எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.
பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.
பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇனஇளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.
அது உண்மைதான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?
ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.
குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.
ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.
அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.
இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.
காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது. ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போதுபெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.
இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.
இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.
ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.
இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.
உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.
ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.
அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.
இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.
உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.
கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.
இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.
ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)
No comments:
Post a Comment