வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 27, 2016

சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது

வனபுத்திரி
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
7,இளங்கோ தெரு 
தேனாம்பேட்டை , சென்னை -– 600018. 
பக்:112 , விலை : ரூ. 80/-

சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது....

புராணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்பு செய்து சிறுகதைகள் படைத்து நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டு வந்த சுப்பாராவின் முதல் நாவல் இது . அவர் தன்பாணியில் சற்றும் விலகாமல் இந்நாவலையும் படைத்துள்ளார் .பாராட்டுகள்.புராண பாத்திரங்களை பெண்ணிய நோக்கில் , தலித்திய நோக்கில்என பல கோணங்களில் மறுவாசிப்புச் செய்யும் போது புதிய வெளிச்சம் கிடைக்கும் ; கட்டியமைக்கப்பட்ட புனிதம் நொறுங்கும் .இராமாயணம் படைத்த வால்மீகியும் இராமாயணக் கதாநாயகியும் சந்தித்தால் என்கிற ஒற்றை வரியில்கதையின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது .வெறுமே கற்பனைச் சரடுகளைஅவிழ்த்துவிடாமல் இராமாயணத்தைக் கூர்ந்து படித்து உள்வாங்கி நுட்பமாய் சில இடைவெளிகளை இட்டு நிரப்பி இராமாயணத்தின் சாதிய , ஆணாதிக்கக் கூறுகளை படம் பிடிக்கிறார் .இராமனால் துரத்தப்பட்ட சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி குழந்தை பெற காத்திருக்கிறார் .இராமகாதையை அரங்கேற்றி நிஷாதகுலத்தில் பிறந்த தான் பிரம்மரிஷி எனப் புகழ்பெற வேண்டும் என்றஅடங்கா வேட்கையுடன் வால்மீகிஇராமகாதையின் ஒவ்வொரு பாத்திரமாக தேடி பேட்டி கண்டுவிவரம் சேகரித்து எழுதிக்கொண்டிருக்கிறார் .

ராமனைப் பேட்டிகாணச் சென்ற வால்மீகியின் அனுபவம் எப்படி இருந்தது ? “ அயோத்தியில் பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சக்கரவர்த்தியின் பேட்டி கிடைக்கவில்லை ……. ரிஷிகளுக்குள்ளும் வர்ணம் பார்க்கிறார்களே! என் மகத்தான கவிதைகளைப் படிக்கும் வரை என்னை நிஷாதனாகத்தானே பார்ப்பார்கள் ....” என சுப்பாராவ் எழுதிச் செல்லும் போது சமூகவிமர்சனம் சாட்டையாய் விழுகிறது .“ கதாநாயகனைப் பார்க்க பத்துநாள் காத்திருந்த உங்களுக்கு கதாநாயகியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே?”என நெத்தியடியாய் சீதை கேட்கும் கேள்வி பெண்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாய் ஒலிக்கிறது.ராமாயணத்தில் சீதையின் தாயார் பெயர் ஏன் விடுபட்டது ; வளர்ப்புத் தாய் பெயர் ஏன் விடுபட்டது; லட்சுமணனின் தாயார் சுமித்திரையின் பரம்பரை ஏன் சொல்லப்படவில்லை.; இப்படி எழும் ஒவ்வொரு கேள்வியும் மநுவின் முகத்திரையை விலக்கி கோர உருவத்தைக் காட்டுகிறது .அனுமன் இலங்கையில் சீதையை சந்தித்ததை விவரிக்கும் வால்மீகி ஏன் அனுமன் வாயால் சீதையின் பேரழகை விவரிக்கிறார் ?கட்டைப் பிரமச்சாரிக்கு ஏன் இந்த வேலை ? வாலிவதை குறித்த உரையாடல் இன்னொரு முனையைக் காட்டுகிறது . விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது ; இராவணனின் மனைவியை கட்டாயப்படுத்தி விபீஷணனின் பட்டத்து ராணியாய் வலம் வரச் செய்யும் இடம்;பெண்களின் வலியை, ரணத்தைஉணராத ஆணாதிக்க முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும். இப்படி புராண கதாபாத்திரங்களூடே உள் நுழைந்து புதிய சேதிகளை அள்ளிக் கொண்டுவரும் நுட்பம் சுப்பாராவுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்நூல் நெடுக நிறைய சாட்சிகள் உண்டு .நூலின் கிளைமாக்ஸ்தான் சூப்பர்.ராவணனின் மனைவி மண்டோதரியை அங்கதன் தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை புரிகிறான் . இராவணன் தேடிச் சென்று மீட்டு வருகிறான் .

ஊரார் அவளை அங்கேயே கொன்றுஎறிந்திருக்க வேண்டும் என தூற்றுகின்றனர் .இராவணன் அவளை ஏற்றுக் கொள்கிறான் . ஆனால் அயோத்தியில் இராமன் என்ன செய்தான் ?தீக்குளிக்கச் சொன்னான் . இந்த இரண்டையும் ஒப்பிட்டு சீதை அசை போடுவது நெற்றியடியாகும் . சீதையின் எந்தத் திருத்தமும் வால்மீகியால் ஏற்கப்படவில்லை . நாரதர் தலையிட்டு திருத்தங்களை தீக்கிரையாக்கச் செய்துவிட்டார் . அதன் சாம்பல் துகள்களிலிருந்து இந்த நாவல் கிளைத்திருக்கிறது .இராமனை தேசிய கதாநாயகனாகக் காட்டி மதவெறி தூபம் போடும் இன்றையச் சூழலில் இந்தநாவல் அந்த புனிதப் பூச்சை அழித்துத் துடைக்கிறது .இது இன்றையத் தேவை . ராஜம் கிருஷ்ணன் எழுதிய , இராமாயணம் குறித்த இரண்டு மறுவாசிப்பு நூல்களும் ;அதுபோன்ற வேறு பல நாவல்களும் சிறுகதைகளும் இப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை.வாசிக்க வேண்டும் . இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே ! இது என் வேண்டு கோளும் கூட . இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும் .

எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது . சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.

தகவல்: சு.பொ.அகத்தியலிங்கம் @ தீக்கதிர் நாளிதழ், 28-02-2016


Saturday, February 20, 2016

மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள உதவும் இந்தியத் தத்துவ மரபுகள்1977ல் வெளியான பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்தியத் தத்துவ மரபும் இயக்கவியலும் எனும் நூல் பல்கலைப் பதிப்பகத்தின் மூலம் மீண்டும் நம் கைகளுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இயக்கவியல் குறித்த தமிழ் நூல்கள் மிகக் குறைவே. ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சிய மெய்ஞானம் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள எவ்வாறு துணை நிற்கிறதோ, அதேபோல் இந்திய தத்துவ மரபுகளை உள்வாங்கி மார்க்சியத்தை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.மனம், ஆன்மா, சாந்தி, பிரம்மம், முக்தி என பல்வேறு வார்த்தைகள் இன்றும் சத்குருக்களாலும், நித்தியானந்தர்களாலும், ஸ்ரீஸ்ரீக்களாலும் போதிக்கப்படுகின்றன. ஒரு பெருங்கூட்டம் அங்குதான் நிம்மதி விற்கப்படுவதாக நினைத்துக் கொண்டு படை எடுக்கிறது. தத்துவமும் ஞானமும் கூட ஏதோ வானத்தில் இருந்து கொட்டுவதாகவும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்ற பிற்போக்கான கருத்துக்களுக்கு எதிரான போராட்டம், இந்திய தத்துவ வளர்ச்சியின் தொடக்க காலம் தொட்டு இருந்துள்ளது. எல்லாம் மாறும் என்கிற கோட்பாட்டை பௌத்தமும், பொருள்தான் பிரதானம் என்பதை சாங்கியமும், அணு, அதன் இயக்கம், பிரம்மமோ, கடவுளோ உலக இயக்கங்களுக்கு காரணமில்லை என வைஷேசிகமும் கூறுகிறது. லோகாயதம் அதையும் கடந்து ஐம்பூதங்கள்தான் உலகிலுள்ள அனைத்திற்கும் மூலமான பொருள்கள், இதன் கூட்டுகளினால் உணர்வு தோன்றுகிறது. இவ்வுணர்வுதான் பிரபஞ்சத்தை அறிகிற ஆற்றல் என்கிறது. இந்திய தத்துவத்தில் இருந்த கருத்து முதல்வாத சிந்தனைகளுக்கு ஆரம்பகாலம் தொட்டு பொருள் முதல்வாதிகள் முன்வைத்த எதிர்வினையே மேற்கண்ட தத்துவ சிந்தனையாகும். இந்திய தத்துவத்தின் பொருள் முதல்வாத சிந்தனைகள் பதில் சொல்ல முடியாத அம்சங்களுக்கு மார்க்சியமும், வளரும் அறிவியலும் பதில் தருகிறது.தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் இன்று நேற்றல்ல, அது தொடர்ந்து நடந்து கொண்டேதான் உள்ளது. மார்க்சியத்தை எதிர்கொள்ள அமெரிக்கா சுமார் 130 தத்துவ வெளியீட்டகங்களை நடத்தி வந்தது என்று வானமாமலை தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று அனுபவங்களாலும், விஞ்ஞானப் புதுமைகளாலும் வளரும் மார்க்சியத்தை அந்தப் பொய் புனைவுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒன்பது இயல்களாகப் பிரித்து மார்க்சியம், லெனினின் பங்களிப்பு, இந்தியத் தத்துவம், இயக்கவியல் என அனைத்தையும் மிக எளிமையாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள முக்கியமான அம்சங்களை கேள்வி பதில் வடிவில் கீழே தொகுப்பதன் மூலம் தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இப்புத்தகத்திற்குள் நுழைய வழி கிடைக்கும் எனக் கருதுகிறேன்.

மார்க்சியம் ஏன் பிற்போக்குத்தனத்தை எதிர்க்கிறது?

மார்க்சியம், முன்னோக்கி வளர்ச்சி பெறாத, பின்னுக்கு இழுக்கிற எந்த சக்தியையும் எதிர்க்கிறது.
மார்க்சியம் முடிந்து போன ஒன்றா?

மார்க்சியம் வறட்டு சித்தாந்தம் அல்ல. அது செயலுக்கான வழிகாட்டி. மார்க்சிய கொள்கைகள் வளர்ச்சியடைய முடியாத இறந்து போன கருத்தல்ல. அது விஞ்ஞானத்தின் அஸ்திவாரம், அதைப் பல திசைகளில் சோசலிஸ்டுகள் வளர்க்க வேண்டும்.புதிய சமூக நிலைமைகளில் புதிய பிரச்சனைகளும், புதுமுறைப் போராட்டங்களும், பாட்டாளி வர்க்கத்தை எதிர்நோக்கும். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் வளர்த்தால்தான் அது ஜீவ சக்தியுள்ள சமூகத்தை மாற்றும் சக்தியுள்ளதாக அமையும்.

தற்போதைய அறிவு வளர்ச்சி பூரணமானதா?

நமது அறிவு பூரணமானது அல்ல. உண்மையை நெருங்கிச் செல்லுகிற தன்மையுடையது. நெருங்கி செல்லச் செல்ல, பொருளின் தன்மைகளைக் கண்டறிய முடியும்.

மதத் தீமைகளை எதிர்க்காமல், ஆளும் வர்க்கத்தை மட்டும் எதிர்த்தால் என்ன?

சமயம் பொதுவாக ஆளும் வர்க்கத்தோடுதான் சேரும். ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும்பொழுது சமயத்தையும் எதிர்க்க வேண்டி வரும்.

அனுமானம்-கற்பனை-கருத்து இவைகள் தானே மனித சிந்தனையை வளர்த்து புதிய பொருட்களை உருவாக்கஉதவுகிறது?

அனுமானத்தால் அனுபவ எல்லைக்கு உட்பட்டவற்றை மட்டுமே யூகம் செய்ய முடியும். வரம்பற்ற அனுமானங்களை அல்லாமல், பௌதிக நிரூபணத்திற்கு உட்பட்ட அனுமானங்களே நிரூபிக்கப்படும்.புறச்சூழ்நிலையே மனிதனின் உணர்வை உருவாக்குகிறது. எதிர்வினையை அது நிகழ்த்தும் போதே அது அறிவு பெறுகிறது. இயற்கை சூழலும், குடும்ப சூழலும், சமூக சூழலும்தான் ஒருவரது உணர்வை (கருத்தை) உருவாக்குகிறது. மேற்படியான சூழ்நிலைகளின் எந்த அனுமானமும் கருக்கொள்வதில்லை. உணர்வென்பது புற உலகின் அகவய படிமம்.
பொருள், கருத்து: எது முதன்மை?

பொருள் என்பது புறநிலையில் உள்ள எதார்த்தம். அது மனத்தைச் சார்ந்திராமல் சுதந்திரமாக இருப்பது. அது இருப்பதற்கு மனம் அவசியம் இல்லை. பொருள் புலன்கள் வழியாக அகவுலகக் கருத்தமைப்பாக மாறுகிறது. புறநிலை யதார்த்தத்தை நமது புலனுணர்ச்சிகள் அறிவதிலிருந்து பொருளைப் பற்றிய கருத்தமைப்பு உருவாக்கப்படுகிறது.
பொருள் - இயக்கம், காலம் - இடம்?

இயக்கம் என்பது பொருளில் இருப்பின் பொது இயல்பாகும். உலகில் எங்கும் இயக்கமற்ற பொருள் இல்லை. அது போலவே பொருள் இல்லாத இயக்கமும் இல்லை.உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் தவிர வேறெதுவும் இல்லை. காலத்திலும் இடத்திலும் தான் அவை இயங்குகின்றன. காலத்திற்கும், இடத்திற்கும் வெளியே பொருள் இருக்க முடியாது. அது போலவே பொருளுக்கு வெளியே காலமும், இடமும் இருக்க முடியாது.
மனிதனின் அறிவு வளர்ச்சி எதற்கானது?

ஒரு செயல் பொருளுள்ளதாகவும், நோக்கமுடையதாகவும் இருக்க வேண்டும். அறிவிற்காக மனிதன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை. புறவுலகை மாற்றுவதற்காகவே மனிதனுக்கு அறிவு தேவைப்படுகிறது. மனிதனது உணர்வு புறவுலகைப் பிரதிபலிப்பது மட்டுமல்ல, அதனைப் படைக்கவும் செய்கிறது. மனிதன் தான் வாழும் உலகைப் பற்றி திருப்தியடைவதில்லை தனது செயலால் அதனை மாற்ற முடிவு செய்கிறான்.இப்படி தத்துவம் குறித்து நமக்கிருக்கும் கேள்விகளை எழுப்பினால் அதற்கான அர்த்தம் பொதிந்த பதில்களை நா.வானமாமலை அவர்களின் இந்தியத் தத்துவ மரபும் இயக்கவியலும் என்கிற இப்புத்தகத்தில் கண்டடையலாம்.

இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்
ஆசிரியர்: நா.வானமாமலை
வெளியீடு: பல்கலைப் பதிப்பகம்
97/55,
என்.எஸ். கிருஷ்ணன் சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024பக்:192
விலை: ரூ. 100/-

நன்றி: தீக்கதிர், 21-02-2016


Tamil 10 top sites [www.tamil10 .com ]