வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 14, 2020

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-2.... இந்து மகாசபை இருக்க இன்னொன்று ஏன்?- அருணன்


ஆர் எஸ்எஸ் தோன்றுவிக்கப்பட்டதன் பின்புலம் பற்றி விவரித்திருக்கிறார் நூரானி. லாலா லஜபதிராய், பண்டிட் மதன்மோகன் மாளவியா என்றால் அந்தக் காலத்து காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றுதான் பலரும் அறிவர். ஆனால் அவர்களுக்கு இன்னொரு முகம் உண்டு. அவர்கள் இருவரும் இந்து மகாசபைத் தலைவர்களும்கூட.அந்தக் காலத்து காங்கிரஸ் ஒரு மகாசம்மேளனம். அதில் பல கருத்துள்ளவர்கள் மட்டுமல்ல பல அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இருந்தார் கள். “தங்களுக்கான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருப்பதால் இந்துக்கள் தம் அளவில் ஒரு தேசம்” என்று 1899லேயே எழுதியவர் லஜபதிராய். மதத்தின் அடிப்படையில் தேசியத்தை தீர்மானிக்கும் அபத்தச் சிந்தனை அப்போதே பிறந்து விட்டது. இந்துக்கள் ஒரு தேசம் என்றால் முஸ்லிம்கள் வேறொரு தேசம் என்றானது. இப்படித்தான் இரு தேசச் சிந்தனை இங்கே வேர் விட்டது.
இந்தச் சிந்தனையோடு 1907ல் பஞ்சாபில் அமைந்தது இந்து மகாசபை. 1909ல் நடந்த அதன் மாநாட்டில் உற்சாகமாகப் பங்கேற்றார் லஜபதிராய். 1914ல் அகில பாரதிய இந்து மகாசபை ஆரம்பிக்கப்பட்டது. அதை 1928 வரை வழி நடத்தி
யவர்கள் லஜபதிராயும், மதன்மோகன் மாளவியாவும். சுத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் வேலையையும் 1923ல் துவக்கியது இந்த சபை. லஜபதிராயின் சிந்தனை, இந்து மகாசபையின் செயல்பாடு எல்லாம் சாவர்க்கரிடம் தாக்கத்தை ஏற்படுத்தித்தான் அவரை “இந்துத்துவா” நூலை எழுத வைத்தன.
தி டிரிபியூன் பத்திரிகையில் 1924 டிசம்பரில் லஜபதிராய் எழுதினார்: “பஞ்சாபை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதை மேற்கு பஞ்சாப் என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதை கிழக்கு பஞ்சாப் என்றும் பிரிக்க வேண்டும்”. மத அடிப்படையில் இரு மாகாணங் களை உருவாக்க வேண்டும் என்று அடியெடுத்து கொடுத்தார், பின்னாளில் அது இரு நாடுகள் என முடிந்தது.இத்தகைய கருத்தியல் கொண்டவர்கள் முழு காங்கிரசையும் கைப்பற்ற முயற்சித்தார்கள் எனும் திடுக்கிடும் சங்கதியையும் நூரானி எடுத்துரைக்கிறார். அதற்கான ஆதாரமாக சாட்சாத் மோதிலால் நேருவைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஜவஹர்லால் நேருவின் தந்தையார் தனது மகனுக்கு எழுதினார் 1926ல்: “பிர்லாவின் பண உதவியோடு இயங்கும் மாளவி யா-லாலா கோஷ்டி காங்கிரசை கைப்பற்ற தீவிரமாக முயலுகிறது”. அந்தக் காலத்திலேயே பெருமுதலாளி ஒருவர் இந்த வகுப்புவாத கோஷ்டியையும் ஆதரித்திருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய சோகம் இதுதான்-இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கட்டமைப்போடு சமரசம் செய்துகொண்டே தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்த்தது. அதனால்தான் தொழிலாளி வர்க்கத்திற்கு தனது எதிரியாம் முதலாளித்துவத்தை மட்டுமல்லாது எதிரியின் எதிரியாம் நிலப்பிரபுத்துவத்தையும் ஒழிக்கும் வேலை வந்து சேர்ந்தது.இத்தகைய சமூக, அரசியல் சூழலில்தான் கேசவ பலிராம் ஹெட்கேவார் என்பவர் கிளம்பினார். இந்த நாக்பூர்காரரின் சித்தாந்த வழிகாட்டி இந்து மகாசபையின் மற்றொரு தலைவராகிய பி.எஸ். மூஞ்சே. சாவர்க்கரின் “இந்துத்துவா” நூலைப் படித்த ஹெட்கேவாருக்கு அவர் மீது அளப்பரிய பிரியம் ஏற்பட்டது. 1925 மார்ச்சில் அவரோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்து விரிவாகக் கலந்துரையாடினார்.முடிவில் அதே ஆண்டு விஜயதசமி அன்று ஹெட்கேவாரின் வீட்டில் “ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்” எனப்பட்ட ஆர்எஸ்எஸ் உதயமானது. கூட இருந்த நான்கு பேர்: பி. எஸ். மூஞ்சே, சாவர்க்கரின் மூத்த சகோதரர் பாபாராவ் சாவர்க்கர், எல். வி. பரஞ்பி, பி. பி. தாக்கர்.ஹெட்கேவார் எத்தகையவர்? அவர் நூல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி அந்தக் காலத்திலேயே மராத்தியில் பிரசுரங்கள் வந்துள்ளன. அவற்றை மேற்கோள் காட்டுகிறார் நூரானி. நாக்பூரில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களை அவர் வெறுத்தது, அவர்களை “யவன பாம்புகள்” என அழைத்தது, அவர்களை எதிர்க்கவே தொண்டர் படை ஒன்றை உருவாக்க முனைந்தது போன்ற விபரங்களைத் தந்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2018ல்  ஹெட்கேவாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி “இந்தியத் தாயின் ஒரு மகத்தான புதல்வர்” என்று வருகை ஏட்டில் எழுதினார். அதையொட்டி ஹெட்கேவார் பற்றிய வரலாற்றாளர்களின் பதிவுகள் வெளியாயின. எச். வி. சேஷாத்திரி பதிப்பித்த “டாக்டர் ஹெட்கேவார், யுக புருஷர்” எனும் வாழ்க்கை வரலாறு நூலை மேற்கோள் காட்டியது தி கேரவான் ஏடு(10-6-2018). “அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இரண்டாவதாகத்தான் இந்தியர்கள்” எனும் முடிவுக்கு வந்தார் ஹெட்கேவார் என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் தேசப்பற்றின் மீது வீணான சந்தேகத்தை எழுப்பி, அப்படியாக அவர்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வேலையைச் செய்ய முடிவெடுத்தார்.மற்றொரு வரலாற்றாளர் பிரளாய் கனுங்காவின் கருத்துப்படி நாக்பூரில் 1923ல் வெடித்த இந்து -முஸ்லிம் கலவரமே ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ்சை துவக்குவதற்கான அடிப்படை. கலவரத்திற்கான காரணங்களில் முக்கியமானது மசூதிகள் முன்பாக மத ஊர்வலங்கள் நடத்த இந்துக்களுக்கான உரிமை பற்றியது. எச். வி. சேஷாத்திரி பதிப்பித்த நூல் கூறியது “முஸ்லிம்கள் மீதான பயத்தின் காரணமாக இந்துக்கள் மசூதிகளின் முன்பு மேளதாளங்களை தவிர்த்தனர். அப்போது டாக்டர்ஜியே (ஹெட்கேவார்) மேளதாளங்களை அடித்து தூங்கிக்கிடந்த இந்துக்களின் வீரத்தை எழுப்பினார்”.
ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியர்கள் அனைவரது உரிமைகளையும் பறித்திருந்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடாமல் முஸ்லிம்களை எதிர்த்துக் கிளம்பியவர்தான் ஹெட்கேவார். மிகப் பெரிய வீரம் எதுவென்றால் 
மசூதிகள் முன்பு மேளதாளம் அடிப்பதாம்!  அன்று முதல் இன்று வரை சங் பரிவாரத்தின் ஜோலி இதுதான்! மக்களின் மெய்யான எதிரிகளுக்கு எதிராக இந்துக்கள் திரண்டுவிடாதபடி பொய்யான எதிரிகளைக் கட்டமைப்பதுதான் அவர்களின் தந்திரம்.இத்தகைய நோக்கத்திற்காக இத்தகையவர் உருவாக்கிய ஆர்எஸ்எஸ் 1926 லேயே ஷாகாஎனப்பட்ட தினசரி உடற்பயிற்சியைத் துவக்கியது. இது பற்றி வரலாற்றாளர் சேட்டன் பட் கூறுவது: “ஆர்எஸ்எஸ்சின் ஷாகாக்களில் தண்டா (லத்தியுடனான ஆயுத பயிற்சி), கட்கா (வாள் பயிற்சி),வெட்ரசர்மா (கம்புச் சண்டை), யோக்சேப் (லெஜிம் பயிற்சி) ஆகியவை உண்டு”. இதுவெல்லாம் எதற்கு? எதிரிகளை வீழ்த்தத்தான். எதிரிகள் யார்? நிச்சயம் வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் இல்லை. எதிரிகள் யார் என்பதை ஹெட்கேவார் தனது பேச்சாலும் செயலாலும் தெளிவாக உணர்த்தியிருந்தார்.
இப்படிப்பட்டவருக்காக ஆர்எஸ்எஸ்சில் “சர்சங்சலக்” எனும் பதவி 1929ல் உருவாக்கப் பட்டது. அதாவது உயர் தலைவர். “பரம பூஜனிய”, பெரிதும் பூஜிக்கத் தக்கவர் என அழைக்கப்பட்ட இவரின் உத்தரவுப்படியே அனைவரும் நடக்க வேண்டும். அவரது சொல்லே அந்த அமைப்பின் வேதம். இது ஆயுட்காலப் பதவி. இவர்தான் அடுத்த சர்சங்சலக்கை நியமிப்பார் தனது இறுதி காலத்தில். தேர்தல் எல்லாம் கிடையாது.
ஒரு கேள்வி இருக்கிறது. இந்துக்களுக்காக என்று இந்து மகாசபை இருக்கும் போது அவர்களுக்காக எதற்கு இன்னொரு அமைப்பு? இதற்கு நூரானி தரும் பதில் ஆர்எஸ்எஸ்சின் சாரத்தை விண்டுரைக்கிறது. அது: “இந்த இரண்டுக்கும் இடையே இரண்டு வேறுபாடுகள் உண்டு. மகாசபையின் தலைவர்கள் அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட்டார்கள். மாளவியாவும் லஜபதிராயும் மத்திய சட்டசபை உறுப்பினர்கள். இரண்டாவதாக அவர்கள் வன்முறையை ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ் அப்படி அல்ல. அது தேர்தல் அரசியலை ஏற்கவில்லை, அதேநேரத்தில் வன்முறையை அமைப்புரீதியாகப் பயன்படுத்துவதை ஏற்றது. நாக்பூரில் நடந்த வகுப்புவாதக் கலவரங்களுக்குப் பிறகு உருவான ஆர்எஸ்எஸ்சின் நோக்கம் ‘எதிரியை வீழ்த்துவதுதான்’. லத்தி என்பது ஆபரணம் அல்ல, ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு பகுதி. ஹெட்கேவாரின் வழிகாட்டியாகிய மூஞ்சேயின் ஆலோசனைப்படி அது ஏந்தப்பட்டது. தசரா விழாவின் போது ஆயதங்கள் வணங்கப் பட்டன, ராணுவ இசை எழுப்பப்பட்டது. சுயம் சேவக்குகள் பலரும்கூடி லத்தி, வாள் மற்றும் இதர பல பயிற்சிகளில் தங்களுக்குள்ள திறமையைக் காட்டுவார்கள்”.
இரண்டின் நோக்கமும் இந்துத்துவாதான். அதற்காக அரசியல் களத்தில் வேலை பார்க்க இந்துமகாசபையும், சிவில் தளத்தில் இயங்க ஆர்எஸ்எஸ்சும் எழுந்தன எனப்படுகிறது. ஆனால் சிவில் தள இயக்கம் என்பது ஏதோ சாந்தரூபமானது அல்ல, அது அதிதீவிரமானது. அதற்காக தினசரி பயிற்சிகள் தரப்பட்டன சிந்தனைரீதியாகவும், உடல்ரீதியாகவும். எந்தக் காலத்தில் இது ஆரம்பமானது? பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழத் துவங்கிய காலத்தில்! இதனது நோக்கம் அந்த தேசிய இயக்கத்திலிருந்து இந்துக்களை பிரித்தெடுத்து திசைதிருப்புவது.எனவே நூரானி முத்தாய்ப்பாய்க் கூறினார்: “நாட்டிலிருந்து இந்திய தேசியத்தை விரட்டும் இந்து தேசியத்தின் ஆயுதம் தாங்கிய, தீவிரவாத அமைப்பாகவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது”. இந்திய தேசியமா? இந்து தேசியமா? என அன்று எழுந்த கேள்வி இன்று வரை தொடர்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ்சின் கைங்கரியமே!
நன்றி: தீக்கதிர், 03-06-2020


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]