வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 18, 2008

விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு!

ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து மனிதசங்கிலி வரும் 21.10.2008 தேதி நடைபெறும் என தமிழக முதல்வர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முடிவு மிகவும் வரவேற்க படவேண்டிய ஒன்று.

ஆனால் முன்னால் முதல்வர் அம்மையார் ஜெ . ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை ஒரு கபட நாடகம் என்று கூறிவிட்டு மனிதசங்கிளியால் ஒன்றும் ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதே மனிதச்சங்கிலி போராட்டம் தான் அமெரிக்காவில் ஒரு அரசையே பதவி இழக்க செய்தது. வியட்னாம் போரின்போது வியட்நாம் குடியரசுக்கு (தென் வியட்நாம்) அன்றைய அமெரிக்க ஜனாதிபதி Lyndon Baines Johnson பதினராயிரம் ஆக இருந்த அமெரிக்க ராணுவத்தை 550,000 அதிகப்படுத்தினார். இதனை அந்த நாட்டு மக்கள் எதிர்த்தனர் ( ஏனென்றால் மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார்.). அதனால் இறப்பது நம் அமெரிக்க மக்களும்தான் என்று ஜனாதிபதி ஜோன்சனிடம் எதிர்ப்பை தெருவித்து வியட்நாமுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பாதே என்று சுமார் இரநூறு கிலோமீடர் தூரத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர் அனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அனுப்பினார். அனால் பின் நாளில் அந்த போராட்டமே நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை பதவி இழக்க செய்தது. எனவே மனிதசங்கிலி போராட்டம் என்பது அம்மையார் ஜெ. ஜெயலலிதா போன்றவர்களுக்கு சாதரண விசயமாக இருக்கலாம். நம்மை பொறுத்தவரை அது ஈழத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்தும் ( எப்படி அன்று அமெரிக்காவில் எற்படித்தியதோ அதனைபோல்) என்ற நம்பிக்கையில் அதனை ஆதரிப்போமாக.....

வெல்லட்டும் மனிதசங்கிலி போராட்டம்..

விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு !Wednesday, October 15, 2008

தீபாவளியா?

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமோ?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்றுகேட் பவனை, "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணரு நாள் இந்தநாள்
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவரெ!

- பாவேந்தர் பாரதிதாசன்இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.


இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!Tuesday, October 07, 2008

சாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்றலாகதா?

இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம். நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்-சியை உண்டாக்கி விட்டது.இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான்.நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்-பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா? குத்துவேன்-வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லி-யிருக்-கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள். சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியது-தான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்!ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி-விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை. குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்-கானவர்-கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியது-தானா?அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் தானா? தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாத-படி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்-கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லை யென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக்--கொண்டு போகட்டும் என்கிறோம்.சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது.ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்-கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்) நாலு பேர் சாவது, ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போவ-தென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 க்கு 97 பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்-கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்-கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்-றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்-கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ள-லாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும். 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள்-தான். தப்பான காரியத்திற்கு என் தொண்டர்-களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.


3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடை வெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957)
Friday, October 03, 2008

சரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் எண்ணிப் பாருங்கள் கோபியாமல்!

எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள
தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன
டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம
ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்தரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய வைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாத வர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர
நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டில
சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?
ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கற்பூரம்கூட நீ செய்ததில்லை.
கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை.

அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!
மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவிக் கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!
அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!
எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள சரஸ்வதி பூச ஆயுத பூச செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந் சரசுவதி பூச ஆயுத பூச
நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம். ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த் ஆண்டுக்குள்ளாவது!

நன்றி - 'திராவிட நாடு', 26.10.1947

கலைஞரின் கவிதை


எங்கள் உயிரே!

உணர்வே!
இனமானக் கோவே!

எழுச்சியின் வடிவே!
எண்ணங்கள் மலரும்

எழிலார் சோலையே!
எஃகுக் கம்பிகலாம்

இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!
எழுபத்தைந்து பிறக்கிறது

உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?

அண்ணனே!
அழகுதமிழ்ப் பேச்சில்
அருவிகளை வென்றவன் நீ!
ஆங்கிலச் சொல்மழையோ -- உன்
ஆற்றலுக்கு ஆலவட்டம்!
எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!
எறும்பென மாறி நாங்கள்
அவற்றைச் சுவைத்தோம்!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?

அண்ணனே!

காந்தம் உன் விழியில்!
சாந்தம் உன் மொழியில்!
வீரம் உன் செயலில்!
விவேகம் உன் முறையில்!
பாசம் உன் உடன்பிறப்பு!
பரிவு அதன் மறுபதிப்பு!
இதயமோ எதையும் தாங்கும்!
புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?

அண்ணனே!

நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப் பின்தான்
வகையாகத் தமிழன் வரலாற்றை உணர்ந்தான்!
இலக்கியம் இருந்தது தமிழருக்கு!
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினாய் அதனை
இப்புவி அறிந்திட!
தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!
தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்;
தலைவா! நீ உதித்ததால்தான்
தமிழன் தமிழனானான்!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததன் கணக்கு?

அண்ணனே!

தந்தை பெரியாரின் தளபதி நீ!
விந்தை மனிதர்களால்
விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை,
மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!
அறிஞன் நீ!
அறிவாசான் நீ!
வறிஞன் செல்வன் என்று
வரையறுக்கும் வர்க்கபேதம்
வளர்த்தல் தீதென்று சமதர்ம
வழிநின்று உரைத்தவன் நீ!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
எழும் இக்கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை!
எம்முள்ளத்துயர் இந்நாளிலும் அடங்கவில்லை -
எனினும் நீ அகலாமல் இருக்கின்றாய்
எனும் நினைவில் உன் நிழலாக அசைகின்றோம்!


Wednesday, October 01, 2008

பெரியாரின் நூல்கள் மற்றும் உரைகள் நாட்டுடமையானால் .............

படைப்பாளிகளின் படைப்புரிமையைக் காக்க, சென்ற மாதத்தில் சென்னையில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள `சித்திர எழுத்து' என்கிற அமைப்பு சென்ற ஆகஸ்ட் 9 அன்று இக்கூட்டத்தை நடத்தியுள்ளது. எழுத்தாளர்கள் சி. மோகன், ராஜகோபால், ரவி சுப்பிரமணியன், கி.அ. சச்சிதானந்தம், ந. முத்துசாமி, தட்சிணாமூர்த்தி, சா. கந்தசாமி முதலியவர்களும், ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோரும் அதில் பங்கு பெற்றுள்ளனர். நேரில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் தனது ஆதரவை கோணங்கி தெரிவித்துள்ளார். பிரபஞ்சன் கட்டுரை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களின் ஓவியமெனப் போலி ஒன்றை சென்னை கண்காட்சிக் கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றதைக் கண்டித்து இக்கூட்டம் நடைபெற்றது.
நான் உள்ளூரில் இல்லாததால் இதில் கலந்துகொள்ள இயலவில்லை. இருந்திருந்தால் நிச்சயம் பங்குபெற்றிருப்பேன். எனக்கும் இதையொத்த ஒரு அனுபவம் சென்ற மாதத்தில் நிகழ்ந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நூற்களை வெளியிட்டு வந்த ஒரு பதிப்பகம் தொடர்ந்து எனக்குத் தெரியாமல் அவற்றை மீண்டும் அச்சிட்டு விற்றுவருவதாக எனக்குப் புகார்கள் வந்த வண்ணமிருந்தன. சென்ற மாதத்தில் ஒருநாள் எனது நண்பர்கள் சிலர் ஒரு அச்சகத்திலிருந்து எனது மூன்று நூற்களையும், ஷோபா சக்தியின் ஒரு நூலையும் தற்போது அச்சாகிக் கொண்டுள்ளது எனக் கொண்டு வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். பழைய தேதியில். ஆனால் கூர்ந்து கவனித்தால் சில வித்தியாசங்களுடன் அந்நூற்கள் அச்சிடப்பட்டிருந்தன.
தொடர்ந்து நம் நூற்களை வெளியிட்டுக் கொண்டுள்ள ஒரு பதிப்பகம் அவ்வாறு செய்திருந்தால்கூட நாம் அதைப் புரிந்துகொள்ள இயலும். பேசி அது குறித்து விளக்கம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தொடர்பும் இல்லாமல் போன ஒரு பதிப்பகம், ஆசிரியர்க்கு `காப்பி ரைட்' உரிமையுள்ள ஒரு நூலைப் பழைய தேதியிட்டு அச்சிடுவது, அவருக்குத் தெரியாமல் அதை விற்பது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது. இது அந்த ஆசிரியரின் உழைப்பைச் சுரண்டுகிற ஒரு விவகாரம் மட்டுமல்ல, அவரது சுயமரியாதையையே கேள்விக்குள்ளாக்கும் மூலதனத் திமிரையும் உள்ளடக்கியுள்ளது. இதை எப்படிச் சகித்துக் கொள்வது.
தமிழ் நூற்பதிப்பு வேறெப்போதையும்விட விரிவடைந்துள்ள நிலை எழுத்துலகைச் சேர்ந்த நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. புத்தகக் கண்காட்சிக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவதும், கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாவதும் நம் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஆனால் இதில் எந்த அளவிற்கு எழுத்தாளர்களுக்கு உரிய பயன்கள் சென்றடைகின்றன என்பது நம் சிந்தனைக்குரிய ஒன்று.
எல்லாப் பதிப்பகங்களும் மோசம் செய்கிறார்கள் என நான் சொல்ல வரவில்லை. பல பதிப்பகங்கள் மிக்க நேர்மையுடன் நடந்துகொள்கின்றன. உரிய `ராயல்டி' கொடுக்கப்படுகிறது. ஆனால் நான் சற்று முன் குறிப்பிட்டவை போன்ற ஒரு சில பதிப்பகங்கள் இப்படி மோசமாக நடந்துகொள்கின்றன. ஏதோ ஒரு சிறிய பதிப்பகம் இப்படிச் செய்துவிட்டது என்பதுகூட இல்லை. வெளிநாட்டுப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தமிழில் நூல் வெளியிடும் ஒரு நிறுவனம் இப்படி எழுத்தாளனின் வயிற்றில் அடிப்பதையும், அவன் சுயமரியாதைக்குச் சவால் விடுவதையும் என்னவென்பது? அவன் எழுதுகிற பேனாவுக்கு `ரீஃபில்' வாங்குவதற்கும் `ஏ4' பேப்பருக்குச் செலவு செய்வதற்குமான காசையாவது கொடுக்கவேண்டும். அனுமதி பெற்று நூல்களை மறுபதிப்புச் செய்யவேண்டும் என்கிற உணர்வு எப்படி அற்றுப் போய்விடுகிறது?
தமிழ் எழுத்தாளர்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். ஒன்றுகூடிப் பேசவேண்டும். இதுபோன்ற மோசடி செய்யும் பதிப்பகங்களுக்குக் குறைந்த பட்சம் தமது நூற்களை வெளியிடக் கொடுக்கக்கூடாது என்றாவது முடிவு செய்யவேண்டும்.
இப்படி ஆசிரியருக்குத் தெரியாமல் நூற்களை அச்சிட்டு விற்பது நான்கு வகைகளில் அவனைப் பாதிக்கிறது.
(1) முதற் பதிப்பு விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளிவருவதில் அவன் அடையும் மகிழ்ச்சி அவனிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.
(2) எழுத்தாளனுக்குச் சேர வேண்டிய உழைப்பூதியம் அவனுக்கு மறுக்கப்படுகிறது.
(3) அந்த நூலை அவன் வேறு பதிப்பகத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் அதனால் அவனது நாணயம் கெடுகிறது. புதிய பதிப்பாளருக்கும் இழப்பு ஏற்படுகிறது. (உண்மையில் மேற்குறிப்பிட்ட எனது மூன்று நூற்களில் இரண்டை மறுவெளியீடு செய்ய நான் `எதிர்வு' பதிப்பகத்திற்கு உரிமை அளித்து நூற்கள் அச்சாகிக் கொண்டுள்ளன).
(4) இந்த மாதிரியான மோசடி அம்பலப்பட்டுப்போகும்போது அதை ஈடுகட்ட வேண்டி, மோசடியாளர் அந்த எழுத்தாளர் குறித்து அவதூறுகளைப் பரப்ப நேரிடுகிறது. ``என்னை அவர் மோசம் செய்து விட்டார். அவரால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம்'' - என்கிற ரீதியில். இதையும் அந்த எழுத்தாளன் எதிர்கொள்ள வேண்டிய கொடுமை. நஷ்டம் என்றால் நீ ஏன் இப்படித் திருட்டுத் தனமாய் அந்த நூலை அச்சிட வேண்டும்?
மீண்டும் எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து நாம் கூடிப் பேச வேண்டும். பிற நாடுகளில் உள்ளதுபோல எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னரே நூலை வெளியிட உரிமை அளிப்பது என்கிற நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
நூலை அச்சிடும் அச்சகங்களுக்கும், `பபாசி' போன்ற அமைப்புகளுக்கும் கூட இதில் பொறுப்பு உண்டு. பதிப்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர். எழுத்தாளர்களுக்கும் அவர்கள் கடமைப்பட்டவர்களே. பழைய தேதியில் ஒருவர் நூலை அச்சிட முனைந்தால் அச்சகத்தார் அதை மறுக்க வேண்டும். பதிப்பாளர்களின் அமைப்பு, `பபாசி' போன்றவைகட்கு இப்படியான புகார் வந்தால், அதை முறைப்படி விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். மோசடி நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய இழப்பீடு பெற்றுத் தருவதோடு, குறிப்பிட்ட ஆண்டுகள் புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க அனுமதி மறுப்பது முதலான தண்டனைகளையும் அளிக்க வேண்டும். நூல் விற்பனை செய்வோரும் கூட இந்த மோசடிகளை அறியும் பட்சத்தில் குறிப்பிட்ட எழுத்தாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.
நான் முன்பே சொன்னதுபோல எல்லாப் பதிப்பாளர்களும் இப்படிச் செய்வதில்லை. மோசடி செய்யும் சில பதிப்பகங்களை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் நீதிபெற வழிசெய்ய வேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்கள், பிரபஞ்சன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உட்பட இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதிக்கு ஒரு முடிவு காண எழுத்தாளர்கள் இயக்கமாக வேண்டும். அறிவுசார் சொத்துரிமை பற்றிப் பேசுகிற ஒரு காலகட்டம் இது. எழுதுபவர்களின் அறிவு மற்றும் உடலுழைப்புகள் இத்தகைய மோசடியாளர்களால் சுரண்டப்படுவதை அனுமதிக்கலாகாது. றீ

நன்றி

தீராநதி செப் 08Tamil 10 top sites [www.tamil10 .com ]