Tuesday, October 27, 2009
கலசம் விழுந்தது - கலக்கம் பிறந்ததோ!
கைப்பேசியில் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்தாலும் வந்தது _ எது எதற்கெல்லாமோ பயன்பட ஆரம்பித்துவிட்டது _ கடவுள் சமாச்சாரங்கள் உள்பட!
ஒரு செய்தி: கோவை மாவட்டம் காங்கயம் சிவன் மணிமுருகன் கோயில் கொடிமரம் சாய்ந்தது!
இன்னொரு செய்தி: இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்துவிட்டது!
மற்றும் ஒரு செய்தி: திருவண்ணாமலை, திருச்செந்தூர் கோயில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்துவிட்டன.
இந்தச் செய்திகள் காட்டுத்தீபோல் பரவின. பக்தர்கள் மருண்டனராம்.
அய்யய்யோ, ஆபத்து, ஆபத்து! ஏதோ நடக்கப் போகிறது என்று பக்தர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். வீட்டில் உள்ள ஆண்களின் ஆயுளுக்குக் கேடு என்று யாரோ சொல்ல, அப்படியே இடிந்துபோய் விட்டார்களாம்.
அடுத்து என்ன நடக்கும்? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், காணிக்கைகள் இன்னோரன்ன சுரண்டல் விசேஷங்கள் ஜோராக நடந்திருக்கின்றன.
சில ஆண்டுகளுக்குமுன் திருமானூர் தாயாரம்மாள் தாலி அவிழ்ந்து விழுந்துவிட்டதென்று கூறி, அடேயப்பா எவ்வளவு களேபரம்!
பெண்கள் தங்கள் தாலி கயிறுகளைப் புதிதாகக் கட்டிக் கொண்டார்களாம்.
மக்களின் மூடத்தனத்தை_ பக்தியை எப்படியெல்லாம் ஒரு வணிகத் தன்மையில் மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
முதலில் ஒன்றை அவர்கள் சிந்திக்கவேண்டாமா?
சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு அதன் கோபுரம் இடிந்தது, கலசம் விழுந்தது, கொடிமரம் சாய்ந்தது என்பதெல்லாம் நடக்கும்போது பக்தர்கள் சிந்தனையில் எத்தகைய எண்ணம் ஏற்படவேண்டும்?
சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்றால், இவையெல்லாம் எப்படி நடக்கும் என்ற வினா எடுத்த எடுப்பிலேயே தோன்றியிருக்கவேண்டாமா?
அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால், கோபுரம் இடிந்ததற்கும், கலசங்கள் விழுந்ததற்கும், கொடிமரங்கள் சாய்ந்ததற்கும் கடவுள்தானே பொறுப்பு என்ற வினா இரண்டாவதாக ஏற்பட்டிருக்கவேண்டாமா?
மூன்றாவதாக இவை நடந்ததால் அதே கோயிலுக்குச் சென்று பூஜை போடுவதில், காணிக்கைகள் கொடுப்பதில் அர்த்தம் உண்டா?
நான்காவது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது _ இந்த சிறப்பு வழிபாடுகளும், காணிக்கைகளும் யாருக்குப் போய்ச் சேர்கின்றன?
கடவுள் சக்தி கேள்விக்குறியாகும்போதுகூட, அதன் பலன் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகப் போகாமல் (நியாயமாக அப்படித்தானே போகவேண்டும்) அந்தக் கடவுள் சம்பந்தமான கூடாரத்துக்கே இலாபமாக வருமானமாகப் போவதன் தன்மையை_ சூழ்ச்சியை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
இதற்குப் பெயர்தான் பக்தி மயக்கும் என்பது _ மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்பது; கடவுள் நம்பிக்கை. பக்தி என்று வந்துவிட்டால் சிந்தனைக்கே சிறிதும் இடமில்லாமல் ஒரு வழிப்பாதை என்பது இதுதான்!
எது நடந்தாலும் அதனை சொந்த இலாபகரமாக, சுயநலமாக ஆக்கிக் கொள்ளும் ஒரு புரோகிதச் சுரண்டல் முறை இதற்குள் மிகவும் பத்திரமாக இருப்பதை மக்கள் என்றைக்கு உணரப் போகிறார்கள்?
இந்தப் பாதுகாப்பில்தான் பார்ப்பனியம் மிகக் கெட்டியாக பலத்த அஸ்திவாரத்துடன் _ மற்றவர்களைப் பார்த்து கேலி செய்யும் தன்மையில் அமர்ந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு அதிக வேலைகள் இன்னும், இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன. கழகத் தோழர்கள் ஆங்காங்கே பரப்பப்படும் இதுபோன்ற செய்திகளை தோலுரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment