வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 14, 2020

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-2.... இந்து மகாசபை இருக்க இன்னொன்று ஏன்?- அருணன்


ஆர் எஸ்எஸ் தோன்றுவிக்கப்பட்டதன் பின்புலம் பற்றி விவரித்திருக்கிறார் நூரானி. லாலா லஜபதிராய், பண்டிட் மதன்மோகன் மாளவியா என்றால் அந்தக் காலத்து காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றுதான் பலரும் அறிவர். ஆனால் அவர்களுக்கு இன்னொரு முகம் உண்டு. அவர்கள் இருவரும் இந்து மகாசபைத் தலைவர்களும்கூட.அந்தக் காலத்து காங்கிரஸ் ஒரு மகாசம்மேளனம். அதில் பல கருத்துள்ளவர்கள் மட்டுமல்ல பல அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இருந்தார் கள். “தங்களுக்கான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருப்பதால் இந்துக்கள் தம் அளவில் ஒரு தேசம்” என்று 1899லேயே எழுதியவர் லஜபதிராய். மதத்தின் அடிப்படையில் தேசியத்தை தீர்மானிக்கும் அபத்தச் சிந்தனை அப்போதே பிறந்து விட்டது. இந்துக்கள் ஒரு தேசம் என்றால் முஸ்லிம்கள் வேறொரு தேசம் என்றானது. இப்படித்தான் இரு தேசச் சிந்தனை இங்கே வேர் விட்டது.
இந்தச் சிந்தனையோடு 1907ல் பஞ்சாபில் அமைந்தது இந்து மகாசபை. 1909ல் நடந்த அதன் மாநாட்டில் உற்சாகமாகப் பங்கேற்றார் லஜபதிராய். 1914ல் அகில பாரதிய இந்து மகாசபை ஆரம்பிக்கப்பட்டது. அதை 1928 வரை வழி நடத்தி
யவர்கள் லஜபதிராயும், மதன்மோகன் மாளவியாவும். சுத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் வேலையையும் 1923ல் துவக்கியது இந்த சபை. லஜபதிராயின் சிந்தனை, இந்து மகாசபையின் செயல்பாடு எல்லாம் சாவர்க்கரிடம் தாக்கத்தை ஏற்படுத்தித்தான் அவரை “இந்துத்துவா” நூலை எழுத வைத்தன.
தி டிரிபியூன் பத்திரிகையில் 1924 டிசம்பரில் லஜபதிராய் எழுதினார்: “பஞ்சாபை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதை மேற்கு பஞ்சாப் என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதை கிழக்கு பஞ்சாப் என்றும் பிரிக்க வேண்டும்”. மத அடிப்படையில் இரு மாகாணங் களை உருவாக்க வேண்டும் என்று அடியெடுத்து கொடுத்தார், பின்னாளில் அது இரு நாடுகள் என முடிந்தது.இத்தகைய கருத்தியல் கொண்டவர்கள் முழு காங்கிரசையும் கைப்பற்ற முயற்சித்தார்கள் எனும் திடுக்கிடும் சங்கதியையும் நூரானி எடுத்துரைக்கிறார். அதற்கான ஆதாரமாக சாட்சாத் மோதிலால் நேருவைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஜவஹர்லால் நேருவின் தந்தையார் தனது மகனுக்கு எழுதினார் 1926ல்: “பிர்லாவின் பண உதவியோடு இயங்கும் மாளவி யா-லாலா கோஷ்டி காங்கிரசை கைப்பற்ற தீவிரமாக முயலுகிறது”. அந்தக் காலத்திலேயே பெருமுதலாளி ஒருவர் இந்த வகுப்புவாத கோஷ்டியையும் ஆதரித்திருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய சோகம் இதுதான்-இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கட்டமைப்போடு சமரசம் செய்துகொண்டே தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்த்தது. அதனால்தான் தொழிலாளி வர்க்கத்திற்கு தனது எதிரியாம் முதலாளித்துவத்தை மட்டுமல்லாது எதிரியின் எதிரியாம் நிலப்பிரபுத்துவத்தையும் ஒழிக்கும் வேலை வந்து சேர்ந்தது.இத்தகைய சமூக, அரசியல் சூழலில்தான் கேசவ பலிராம் ஹெட்கேவார் என்பவர் கிளம்பினார். இந்த நாக்பூர்காரரின் சித்தாந்த வழிகாட்டி இந்து மகாசபையின் மற்றொரு தலைவராகிய பி.எஸ். மூஞ்சே. சாவர்க்கரின் “இந்துத்துவா” நூலைப் படித்த ஹெட்கேவாருக்கு அவர் மீது அளப்பரிய பிரியம் ஏற்பட்டது. 1925 மார்ச்சில் அவரோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்து விரிவாகக் கலந்துரையாடினார்.முடிவில் அதே ஆண்டு விஜயதசமி அன்று ஹெட்கேவாரின் வீட்டில் “ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்” எனப்பட்ட ஆர்எஸ்எஸ் உதயமானது. கூட இருந்த நான்கு பேர்: பி. எஸ். மூஞ்சே, சாவர்க்கரின் மூத்த சகோதரர் பாபாராவ் சாவர்க்கர், எல். வி. பரஞ்பி, பி. பி. தாக்கர்.ஹெட்கேவார் எத்தகையவர்? அவர் நூல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி அந்தக் காலத்திலேயே மராத்தியில் பிரசுரங்கள் வந்துள்ளன. அவற்றை மேற்கோள் காட்டுகிறார் நூரானி. நாக்பூரில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களை அவர் வெறுத்தது, அவர்களை “யவன பாம்புகள்” என அழைத்தது, அவர்களை எதிர்க்கவே தொண்டர் படை ஒன்றை உருவாக்க முனைந்தது போன்ற விபரங்களைத் தந்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2018ல்  ஹெட்கேவாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி “இந்தியத் தாயின் ஒரு மகத்தான புதல்வர்” என்று வருகை ஏட்டில் எழுதினார். அதையொட்டி ஹெட்கேவார் பற்றிய வரலாற்றாளர்களின் பதிவுகள் வெளியாயின. எச். வி. சேஷாத்திரி பதிப்பித்த “டாக்டர் ஹெட்கேவார், யுக புருஷர்” எனும் வாழ்க்கை வரலாறு நூலை மேற்கோள் காட்டியது தி கேரவான் ஏடு(10-6-2018). “அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இரண்டாவதாகத்தான் இந்தியர்கள்” எனும் முடிவுக்கு வந்தார் ஹெட்கேவார் என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் தேசப்பற்றின் மீது வீணான சந்தேகத்தை எழுப்பி, அப்படியாக அவர்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வேலையைச் செய்ய முடிவெடுத்தார்.மற்றொரு வரலாற்றாளர் பிரளாய் கனுங்காவின் கருத்துப்படி நாக்பூரில் 1923ல் வெடித்த இந்து -முஸ்லிம் கலவரமே ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ்சை துவக்குவதற்கான அடிப்படை. கலவரத்திற்கான காரணங்களில் முக்கியமானது மசூதிகள் முன்பாக மத ஊர்வலங்கள் நடத்த இந்துக்களுக்கான உரிமை பற்றியது. எச். வி. சேஷாத்திரி பதிப்பித்த நூல் கூறியது “முஸ்லிம்கள் மீதான பயத்தின் காரணமாக இந்துக்கள் மசூதிகளின் முன்பு மேளதாளங்களை தவிர்த்தனர். அப்போது டாக்டர்ஜியே (ஹெட்கேவார்) மேளதாளங்களை அடித்து தூங்கிக்கிடந்த இந்துக்களின் வீரத்தை எழுப்பினார்”.
ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியர்கள் அனைவரது உரிமைகளையும் பறித்திருந்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடாமல் முஸ்லிம்களை எதிர்த்துக் கிளம்பியவர்தான் ஹெட்கேவார். மிகப் பெரிய வீரம் எதுவென்றால் 
மசூதிகள் முன்பு மேளதாளம் அடிப்பதாம்!  அன்று முதல் இன்று வரை சங் பரிவாரத்தின் ஜோலி இதுதான்! மக்களின் மெய்யான எதிரிகளுக்கு எதிராக இந்துக்கள் திரண்டுவிடாதபடி பொய்யான எதிரிகளைக் கட்டமைப்பதுதான் அவர்களின் தந்திரம்.இத்தகைய நோக்கத்திற்காக இத்தகையவர் உருவாக்கிய ஆர்எஸ்எஸ் 1926 லேயே ஷாகாஎனப்பட்ட தினசரி உடற்பயிற்சியைத் துவக்கியது. இது பற்றி வரலாற்றாளர் சேட்டன் பட் கூறுவது: “ஆர்எஸ்எஸ்சின் ஷாகாக்களில் தண்டா (லத்தியுடனான ஆயுத பயிற்சி), கட்கா (வாள் பயிற்சி),வெட்ரசர்மா (கம்புச் சண்டை), யோக்சேப் (லெஜிம் பயிற்சி) ஆகியவை உண்டு”. இதுவெல்லாம் எதற்கு? எதிரிகளை வீழ்த்தத்தான். எதிரிகள் யார்? நிச்சயம் வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் இல்லை. எதிரிகள் யார் என்பதை ஹெட்கேவார் தனது பேச்சாலும் செயலாலும் தெளிவாக உணர்த்தியிருந்தார்.
இப்படிப்பட்டவருக்காக ஆர்எஸ்எஸ்சில் “சர்சங்சலக்” எனும் பதவி 1929ல் உருவாக்கப் பட்டது. அதாவது உயர் தலைவர். “பரம பூஜனிய”, பெரிதும் பூஜிக்கத் தக்கவர் என அழைக்கப்பட்ட இவரின் உத்தரவுப்படியே அனைவரும் நடக்க வேண்டும். அவரது சொல்லே அந்த அமைப்பின் வேதம். இது ஆயுட்காலப் பதவி. இவர்தான் அடுத்த சர்சங்சலக்கை நியமிப்பார் தனது இறுதி காலத்தில். தேர்தல் எல்லாம் கிடையாது.
ஒரு கேள்வி இருக்கிறது. இந்துக்களுக்காக என்று இந்து மகாசபை இருக்கும் போது அவர்களுக்காக எதற்கு இன்னொரு அமைப்பு? இதற்கு நூரானி தரும் பதில் ஆர்எஸ்எஸ்சின் சாரத்தை விண்டுரைக்கிறது. அது: “இந்த இரண்டுக்கும் இடையே இரண்டு வேறுபாடுகள் உண்டு. மகாசபையின் தலைவர்கள் அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட்டார்கள். மாளவியாவும் லஜபதிராயும் மத்திய சட்டசபை உறுப்பினர்கள். இரண்டாவதாக அவர்கள் வன்முறையை ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ் அப்படி அல்ல. அது தேர்தல் அரசியலை ஏற்கவில்லை, அதேநேரத்தில் வன்முறையை அமைப்புரீதியாகப் பயன்படுத்துவதை ஏற்றது. நாக்பூரில் நடந்த வகுப்புவாதக் கலவரங்களுக்குப் பிறகு உருவான ஆர்எஸ்எஸ்சின் நோக்கம் ‘எதிரியை வீழ்த்துவதுதான்’. லத்தி என்பது ஆபரணம் அல்ல, ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு பகுதி. ஹெட்கேவாரின் வழிகாட்டியாகிய மூஞ்சேயின் ஆலோசனைப்படி அது ஏந்தப்பட்டது. தசரா விழாவின் போது ஆயதங்கள் வணங்கப் பட்டன, ராணுவ இசை எழுப்பப்பட்டது. சுயம் சேவக்குகள் பலரும்கூடி லத்தி, வாள் மற்றும் இதர பல பயிற்சிகளில் தங்களுக்குள்ள திறமையைக் காட்டுவார்கள்”.
இரண்டின் நோக்கமும் இந்துத்துவாதான். அதற்காக அரசியல் களத்தில் வேலை பார்க்க இந்துமகாசபையும், சிவில் தளத்தில் இயங்க ஆர்எஸ்எஸ்சும் எழுந்தன எனப்படுகிறது. ஆனால் சிவில் தள இயக்கம் என்பது ஏதோ சாந்தரூபமானது அல்ல, அது அதிதீவிரமானது. அதற்காக தினசரி பயிற்சிகள் தரப்பட்டன சிந்தனைரீதியாகவும், உடல்ரீதியாகவும். எந்தக் காலத்தில் இது ஆரம்பமானது? பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழத் துவங்கிய காலத்தில்! இதனது நோக்கம் அந்த தேசிய இயக்கத்திலிருந்து இந்துக்களை பிரித்தெடுத்து திசைதிருப்புவது.எனவே நூரானி முத்தாய்ப்பாய்க் கூறினார்: “நாட்டிலிருந்து இந்திய தேசியத்தை விரட்டும் இந்து தேசியத்தின் ஆயுதம் தாங்கிய, தீவிரவாத அமைப்பாகவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது”. இந்திய தேசியமா? இந்து தேசியமா? என அன்று எழுந்த கேள்வி இன்று வரை தொடர்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ்சின் கைங்கரியமே!
நன்றி: தீக்கதிர், 03-06-2020


ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-1 இந்துத்துவா பிதாமகன் ஆங்கிலேயரின் ஓய்வூதியர்!
பிரபல வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏ. ஜி. நூரானி “தி ஆர்.எஸ்.எஸ்.” எனும்  ஒரு நூல் எழுதியிருக்கிறார். “லெப்ட்வேர்ட்”  பதிப்பகம் வெளியிட்டுள்ள இதில் 25 அத்தியாயங்க ளும், 16 பின்இணைப்புகளும் உள்ளன. புத்த கத்தை புரட்டியவுடன் வருவது அண்ணல் அம்பேத்க ரின் இந்த அழியாத சாட்சியம்: “இந்து ராஜ் என்பது  வந்தால் அது இந்த நாட்டிற்கு பேரழிவாக இருக்கும்.  எனவே அதை எப்பாடுபட்டேனும் தடுத்தாக வேண்டும்”. (“பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரி வினை”, 1946) இந்தப் புத்தகத்தை முன்வைத்து நான் தீக்கதிர் முகநூல் வழி ஆற்றிய தொடர் சொற்பொழிவுதான் இங்கே எழுத்து வடிவம் பெறுகிறது.
இந்த நூலில் உள்ள முகவுரையில் ஆர்எஸ்எஸ்  தலைவர் கோல்வால்கருக்கு 1948 நவம்பர் 10ல் பிரத மர் நேரு எழுதிய இந்த வாக்கியங்கள் உள்ளன: “ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ள நோக்கங்களுக்கும் அதன் உண்மையான நோக்கங்கள் மற்றும் அதனு டன் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் பல வடிவங்க ளிலும் வழிகளிலும் மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிய வில்லை. அதன் உண்மையான நோக்கங்கள்  இந்திய நாடாளுமன்றத்தின் முடிவுகளுக்கும், முன்மொழியப்படும் இந்திய அரசியல்சாசனத்தின் சரத்துகளுக்கும் முற்றிலும் எதிரானவையாகத் தோன்றுகின்றன. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி அதன் நடவடிக்கைகள் தேசவிரோத மானவை, பல நேரங்களில் சதிகாரத்தனமானவை, வன்முறையானவை”.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆர்எஸ்எஸ் பற்றி தந்த மதிப்பீடுஇது. இதன் அர்த்தம் அதன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்த மில்லை, அதன் அறிவிப்புகளுக்கும் அதனது ஆட்களின் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது. உள்ளும் புறமும் ஒன்றாய் இருக்கும் அமைப்பு அல்ல ஆர்எஸ்எஸ். அதனால்தான் அதை மர்மதேசம் என்கிறேன். அதனது வர லாறே அதற்கு ஆதாரமாக இருக்கிறது. நூரானி  பல விபரங்களைத் தந்திருக்கிறார். நானும் கூடுத லாகத் தந்து அதை நிரூபிக்க முனைகிறேன். நூரானி நூலின் முன்னுரை ஒரு கவிதை யோடு துவங்குகிறது. அது: “தோட்டத்திற்கு ரத்தம் தேவைப்பட்டபோது எங்களது கழுத்துக்களே முதலில் அறுக்கப்பட்டன. ஆனாலும் தோட்டத்தில்  இருப்பவர்கள் சொல்கிறார்கள் தோட்டம் அவர்களு டையது, எங்களது அல்ல”. இந்திய முஸ்லிம்க ளின் இன்றைய மனநிலையை இது தெரிவிக்கி றது என்கிறார். அது நிஜமே. இந்திய சுதந்தி ரத்திற்காக ரத்தம் சிந்திய முதல் தியாகிகள் முஸ்லிம்களே, ஆனால் இன்று அவர்களை அந்நி யர்கள் போல பாவிக்கிற கொடுமை நடக்கிறது.
முஸ்லிம்களின் தியாகத்திற்கு முதல் சாட்சி யாக சாவர்க்கரை கொண்டுவந்து நிறுத்துகிறார் நூரானி. “இந்திய சுதந்திரப் போர்-1857” என்று  இந்திய சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றி ஒரு  நூலை 1909ல் எழுதினார் சாவர்க்கர். அதில்  அவர் கூறினார்: “அந்த சிப்பாய்களுக்கு மௌல்வி கள் போதித்தது, பிராமண பண்டிதர்கள் ஆசிர்வதித்தது, தில்லியின் மசூதிகளிலிருந்தும் காசியின் கோயில்களிலிருந்தும் சொர்க்கத்திற்குச்  சென்ற பிரார்த்தனைகள் என்ன? அவை சுவதர்மம், சுயராஜ்யம் எனும் மகத்தான கோட்பாடு கள். இந்திய சுதந்திரத்திற்கு வந்துள்ளஆபத்தை முதலில் உணர்ந்தவர்கள் புனேயின் நானா பர்னாவி சும் மைசூரின் ஹைதர் அலியும்”.
ஹைதர் அலி என்றால் அவரது வீரஞ்செறிந்த புதல்வர் திப்பு சுல்தானும். அவர்கள்தாம் 1760-1800ல் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி யாருக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்கள். இதை  இப்படியாக அங்கீகரித்தார் சாவர்க்கர். அவர்க ளது பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் ஆங்கிலேயரை எதிர்த்த சிப்பாய்களின் கிளர்ச்சி  1857ல் ஏற்பட்டது என்றார். அந்தப் போராட்டத்தின்  மைய அச்சாக இருந்தது தில்லியின் கடைசி முகலாய மன்னராகிய பகதூர்ஷா ஜாபர். 82 வயதான  அவருக்கு அதிகாரத்தை மீட்டுத் தருவது என்ற பெயரில்தான் இந்துக்களும் முஸ்லிம்களும் அன்று இணைந்து போராடினார்கள். அந்த முயற்சி  தோல்வியுற்றதும், பகதூர் ஷாவைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் அந்தத் தள்ளாத வயதில்  அவரை பர்மாவிற்கு நாடு கடத்தினார்கள். 1862ல் அங்கேயே வாடி வதங்கி மாண்டுபோனார். அங்கு  விஜயம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் அவரது  சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இப்படி ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போரில் துவக்கத்திலிருந்தே முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது. இதை சாவர்க்கரும் அங்கீகரித்திருந்தார் என்பது மிக முக்கியமான ஆதாரம், இது சங் பரிவாரத்திற்கு சமர்ப்பணம். கொடுமை என்னவென்றால் இப்படி சிப்பாய்கள் கிளர்ச்சியை வியந்து எழுதிய சாவர்க்கர் விரைவி லேயே ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்தது! நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் கொலை  வழக்கில் 1910ல் கைது செய்யப்பட்ட சாவர்க்கருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1911ல் அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஒன்றரை மாதத்திலேயே மன்னிப்பு கோரி  ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுத  ஆரம்பித்தார். ஒன்பது ஆண்டுகளில் ஆறு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்பினார். அந்தமான்  சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட்ட வர் 1924ல் விடுவிக்கப்பட்டார். எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனும் நிபந்த னையின் பேரில்.
இதனினும் ஓர் உச்சம் ஆய்வாளர் நிரஞ்சன் தக்லே சொல்வதாக பிபிசிநியூஸ் தமிழ் (28-5-2020)  தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்: “காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு தங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் இருப்பதாக  வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம்  ரூ .60 வழங்கினார்கள். மாத ஓய்வூதியம் கொடுக்கும்  அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்னை சேவை  செய்தார், ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரணம் என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப்பட்ட ஓய்வூதியம் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது”.
ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர் களைத் தனது எதிரியாக பாவித்த சாவர்க்கர் சிறை  வாழ்வின்போது காந்தி, காங்கிரஸ், முஸ்லிம்  களைத் தனது எதிரியாக பாவிக்கத் தொடங்கினார். அதனால்தான் வைஸ்ராயோடு அப்படியாகக் கையெழுத்துப் போட்டு ஓய்வூதியதாரர் ஆனார். இந்த மாற்றம் சித்தாந்தரீதியானதும்கூட. 1923ல் சிறையிலிருந்து  அவர் எழுதிய “இந்துத்துவா-யார் இந்து?” எனும் நூலில் அந்த மாற்றம் துல்லியமாக வெளிப்பட்டது. 1857 சிப்பாய்கள் கிளர்ச்சியை இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் வெளிப்பாடாகப் பார்த்து நூல் எழுதியவர் இப்போது இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் எனச் சொன்னார், பிற மதத்தவரை அந்நியராகச் சித்தரித்தார்.
இந்த வகுப்புவாத அரசியலுக்கு அவர் செய்த நாமகரணமே “இந்துத்துவா”. எனினும் ஒரு விஷயத்தை அந்த நூலில் ஒப்புக்கொண்டார். அது: “இந்து மதம் எனப் பொதுப் படையாகச் சொல்லப்படுவதும் இந்துத்துவாவும் ஒன்று அல்ல”. சங் பரிவாரத்தினர் தங்களது சித்தாந்த பிதாமகனின் இந்தப் பிரகடனத்தை மனதில் வாங்க வேண்டும். இது தெரியாமல் இந்து மதமும்  இந்துத்துவாவும் ஒன்று என்று பேசிக் கொண்டி ருக்கிறார்கள்! ஒரு சுவையான செய்தியை நூரானி தனது நூலில் சொல்லியிருக்கிறார். “சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி” என்பது அது. ஆனால் மேல் விபரங்கள் இல்லை. ஆய்வாளர்கள் இதற்குள் மேலும் செல்வது பயனுள்ளதாக இருக்கும். நாத்தி கர் என்றாலே கண்களை உருட்டி, மீசையை முறுக்கும் சங் பரிவாரத்திற்கு அவர்களது பிதா மகனே ஒரு நாத்திகர்தான் என்பது செரிக்க முடி யாத சமாச்சாரமாக இருக்கும்.
நூரானி நூலின் முன்னுரை நேரு பற்றிய சில  செய்திகளோடு முடிகிறது. “இந்து வகுப்பு வாதம்  என்பது  ஃபாசிசத்தின் இந்திய வடிவம்” என்றாராம்  அவர். நேரு பிரதமராக இருந்த காலத்தில் வெள்ளி தோறும் அதிகாரிகளைச் சந்திப்பாராம். அதற்கான  ஏற்பாட்டைச் செய்யும் வெளியுறவுச் செயலாளர் யெஷ்டி குண்டேவியா ஒரு சந்திப்பை விவரித்தி ருக்கிறார் தனது நூலில். அதிலிருந்து இது: “குண்டேவியா: ஐயா, நாடு சுதந்திரம் பெற்றதி லிருந்து காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது. அதி காரிகளாகிய நாங்களும் அதன் கொள்கை களையே அமுல்படுத்தி வருகிறோம். நாளை கம்யூ னிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் என்னாகும்? கேரளா வில் கம்யூனிஸ்டு அரசு உள்ளது. நாளை மத்தியி லும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளின் நிலை என்னாகும்?
பிரதமர் நேரு: மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஏன் நினைக்கி றீர்கள்? (சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு  நிறுத்தி நிதானமாகச் சொன்னார்) குறித்துக் கொள்ளுங்கள், இந்தியாவுக்கான அபாயம் கம்யூ னிசம் அல்ல. மாறாக, இந்து வலதுசாரி வகுப்பு வாதம்”. தீர்க்கதரிசனம் என்பது இதுதான். இன்று  என்ன நடக்கும் என்பதை அன்றே சொல்லியிருக்கி றார். இந்தியாவின் சமூகவியலை நன்கு உள்வாங்கி யிருந்ததால்தான் அவரால் இப்படியொரு சரியான  கணிப்பை செய்ய முடிந்திருக்கிறது. நேருவை ஏன்  சங் பரிவாரம் நஞ்சாய் வெறுக்கிறது என்பதும் புரி படுகிறது.
நன்றி: தீக்கதிர், 02-06-2020


Wednesday, June 10, 2020

ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை...

ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை...

தந்தை பெரியார் பற்றி வழக்கம் போல அவதூறு அள்ளிவிட்ட ரங்கராஜ் (பாண்டே) வீடியோ பார்த்தேன்.அந்த 20 நிமிட வீடியோவில் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்கள் பற்றி கேள்வி கேட்பதாக சொல்லிவிட்டு, வாட்ஸாப்ப் ல வரும் மீம்ஸ்ஸை காட்டி இது பெரியார் 1925 ல் சொன்னார். அது இடதுசாரி இணையதளமான அவர்களின் கீற்று இணையத்தில் இருக்கு. இது 'விடுதலை வெப்சைட்ல' இருக்கு. இப்போ கூட .in ல இருந்து வெப்சைட் மாத்திட்டாங்க ன்னு நினைக்கிறேன்.  இப்படி பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்களை கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று அந்த வீடியோவில் எப்பொழுதும் போல சாராயம் குடித்த பைத்தியகாரனுக்கு தேள் கொட்டியதை போல உளறி கொட்டியிருக்கிறார். இறுதியில் அவர் முடிவு சொல்ல மாட்டாராம். அந்த 20 நிமிட வீடியோ கருமத்தை கேட்ட  நம்மிடமே முடிவு பண்ணிக்க சொல்கிறார். என்ன முடிவுமாம்? பெரியார் பெண்ணுரிமைக்கு உண்மையாவே போராடினாரா ன்னு நாம் முடிவு பண்ணிக்கணுமாம்.

அந்த வீடியோ தொடங்கும்பொழுதே பாரதியாரின் பெண்ணுரிமை பாடலை ஒன்றை பார்ப்போம் நண்பர்களே ன்னு பாரதியார் கவிதை ஒன்றை ஒட்டிவிடுகிறார். பிறகுதான் உளற ஆரம்பிக்கிறார். இவர்கள் குப்பை போன்று மனுதர்மம் எழுதி பெண்களை இழிவுபடுத்தி வைத்திருப்பார்களாம். அதையெல்லாம் பெரியார் தொட்டு கேள்வி கேட்டு விமர்சனம் செய்தால்...அப்படியே பெரியாருக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார்கள். சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யதால் இறங்குபவர் உடலிலும் அது ஒட்டத்தான் செய்யும். அப்படி சாக்கடை போன்று மனுதர்ம எழுதி வைத்துக்கொண்டு, சனாதன தர்மம் ன்னு பெண்ணடிமை போதித்தார்கள்.போதித்து கொண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கேள்வி கேட்டு இந்து பார்ப்பனிய மத பெண்ணடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டினார் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெண்ணுரிமை கருத்துக்களிளிருந்து  மூலைக்கு மூலை நறுக்கி எடுத்து, பெரியார் பெண்களை இப்படி சொல்லியிருக்கிறார், திருமணம் கிரிமினல் என்று சொல்லி இருக்கிறார் என்பது போன்ற வார்த்தைகளை எடுத்து காட்டி திரிபுவாதம் செய்வது அறிவு நாணயமா மிஸ்டர் ரங்கராஜ் பாண்டே? பெரியார் சில இடங்களில் கடும் சொற்களை கையாண்டிருக்கலாம் அதற்கு தேவையும் இருந்திருக்கும். ஆனால் அதற்கு  காரணம் உன் பார்ப்பனிய மதத்திலிருக்கும் பித்தலாட்ட கருத்துக்கள். அதை வசதியாக மறைப்பது ஏன்?

இறுதியில் ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளார், நாங்க எழுதிய மனுதர்மம் என்றைக்கோ எழுதியது. அதை இன்றும் எடுத்து காட்டி பேசுவது சரியா ன்னு..மனுதர்மம் கேவலமானது ன்னு வெட்கம்விட்டு ஒப்புக்கொண்டுள்ளதற்கு ஒரு சபாஷ் போடலாம். ஆனால் இன்று நடைமுறையில் இல்லை என்பது உண்மையா? சரி நீங்களாவா சீர்திருத்தம் பண்ணீங்க? உடன்கட்டை ஏறுவதில் தொடங்கி, இன்று பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பது வரை எல்லாம் உங்களை எதிர்த்து போராடி போராடி பெற்ற உரிமைகள். ஏதோ நீங்களா விட்டு விட்டது போன்று பம்முறீயே பாண்டே வெட்கமா இல்ல? இன்றைக்கும் சனாதன தர்மம், மனு தர்மமம் புனிதமென்று உங்கள் வீட்டு பெண்களையே சொல்ல வைக்கிறீர்களே அது என்னவாம்? ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் என்கிற பார்ப்பன அம்மையார் இதை ஒரு வேலையாகவே செய்துகொண்டிருக்கிறார். எங்கள் சனாதன தர்மம், மனுதர்மம் புனிதம் என்றே பதிவிடுகிறார். மனுதர்மம் நடைமுறையில் இல்லை என்றால் இதெல்லாம் என்ன? அடுத்த வீடியோவில் அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவும்.

சரி, பாண்டே உளறினார் என்றால், இப்படிபட்ட  கேவலமான உளறலை சுமந் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஷேர் பண்ணி குஷியோடு சொல்கிறார். நல்ல விமர்சனமாம். பெரியாரிஸ்ட் யாரவது பதில் சொல்றீங்களா ன்னு அப்படியே குதுகூலமடைகிறார். இதையெல்லாம் பார்க்கும்பொழுது இவர்கள் அறிவு எவ்வளவு கேவலமா அற்பத்தனமா இருக்குன்னு நினைக்க தோணுது. ஆனால் வெளியில் அறிவுஜீவி மாறி திரிகிறார்கள்.

சரி, இறுதியில் பெண்களை இழிவுபடுத்தும் சனாதன இந்து மத மனுதர்ம பிட்டுகள் கொஞ்சம் உங்க பார்வைக்கு....

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்

மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

(மனு தர்ம விளக்கம் ஆதாரம் நூல்: "ஆணாதிக்கமும் பெண்ணியமும்"
ஆசிரியர்: இரயாகரன் பி. வெளியீட்டாளர்: கீழைக்காற்று வெளியீட்டகம்)

இது போன்ற ஏராளமான மனு தர்ம குப்பைகளை தான் தந்தை பெரியார் கேள்விக்கு உட்படுத்தினார். அவற்றிக்கு எதிராக பெண்ணுரிமை கருத்துக்களை முன்வைத்தார். இது மகாகவி பாரதி வழியில் பெண்களை கும்மியடிக்கவும், கோலம் போடவும் தயார் செய்யும் பாண்டேக்களுக்கு இன்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள். கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் மறுபடி நம் தலையில் கட்டிவிடுவார்கள். எச்சரிக்கை.

'ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை' என்று போர்டு தொங்கவிடனும். அப்பொழுதுதான் சமூக வலைத்தளத்தில் உலா வரும் நம் இளைஞர்கள் எச்சரிக்கையா இருப்பார்கள்.Tamil 10 top sites [www.tamil10 .com ]