இனமானக் கோவே!
எண்ணங்கள் மலரும்
எஃகுக் கம்பிகலாம்
எழுபத்தைந்து பிறக்கிறது
அண்ணனே!
அருவிகளை வென்றவன் நீ!
ஆங்கிலச் சொல்மழையோ -- உன்
ஆற்றலுக்கு ஆலவட்டம்!
எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!
எறும்பென மாறி நாங்கள்
அவற்றைச் சுவைத்தோம்!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
காந்தம் உன் விழியில்!
சாந்தம் உன் மொழியில்!
வீரம் உன் செயலில்!
விவேகம் உன் முறையில்!
பாசம் உன் உடன்பிறப்பு!
பரிவு அதன் மறுபதிப்பு!
இதயமோ எதையும் தாங்கும்!
புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப் பின்தான்
வகையாகத் தமிழன் வரலாற்றை உணர்ந்தான்!
இலக்கியம் இருந்தது தமிழருக்கு!
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினாய் அதனை
இப்புவி அறிந்திட!
தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!
தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்;
தலைவா! நீ உதித்ததால்தான்
தமிழன் தமிழனானான்!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததன் கணக்கு?
அண்ணனே!
தந்தை பெரியாரின் தளபதி நீ!
விந்தை மனிதர்களால்
விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை,
மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!
அறிஞன் நீ!
அறிவாசான் நீ!
வறிஞன் செல்வன் என்று
வரையறுக்கும் வர்க்கபேதம்
வளர்த்தல் தீதென்று சமதர்ம
வழிநின்று உரைத்தவன் நீ!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
எழும் இக்கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை!
எம்முள்ளத்துயர் இந்நாளிலும் அடங்கவில்லை -
எனினும் நீ அகலாமல் இருக்கின்றாய்
எனும் நினைவில் உன் நிழலாக அசைகின்றோம்!
No comments:
Post a Comment