிரம் சந்தாக்கள் - அதன் நிறைவேற்றம் மிகப் பெரிய மாறுதலை சமூகத்திற்குக் கொண்டு வரும் என்பதில் அய்யமில்லை.

தோழர்களே, செயல்படுவீர்!

--------விடுதலை தலையங்கம், 17-09-2011


Wednesday, September 14, 2011

தாமோதரதாஸ் மோடி தேசிய அரசியலில் குதிக்கப் போகிறாராம்


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, குஜராத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளாக இருந்தாலும் சரி (2002) இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட சட்டத்தின் பிடியில் சிக்காமல், குற்றங்களுக்கான தண்டனைகளையும் அனுபவிக்காமல் சுதந்திர மனிதர்களாக - கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள் என்றால் இதைவிட இந்தியாவுக்குத் தலைக் குனிவும், வெட்கக்கேடும் வேறு என்னதான் வேண்டும்?

இதுபற்றி திருச்சிராப்பள்ளியில் ஞாயிறு அன்று நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒரு தீர்மானமும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண் டனையையும் பெற்றுத் தராவிட்டால், நிருவாகம், சட்டம், நீதி இவற்றின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமலேயே போய்விடும் என்பதோடு, வன்முறைக்கு ஊக்கம் தரும் என்றும் அந்தத் தீர்மானத்தில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டப்பட்டும் உள்ளது.

நேற்று மாலை ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி - குஜராத் மாநில முதல்வராக இருக்கிற நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி தேசிய அரசியலில் குதிக்கப் போகிறாராம். பி.ஜே.பி.க்கு அடுத்த அகில இந்தியத் தலைவர் அவர்தானாம். பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரும் அவரேதானம்.

பாரதீய ஜனதா கட்சியின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பது ஒரு புறம்; இந்தியாவின் அரசியல் தன்மை எவ்வளவுக் கேவலமாக உச்சக்கட்ட டிகிரியில் இருக்கிறது என்பது இன்னொரு புறம்.
காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாப்ரி என்பவர் குஜராத் கலவரத்தில் மிகக் குரூர மான முறையில் கொல்லப்பட்டார். டயரைக் கொளுத்தி ஜாப்ரி யின் கழுத்தில் மாட்டி கொடுவாளால் நெஞ்சைப் பிளந்தார்கள். பின்னர் பெட்ரோலை ஊற்றியும் கொளுத்தினார்கள்.

இதுபற்றி மனைவியான ஜாக்சியா காவல்துறையிடம் புகார் கொடுத்தார். காவல்துறை ஒத்துழைப்புடன் மோடி ஆட்சியில் எல்லா வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. புகார் செய்து என்ன பலன்?

உச்சநீதிமன்றம் சென்றார். இப்பொழுது கீழ்க் கோர்ட்டிலேயே வழக்கைத் தீர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (என்னே காருண்யம்!)

அவ்வளவுதான். குற்றத்திலிருந்து விடுதலையானது போன்ற உணர்ச்சியுடன் பி.ஜே.பி.யினரும், சங்பரிவார்க் கும்பலும் குதியாட்டம் போடத் துவங்கிவிட்டனர்.

இவ்வளவுக்கும் கீழ்க் கோர்ட்டில் இனிமேல்தான் விசாரணையே தொடங்கப்படவேண்டும். மோடி ஆட்சியில் கீழ்க்கோர்ட்டு எப்படி இருக்கும் என்று இப்பொழுதே முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இனி பிரச்சினை இல்லை. மோடி அகில இந்திய அர சியலுக்கு வரப்போகிறார் என்று டாம் டாம் அடிக்கத் தொடங்கி விட்டார்கள். சோ போன்ற பார்ப்பனர்களை இனிமேல் கையால் பிடிக்க முடியாது.

ஆக, இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைவராக வேண்டுமானால், அடுத்த பிரதமராக ஆக வேண்டுமானால், அவர் அதற்கு முன்னால், ஒரு மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கவேண்டும்; குறைந்த பட்சம் 2000 பேர்கள் படு கொலைகளுக்குக் காரணமான சூத்திரதாரியாக இருக்க வேண்டும். தங்களுக்கு வேண்டாதவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட வேண்டும்.

14 பேர்களை விறகுகள் போல ஒரே கட்டாகக் கட்டி பேக்கரி அடுப்பில் எரியூட்ட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்தக் கருவை எடுத்து நெருப்பில் போட்டுப் பொசுக்க வேண்டும்.

வெளிநாட்டுக்கு அந்த முதலமைச்சர் போக விரும்பினால், அந்த நாட்டு அரசாங்கம் எங்கள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லவேண்டும். அதுதான் உலகளாவிய மகத்தான கவுரவமாகக் கருதப்படவேண்டும்.

அந்த முதலமைச்சரின் இத்தகைய செயலைக் கண்டு அந்த நாட்டின் பிரதமர் தன் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடுகளுக்குச் செல்வது என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழவேண்டும்.

யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களைப் பொடாவில் கைது செய்யவேண்டும். முகாம்களில் சரணடைவோரைக் கேவலமாக, கொச்சைத் தனமாக விமர்சிக்கவேண்டும்.

இத்தகைய விஸ்தாரமான கல்யாண திருக்குணங்கள் இருந்தால்தான் இந்தியாவில் ஒருவர் தேசிய அரசியலில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு கிடைக்கும். அதற்குப் பின் பிரதமர் நாற்காலியில் அமருவதற்கான தகுதியும் வந்து சேர்ந்துவிடும். அப்படித்தானே?
பாரத புண்ணிய பூமியின் யோக்கியதையைக் கண்டு ஆடுங்கள்- பாடுங்கள் - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூவுங்கள்!

இந்த நாட்டு ஊடகங்கள் எவ்வளவு தூரம் சங்கை கெட்டுப் போயிருந்தால், மோடி போன்ற கொடூரங்களைத் தோளில் தூக்கிச் சுமக்கும்? திருவாளர் பொதுமக்கள் சிந்திக்கட்டும்!

---விடுதலை தலையங்கம்,14-09-2011


Tuesday, September 13, 2011

முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே!

இந்நாள் - ஒடுக்கப் பட்ட மக்களால் என்றும் மறக்கப்படவே முடியாத - மறக்கப்படவே கூடாத பொன்னாள். ஆம். இந் நாளில்தான் (1928) மரி யாதைக்கும், மிகுந்த போற்றுதலுக்கும் உரிய எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் முதன் முத லாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள். இதற்காக தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (11-11-1928) மந்திரி எஸ். முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே! என்று எழுதினார்.

1921 முதல் நீதிக்கட்சி ஆட்சியில் பல்வேறு சட் டங்கள் இந்த வகையில் பிறப்பிக்கப்பட்டாலும், 1928 இல் நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச் சரவையில் இடம் பெற்ற எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் கொண்டுவரப் பட்ட இந்தச் சட்டம்தான் (ஆணை எண். 744 பொது, நாள் 13-9-1928) முறை யான வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தை நிர்ண யித்து செயல்படுத்தப்பட்ட தாகும்.

அதன்படி மொத்தம் 12 இடங்கள் என்றால் அதில், இந்து பார்ப்பனரல்லாதா ருக்கு 5 இடங்கள், பார்ப் பனர்களுக்கு 2 இடங்கள், இசுலாமியர்களுக்கு 2 இடங்கள், கிறித்துவர் களுக்கு 2 இடங்கள், ஆங் கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு 1 என்று ஆணை பிறப்பித்தார்.

சுதேசமித்திரன், இந்து ஏடுகள் எகிறிக் குதித்தன. அக்னி அபிஷேகம் செய் தன. (அக்னி புத்திரர்கள் அல்லவா?) முத்தையா முதலியாருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று தன் பூணூலுக்கு ஒரு தடவை முத்தம் கொடுத்துவிட்டு எழுதியது - அல்ல, அல்ல - சாடியது. சுய ஜாதிமித்திரன்.

இந்து என்ன எழுதி யது தெரியுமா? முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம் - மக்கள் இதனைக் கண்டிக்கின்றனர் என்று எழுதியது.

மக்கள் என்றால் எந்த மக்களோ! அவாளுக்குத் தெரிந்ததெல்லாம் அக்கிர காரத்து - பிர்மா முகத்தில் உள்ள பிறப்பு உறுப்பி லிருந்து பிறந்தவர்கள் தானே! சூத்திரர்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெற்றால் ஏற்றியா போற்றுவார்கள்?

1928 இல் அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட அந்த ஆணையைத் தான் 1950 இல் (ஜூலை 27) சென்னை உயர் நீதி மன்றம் செல்லாது என்று கூறி, ஒடுக்கப்பட்ட மக் களின் உரிமைக் கழுத்தை (சூத்திரன் சம்பூகன் கழுத்தை மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் வாளால் வெட்டி வீசி எறிய வில்லையா?) வெட்டி வீழ்த்தியது.

அப்படி வெட்டியது சரி என்று உச்ச நீதி மன்றமும் (உச்சிக்குடுமி மன்றம் என்று அப்பொழுதே பேர் சூட்டப்பட்டுவிட்டது) விசிறிவிட்டது.

தந்தை பெரியார் என்ற தன்னிகரற்ற முழு முதல் புரட்சியாளராலும், தமிழ் நாட்டில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிப் பூகம்பத்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு - அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட் டில் இன்றைய தினம் கல்வி, வேலை வாய்ப்பு களில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு இடங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் அதி காரபூர்வமாக அஸ்திவாரம் போட்ட அய்யா முத்தையா முதலியாரை மீண்டும் ஒரு முறை வாழ்க, வாழ்க என இந்நாளில் வாழ்த்து வோமாக!

- மயிலாடன்,விடுதலை 13-09-2011


Monday, September 12, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (10) யார் வன்முறையாளர்கள்?


காமராஜரைக் கொல்ல முயற்சி என்ற தலைப்பில் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர் துக்ளக் இதழில் (27.7.2011) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இதனை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் வந்து தொலைக்கிறது.

இதே காமராசரை -_ அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின்தலைவராக இருந்த பச்சைத் தமிழரை பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் இந்தியாவின் தலை நகரமான டில்லியில் (7.11.1966) உயிரோடு கொளுத்தி அவர் உயிரை ஏப்பம் விடலாம் என்று கருதிய கொலைகாரக் கூட்டமா இந்தக் குற்றச்சாற்றை முன் வைப்பது?

ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும் ஜனசங்கப் பேர் வழிகளும், நிர்வாண சாமியார்களும், சங்கராச்சாரியார்களும் (பூரி சங்கராச்சாரியார், ஜோசிமடத்து சங்கராச்சாரியர்) லட்சக்கணக்கில் திரண்டு நின்று காட்டு விலங்காண்டித் தனமாக வெறியாட்டம் போட வில்லையா?
நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ வென்று பிளட்ஸ் எழுதியது. டில்லியில் சாதுக்கள் நடத்திய போர்க்களத்தை விரைந்து சென்று பார்த்த பத்திரிகை யாளர்களுக்கு நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட் டனவோ என்று எண்ணும் வகையில் வளைந்து உடைந்த திரிசூலங்களும், தீஜ்வாலைகளும், ஏராளமான மலைப் பிஞ்சுகளும், எரிந்த கட்டடங்களையும் கார்களையும் ஏன், மனிதர்களையும்கூட கொளுத்திய காட்சிகளே பார்லி மென்டிற்கு முன்பும், அதன் அருகாமை யிலும் தென்பட்டன என்று பிளிட்ஸ் எழுதியது. திட்டமிட்ட தாக்குதல் என்று இந்துவின் டில்லி நிருபர் எழுதினார்.

பார்ப்பன ஃபாசிஸ்டுகளின் கோரக் கூத்து! என்று லிங்க் படம் பிடித்துக் காட்டியது.

பாங்குகளும், மருத்துவமனைகளும் கூட தாக்குதலுக்குத் தப்பிப் பிழைக்க வில்லை.

வெளியூர்களிலிருந்து திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தால் எங்கே டில்லி நகரமே அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்பதுபோல் தோன்றியது கோமாதாக்கி ஜெ என்று இரண்டரை லட்சம் மக்கள் தெருக்களில் ஊர்வல மாக முழங்கிக் கொண்டே சென்றனர் என்கிறது பம்பாயின் கரண்ட் இதழ்.

இந்தக் கொலை வெறி வன் முறையைக் கண்டித்து மக்கள் மத்தியில் ஆரோக்கியமான மனித உணர்வை அந்தக் கால கட்டத்தில் வளர்த்தது திராவிடர் கழகமும் தந்தை பெரியாரும் தான்.

காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலை வெளியிட்டு, வன்முறைக் கும்பலின் முகத்திரையைக் கிழித்த எங்களைப் பார்த்தா வன் முறையாளர்கள் என்று சொல்லுவது, வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

தமிழ்நாட்டில் ஒரு கறுப்புக் காக்கை இருக்கிறது. அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று காமராஜரை ஜாடை காட்டி ஆச்சாரியார் ராஜாஜி சென்னை கடற்கரையில் முழங்கினாரே -_ என்ன அர்த்தம்?

வன்முறை என்பது துக்ளக் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலுக்கு உடன் பிறந்த நோயாயிற்றே! இந்துக் கடவுள்கள் கைகளில் கொலை ஆயுதங் களைத் தரித்துக் கொள்ளவில்லையா? இந்துக் கடவுள்களும், அவதாரங் களும் சண்டைகள் போடவில்லையா? கொலை செய்யவில்லையா? கொள்ளை அடிக்கவில்லையா?

ராமன் சம்பூகனை வெட்டிக் கொன் றானே? துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் காணிக் கையாக பெற்றவன்தானே?

சண்டை செய்! உற்றார் உறவி னரைக் கொல்லு! கொல்லு!! என்று சொன்னவன் தானே உங்கள் பகவான் கிருஷ்ணன்! இந்தக் கொலை தூண்டல் நூலான கீதைதான் இந்துத் தர்மத்தின் மிக உயர்ந்த பொக்கிஷமாம்!

கொலை செய்வதைத் தர்மம் என்று உலகில் எந்தக் கிறுக்கனாவது சொல்லி யிருக்கிறானா? இந்து கிறுக்கு மதத்தில்தான் இந்த அசிங்கம்!

இந்தக் கீதையின் சுலோகத்தை எடுத் துக்காட்டி தானே நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் அகிம்சைவாதியான காந்தியாரையே சுட்டுக் கொன்றான்.

அந்த நேரத்தில் மட்டும் தந்தை பெரியார் நினைத்திருந்தால் காந்தியை ஒரு பார்ப்பன வெறியன் சுட்டுக் கொன்று விட்டான் _ கிளர்ந்து எழுங்கள் என்று உத்தரவிட்டிருந்தால் _ ஏன் கொஞ்சம் ஜாடை காட்டியிருந் தால்கூட ஒரு அக்ரகாரம் மிஞ்சியிருந் திருக்குமா? ஒரு புழு பூச்சி பரம் பரையை நினைவூட்ட மிச்சம் இருந் திருக்குமா?

அதற்காக தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் காலா காலத் திற்கும் நன்றி கூற வேண்டுமே அக்கிர காரம்!

அதே நேரத்தில் மும்பையில் என்ன நடந்தது? அக்கிரகாரத்தில் எத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன? பார்ப் பனக் கல்வி நிறுவனங்கள் எரியூட்டப் பட்டன?

பார்ப்பானே காந்தியாரைக் கொலை செய்துவிட்டு கொன்றவன் முஸ்லிம் என்று புரளியைக் கிளப்பி விட்ட புல்லர் கூட்டமா வன்முறைபற்றி எகத்தாளம் போடுவது! இஸ்மாயில் என்று கோட்சே கையில் பச்சை குத்தியிருந்தானே _ சுன்னத்தும் செய்து கொண்டு இருந்தானே? அரசாங்கத்தார் தந்தை பெரியாரை அழைத்துத்தானே வானொலியில் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண் டனர். அந்தக் கடமையை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற் றினாரே!

தந்தை பெரியார் என்ன கட்டளை யிட்டார் திராவிடர் கழகத்தினருக்கு?

ஊருக்கு ஊர் கூட்டம் போடச் செய்து தீர்மானம் நிறைவேற்றச் செய்தாரே!

இக்கூட்டமானது உலக மக்களால் போற்றப்பட்ட வரும் இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூலகாரணமா யிருந்து, அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துயரத்தையும், துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும் அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக் காட்டிக் கண்டிக்கிறது.

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவை படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக!

அன்பும், அறிவும், சத்தியமும் என்றும், எங்கும் நிகழ்வதாகுக! அவையேயாவற்றினும் வெற்றி பெறுவதாகும். என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய நிலையத்துக்கும், காந்தியின் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும்; பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது, செய்தியை எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பவும்.

- ஈ.வெ. ராமசாமி

என்று கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்ட தலைவரைப் பார்த்தா பார்ப்பனத் தலைப் பிரட்டைகள் தாவிக் குதிப்பது?

காந்தியார் மரணத்தைத் தொடர்ந்து மக்களை இதுபோல் வழி நடத்திய தலைவரோ, அமைப்போ உண்டா? வேறு எங்கும் உண்டா?

1948இல் புல்லேந்தும் கைகளில் வாளேந்துவோம்! என்று பார்ப் பனர்கள் மாநாடு போட்டு அறிவித்த நேரத்தில்கூட
தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் என்ன சொன்னார்? விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்? என்று எச்சரித்து விட்டு, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி. உண்மை நிலையை அழ கான உவமானத்தில் எடுத்துரைத்தாரே!

என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப் போல் மென்மையான வர்கள் நாங்கள், நாங்கள் என்றால் திராவிட இனத்தவர்கள், முள்ளுச் செடி போல வன்மையும், கூர்மையும் வாய்ந்தவர்கள் முள் வாழை இலைமீது உராய்ந்தாலும், வாழை இலைதான் கிழியும்; வாழை இலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழை இலைதான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். அல்லது நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை நேரிட்டாலும், உங்களுக்குத்தான் நஷ்டம்.

ஆகையால்தான் கூறுகிறேன்; நம் இருவருக்குள்ளும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்! அப்படி நடந்து கொண்டால் கஷ்டம் உங்களுக் குத் தான்; எங்களுக்கல்ல என்று எச் சரிக்கையுடன் கூடிய அறிவுரையை வழங்கிய நல்லவர்தான் தந்தை பெரியார்!

கழகம் அறிவிக்கும் போராட்டங் களுக்குக்கூட அதில் கலந்து கொள்ளும் கறுஞ்சட்டைத் தோழர்களுக்கு, தொண்டர்களுக்குத் தந்தை பெரியார் பிறப்பித்த கட்டளைகளைப் போல வேறு எந்த அமைப்பிலாவது உண்டா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சராக இருந்தபோது இந்தி திணிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து தந்தை பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். அப்பொழுது வெளியிட்ட 14 கட் டளைகள் இதோ:

1. தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது.

2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மனவருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய் பிரயோகிக்கக் கூடாது. 3. போலீஸ்காரரிடம் நமக்கு சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

4. போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்ட வேண்டும்.

5. கூப்பிட்டால், கைது செய்ததாய்ச் சொன்னால் உடனே கீழப்படிய வேண்டும்.

6. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடி வாங்க வேண்டும். நன்றாய் அடிப்ப தற்கு வசதி செய்து கொடுக்க வேண் டும்.

7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்த வுடன் நீங்கள் மெய்ம்மறந்து பக்தியில் இருப்பது போல், ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு (பாக்கியம்) நமக்குக் கிடைத்திருக்கிறது என்று வரவேற்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

8. போலீஸ்காரர் அடிக்கும்போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாராக இருந்தாலும் அவர்கள் அருள் கூர்ந்து கிட்டவே வரக்கூடாது.

10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர் களைக் குறிக்கும் வார்த்தைகள் கண்டிப்பாய் உச்சரிக்கக்கூடாது.

11. எந்த காரியத்தின் மூலமும் தொண்டர்கள், நடத்துபவர்கள், தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக் கூடாது.

12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம். ஆனால் தொண்டர்கள் மார்பை காட்டியே ஆக வேண்டும்.

13. இந்தி எதிர்ப்பு இயக்கம், காரி யாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமைபோல் கட்டுப்பட்டாக வேண்டும்.

14. பெண்கள் இடமும், மற்றும் இயக்கத்தில உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும், வெளியில் உள்ளவர்கள் இடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட இன்னும் பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகும்.

(குடிஅரசு 7.8.1948)

இதற்கு இணையான எடுத்துக் காட்டு உலகில் எந்த மூலையிலாவது உண்டா?

கூட்டங்களில் கலகம் செய்வது, கற்களை வீசி எறிவது, பாம்புகளை விடுவது, கறுப்புக் கொடிகளைக் காட்டு வது, சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தடிகொண்டு தாக்குவது ஆபாசச் சொற்களில் ஏசுவது போன்ற வன்முறைக் காரியங்களை அவர்கள் செய்தார்கள் என்று கூறுகிறது துக்ளக் (27.7.2011.)

இதைவிட அபாண்டம் வேறு உண்டா? உண்மையை அப்படியே தலைகீழாகப் புரட்டுவது என்று சொல் வார்களே - அது இங்குதான் அப்படியே பொருந்தும்.

சின்னாளப்பட்டியில் பொதுக்கூட் டம். அங்கு என்ன நடந்தது?

குடிஅரசு இதழ் கூறுவதைப் படி யுங்கள்:

சின்னாளப்பட்டி கலவரம்!


16.1.1946 மாலை 4 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந் தனர். உடனே ஒரு மாபெரும் ஊர் வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. 4.30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகியது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி யுடன் உட்கார்ந்து பெரியாரவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இவ் வுணர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் காலிகள் தூரத்தில் நின்று கூச்சலிட்டுக் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஒலிபெருக்கி நன்றாக இருந்ததால் பெரியாரவர்கள் காலிகளின் கூச்சலை லட்சியம் செய்யாமல் மிக உணர்ச்சி யுடன் பேசிக் கொண்டிருந்தார். பெரி யார் விடாமல் பேசுவதையும் மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்ட காலிகளுக்கு மிகவும் அவமானம் உண்டாகவே எப்படியேனும் இங்கு காலித்தனம் செய்ய வேண்டுமென்று கருதி கற்களை வீசினர்.

உடனே பெரியாரவர்கள், சால் வையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு எல்லோரும் தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள்; ஒருவரும் கலைய வேண்டாம் என்று கூறி மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார். இதைக்கண்ட காலிகள் மிகவும் அதிகமாக கூச்சலிட்டுக் கற்களை மாரிபோல் வீசினர். உடனே அங்கு வந்திருந்த போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தார்கள். உடனே கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவ்வூரில் போலீஸ் இல்லாததால் வெளியூரிலிருந்து இங்கு ஒன்றும் கலவரம் நடக்காதென்று கருதி இரண்டு போலீஸ்காரர்களும், ஒரு சப்_இன்ஸ் பெக்டர் மட்டுமே வந்திருந்தனர். கலவரம் அதிகமாகவே சப்-_இன்ஸ் பெக்டர் பெரியாரிடம் கூட்டத்தை கலையுங்கள் என்றார். உடனே பெரியார் நீங்கள், என்னால் சமாளிக்க முடிய வில்லை கலைத்துவிடுங்கள் என்று எழுதிக் கொடுங்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

பின்பு சப்_இன்ஸ்பெக்டர் நாளையோ, மறுநாளோ வேண்டு மானால் நான் பாதுகாப்போடு உங்கள் கூட்டத்தை நடத்தித் தருகிறேன் என்று கூறிவிட்டு அவரே ஒலிபெருக்கி முன்னால் நின்று காலிகள் கலகம் செய்வதாலும் நான் போதிய பந்தோ பஸ்துடன் வராததாலும் இக்கூட் டத்தைக் கலைக்கிறேன் என்று கூறி னார். பின்பு உள்ளூர்த் தோழர்களும் பெரியாரை வேண்டிக் கொள்ள, பெரியார் கூட்டத்தை முடித்தார். இவ் வளவு கலவரம் நடந்தும் பெரியார வர்கள் 1 மணி நேரம் பேசினார். திராவிடர் கழகம் சார்பிலும், முஸ்லீம் லீக்கின் சார்பிலும், சித்தையன் கோட்டை திராவிடர் கழகம் சார்பிலும் வாழ்த்திதழ்களும் மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டன. அன்றிரவே பெரியாரவர்கள் திண்டுக்கல் வந்து சென்னை செல்ல புறப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்தார்.

ஆதாரம்: குடிஅரசு 19.1.1946

இதற்குமேலும் என்ன ஆதாரம் தேவை? அன்றைய காங்கிரஸ் பார்ப் பனர்கள் இத்தகைய கலவரங்களின் பின்னணியில் இருந்தார்கள்.

மரத்தின் மறைவிலிருந்து வாலியைக் கொன்ற ராமன் பரம்பரை அல்லவா? அந்தப் புத்தி அவ்வளவு சுலபத்தில் போய் விடுமா?

மதுரையில் நடைபெற்ற முதலாவது மாகாண கறுப்புச்சட்டைப் படை மாநாட்டுப் (12.5.1946) பந்தல் மதுரை தேசிய வியாதி திருவாளர் வைத்தியநாதய்யர் தூண்டுதலால் காலிகள் கொளுத்தவில்லையா! மதுரையில் நடமாடிய அத்தனைக் கறுஞ்சட்டைத் தோழர்களையும் பெண்களையும் கூலிகளை ஏவிவிட்டு அடித்து நொறுக்கவில்லையா?

அந்த நேரத்தில்கூட தந்தைபெரியார் நிதானத்தை இழக்கவில்லையே! பொறுமையைத்தானே கடைபிடித்தார்? 20 ஆயிரம் கறுஞ்சட்டைத் தோழர்கள் திரண்டிருந்தனரே அவர்களை ஏவி விட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும்?

பேனா கிடைத்தது என்று எழுதித் தொலைக்கக் கூடாது. நிதானம் தேவை.

அந்த வன்முறையைக் கண்டு அஞ்சிடவில்லை. மாறாக பெரியார் குடிஅரசில் என்ன எழுதினார்?

மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம்தான் நாம் மனிதத் தன்மை பெற்று, திராவிடத்தைப் பெறப் போகி றோம். ஆகவே நாம் செய்ய வேண்டி யது யாவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும். எங்கும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும்; உடையிலும் கறுப்புக் கொடி சின்னம் துலங்க வேண்டும்.

இந்தக் காரியம்தான் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும், வீரமும் கொண்டோமா என்பதை உறுதிப் படுத்தும் (குடிஅரசு 19.5.1946)

_ என்று மதுரை படிப்பினை என்ன என்ற தலைப்பில் கருத்துக் கூறியி ருக்கிறார் காலக் கதிரவனாம் தந்தை பெரியார்.

வன்முறையைக்கூட எந்த வகையில் எதிர் கொண்டார் இந்த ஈரோட்டு ஏந்தல் என்பதைக் கவனிக்க வேண்டும் கணிக்கவும் வேண்டும்.

நம்மில் ஒருவரைக் கொல்வதால் நம் கொள்கைகள் அழிந்து போய் விடாது. 5 கோடி தமிழர்களையும் கொன்றால் தான் நமது கொள்கைகள் அழியும் என்று திருவத்திபுரம் பொதுக் கூட்டத் தில் தந்தை பெரியார் பேசினாரே (விடுதலை- 3.10.1971) _ இத்தகு இயக் கத்தை யார்தான் என்ன செய்ய முடியும்?

திருச்சியில் பெரியார் மாளிகையைக் கொளுத்த சதி நடந்ததே!

திருவில்லிப்புத்தூரில் தந்தை பெரியாரைத் தாக்க திருக்கைவாலுடன் ஒரு கூட்டம் தயாராக இருந்ததே - _ சிறிது நேரத்துக்கு முன்னதாக அந்த இடத்தை தந்தை பெரியார் வாகனம் கடந்து விட்டதால் ஆபத்திலிருந்து தப்பும் நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கழகத் தோழர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனரே!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மம்சாபுரம், தம்மம்பட்டி வடசென்னை முதலிய இடங்களில் உயிருக்குக் குறி வைக்கப் படவில்லையா!

உடையார்பாளையத்தில் கழக மாவீரன் ஆசிரியர் வேலாயுதம் அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விடப்படவில்லையா?

எத்தனை எத்தனையோ கொலை வெறித் தாக்குதல்களைக் கடந்துதான் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இலட்சியப் பயணத்தை நோக்கி வீர நடைபோட்டு வந்திருக்கிறது.

வன்முறையில் நாட்டம் கொண்ட தில்லை. ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக தனி மாநாட்டில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் உரையாற்றுகையில் ஒன்றைக் குறிப் பிடுகின்றார்..

திராவிட மக்களுக்கு நல் வழிகாட்ட பெரியார் அவர்கள் நம் அடிமை வாழ்க்கையை மாற்றி, இன்ப வாழ்வு அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார் ஆவார்.

இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். ஆதலால்தான் காந்தியையும் மிஞ்சிய அகிம்சாவாதியாகவும், சாக்ரட்டீசையும் மிஞ்சிய அளவுக்குச் சமுதாய சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார்

(திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஈரோட்டில் திரு.வி.க. அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.. விடுதலை 30.10.1948)

கல்லால் அடித்தார்கள்

செருப்பு வீசினார்கள்
.
கத்தியைப் பாய்ச்சினார்கள்.

எந்த மக்களுக்காக பெரியார் போராடினாரோ, அந்த மக்களாலேயே தொடக்கக் கால கட்டத்தில் அவமதிக்கப்பட்டார்.

அந்த அவமதிப்புகளைப் பெரியார் இப்படித்தான் சந்தித்தார்:

உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவர் சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட நேர்ந்தால் அதைத் துணிவுடன் ஏற்க முன்வர வேண்டும். குடிநலத் தொண்டர்கள் மானம் பார்க்கில் கெடும் என்ன கெடும்? லட்சியம் கெடும்.... அப்படி மானத்தைக் கருதாதவன்தான் லட்சியவாதியாவான். மற்றவன் சுயநலவாதியாவான்.

(விடுதலை 20.11.1966)

என்றாரே - _ இந்த பெரியாரிடம் வன்முறைச் சிந்தனை முகத்தைக் காட்டுமா?

அபாண்டம் பேசுவது, வீண் பழி சுமத்துவது என்பது பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலை. அதைத்தான் துக்ளக்கும் செய்து கொண்டிருக்கிறது.

(மீண்டும் சந்திப்போம்)

----------------- - கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர், 10-09-2011


Thursday, September 08, 2011

இதனை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை


கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருந்த பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுரங்க ஊழல் புகார் மன்னர்களான ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.

தொடக்கம் முதலே அவர்கள் பிரச்சினைக்குரியவர் களாக இருந்தனர். தொடக்கத்தில் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் பிணக்கு ஏற்பட்டது.
கணிசமான எண்ணிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரெட்டிகளின் பக்கத்தில் இருந்ததால், எடியூரப்பா மிஞ்ச முடியாமல் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டு ரெட்டி சகோதரர்களுடன் சமாதானம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி மீது லோக் அயுக்தா அறிக்கை குற்றப்படுத்திய நிலையில், அமைச்சர் பதவியை இழக்கும்படி நேர்ந்தது - இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2009 ஆம் ஆண்டில் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி 45 கோடி ரூபாய் மதிப்பில் 30 கிலோ எடை கொண்ட வைரத்தினாலான கிரீடம் காணிக்கையாக அளித்தார். அதை மகிழ்ச்சி யோடு கோயில் நிருவாகிகள் ஏற்றுக்கொண்டு ஜனார்த் தன ரெட்டிக்குப் பரிவட்டம் கட்டிக் குதூகலித்தனர்.

ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால், திருப்பதி கோயில் ஏழுமலையான் பக்தர்கள் ஊழல் பேர்வழி ஜனார்த்தன ரெட்டி ஏழுமலையானுக்குக் காணிக்கை யாக அளித்த வைர கிரீடத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இதனை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. கோயில்களில் காணிக்கை செலுத்துப வர்கள் நாத்திகர்கள் அல்லர். பக்த சிரோன்மணிகள்தான் காணிக்கைகளைக் கொட்டுகின்றனர் - அப்படிக் கொட்டுபவர்கள் யோக்கியர்களா அல்லாதவர்களா என்ற அளவுகோல் வைத்துப் பார்க்க ஏதாவது ஏற்பாடு இருக் கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திருத்தணி மாநாட்டில் ஒரு கருத்தைச் சொன்னார். கோயில் உண்டியலில் பணம் போடுவோர் காசோலையாகவோ (செக்), வரைவோலையாகவோதான் (டி.டி.) போடவேண்டும் என்று  விதியை வையுங்கள். எத்தனைப் பேர் காணிக்கை செலுத்துவார்கள்? இப்பொழுது குவியும் அளவுக்குப் பணம் குவியுமா என்ற அர்த்தம் நிறைந்த கேள்வியை யதார்த்தத்தோடு கேட்டார்.

என்ன பாவங்கள், குற்றங்கள் செய்திருந்தாலும், அவற்றை மன்னிக்கவேண்டும் கடவுள் என்பதற்காகத் தானே காணிக்கையே செலுத்துகிறார்கள்?
இதன் பொருள் என்ன? காணிக்கை செலுத்துவோர் அத்துணைப் பேரும் பாவம் செய்தவர்கள்தானே - குற்றம் புரிந்தவர்கள்தானே?

ஊர் நன்றாக இருக்கவேண்டும், உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்று கோரி காணிக்கை செலுத்துபவர் களைக் காட்டுங்கள் பார்க்கலாம்.
விஷ ஊசி போட்டுக் கொன்று பணத்தைக் கொள்ளை அடித்தவன், கொள்ளை அடித்த பணத்தை எந்தெந்த கோயிலில் காணிக்கையாகப் போட்டேன் என்று சொல்லவில்லையா?

பிரபல கடத்தல்காரனான வரதன் முனுசாமி மும்பையில் கோளிவாடா என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டவில்லையா?

அவன் சொன்ன செய்தி ஒன்றும் ஏடுகளில் வெளிவந்தது (4.10.1974).
நான் கடந்த மாதம் 15 ஆம் தேதி பம்பாயிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்குச் சென்று, தரிசனம் செய்துவிட்டு, பிறகு ராமேசுவரத்துக்குப் புனித நீராடச் சென்றேன். பிறகு சென்னைக்குத் திரும்பியபோது போலீசார் என்னைத் தேடுவதாகப் பத்திரிகையில் பார்த்தேன். உடனே போலீ சில் சரணடைந்துவிட்டேன் என்று கூறவில்லையா?

இதேபோல், எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களை அள்ளிக் கொட்ட முடியும்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலைக்குற்றம் சாற்றப்பட்டு, வேலூர் சிறையில் இருந்தவர் ஆயிற்றே! அவர் மூன்றரை கிலோ எடையில் இதே திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்கப் பூணூல் அணிவித்தாரே!
அவர் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப் பட்டபோது எந்தப் பக்தராவது ஏழுமலையான் தோளில் அணிவிக்கப்பட்ட அந்தத் தங்கத்தாலான பூணூலை அறுத்து எறியவேண்டும் என்று சொன்னதுண்டா?

ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதே பக்திதானே! பிராயச் சித்தம்தானே - பாவ மன்னிப்புதானே - தீர்த்தங்களில் முழுக்குப் போடுவதுதானே?

நாணயமற்ற முறையில் கொள்ளையடித்த பொருள் களைக் காணிக்கையாகச் செலுத்தும்பொழுது, எந்தக் கடவுள் ஓடிவந்து தடுத்து நிறுத்தியது? கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனி மனிதனையும், சமூகத்தையும் அரித்துத் தின்னும் புற்றுநோய் என்பதை உணர்க!

------- விடுதலை தலையங்கம், 08-09-2011


Tuesday, September 06, 2011

கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன?

 முதலாளி: கடை வீதியிலே யாருட்டேயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல்லதுதான் செய்றாரு.ஆனா கோயிலில் இருக்கிறேதேல்லாம் கல்லுன்னு சொல்லுறாருன்னு சொன்னியாமே! அப்படியா சொன்னே கோயில்லே கல் இல்லாம வேற என்னாட இருக்கு?

வேலை ஆள்: சாமிதானுங்க எசமான் இருக்கு

முதலாளி: சாமியா? இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்குடா. கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்க்கச் செய்கிறார்). நிற்கிறான் வேலை ஆள். பத்திரிகை படித்துகொண்டு இருக்கிறார் முதலாளி.(வேலை ஆள் காலை ஊண்டுகிறான்). டேய் தூக்குடா காலை. நில்லுடா (மறுபடியும் காலை தூக்கி சிறிதுநேரம் நின்று விட்டு காலை ஊண்டுகிறான்). டேய் ஏண்டா உண்டுன. தூக்குடா காலை.

வேலை ஆள்:  காலை வலிக்குதுங்க எஜமான்

முதலாளி: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிறதுக்கு காலை வலிக்குதுன்னு சொல்றியே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊண்டாமே இருக்குதேடா?

வேலை ஆள்:  அது கல்லு எஜமான்

முதலாளி: என்ன அது கல்லா? ஏண்டா கல்லுன்ன சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன? நான் சொன்ன ஏனடா எங்க எஜமான் கல்லுன்னு சொல்லுறாருன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்லுறே?

வேலை ஆள்:  இனிமே சொல்லமாட்டேனுங்க எஜமான்.

---------- அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்தில் இருந்து ஒரு பகுதி.


Sunday, September 04, 2011

கடவுள் தன்மை உடையவன் திருடினான் என்றால் திருட்டு கிடையாதா?


இந்து என்றால் திருடன் என்று கலைஞர் சொல்லி விட்டார்  என்று சிலர் தாண்டிக் குதித் தனர். அது கலைஞர் தன் கற்பனையில் கூறிய சரக்கு அல்ல; கமலபதி திரிபாதி என்ற உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எழுதிய நூலிலிருந்தே ஆதாரம் காட்டினார்.

பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ஞான சூரியன் எனும் நூலான பெட்டகத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கூறி யுள்ளார். பாரசீக மொழி யில் இந்து என்றால் திருடன் என்று குறிப் பிடப்பட்டுள்ளதை எடுத் துக்காட்டியுள்ளார்.

அவ்வளவு தூரம் போவானேன்? திரு மங்கை ஆழ்வார் வைணவ ஆழ்வார்களுள் ஒருவன்; அவன் என்ன செய்தான் தெரியுமா?

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந் தது. அதனை ஆலிநாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச் சமயத்தில் கடவுள் தன் மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர்

ஒருவரும் இலர் - இப்படிக் கூறுவது திராவிடர் கழக வெளி யீடல்ல - திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் கூற்றும் அல்ல.

சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7  - வரிகள் 26-30) பறைசாற்றுகிறது. குரு பரம்பரப்பிரபாவம் என்ற வைணவ  நூலும்  இதனை வழிமொழிகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்த பசும்பொன்னா லான புத்தர் சிலையைத் திருமங்கை ஆழ்வார் என்ற ஆழ்வார் திருடி னான் என்று கூறிவிட்டு, அவன் திருடிய நேரத்தில் கடவுள் தன்மை உடைய வனாக இருந்தான் என்பதால் அவனைக் குற்றம் கூற முடியாது என்று அடித்துக் கூறப் படுகிறது.
ஒன்று மட்டும் திட்ட மிட்ட முறையில் தெளிவா கிறது. கடவுள் தன்மை உடையவன் ஒருவன் திருட்டு வேலை செய் திருக்கிறான் என்பதை தஞ்சைவாணன்  கோவையே கூறித் திருட்டை நியாயப்படுத் தியுள்ளது.

திருட்டு என்பது திருட்டுதான். அவன் கடவுள் தன்மை உடையவ னாக இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தால் என்ன?

கடவுள் தன்மை உடையவன் திருடினான் என்றால், திருட்டுக்குத் தெய்வீக அங்கீகாரம் கிடைத்து விட்டதாகப் பொருளாகவில்லையா?
இந்து என்றால் திருடன் என்று சொன் னால் சீறிஎழும் சிரோன் மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?   

- மயிலாடன், விடுதலை,04-09-2011

 


Saturday, September 03, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (9) பெரியாரைத் தூற்றினோர் போற்றினரே!

காங்கிரசைச் சேர்ந்த எம். பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த கோவை அய்யாமுத்து, ப.ஜீவானந்தம், திராவிடர் கழகத்தில் இருந்த அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் போன்ற வர்கள் பெரியார் அவர்களிடம் முரண் பட்டுச் சென்றது, - குறை கூறியதையெல் லாம் பொத்தாம் பொதுவில் எடுத்துச் சொல்லிப் பெரியாரைக் கொச்சைப் படுத்திவிடலாம் என்று துக்ளக்கும் கே.வி. லட்சுமி நாராயண அய்யரும் மனப்பால் குடிக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் மிக நீண்ட பொது வாழ்வில் எத்தனை எத்தனையோ பேர்களின் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சக தோழர்களாக இருந்திருக்கின்றனர். தொண்டர் களாகப் பணி புரிந்திருக்கின்றனர்.

உடன்பாடான நிகழ்வுகளும் உண்டு- முரண்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அதை வைத்துக் கொண்டு தந்தை பெரியார் அவர்களை எடை போடக் கூடாது முடியாது.

அப்படிக் குறை சொன்னவர்கள் எல்லாம் கூட பிற்காலத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் தான், அவரால்தான் அடிப்படை மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று ஒப்புக்கொண்டு மனந்திருந்தியிருக் கிறார்கள்..

பழம்பெரும் காங்கிரசுக்காரரும், முதலமைச்சராக இருந்தவருமான எம்.பக்தவத்சலம் தந்தை பெரியார் அவர்களிடம் மாறுபட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அவர் பிறந்து வளர்ந்த சூழல் - சுற்றுக் கிரகங்கள் அப்படி! ஆச்சாரியாரின் சீடராக இருந்து காமராசருக்கு எதிர் அணியில் கச்சை கட்டி நின்று, முதல் அமைச்சர் தேர்தலில் கூட காமராசருக்கு எதிராக சி.சுப்பிரமணியத்தை ஆதரித்தவர்தான் இந்த பக்தவத்சலம். பச்சைத் தமிழர் காமராசரின் பெருந்தன்மை காரணமாக பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் ஆகியோரைத் தம் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரைத் தாக்கி எனது நினைவுகள் என்ற நூலில் பக்தவத்சலம் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள் ளாரே திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்; அதே நூலிலேயே பெருந் தன்மையாகத் தமக்கு அமைச்சர் பதவியைத் தந்தார் காமராசர் என் பதைப் பற்றிச் சிறிதும் நினைக்காமல், காமராசர் மீது அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி எழுதியுள்ளாரே- பக்தவத்சலம்!

இது போன்றவர்கள்தான் பார்ப் பனர்களுக்கு மலிவாகக் கிடைக் கிறார்கள் - என் செய்வது?

அத்தகைய பக்தவத்சலம் அவர்களே கூட மனந்திறந்து தந்தை பெரியார் அவர்கள் பற்றி மடை திறந்த வகையில் கருத்துகளைக் கொட்டி, தந்தை பெரியார் அவர்களை தன் மனமேடையில் நிறுத்தி வைத்திருந்ததை ஆதாரத்துடன் கூறமுடியும்.

துக்ளக்கில் எழுதுவது போல - எந்த வித ஆதாரக்குறிப்புக்கும் இடமில்லாமல் மானாங்காணியாக எழுதிடவில்லை.

உண்மை இதழுக்காக (15-1-1980) அவரிடம் பேட்டி காணப்பட்ட பொழுது மனந்திறந்து அவர் கூறியது என்ன?

தந்தை பெரியார் அவர்களின் பார்ப் பன எதிர்ப்பு ஏன் என்பதை விளக்கிக் கூறி இருக்கிறாரே!

அதில் ஒரு சில பகுதிகள் இதோ:-

கேள்வி: பெரியாருடைய கொள்கை களிலே நீங்கள் எந்தக் கொள்கையை மிகவும் ஆதரிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

பதில்: அவர் கொள்கைகளிலே தவறு என்று எதையும் சொல்ல முடியாது. பகுத்தறிவு தேவை என்று சொன்னால், யார்தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்? ஆனால் எது பகுத்தறிவு என்பதில்தான் கருத்து வேறுபாடு. மூடநம்பிக்கைகள் கூடாது என்ற கருத்துகள் எல்லாம் நல்ல கருத் துகள்தான். மூடநம்பிக்கைகள் கூடாது தான்.

உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்த ஒரு பேராசிரியர் - அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் - என்னைச் சந்தித்தார். பிரான்ஸ் நாட்டிலே ஒரு கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்றை எல்லோரும் ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டுப் போவார் கள். அந்தக் கிணற்றைப் பார்த்தால் அழகாகிவிட முடியும் என்று ஒரு மூட நம்பிக்கை. அந்தக் கிணற்றுக்குப் பெயரே Look Well யாரோ சொல்கிறான்; அதை எப்படியோ எல்லோரும் பின் பற்றுகிறார்கள். இங்கே கூட மரத்திலே கந்தல் துணி கட்டப்படுகிறது.

ஒருவன் கந்தல் துணியைக் கட் டினால் போதும்! உடனே அந்த மரம் முழுவதும் எல்லோரும் கட்டி விடுவார்கள். எதற்குக் கட்டினான்? இது பயித்தியக் காரத்தனமாக இருக்கிறதே என்று ஒருவரும் நினைப்பது இல்லை. பலவீன மனதுதான் இதற்கெல்லாம் காரணம்.  இவை எல்லாம் மறைய வேண்டியதுதான். இவைகளினால் சமுதாயத்துக்குப் பெரிய கேடுகள் கிடையாது; இருந்தாலும் ஒழிய வேண் டியதுதான். இதற்கெல்லாம் சமுதாயத் தின் அடிப்படை மாறவேண்டும்  என்பதுதான் என் கருத்து. இதில் எல்லாம் மாணவர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்.

கேள்வி: இந்தக் கொள்கைகளில் எந்த இடத்தில் நீங்கள் மாறுபடு கிறீர்கள்?

பதில்: இதெல்லாம் நல்ல கொள்கைகள்தான்  ஆனால் “Negative’’ கூடாது; எதிர் மறையான நடவடிக்கை களில் இறங்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். பெரியாருடைய கொள் கைகளில் Fundamental   (அடிப்படை) மிக நல்லது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது;  ஞிமீணீவீறீ களுக்குள்ளே போகக் கூடாது. உலகே மாயம் என் பதில் அர்த்தமில்லை

கேள்வி: சாதி ஒழிப்புப் பற்றி . . .

பதில்: அதெல்லாம் நல்ல கொள் கைகள்தான்! சாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் சாதி ஒழிப்பை எப்படி சட்டம் போட்டு அழிக்க முடியும்? உள்ளத்திலிருந்து அந்த எண்ணம் மறையவேண்டும்.

இப்போது பிராமணன் சாப்பிடுவ திலிருந்து எல்லாவற்றிலும் எது செய்யத் தகாததோ அத்தனையும் செய்கிறான்! எனக்கு நன்றாகத் தெரியும்; நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால், உள்ளத்தில் எது பிரா மணன் உள்ளம் என்று நினைக்கி றோமோ - அதே உள்ளமுள்ளவனாக கம்யூனலாகத்தான் இருக்கிறான். எந்த பிராமணன் தன்னைத் தீவிரவாதியாகக் காட்டிக் கொள்கிறானோ அவன்தான் மற்ற பிராமணர்களை விட அதிக கம்யூனலாக இருக்கிறான். வெளியிலே வந்து, நான் எல்லாவற்றையும் விட்டு விட்டேன் என்பான். எனவே, உள்ளத் திலிருந்து அந்த எண்ணம் மறையவேண்டும்.

கேள்வி: பெரியாருடைய இயக்கத் தினால் - தமிழ் நாடு பயன் பெற்றிருக் கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: பொதுவாக ஒரு விழிப் புணர்ச்சி தமிழ் நாட்டில் பெரியா ருடைய இயக்கத்தால் ஏற்படுத்தப் பட் டிருக்கிறது. அவர் காங்கிரசிலிருந்த போது பிராமணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்தார். நான் அப்போது அவரிடம் இரண்டு மூன்று முறை கேட்டிருக்கிறேன். இந்தக் கொள்கைகள் தேசியத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்று நாங்கள் சொன்னோம். அந்த இயக்கத்தின் மேல் காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வெறுப்பே உண் டாகியது. ஆனால், எதைச் சொன்னா லும் உள்ளத்தில் எதை நினைக்கிறாரோ அதை அப்படியே ஒளிவு மறைவில் லாமல் சொல்வது; மேடையிலே எவ்வளவு கடுமையாகப் பேசினாலும் தனியாக சந்தித்தால் காட்டும் மரியாதை அந்த மனுஷத்தனம் இருக்கிறதே இந்த இரண்டும் அவருக்குள்ள சிறப்பு. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுகிறாரே. அதுதான் அவர் மீதுள்ள தனி அட்மிரேஷன். அவரது கருத்தைப் பிடிக்காதவர்கள் கூட பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கேள்வி: பார்ப்பனரல்லதார் இயக்கம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?

பதில்: பிராமணர்கள் கம்யூனல்களாக (வகுப்பு வாதிகளாக) இருந்த காரணத் தினால்தான் - பிராமணரல்லாதார் இயக்கமே வந்தது! பிராமணர்களா லேயே பிராமணரல்லாதார் கம்யூன லாக வேண்டியிருந்தது. அப்போது நாங்கள் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சம், - முதலில் நாட்டை விட்டு வெள்ளைக்காரன் போகவேண்டும் என்றோம். பெரியார் இயக்கத்தால் பிராமணரல்லாத மக்கள் இன்றைக்கு ஏராளமாகப் படித்து - உத்தியோகத்துக் குத் தகுதி பெற்றவர்களாக ஆகி உள்ளார்கள். - என்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் - பார்ப்பனர் எதிர்ப்பு இவற்றின் அவசியத்தை  ஆழமாகக்கூறி இருக்கிறாரே. இதற்குப் பதில் என்ன?

கோவை அய்யாமுத்து
கோவை அய்யாமுத்து அவர்கள் வைக்கம் போராட்டத்திலேயே தந்தை பெரியாரோடு தொண்டராகக் களம் கண்டவர்தான். குடிஅரசு இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர்தான். அடிக்கடி முரண்டு பிடிப்பவர்தான்.

அதே கோவை அய்யாமுத்து அவர்கள் வானொலிக்கு தந்தை பெரியார் அளித்த பேட்டியைக் கேட்டு எழுதி அனுப்பிய கவிதை இதோ:- வானொலி தன்னில் மாறன்

வழுத்திய கேள்விக் கெல்லாம்
வான்மழை போன்ற தாங்கள்
வழங்கிய சொற்கள் கேட்டு
நானுமென் மனையாள் தானும்
நல்மன நிறைவுற் றோமே!
நீங்கிலா நினைவு பூண்டு
நித்தமும் நினைப்ப தோடு
ஓங்குமுன் புகழைக் கேட்டு
உள்ளமும் மகிழ்வுற் றோமே!
எண்ணிய கருத்தைத் தாங்கள்
எவரெல்லாம் எதிர்த்த போதும் திண்ணிய மாகச் சொல்லும்
திறத்தினை எண்ணி எண்ணிச்
சிறியனேன் இறும்பூ தெய்தித்
திளைத்திடல் இன்றும் உண்டே!
உத்தமி நாகம் மாவும்
உயிருடன் இருந்த காலை
எத்தனை நாட்கள் அங்கு
இன்னமு துண்டோம் நாங்கள்!
அத்தனே! அந்த நாட்கள்
அருந்தவப் பேறாம் அன்றோ?
இத்தரை மீதில் சாதி
இழிபடும் சமயம் சாமி
முத்திரை கிழிக்கும் போரில்
முற்றிலும் மோடு நின்றேன்
எத்துணை துன்பம் ஏற்று
இடர்ப்பட  நேரிட்டாலும்
சுத்ததன் மானம் காக்கத்
துணிந்துயிர் ஈவே னய்யா!
நாற்பது ஆண்டாய் தங்கள்
நட்பினை இழந்தா போனேன்?
சீர்ப்பதம் எதுவுற் றாலும்
சிறுமையில் உழன்றிட்டாலும்
சிந்தையில் உம்மை யென்றும்
சிறப்புற ஏத்து வேனே!
பன்னெடுங் காலம் தங்கள்
பகுத்தறி வியக்கம் வாழ்ந்து
நன்னெறி சூழ்ந்து மக்கள்
நலமுடன் வாழ்க!  வாழ்க!!
கோவை அய்யாமுத்து அவர்கள் கவிதையில் கையாண்ட ஒவ்வொரு சொல்லும் ஒளி வீசும் முத்துக்கள்  அல்லவா?
சிறுமையில் உழன்றிட்டாலும்
சிந்தையில் உம்மை யென்றும்
சிறப்புற ஏத்து வேனே!

என்று எவ்வளவு உணர்ச்சி  பொங்க உணர்ச்சிப் பிழம்பாகி உந்தப்பட்டு இதயத் தாமரையை விரிக்கின்றார்.

தந்தை பெரியாரை கோவை அய்யாமுத்து குறை கூறியிருக்கிறார் என்று எந்த நூலில் இருந்து (எனது நினைவுகள்) எடுத்துக் காட்டுகிறாரோ, அதே நூலில் தலைவர் தந்தை பெரி யார்பற்றி எப்படி எப்படி யெல்லாம் போற்றிப் புகழ் பாடுகிறார்.

பார்ப்பனர் களுக்கே உரித்தான அற்பத்தனத்துடன், நரிக்குணத்துடன் அவற்றையெல்லாம் இருட்டடிக்கிறது துக்ளக்!

கோவை அய்யாமுத்து கூறுவது என்ன?

ஈ.வெ.ராமசாமி நாயக்கர்

திருப்பூரிலிருந்த தமிழ்நாடு காதி போர்டின் தவைராக ஈ.வெ.ரா. இருந் தார். க. சந்தானம் அதன் காரியதரிசி.

தெருத்தெருவாய் கதர் சுமந்து கொண்டு போய் விற்பதற்கு அய்யா சாமியும், நானும் நாயக்கரிடம் கதர் கடனாகக் கேட்டோம். அவரா கடன் கொடுப்பவர்! அய்நூறு ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துக் கதர் எடுத்து வந்து விற்பனை செய்தோம்.

அதன் பின்னர் கோவை காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவில் கோவை ராஜவீதியில் தேர்முட்டிக்கு எதிர்ப்புறம் ஒரு கதர் கடை ஆரம்பித்து அதற்குக் கிருஷ்ண்மூர்த்தி என்பவரை நிருவாகி யாகப் போட்டோம். அதற்குப் பிறகு சி.பி.சுப்பையாவை அவ்வேலையில் நியமித்தோம். அங்கிருந்து பிரதிதினமும் கதர் எடுத்துச் சென்று வீடுகள் தோறும் விற்பனை செய்தோம்.

காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு நாயக்கர் சென்ற விடங்கெட்கெல்லாம் நாங் களும் போனோம்.
நாயக்கர் ஒரு சிறந்த உழைப்பாளி. அவரது அயராத உழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தன.

சோறு, தண்ணீர், உறக்கமாகிய வற்றை அவர் பெரிதாகப் பொருட்படுத் தவில்லை. எந்த இடத்தில் எது கிடைத்ததோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தெருவிலோ, திண்ணையிலோ, மரத்தடியிலோ, எங்கு வேண்டுமானா லும் அவர் துப்பட்டியை விரித்துப் படுத்துறங்கினார். நாயக்கர் ஒரு கர்மயோகியாகவும், தன்னலமற்ற தியாகியாகவும் அந்நாட்களில் விளங்கினார்.

ஒரு சமயம் நாயக்கரும் நானும் சேலம் ஜில்லாவில் உள்ள மல்லசமுத் திரம் என்ற ஊரில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந் தோம்.

காலையில் தூங்கியெழுந்தவுடன், ஊரைச் சுற்றிப் பார்க்க நாயக்கரும் நானும் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றதும், அங்கொரு வீட்டுத்  திண்ணையில் ஒரு பெண் புட்டு சுட்டு விற்றுக் கொண்டிருப்பதை நாயக்கர் பார்த்தார். பார்த்ததும் மளமளவென்று உள்ளே நுழைந்தார்.

நாயக்கரையும் என்னையும் காணோமென்று தேடி அலைந்த மகா நாட்டு நிருவாகிகள் எங்களிருவரையும் அங்கே கண்டு பிரமித்துப் போனார் கள். நாளடைவில் நாயக்கருக்கும் எனக்குமிடையே ஆழ்ந்த நட்பும் தோழமையும் ஏற்பட்டது. நாயக்கர் எனக்கொரு ஆதர்ஸ புருஷராக விளங்கினார். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாத தோழர்களானோம்.

(கோவை அய்யாமுத்து அவர்களின் எனது நினைவுகள் பக்கம் 205-206)

தந்தை பெரியார் அவர்களின் சீடராக இருந்து குறிப்பிட்ட கால கட்டத்தில் மாறுபட்டு, சோசலிஸ்டு, பொதுவுடைமைக் கட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண் டது உண்மைதான். அதே ஜீவா பிற்காலத்தில் தந்தை பெரியாரைக் குறித்துக் கணித்துக் கூறியதென்ன?

இதோ ஜீவா பேசுகிறார்:-

பணக்காரத் தன்மையையும், வைதீகத் தையும் ஆளத் தெரியாத அரசாங்கத் தையும், கடவுளையும் கண்டித்தே வந்திருக்கிறார், இந்த 25 ஆண்டுகள் ஓய்வு ஒளிவுமின்றி.

மாபெரும் காரியங்களை எல்லாம் சாதித்து வந்து இருக்கும் அய்யா அவர்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் நிதானமாகத்தான் பேச வேண்டும். இஷ்டம் போல சொல்லும் போது யாரையும் வானளாவப் புகழ்ந்து கூறலாம். ஆனால், பெரியார் அவர்கள் செய்த பெரும் சாதனைகள் மக்கள் கண்முன் நின்று கொண்டிருக்கும் போது அப்படிப் புகழ்ந்து கூற நிதானம் மிகவும் தேவைதான். ஏனென்றால், அரசியல் தெளிவோடு ஆராய்ந்து பார்க்கும்போது பெரியார் அவர்கள் 25 ஆண்டுகளாக விடாமல் ஒரு பெரும் கூட்டத்தாருக்குத் தலைவராகவே இருந்து வருகிறார் என்பது தெரியும்.

மற்ற தலைவர்களில் பெரும்பாலோர் கட்சியின் தலைவராக இருந்துதான் வந்திருப்பார்கள். ஆனால், அய்யா அவர்கள் மாத்திரம் இயற்கையாய் வெகுநாள்களாக மக்களுடைய தலைவராகவே இருந்து வருகிறார்கள். என்றைய தினமும் அய்யாவை மக்கள் பிரிந்தது கிடையாது. தமிழ் மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் பெரியார் அவர்களின் நினைப்பு வேரூன்றித்தான் இருக்கும். இருபது ஆயிரம் பேர்கள் கூட்டத்திலே பேசியும் இருக்கலாம். லட்சம் பேர் கூட்டத்திலேயும் பேசி இருக்கலாம். இருநூறு பேர் கூட்டத் திலேயும் பேசி இருக்கலாம். ஆனால், மக்களின் மனதிலே வேறுபாடின்றி எப்போதுமே மக்களின் தலைவராகவே விளங்கி வந்திருக்கிறார். வாழ்க்கையின் போக்கிலே ஏற்றத் தாழ்வு இருக்கலாம். ஆனால், கொள்கையிலே ஏற்றத் தாழ்வு காண முடியாது.

இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்.

லெனின் சொல்லுகிறார். மக்களு டைய இதயத் துடிப்பை நேர்மையாகத் தேடிப் பிடித்து எவன் தெரிந்து கொள்ளுகிறானோ அவன் உண்மை யான கம்யூனிஸ்டாக முடியுமென்று கூறுகிறார். அதைப் போல பெரியார் அவர்களும் மக்களின் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்து, யாரை முன் னுக்குக் கொண்டு போகவேண்டுமோ அந்த சமூகத்தினரை முன்னுக்குக் கொண்டுவரப் பாடுபடவேண்டுமென் கிறார். ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே ஒரு பெரும் மக்கள் தலைவர் எனக் கூறவேண்டும்.

(பெரம்பூர் - செம்பியம் பொதுக் கூட் டத்தில் 23-11-1951 அன்று தோழர் ஜீவானந்தம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)

ஜீவா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி இதற்கு முன் எப்படியெல்லாம் விமர்சித்திருந்தாலும், ஜீவாவின் இந்த உரைக்கு முன் - இந்த உரையில் பயன்படுத்தப் பட்ட பளபளக்கும் தங்கம் போன்ற ஒவ்வொரு சொல்லும் அவற்றிற்குப் பதில் அளிக்கும் என்பதில் அய்யமில்லை!

தந்தை பெரியார் கண்ட இயக்கம் உலக சரித்திரத்திலேயே காண முடியாதது என்று அவருக்கே உரித்தான முறையிலே சொல்லிவிட்டாரே!

பெரியாரைப் பற்றிப் பேசும்போது நிதானம் தேவை என ஜீவா சொல்லி யிருப்பது துக்ளக் கூட்டத்திற்கும் சேர்த்துத்தான். ஜீவாவைப் பெரியாருக்கு எதிராகத் துணைக் கழைத்தால், அவர் கொடுக்கும் உதை அக்கிரகாரத்தின் முகத்தில் பாயும் - எச்சரிக்கை!

யார் இந்த சி. சுப்பிரமணியம்

திராவிட இயக்கத்துக்கோ தந்தை பெரியாருக்கோ எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சி.சுப்பிரமணி யத்தைக் கொண்டு வந்து முட்ட விடுகிறது துக்ளக்.

யார் இந்த சி.சுப்பிரமணியம்?. ஆச் சாரியார் (ராஜாஜி) அமைச்சரவையில் இருந்து குலக் கல்வித் திட்டம் கொண்டு வருவதற்குக் கருவியாக இருந்தவர்.

தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், தமிழர்களும் கிளர்ந்தெழுந்து தீப்பந்தத்தைக் கையில் ஏந்த வேண்டிய அவசியமான ஒரு கால கட்டத்தில் பதவியை விட்டு ஓடியவர் ஆச்சாரியார். ஆனால் சி.சுப்பிரமணியமோ கெட்டி யாகப் பதவி நாற்காலிக் காலைப் பிடித்துக் கொண்டவர். (முதல் அமைச்சர் பதவிக்குக் காமராசரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர். காமராசருக்கு 93 வாக்கு களும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 வாக்கு களும் கிடைத்தன). காமராசர் மிகப் பெருந்தன்மையாக சுப்பிரமணியத்துக் கும் மந்திரி பதவி கொடுத்தார்.

காமராசர் ஆட்சிக்கு வந்து குலக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு ஆமாம் சாமி போட்ட, அப்பட்டமான பதவியின் காதலர் ஆயிற்றே! 1942 ஆகஸ்டு போராட்டத்திலிருந்து விலகி நின்று காங்கிரஸ் துரோகி என்று தூற்றப்பட்ட ஆச்சாரியாரின் அமைச் சரவையில் இடம் பிடித்த சி.சுப்பிர மணியமா திராவிடர் கழகத்தைப் பார்த்துத் துரோகக் கூச்சல் போடுவது?

அவரை எதற்குத் தேவையில்லாமல் கொண்டு வரவேண்டும்? சரி. அப்படி என்னதான் அந்தச் சி.சு. சொல்லுகிறார்? பார்ப்பனர்கள் வழக்கமாகச் சொல்லும் கிளிப்பிள்ளைப் பாடம்தான். இரண் டாம் உலக மகா யுத்தத்தில் திராவிடர் கழகம் - விடுதலை யுத்தப் பிரச்சாரத் துக்குப் பயன்பட்டது என்பதுதான்.

இருக்கட்டும். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்று ஜெர்மனிக்காரன் ஹிட்லர் அச்சு நாடுகள் வெற்றி பெற்று இந்தியாவைப் பிடித்திருந்தால், இந்தியாவின் நிலை என்ன? இவர்கள் கூறும் அந்தச் சுதந்திரம்தான் எளிதில் கிடைத் திருக்குமா?

ஹிட்லர் ஆட்சி தேவையா? வெள்ளைக்காரன் ஆட்சி தேவையா? இருவரில் யார் குரூரன், கொடூரன்? பார்ப் பனர்களுக்கு ஹிட்லர் வரவேண்டும் என்று கொள்ளை ஆசை! ஏனெனில் ஆரியர்தான் உலகில் உயர்ந்த இனம் என்றும், ஆரிய ரத்தம்தான் சுத்தமான ரத்தம் என்றும் கூறும் நாஜிதான் ஹிட்லர்.

அவன் வருவதை விட வெள்ளைக் காரன் இருப்பது நல்லது என்று நினைத்தது தவறா?

ஆரியப் பார்ப்பனர்கள் அடால்ப் ஹிட்லர் வரவேண்டும் என்று ஆசைப் பட்டதில் அதியமில்லை.

இயற்கை அன்னை ஆரியருக்குத்தான் அத்துணை வளங்களையும் கொடுத்திருக் கிறாள். அவ்வளவு மகத்தானவன் இந்த ஆரியன். எப்படி இந்த நிலையை  அடைகிறான் அவன்? மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதிலிருந்து பெறுகிறான்.

இதுதான் ஹிட்லரின் தாரக மந்திரம். அந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த இந்திய நாட்டுப் பார்ப் பனர்களும் அடுத்தவர்களின் உரிமை களைப் பறித்துத்தானே பளபளப்பாக வாழ்கிறார்கள்? நெற்றி வியர்வை நிலத் தில் விழுவது என்றால் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா?

எப்படியும் ஹிட்லர்தான் வெற்றி பெறப் போகிறான் என்ற மோகத்தில் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஜெர்மன் மொழியை அவசரம் அவசரமாகப் படிக்க ஆரம்பித்தனர். இதனைப் பல பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர், 1981 ஆம் ஆண்டு வெளி யிட்டுளள் தமது இந்திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர் மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட இருப்பதால், அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற் காக (வேறு எதற்கு?) ஜெர்மானிய ருடைய கைக்கூலிகளாக, கங்காணி களாக இருக்கத்தான் ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.

(When France fall, some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover. PP 74-75 of ‘India Remembered’ by Percival andMagaret Pear, Orient Longman, 1981)

பின்னர் 1942 முற்பகுதியில் இட் லரின் கூட்டாளிகளான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர் பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன் (!) பார்ப்பனர்கள்  ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டார்களாம்.

(The ‘German Brahmins’ of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma) - P 78 of the above book.)

பாவம். பார்ப்பனர்கள். அவர்களு டைய கூட்டாளிகளான ஜெர்மானிய, ஜப்பானிய போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய் விட்டனர் கடைசியாக! (அவர் கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!)

இவர் மட்டுமல்ல. அக்ரகாரத்து மனிதராகிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அலை ஓசை என்னும் நாவலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்ஜெர்மன் மொழியைப் படிக்கத் தொடங்கினார்கள் என்று எழுதியுள்ளாரே?

இவற்றிற்குப் பதில் உண்டா? சி.சுப்பிரமணியம் எழுதினார் என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுதுவது பார்ப்பனர்களுக்கு அழகுதான்!

அறிஞர் அண்ணா, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர்க்கும் தந்தை பெரியார் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று விவரிக்கிறார் ஸ்ரீமான் லட்சுமி நாராயண அய்யர்வாள்.

உண்மைதான். சரி, அண்ணா முதல் அமைச்சர் ஆனதும் தம் தலைவர் இருந்த திருச்சியை நோக்கிச் சென்று தானே தனது நன்றி உணர்வை வெளிப் படுத்தினார். இந்த ஆட்சியே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என் றாரே (20.6.1967). அதற்கு மேல் என்ன வேண்டும்?

ஈ.வெ.கி. சம்பத் அவர்களும் தி.மு.க.வை விட்டுப் பிரிந்து, தமிழ்த் தேசியக் கட்சியை ஆரம்பித்த நிலையில் அய்யாவிடம் மீண்டும் நெருக்கமாகி விடவில்லையா? அவர் நடத்திய மாநாடு களுக்கெல்லாம் அய்யாவைத்தானே முக்கியமாக அழைத்தார்?

எந்த ஒரு கட்சியிலும் தலைவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவ துண்டு. காந்தியாருக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் ஏற்படவில்லையா? நேருவுக் கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட தில்லையா? காங்கிரசுக்குள் காமராசர் - ராஜாஜி கோஷ்டிச் சண்டை சாதாரண மானதுதானா? சத்தியமூர்த்தி அய்யருக் கும் ;ராஜாஜிக்கும் இடையே பிணக் குகள் ஏற்படவில்லையா? தமது அமைச் சரவையில் சத்தியமூர்த்திக்கு இடம் தருவதாகக் கூறி கடைசியில் தன் அய் யங்கார் புத்தியை - அதாவது குழைத்து நாமம் போடவில்லையா?

காமராசருக்கும் ராஜாஜிக்கும் ஏற்பட்ட லடாய் குறித்து பிரதமர் நேரு மிக அழகாகப் படம் பிடித்தாரே.

இன்று ராஜாஜிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஏமாற்றம்தான் அவரைக் காங்கிரஸ் எதிரி யாக்கி யிருக்கிறது. ராஜாஜிக்கும் வேதனை தருவது இதுதான். அதாவது - நாகரிகமற்ற, படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பேர்வழி (Illiterate Poor)    என்று தாம் கருத்திக் கொண்டிருக் கும் ஒருவர்  தாம் முன்பு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு, நன்றாக நிர்வாகம் நடத்தி வருகிறாரே என்ற மனவேதனைதான் ராஜாஜியை வாட்டுகிறது

என்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நேரு பேசினாரா இல்லையா?

(தினமணி சித்தூர் பதிப்பு 25-3-1960 பக்கம் 2)

நாகர்கோயில் மக்களை இடைத் தேர்தலில் காமராசர் அவர்கள் வெற்றி பெற்ற போது, அவர் இந்தியாவின் உதவிப் பிரதமர் ஆவார் என்று ஏடுகள் எழுதிய போது ராஜாஜி என்ன சொன்னார் - நினைவிருக்கிறதா?

டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் ஆபீசில் ஒரு குமாஸ்தா வேலைக் குத்தான் அவர் லாயக்கே தவிர வேறு எந்தப் பொறுப்புக்குமல்ல என்று பேசினாரா - இல்லையா?

தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக காமராசர் இருந்தும் காந்தியார் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது காமராசரைப் பல வகைகளிலும் அவமானப் படுத்தியவர்தானே குல்லுக பட்டர் ராஜாஜி?

காந்தியார் எங்கு வருகிறார்? எப்படி வருகிறார்? என்கிற தகவல்களைக் கூட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காம ராசருக்குத் தெரிவிக்கப்படவில்லையே!

இவ்வளவையும் செய்துவிட்டு ஹரிஜன் பத்திரிகையில் ராஜாஜிக்கு எதிராகக் காமராசர் தலைமையில் ஒரு கும்பல் (Clique) இருக்கிறது என்று காந்தியாரை எழுத வைத்தாரே.

இந்தப் பார்ப்பனச் சூழ்ச்சியெல்லாம் அவாளுக்குத் தெரியாது  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? அவாளின் கடைக்காலை முறித்தவர் ஆயிற்றே அரிமா பெரியார்? அவாளின் ஆதிக்கபுரியின் ஆணிவேரைப் பிடுங்கி எறிந்தவராயிற்றே ஈரோட்டு  ஏந்தல்! அவிட்டுத் திரியுடன் வீதியில் நட மாடமுடியாது. அப்படி நடமாடினால் கோலி விளையாடும் சிறுவன் கூட கேலி செய்து துரத்துவானே! -இந்த நிலைக்கு இந்த ஈரோட்டு ராவணன் தானே காரணம் என்ற ஆத்திரத்தில் அய்யோ பாவம் அலமருகின்றனர்.

அதே ராஜாஜியும், காமராசரும் 1971 தமிழ் நாட்டு சட்டப் பேரவைத் தேர் தலில் கூட்டணி வைத்துப் போட்டி யிட்டு படுதோல்வி அடைந்ததுனரே!

இந்தியாவிலும் சரி, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் சரி கட்சிக்குள் பிளவு தலைவர்களுக்குள்  கருத்து மாறுபாடு, வேறுபாடு ஏற்படுவது சர்வசாதாரணம்.

மாறுபட்டுச் சென்றவர்கள் அந்தக் கால கட்டத்தில் சொன்னவற்றை எடுத்து வைத்துக் கொண்டு, பார்த் தீர்களா, பார்த்தீர்களா? பெரியாரைப் பற்றி அய்யாமுத்து இப்படி சொல்லி இருக்கிறார்; ஜீவா இப்படி பேசியிருக் கிறார். பக்தவத்சலம் புலம்பித் தள்ளி யுள்ளார். சி.சுப்பிரமணியம் சீறியிருக் கிறார். அண்ணாவும், சம்பத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்வதில் ஏதாவது பொருள் உண்டா?

ஆனால் ஒன்று. மற்ற மற்ற தலை வர்களுக்கும் தந்தை பெரியார் அவர் களுக்கும் இதில் கூட கனத்த வேறு பாடு உண்டு.

தந்தை பெரியாரை விமர்சித் தவர்கள், குற்றப் பத்திரிகை படித்த வர்கள் எல்லாம் கடைசியில் தந்தை பெரியாரிடம் நெருங்கித்தான் வந் துள்ளார்கள்.  தந்தை பெரியாரின் பெரு மைகளைப் பேசாத நாள்களை எல் லாம் பிறவா நாளாகத்தான் கருதி னார்கள்  என்பதை மறக்க வேண்டாம் - மனுதர்மக் கூட்டத்தாரே!

(இன்னும் வளரும்)

------- - கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர், 03-09-2011


Friday, September 02, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (8) மூக்கறுபடும் ஆச்சாரியார்!

1919ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர்ந்தார். 1923-ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் மகாசபை யின் கொள்கைகளான கதர்த் திட்டம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிர வேசம், அனைவருக்கும் சம உரிமைகள் முதலியவற்றை ஆதரித்து ஈ.வெ.ரா. தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் ஈ.வெ.ரா. சேர்ந்த மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவி அவருக்கு அளிக்கப் பெற்றது. காங்கிரஸில் ஓர் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது.

ஈ.வெ.ரா.வுக்கு அந்தப் பெருமைகள் கிடைக்குமாறு செய்தவர் ராஜாஜியே! இந்த உண்மையைப் பல வருடங் களுக்குப் பின்னர் ஈ.வெ.ரா.வே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

என்னை ராஜாஜி அவர்கள்தான் முதலில் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு, அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகு பேரை  என்னைத் தலைவர் என்று அழைக்கும்படி செய்தார் என்று ஈ.வெ.ரா. விடுதலை நாளிதழின் தலையங்கத்தில் (26.12.1972) எழுதியிருந்தார். அந்தத் தலையங்கம், ராஜாஜி அவர்கள் மறைந்தபோது ஈ.வெ.ரா. எழுதியது ஆகும் என்கிறது துக்ளக்

ராஜாஜி மறைந்தபோது தன் ஆப்த நண்பர் குறித்து எழுதிய வாசகங்கள் இவை! கொள்கைக் கோட்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும் மனிதத்தன்மை என்னும் பண்பில் தந்தை பெரியார் சிகரத்தில் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது ஈரோடு மாநகரில் மங்கா ஒளி விளக்காகத் திகழ்ந்து கொண்டி ருந்தவர். அந்த அளவுக்கு ஆச்சாரியார் சேலத்தில் விளங்கினார் என்றுகூட சொல்ல முடியாது - 29 பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு தான் காங்கிரசில் சேர்ந்தார் என்பது நினைவில் இருக்கட் டும். நகராட்சித் தலைவராக இருந்து அருந்தொண்டு ஆற்றியமைக்காக ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட இருந்த நிலையிலும், அதற்கெல்லாம் மசியாமல் பதவிகளை விட்டு வெளி யேறி நாட்டுத் தொண்டுக்குத் தன்னை அர்ப்பணித்தவர் ஈரோட்டு வேந்தர்.

அதுபற்றி நவசக்தியில் திரு.வி.க. எழுதியது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர் உண்டாட் டில் திளைத்தவர் வெயில் படாது வாழ்ந்தவர். ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார்போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்? என்று 24.5.1924இல் ஈ.வெ.ரா. சிறைபட்டபோது நவசக்தி யில் எழுதினார் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (நூல்: தமிழர் தலைவர் - சாமி.சிதம்பரனார்)

இந்த நிலை ராஜாஜிக்கு உண்டா? ஆகஸ்ட் போராட்டத்தில் அண்டர் கிரவுண்டாகி, அதன்பின் கொல்லைப் புறம் வழியாக காங்கிரசில் புகுந்து, காந்தியாரின் சம்பந்தியாகி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆகியவரா யிற்றே! பெரியாரோ தன்னைத் தேடி வந்த பதவிகளையும் சமூகப் புரட்சிக் காக உதைத்துத் தள்ளியவராயிற்றே! ஒப்பிட முடியுமா பெரியாருடன்? ராஜாஜிபற்றி பெரியார் எழுதியது இருக்கட்டும்!

பெரியார்பற்றி ராஜாஜியின் கணிப்பு என்ன?

முக்கியமான தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் 1924 ஜூன், அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ. இராமசாமி ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ. இராமசாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ஆம் தேதியன்று வருகிறது என்பதற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவதாஸ்காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை. சென்னைக்கு நான் 18ஆம் தேதி போயாக வேண்டும். அன்று தான் இராமசாமி நாயக்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக (HEad And Active Master) அவர் இருந்து வருகிறார் என்று ராஜாஜி ரயிலிலிருந்து 16.10.1924ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். (நூல்: தமிழ் நாட்டில் காந்தி - நூற்றாண்டு வெளியீடு - ஆசிரியர் அ. இராமசாமி பக்கம் 391 - 392).

இதன் மூலம் தந்தை பெரியார் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக காங்கிரசின் உயிரும், தலையுமாயிருந்து ஒளிவீசினார் என்பது விளங்க வில்லையா? ராஜாஜி அவர்களே தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது தானே உண்மை!

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் (4.8.1965) தந்தை பெரியார் உரையாற்றி விடுதலையில் (15.8.1965) வெளிவந்த ஒரு தகவல் இதோ: தோழர்களே, பார்ப்பனர்கள் தனியாக வீதியில் நடக்க அஞ்சிய காலத்தில், காங்கிரஸ் கூட்டம் வீதியில் போட்டுப் பேச முடியாத காலத்தில் அந்நிலைமையை மாற்றி, காங்கிரசுக்கு வீதியில் கூட்டம் போட்டுப் பேசவும், பார்ப்பான் வீதியில் நடக்கவும், ஆதிக்கத்தில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி, வீதியில் கூட்டம் போட முடியாத நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்தவன் நான் தானே?

அதற்கு முன்பு பார்ப்பனர்கள் கூட்டம் போடுவதென்றால் ஜஸ்டிஸ் கட்சி செல்வாக்குக்குப் பயந்து கொண்டு ரானடே ஹால், அந்த ஹால், இந்த ஹால் என்றுதான் போடுவார்கள். பார்ப்பான் ஆற்றுப் பாலத்தில் நடந்து செல்லும்போது அதிர்ச்சி தரும் சங்கதிகள் கேட்டு எட்டித் தண்ணீரில் குதித்த காலமும் உண்டு. வீட்டுக் கதவுகளை டப் டப் என்று தாளிட்டுக் கொண்டு வீட்டில் அஞ்சி வாழ்ந்த காலமும் உண்டு.

அந்தக் காலத்தில் தான் நான் தெரிந்தோ தெரியாமலோ முட்டாள் தனமாக காங்கிரசில் சேர்ந்தேன். இப்போது எப்படி முழு நேரமும் ஊர் ஊராகச் சுற்றிப் பிரச்சாரம் செய்கின் றேனே, அது போலவே செய்தேன்.

நான் தமிழ்நாடு காங்கிரஸ் செகரெட்டரியாக, தலைவனாக மட்டும் இல்லாமல், காங்கிரசில் முக்கிய மானவனாகவும் இருந்தேன்.

ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, ராஜன் போன்ற பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் நம் தலைவர் நாயக்கர் என்று கூப்பிடும்படியான நிலையில்தான் இருந்தேன்.

எனக்கு ஒரு சமயம் ஈரோட்டில் உடம்பு சவுக்கியம் இல்லை. ஆச்சாரியார், ராஜன், சந்தானம் அய்யங்கார் ஆகியோர் எல்லாம் வந்துவிட்டார்கள்.

இவர்கள் எனது அருகிலேயே இரவு பூராவும் கண் விழித்து இருந்து, ஒரு நர்சைவிட அதிக அக்கறையாகப் பணிவிடை செய்தார்கள்.
அன்று ராஜாஜி ஒரு முக்கிய வேலையாக வெளியூர் போக வேண்டி இருந்தது. அவருக்கு என்னை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சந்தானம் அவர்களை அழைத்து சந்தானம், நாயக்கர் உயிர் சாதாரண உயிர் அல்ல, Don’t think Naicker’s life is ordinary life ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். நானும் வந்துவிடுகின்றேன் என்று கூறிவிட்டுப் போனார். உண்மையாகவே காங்கிரசுக்கு உழைத்தேன். என்று பேசியுள்ளார்.

காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தவரை அவரே முதல் நிலையில் இருந்திருக்கிறார் - ராஜாஜியின் இந்தக் கருத்துக்குப் பதில் என்ன?

தமிழ்நாட்டில் காந்தி எனும் - காந்தி நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட அதே நூல் (பக்கம் 392) பகரும் சான்று என்ன?

காந்தியார்மீது நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு விசுவாசம் இருந்தது. 1921ஆக இருக்குமென்று நினைக்கிறேன். ஈரோட்டிற்கு காந்தியார் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கும் வந்தார். அப்போது தான் நான் அவரை முதன்முதலில் சந்தித்த தாகும்.

காந்தியார் எனக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஒரு முறை என்னுடைய தொண்டைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். மற்றொரு முறை அவர் எனக்குக் கடிதம் எழுதியது என்னுடைய கையில் வலி ஏற்பட்டு நான் துன்பப்பட்ட சமய மாகும். நீங்கள் இராட்டையை அதிக நேரம் சுழற்றியதால் இந்த வலி ஏற்பட்டிருக்கலாம் என்று தோன் றுகிறது. ஆகையால் வலி குறையும் வரை சிறிது காலத்திற்கு இராட் டையைச் சுழற்றுவதை நிறுத்தி வையுங்கள் என்று அவர் எழுதி யிருந்தார்.

சட்டமறுப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலம். ஆயிரக்கணக்கில் ஆண் களும் பெண்களும் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறைக்குச் சென்று விட்டார்கள். அந்தச்சமயம் இந்திய அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தி அரசியலில் அமைதியான நிலையை ஏற்படுத்தக் கருதி சர். சங்கரன் நாயர் ஒரு சமாதான மாநாடு கூட்டினார். சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு போராட்டத்தைக் காங்கிரஸ் கைவிட வேண்டுமென்று அவர் ஒரு நிபந்தனை கூறினார்.

அதை காந்தியார் ஏற்கவில்லை. இந்தப் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் ஈ.வெ. இராமசாமியின் தங்கை, மனைவி, ஆகியோர் கையில் இருக்கிறது என்று அந்த மாநாட் டிலேயே கூறினார் என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளதே!. காந்தியார், மோதி லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண் அலி சகோதரர்கள் என்று அத்தனைத் தலைவர்களும் ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை செய்யாத தலைவர்களே இல்லையே! தந்தை பெரியார் தான் பார்ப்பன எதிர்ப்பாளர் என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார்கள் - திரு.வி.க. அப்படிப் பட்டவரா?

அவர் என்ன சொல்கிறார்? தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப் பட்டது. இராஜகோபாலாச்சாரியார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப்பட்டார்.

சிதம்பரத்தினின்றும்  ஒரு தண்டை நடாத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப் பட்டது. அவ்விருப்பத்தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அதே சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்ட தும் தொடர்ந்தபோருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வியுற்றேன். இராஜகோபாலாச்சாரி யார் கடிதமும் எழுதவில்லை. வேறு வழியாகத் தெரியப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற்குஞ் சித்தமாயிருக்கலா மென்று எண்ணினேன்.

திருச்சியினின்றும் புறப்பட்ட படையையன்றி வேறுபடைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அவை வேதாரண்யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச் சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே. சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தன இவ்வளவே.

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகை கள். கலியாணசுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார்; ஏமாற் றப்பட்டார். ஒரு பிராமணரல்லாதார் தலைமைபூண்டு படையைத் திரட்டிச் செல்லப் பிராமணர் கண் பார்க்குமோ என்று எழுதின. வேறு சில பத்திரிகைகள், முதலியார் வேதாரண்யம் புறப்பட்டு விட்டார் என்று திரித்தன. மற்றுஞ் சில பத்திரிகைகள் உண்மையை வெளியிட்டன. பத்திரிகைச் செய்திகள் நாட்டைக் குழப்பின. போர் முடியுந் தறுவாயில் எனக்கு அழைப்புகள் வந்தன. அவைகள் என் மனத்தைக் கவரவில்லை

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு - மி பக்கம் 318 -319)

மிதவாதியான திரு.வி.கவே மனம் புழுங்கும் அளவில் ஆச்சாரியாரே பார்ப்பனர் உணர்வோடு நடந்து கொண்டு இருக்கிறாரே!  எவ்வளவுப் போர்வையைப் போட்டு மூடினாலும் பார்ப்பனர்களின் பூணூல் குணம் முண்டியடித்துக் கொண்டுதானே மேலே எழுந்து நிற்கிறது.

சென்னைக்கு வந்த காந்தியாரை 1.2.1946 அன்றுதான் முதன் முதலாக ம.பொ.சி. காந்தியாரைச் சந்திக்கிறார். திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் ம.பொ.சி.யை அழைத்துச் சென்று காந்தியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார்.
எப்படி சொல்லி அறிமுகம் செய்து வைக்கின்றார் என்பதுதான் இதில் முக்கியமானது.

எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத் துணைக்கழைக்கும் துக்ளக்குக்கும் கே.சி. லட்சுமி நாராயணருக்கும் ஒரு சேதி... அந்த ம.பொ.சி.யைக் காந்தியாரிடம் அக்ரகாரத் தலைவர் ராஜாஜி எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா?

கள் இறக்குவோர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார்

(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 918)

எதிலும் ஜாதி பார்க்கும் குணம் ஆச்சாரியாரைச் சார்ந்தது.

வழக்கை வாபஸ் வாங்கிய சி.ஆர். ஆச்சாரியார்

1938ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஆச்சாரியார் அவர்கள் செய்த நெஞ்சத்துணிவான அக்கிரமங்களில் ஒன்று மட்டப்பாறைக் கலவர வழக்கை திரும்பப் பெற்றதாகும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சாதிபதி ஆரியர் ஒருவர் மதுரை வட்டத்திலுள்ள மட்டப் பாறை கிராமத்தில் ஏழைக்குடி மக்களை அடித்தும் பல குடிசைகளுக் குத் தீ வைத்தும் அட்டகாசம் புரிந்தார். கட்சி பலமும் பண பலமும், ஆட்சி ஆதரவும் காலித்தனமும் ஒன்று சேர்ந்து விட்டால் போலீசும், நீதியும் நெருங்க முடியுமா? இந்த லங்காதகன வேலையை அப்படியே அழுத்தி விடுவதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால் அப்போது இப்பகுதியில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த ஆர்.வி. ராஜன் என்ற நேர்மையாளர் (கீவளூரில் ஓய்வு) ஆட்சிக்கும் பணத் துக்கும் அஞ்சாமல் தீ வைத்த ஆரியர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார். அப்பொழுது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த வெள்ளையரும் இல்வாழ்க்கைத் தொடர்ந்து நடக்கு மாறு உத்திர விட்டார். ஆனால் போலீஸ் மந்திரியான முதலமைச்சர் ஆச்சாரியார் அவர்கள் தம் இனத்தார் ஒருவர்மீது வழக்குத் தொடர சம்மதிப்பாரா? சர்க்கார் இவ்வழக்கை வாபஸ் செய்து விட்டனர் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டார்.
(- விடுதலை 31.10.1955 தலையங்கம்)

தன் இனத்தவரைக் காப்பாற்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடியவர்தான் ஆச்சாரியார் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

பிரதமர் நேரு மறைந்தபோது அகில உலகமும் நேருஜிக்குச் செலுத்த வேண் டிய புகழ் மாலைகள் யாவும் அவரது தனிப்பட்ட குண விசேஷங்களுக்குத் தானேயன்றி, அவரது கொள்கைக்கு அல்ல என்பதை அவர் (புதிய பிரதம ரான லால்பகதூர் சாஸ்திரி) முக்கிய மாக உணர வேண்டியது. என்றார் ராஜாஜி.

மேலும், அதே வழியில்தான் நாங் களும் செல்வோம் என்று புதிய மந்திரி சபையினர் முடிவு செய்தால் அதுவே விவேகமாகாது. நேருஜிக்கு செய்யும் மரியாதையும் ஆகாது. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது தான் நேருஜியின் ஒரே ஆசை. அதற்காக அவர் குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றினார். அவற்றில் கண்ட குற்றங் களை அகற்றி, நல்ல மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துத் தேச சுபீட்சத்தை - பெற்றுத் தர முடியுமானால் அதுவே நேரு அவர்களின் ஆன்ம சாந்திக்குரிய சிரார்த்தமாகும். என்றார்.

மறைந்த ஒரு தலைவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதுபோல ஆரம்பித்து, அவர் கொள்கையை மட்டம் தட்டிப் பேசுவது எந்தத் தரத்தைச் சேர்ந்தது? நேரு கொள்கைக்கு விரோதமாக அவ ரது ஆன்மா சாந்திக்குச் சிரார்த்தம் என்று பேசுவதெல்லாம் ராஜாஜி

பெரிய மனிதர் என்ற போர்வையில் செய்யும் குசும்புதானே!

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியோ நேரு கட்டிய அஸ்திவாரத்தின்மீது நமது கட்டடத்தைக் கட்டுவோம் என்று கூறிவிட்டார் என்பது வேறு சங்கதி.

அந்த லால்பகதூர் சாஸ்திரியைப் பற்றியும் என்ன கூறினார் ராஜாஜி?

ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் சாஸ்திரி என்ற பட்டப் பெயர் அவருடைய சாதியைக் குறிக்கும் சொல்லாகவோ குடும்பப் பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையும், காசி வித்யாபீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப்பட்ட படிப்புப் பட்டமே! என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்ய வேண் டியது அவசியமாகிறது.

அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார். திரு. சாஸ்திரி என்று குறிப்பிடுவதும் திரு பி.ஏ., திரு எம்.ஏ. என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும்.

மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர் என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்த பெயரே ஆகும் என்று சி.ஆர். என்ற கையொப் பம் இட்டு எழுதினார் என்றால் (சுயராஜ்யா 1.2.1964).

இதன் பொருள் என்ன? சாஸ்திரி பூணூல் போட்ட நம்பளவாள் அல்ல; ஏமாந்து விடாதீர்கள் என்று பார்ப் பனர்களுக்கு அடையாளம் காட்டும் அசல் அக்ரகார குணம்தானே!

ஆச்சாரியார் அப்பட்டமான பார்ப்பன ஜாதி வெறியர் - என்பதற்கு இன்னுமொரு ஆதாரப்பூர்வமான தகவல் உண்டு - சுயவிமர்சனம்கூட.!

Infact, in one occasion Rajaji Proudly said that he valued his Brahmin hood more than his chief Minister ship (CARAVAN -- APRIL (1) 1978 Gandhiji’s carusade against Casteism)

முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று ராஜாஜி கூறினார். என்றால், அவர் என்ன பெரிய மனிதர் பண்பாளர் - பொது நலத் தலைவர்?

ராஜாஜியின் இந்த ஜாதி உணர்வை நேரிடையாக அறிந்தவர் என்ற முறையில்தான் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார் மீது போடப் பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கில், கீழ்க்கண்ட கருத்துகளையும், தகவல் களையும் தந்தை பெரியார் பதிவு செய் தார்.
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சி யாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான். எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து நான் சொல்லுவதைத் தவறு என்று கருதலாம். நம் நாட்டில் இன்றைய தினம் உள்ள பார்ப்பனர்களில் ஆச் சாரிய புருஷர்களாய் இருக்கிறவர் களைத் தள்ளிவிட்டு, எல்லோரையும் ஒன்றுபோல் பாவித்து பொதுஜன நன்மைக்காகப் பாடுபடுகிற பார்ப்பனர் கள் என்று எண்ணியிருக்கின்ற தன் மையில், உயர்ந்த சீர்திருத்தக்காரர் - நாட்டின் விடுதலைக்காக பெரிய தியாகங்களைச் செய்தவர்கள் என்ற தன்மையில், இதுவரையில் எந்த இந்தியனும் வகித்திராத உயர்ந்த பதவி வகித்தவர்கள் என்கிற தன்மையில், முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதிகாச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடை யவன்; ஜாதிப் பிரிவில் அதாவது, வர் ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக் கையும் கவலையும் உடையவன்; அவைகளைப் பரப்பவும். நிலை நிறுத்த வுமே நான் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்று சொல்லுகிறார்: எழுதுகிறார்: அதற்கு வேண்டி காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைப்பது? வாயில் _ நாக்கில் _ குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோல வாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை  என்பது உயர்நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன் யாரும் பதிவு செய்திராத அரிய கருத்துரையை ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்து விட்டாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
(நூல்: நீதி கெட்டது யாரால்?)

ராஜாஜிபற்றி நேரு

ஆச்சாரியாருக்கும் (C.R.) உலகத் திற்கும் இன்று சம்பந்தம் இல்லை. அவர் ஒரு கண்டெம்டு மெஷின் _ வேலைக்கு லாயக்கற்றவர். அவர் பேச்சு செயல்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் பழுதாகி  வெளியில் போடப்பட்ட இயந்திரமே! என்று ஜவகர்லால் நேரு (20.6.1964) சரியாக எடை போட்டுத் தூக்கி எறிந்து விட்டாரே!

அக்கிரகார உணர்ச்சியுடன் அக்கிரம மாக எழுதுகோல் பிடிக்கும் லட்சுமி நாராயண அய்யர்கள் இதைப்பற்றியெல் லாம் என்ன கூற முடியும்?

பெரியாருக்கு எதிராக ஏதேதோ சந்தர்ப்பத்தில் எழுதுகோல் பிடித்தவர் களையெல்லாம் தேடி அழைத்து வந்து பந்தியில் உட்கார வைப்பவர்கள் - நேரு வையே அழைத்து வந்து ஆச்சாரியாரை அம்பலப்படுத்தி விட்டோமே _ என்ன பதில்?

ஆச்சாரியார்பற்றி அண்ணல் அம்பேத்கர்

தாழ்த்தப்பட்டோருக்காக நீதிக் கட்சியும், திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் ஆற்றிய அருந்தொண்டு களை பட்டியலிட்டுக் காட்டியிருந் தோம். அக்கிரகாரத்தின் ஆனந்த பைரவி ராகமாகிய ஆச்சாரியார்பற்றி அண்ணல் அம்பேத்கர் படம் பிடித்துக் காட்டியது மிகவும் முக்கியமானது.

நான் அந்தக் காலத்தில் எக்சிகி யூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள்ளைக்கார வைசிராயுடன் பேசி, விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத் திலிருந்த திறமைமிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து, மேல் நாட்டுக்கு அனுப்பி, கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளும்படிச் செய்தேன்.

அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கி னார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜ கோபாலாச்சாரியார் இதை ஒழித்துக் கட்டிவிட்டார் (Report of Backward Calsses Commission Vol III பக்கம் 75 பாரா 2) என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி மிக்க தலைவர் அண்ணல் அம்பேத்கரும் ஆச்சாரியாரின் பூணூல் புத்தியை அதிகாரப்பூர்வமாக அம்பலப் படுத்தி விட்டாரே! என்ன பதில்?

மூக்கறுபட்டார் ராஜாஜி

அண்ணா மறைந்த நிலையில் சென்னை கடற்கரையில் இரங்கல் கூட்டம் 8.2.1969 அன்று நடைபெற்றது. தந்தை பெரியார், பிரதமர் இந்திரா காந்தி, ராஜாஜி, கலைஞர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். ஓர் இரங்கல் கூட்டத்தில் எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பேசி, பெரியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாரே!

ராஜாஜி என்ன பேசினார்?

அண்ணா அவர்கள் சிறுவயதில், கடவுள் - மத நம்பிக்கையற்றவராக இருந்தார். வயதானதும் கடவுள், மத நம்பிக்கை உடையவராகி விட்டார் என்று குறிப்பிட்டார். (ஆச்சாரியார் இப்படிப் பேசியதை - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர் கள் அப்படியே எழுதி தந்தை பெரியாரிடம் கொடுத்தார்)

ஆச்சாரியாருக்குப் பதிலடி கொடுக் கும் வகையில் தந்தை பெரியார் அந்தக் கூட்டத்திலேயே பேசினார்.

அண்ணா அவர்கள் ஓர் பகுத்தறிவு வாதி. கடவுள், மதம், சாஸ்திரம் சம் பிரதாயங்களில் நம்பிக்கையில்லாதவர். அவர் பதவிக்கு வந்த போதும் கடவுளை நம்பாதவர் அவர். அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த மந்திரி சபையையே எனக்குக் காணிக் கையாக வைத்திருப்பதாக முதல் அமைச்சர் அண்ணா சொன்னார்.

அரசாங்க அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவு போட்டார். இதன் மூலம் தனக்கு மூடநம்பிக்கை இல்லை என் பதைக் காட்டிக் கொண்டார். சுயமரி யாதைத் திருமணத்தை சட்டமாக் கினார். அதிலே கடவுள் மதம் புகக் கூடாது என்பதற்கு வழி செய்ததுதான் முக்கியமாகும். அவர் சிறந்த பகுத்தறிவு வாதி, அவ்வளவு பெரிய மேதைக்கு 30 லட்சம் பேர் பின் தொடர்ந்தார்கள் என்றால் (இறுதி ஊர்வலத்தில்) இந்தநாட்டு மக்களை அவர் அவ்வளவு தூரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்று அர்த்தம் (விடுதலை 13.2.1969 பக்கம் 3)

என்று அருமையாக அண்ணாவைப் படம் பிடித்துக் காட்டி, லட்சோப லட்ச மக்கள் மத்தியில் ஆச்சாரியாரின் மூக்கை அறுத்தாரே அய்யா! பெரிய மனிதன் - ஆச்சாரியார் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு விட்டாரே என்று தலையில் அடித்துக் கொண்டனர் பொது மக்கள்.

நீதிக்கட்சியும், பெரியாரும் தேசத் துரோகம் செய்துவிட்டதாகப் பொங்கி வழிகிறார்களே! (அது உண்மையல்ல என்பதுவெளிப்படை)
இதே ஆச்சாரியாருக்கு பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் வாழ்த்து அனுப்ப வில்லையா? அப்பொழுது ஆச்சாரியா ரின் கொடும்பாவி நாடு தழுவிய அளவில் எரிக்கப்படவில்லையா?

சீன ஆக்ரமிப்பின்போது இந்தியத் தரப்பில் எத்தனைப் பேர் செத்தார்கள் என்று கேட்கப் போய் கடும் கண்டனப் புயலுக்கு ஆளாகவில்லையா - ஆச் சாரியார்?

அரசியலில் முதிர்ச்சி கண்டவர் என்றும் ஆள்வதில் அசகாயசூரர் என்றும் அக்ரகாரம் மடியில் தூக்கி வைத்துத் தாலாட்டிக் கொஞ்சுகிறதே - ஒரு யுத்தக் காலத்தில் எதைப் பேச வேண்டும் _ எதைக் கேட்க வேண்டும் என்கிற அடிப்படை ஞானமின்றி நடந்து கொண்டதற்கு என்ன பதில்?

1971 சனவரி 23இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், ராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டது என்று கூறி, பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனரே! அந்தத் தேர்தலில் இதனை சாக்காகக் கொண்டு (அத்தேர்தலில் தி.மு.க. _ காங்கிரஸ் கூட்டு; ராஜாஜி - காமராசர் கூட்டு) பார்ப்பன ஊடகங்களின் உச்சக் கட்டப் பிரச்சாரமும் செய்து திமுகவைத் தோற்கடிக்க நிர்வாணமாக நின்றனரே!

1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க., ராமன் செருப்படிப் பிரச்சாரத் தேர்தலில் (1971இல்) 183 இடங்களைக் கம்பீரமாகப் பெற்று வெற்றி உலா வந்ததே - நினைவில் இருக்கிறதா? ஆச்சாரியாரின்  புலம்பல்!

தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப் புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது, மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத் திக் கொள்பவரின் ஆசியும் அனுக் கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரி சபை.

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று பாடி வைத்ததை நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி பெறு வோம். நம்முடைய பண்டைய பாவங் களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து வந்தால் இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத் தீட்டு நீங்கி இங்கு தெய்வீகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் புனிதத் தமிழ் மண்ணுக்கு இந்த இழுக்கும் அழுக்கும் நீங்கும் வண்ணம் நாம் அனைவரும் உறுதியான பக்தி செலுத்தி இறைவன் உள்ளத்தை உருக்கி அவனருள் பெற்று, இந்த நாட்டைத் தர்ம பூமியாக்க வேண்டும்.

ஸ்ரீராம நவமி வருகிறது. சத்திய, தர்மமூர்த்தியாக வந்த பரமனே ஸ்ரீராமன், அந்த ராமனை முன் வைத்தே - அந்த ராமனை உள்ளத்தில் உறைவித்தே _ காந்தியடிகள் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ராமராஜ்யமாக சுயராஜ்ய இந்தியா திகழ வேண்டும் என்பதே மகாத்மாவின் கனவாக இருந்தது. அந்தக் கனவு பகற்கனவாகி விடக் கூடாது நூற்றுக்கு நூறு மெய்யாக வேண்டும். அந்த அளவுக்கு நாம் உண்மை ஆஸ்திகர்களாவதற்குத் தர்மமூர்த்தியான ராமனைச் சரண்புக வேண்டும். இந்த ராமநவமியன்று இந்த திவ்ய விரதத்தைத் தொடங்குவோம். (கல்கி 4.4.1971)

உடம்பெல்லாம் மூளை என்று உலகுக்கெல்லாம் பார்ப்பனர்களும் அவர்தம் ஊடகங்களும் பறைசாற்றும் குல்லூகப்பட்டர் ஆச்சாரியார் - தந்தை பெரியார் முன் சரணடைந்தார் - தோல்வியை ஒப்புக் கொண்டார் என்பதைப் பார்ப்பனர்கள் மரியாதையாக ஒப்புக் கொள்வார்களா?

- (சந்திப்போம்!) ,

- கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர், 27-08-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]