வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 20, 2011

தைபூசம்-ஒன்றை - எப்பொழுதாவது பக்தர்கள் எண்ணிப் பார்த்தார்களா?

ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி அன்றோ அல்லது அந்த நாளையொட்டியோ (ஒரு நாள் முன்பின்) வருவது தைப் பூசமாம்.

அசுரர்களை அழிக்கவேண்டி சிவனிடம் தேவர்கள் முறையிட்டனராம். தேவர்களின் முறையீட்டை ஏற்று நெற்றி நேத்திரத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் சிதறினவாம். அவற்றை அக்னி, சிவமூர்த்தியின் கட்டளையால் கங்கையில் விட்டாராம். கங்கை வெப்பம் சகிக்காது, சரவணத்தில் வைத்தனள். அந்த இடத்திலிருந்த ஆறு பொறிகளும் ஆறுருக்களாய்க் கிருத்திகை முதலறுவர் பாலூட்ட வளர்ந்து உமா தேவியார் எடுக்க ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய் ஓருருவாய் எழுந்தருளியிருந்தவர் - அவர்தான் கந்தன்.

இன்னொரு ஆபாசமான பிறப்புக் கதை ஒன்றும் உண்டு. சிவனும், பார்வதியும் யுகயுகமாகப் புணர்ந்து கொண்டிருந்தனர். தேவர்கள் அஞ்சி இடையில் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்க இந்திரியம் ஆறாகப் பெருகி ஆறுமுகமாக உருவெடுத்ததாக ஒரு கதை - அதுதான் ஆறுமுகனான, ஸ்கந்தனின் கதை (ஸ்கந்தம் என்றால் இந்திரியம் என்று பொருள்)

பார்வதி தேவியார் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தானாம். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகனாகிய கந்தன் அசுர குலத்தை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினான் என்பது கதை!

இந்துமத புளுகுகள் அனைத்துமே, பத்து அவதாரங்கள் அனைத்துமே அசுரர்களை, அரக்கர்களை அழிப்பதைக் கருவாகக் கொண்டவைதான்.

கடவுள்தான் மனிதனைப் படைத்தாகக் கூறுவார்கள். அந்தக் கடவுள் ஏன் தேவர்களையும், அரக்கர்களையும் படைக்க வேண்டும்? தேவர்களுக்கு அரக்கர்கள் - அசுரர்கள் ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்? அதற்காகக் கடவுள் ஏன் ஆயுதங்கள் எடுத்துப் போர் செய்ய வேண்டும்? அசுரர்களை ஏன் கொல்ல வேண்டும்?

இவையெல்லாம் மனிதர்களிடையே நடந்தால்கூட சிறுபிள்ளைத்தனம் என்பார்கள். கடவுள்களிடத்திலே நடந்ததாக எழுதி வைத்துள்ளார்களே - இதைவிட அசல் சிறுபிள்ளைத்தனத்தை வேறு எங்குப் போய் காண்பதோ! கடவுள் அரூபி, (உருவமற்றவர்) எங்கும் நிறைந்தவர் என்று ஒரு பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டு, கடவுள் பிறந்தார் கல்யாணம் கட்டிக் கொண்டார், வைப்பாட்டி வைத்துக் கொண்டார், கற்பழித்தார், பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்; சண்டை போட்டார் என்று சொல்லுவது அசல் முரண்பாடு அல்லவா?

பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று வேறு வெட்கம் இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்கள்; அதே நேரத்தில் இராமன் நவமியில் பிறந்தான்; கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்றும் சொல்லுகிறார்கள். இப்படி முரண்பாடாகச் சொல்லுகிறோமே என்று யாரும் வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஏன் இப்படி கதை எழுதி வைத்துள்ளார்கள்? உண்மையிலேயே தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? என்று வரலாற்றுக் கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் பொழுதுதான் ஓர் உண்மை தெரியலாயிற்று.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையை மய்யப்படுத்தியே இப்படிக் கதைகளைப் புராணங்களாகப் புனைந்து தள்ளியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

வரலாற்று ஆசிரியர்களும் வெளிப்படையாக இதுபற்றி எழுதியும் உள்ளனர்.

ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள், தஸ்யூக்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்

இது ஆரியக் கவிகள், திராவிடர்மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., இராமசாமி அய்யங்கார் எம்.ஏ., (இந்திய சரித்திரம் 16,17ஆம் பக்கங்கள்)

பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே இப்படி எழுதுகிறார்கள் என்றால் இதன் உண்மைகளை எளிதில் தெரிந்து கொண்டு விடலாமே.

தீபாவளிக் கதை என்றால் ஒரு நரகாசுரன் வதம், ஓணம் பண்டிகை என்றால் ஒரு மாவலி வதை, சூரசம்ஹாரம் என்றால் ஒரு சூரபத்மன் வதை என்று தானே கதையெழுதி வைத்துள்ளனர். அந்த  வதைக்கப்பட்ட அசுரர்கள் செத்த நாளை ஒரு திருவிழாவாக்கி - அந்த அசுரர் குலத்தவரையே கொண்டாட வைத்த சூதினை என்னவென்று சொல்வது!

மாதா மாதம் இப்படி ஒரு விழா - அசுரர்களை வதைத்த விழாவைக் கொண்டாடும்படிச் செய்து விட்டார்களே! கடவுளோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்திவிட்டதால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் எளிதாகவே முடிந்து விடுகிறது.

இதுபோன்ற விழாக்களுக்கு இல்லாததும் பொல்லாதது மான கற்பனைக் கதைகளைப் புனைந்து தள்ளியுள்ளனர். தைப் பூசத்தன்றுதான் உலகம் தோன்றியது. அப்படி யென்றால் உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே முருகனுக்குப் பார்வதி ஞானவேல் எடுத்துக் கொடுத்தது எப்படி?  உலகம் தோன்றிய அன்றே சண்டை போட வேல் எடுத்துக் கொடுத்தது ஏன் என்ற கேள்விகள் எழாதா? சாராயம் குடித்தவனைத் தேள் கொட்டினால் எப்படி உளறுவானோ, அப்படிப்பட்ட உளறல்கள் தானே இவை! சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடித் தரிசனம் தந்த நாள் இந்நாள்தான் என்று தலபுராணம் எழுதி வைத்து விட்டனர்.

ஒன்றை - எப்பொழுதாவது பக்தர்கள் எண்ணிப் பார்த்தார்களா? இவர்கள் புளுகும் இந்த சமாச்சாரங்கள் எல்லாம் இறந்த காலத்தில், கடந்த காலத்தில் நடந்ததாக எழுதி வைத்துள்ளனரே, நிகழ் காலத்தில் ஏன் இப்படி நடப்பதில்லை - சிவனும், பார்வதியும் வந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் செய்வதில்லை? என்று யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா?
பிள்ளையார் பால் குடித்தார் என்று கதை கட்டினாலும் அது இரண்டே நாளில் அதன் குட்டு உடைந்துவிடும் நிலைதான் இப்பொழுது.

சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள் என்பதால் பழைய கதைகளை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்துகின்றனர்; புதிதாகக் கரடி விட முடியவில்லை - அந்த அளவுக்குத் தமிழ் மண் தந்தை பெரியாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும் தைப்பூசம் போன்ற பித்தலாட்டத்தை உதறித் தள்ள முன்வர வேண்டும். அதுதான் மனிதனுக்கு மானமும் அறிவும் இருக்கிறது என்பதற்கு அழகாகும்.

----------விடுதலை தலையங்கம்,21-01-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]