ரௌலட் சட்ட எதிர்ப்பு (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்புக் கிளர்ச்சி (1919), ஒத்துழை யாமை இயக்கம் (1920), பிரிட்டிஷ் அரசு பரம்பரையின் கன்னாட் கோமகன் இந்திய வருகை பகிஷ்கரிப்புப் போராட் டம் (1921), வேல்ஸ் இளவரசர் வருகை பகிஷ்கரிப்புக் கிளர்ச்சி (1921), நாகபுரி கொடிப் போர் (1923), வைக்கம் சத்தியாக்கிரகம் (1924), நீலன் சிலையை அகற்றக்கோரி நடந்த வீரப் போராட்டம் (1927), சைமன் கமிஷன் எதிர்ப்புக் கிளர்ச்சி (1928), ஈடு இணையற்ற உப்புச் சத்தியாக்கிரகம் (1930), பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வெள்ளி விழாக் கொண் டாட்ட பகிஷ்கரிப்பு (1934), தனி நபர் சத்தியாக்கிரகம் (1940), ஆகஸ்ட் இயக்கம் (1942) ஆகிய விடுதலைப் போரின் கிளர்ச்சிகளையும், சத்தியாக் கிரகங்களையும் ஜஸ்டீஸ் கட்சியினர் எதிர்த்து ரகளை செய்தார்கள். அவற் றுக்குப் பல வகைகளிலும் இடையூறு களை விளைவித்தார்கள்.
இவை துக்ளக்கின் குற்றச்சாற்றுகள் (13_-7_-2011) இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை நடைபெற்றுக் கொண்டி ருந்த காலகட்டம். முக்கியமான துறைகள் எல்லாம் வெள்ளைக்காரர் களின் வசம்தான். சில குறிப்பிட்ட துறைகள் மட்டும்தான் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபைக்கு.
இதில் இரண்டையும் போட்டுக் குழப்பி நீதிக்கட்சியின் மீது அபாண்ட பழி சுமத்துவதுதான் வேடிக்கை போக்கிரித்தனம்கூட!
1922 ஆம் ஆண்டு தலைச்சேரி சப்_டிவிஷன் மாஜிஸ்டிரேட் டாட் வெல் அய்.சி.எஸ். என்ற வெள்ளைக் காரர் எல்.எஸ். பிரபு என்ற பெண்ணை காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை குறித்த வழக்கில் விசாரித்தார். நீதிபதி அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதித்தார். அந்தப் பெண் அபராதம் செலுத்த மறுத்தார். உடனே நீதிபதி அந்தப் பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
அது தாலி என்று கூட வெள்ளைக்கார நீதிபதிக்குத் தெரிய வில்லை. இதற்கும் நீதிக்கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையவே கிடையாது.
நீதிக்கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பதை சாக்காக வைத்து, தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆற்காடு இராமசாமி முதலியாரை பார்த்து திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் தாலி அறுத்த இராமசாமி முதலியாருக்கா ஓட்டு? என்று பிரச்சாரம் செய்தார் என்றால், அந்த சத்தியமூர்த்தியின் பரம்பரையின் வால் இன்னும் நீண்டு கொண்டு இருக் கத்தான் செய்கிறது என்பதற்கு அடை யாளம்தான் இத்தகு குற்றச்சாற்று.
தேர்தலில் சத்தியமூர்த்தி அய்யர் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்றால், இன்றைக்கு நிலவும் அரசியல் எல்லாம்அவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
எனக்கு வாக்களிப்பவர்களின் செருப்புக்கு என் முதுகுத் தோலைத் தந்து உதவுவேன்! பகீரதனைப் போல் வானத்துக் கங்கையைக் கொண்டு வருவேன்! நீதிக்கட்சியினர் ஆள்வதால் தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்கிற பாணியில் சகட்டு மேனிக்கு வார்த்தைகளை அள்ளிக் கொட்டும் ஆசாமி அவர்.
உண்மைக்கும் அவருக்கும் உறவு கிடையாது.
இந்தச் சத்தியமூர்த்தி, எப்படிப்பட்ட யோக்கியர் தெரியுமா? இதோ பாரத தேவி (8.12.1943) கூறுகிறது - கேண்மின்!
சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்கு கிறாராமே என்று போகிறபோக்கில் சிலர் சொல்லிவிட்டுப் போய்விடு வார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.
நாள் பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தலென்றால்கூட அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்காக கார்னீஜி நிதியா வைத்திருக்கிறார்கள்? தேர்தல் தம்பட்ட மடித்து விட்டு நானும், என் கடும்பத்தினரும் வாயு பக்ஷணம் செய்ய முடியுமா? லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம், பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால், இது லஞ்சமாகுமா? என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
(பாரததேவி 8.12.1943)
இலஞ்சம் வாங்குவதற்குப் பச்சை யாக நியாயம் கற்பிக்கும் இந்தப் பார்ப்பனர்கள்தான் மற்றவர்களைப்பற்றி விரலை நீட்டுகிறார்கள்.
அதே பாணியில்தான் குற்றச்சாற்று களை துக்ளக்கில் அள்ளி விட்டிக் கிறார் திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்.
பகிஷ்கரிப்புப் பட்டியலில் வைக்கம் சத்தியாக்கிரகத்தையும் இணைத்துள் ளார்களே. என்ன நிதானமாகத்தான் எழுதுகிறார்களா?
காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் தலைமை தாங்கி வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டம் நடை பெற்றது -திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில். இதில் நீதிக்கட்சி எங்கேயிருந்து வந்து குதித்தது?
வெள்ளைக்கார கவர்னர்களை, இளவரசர்களை யெல்லாம் காங்கிரஸ் புறக்கணித்தது போலவும், நீதிக் கட்சியினர் ஆலிங்கனம் செய்து வரவேற்றது போலவும் கதைத் துள்ளனரே -
உண்மை என்ன?
1898 ஆம் ஆண்டு சென்னையில் 14 ஆவது காங்கிரசில் லார்டு கர்சனை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லையா?
1901 இல் கல்கத்தாவில் நடந்த 17 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் 7 ஆவது எட்வர்ட் மன்னர் மகுடம் சூட்டிக் கொண்டமைக்கு மகிழ்ச்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையா?
1905 இல் 21 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் எட்வர்ட் இளவரசர் இந்தியா வருவதை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைப்பது ஏன்?
1910 இல் அலகாபாத்தில் கூட்டப் பெற்ற 25 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக் கொள்வதற்கு ராஜபக்தி ஜொலிக்கும் தீர்மானத் தீவட்டியைத் தூக்கி நின்றது காங்கிரஸ் அல்லவா?
1914 இல் சென்னையில் நடைபெற்ற 29 ஆவது காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்னை கவர்னரே விஜயம் செய்தாரே. முதலில் ஒரு ராஜபக்தித் தீர்மானம்;- கவர்னர் வந்த பிறகு மறுபடியும் இன்னொரு முறை தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னர் கர்சானுக்குச் சோப்புப் போட்டவர்கள் யார்?
1917 _ -33ஆவது காங்கிரஸ் மாநாட் டின் கதை என்ன? மாண்டேகுவை வரவேற்று விளக்குப் பிடித்தவர்கள் யார்?
எதற்கெடுத்தாலும் ம.பொ.சி. - ம.பொ.சி. என்று துணைக்கழைத்துக் கொள்கிறதே துக்ளக் அந்த ம.பொ.சியை விட்டே அதே நூலான விடுதலை போரில் தமிழகம் என்பதிலிருந்தே, எடுத்து மொத்தினால் தானே சரியாக இருக்கும்.
வடநாட்டு மாநிலங்கள் அனைத்துமே தீவிரவாதிகள் என்ற பெயரால் காங்கிரஸ் தலைவர்கள் பலர்மீது பொய் வழக்குப்போட்டு, அவர்களை அரசாங்கம் சிறையில் அடைத்துவிட்ட நிலையில், எங்களால் வடமாநிலம் எதிலும் மாநாடு நடத்த இயலாது என்று மறுத்து விட்டார்கள்.
சென்னை மாகாணத்து மிதவாதிகள் கூட்டம் நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லி 29ஆவது காங்கிரஸ் மாநாட்டை சென்னையில் நடத்த முன் வந்தார்கள். இதுகுறித்து ம.பொ.சி. என்ன எழுதுகிறார்?
காங்கிரஸ் மகாசபை கூடினால் ராஜ வாழ்த்துடன் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் அல்லவா? மகாசபை கூடும் மாகாணத்து கவர்னரிடம் வாழ்த்துச் செய்தி பெற்று அதைப் பயப்பக்தியுடன் மகாசபையின் பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று கேட்கும் நிலையில் படிக்கவும் வேண்டுமல்லவா?
சக தேசபக்தர்கள் அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை அனுப வித்து வரும் நேரத்திலே, இந்தத் தன்மானமற்ற சடங்குகளோடு மகா சபை நடத்த வடபுலத்து மாநிலங் களுக்குத் துணிவு இல்லை.
சென்னை மாகாணத்துக்குத் தான் இருந்தது.
இங்கும் மயிலாப்பூர் வக்கீல் கூட்டத் திற்குத்தான் இருந்தது. அவர்களிலும் திரு கிருஷ்ணசாமி அய்யருக்குத்தான் இருந்தது என்று லட்சுமி நாராய ணய்யர்வாளுக்கு வேண்டப்பட்டவ ரான ம.பொ.சி.யே கேலியும் கிண் டலுமாக சென்னை பார்ப்பனக் கும்பலை தன்மான மற்றவர்கள் என்று சாடியதற்குப் பிறகும் -_ நீதிக்கட்சி வெள்ளையர்களுக்கு அடி பணிந்தது என்று எழுதிட யோக்கியதை உண்டா?
1918இல் வேல்ஸ் இளவரசர் வந் தாரே. அப்பொழுது நடைபெற்ற மாநாட்டில் வருக! வருக! கொடி பிடித்த கூட்டம் எது?
அந்த வேல்ஸ் இளவரசருக்கு யதாஸ்து கூறி வரவேற்றுக் கவிதை எழுதியவர்தானே இவாளின் திருவாளர் சுப்பிரமணிய பாரதியார்?
இப்படியெல்லாம் லாலி பாடி வெள்ளைக்காரர்களின் வாலும் காலும் பிடித்த ஒரு கூட்டம் பேனாவைப் பிடித்துச் சிலம்பம் ஆட ஆசைப் படலாமா?
1929 பிப்ரவரி 17,18 ஆகிய நாட்களில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரி யாதை முதல் மாகாண மாநாட்டுக்கு யார் யாரை எல்லாம் அழைத்தார் தந்தை பெரியார்? தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்ப வர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் என்றாரே, (குடிஅரசு 30.1.1929) இன்னொரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா? மாநாட்டில் விருதுநகர் நாடார் சமையல் என்ற அறிவிப்பு - ஏன் தெரியுமா? அந்தக் கால கட்டத்தில் நாடார்கள் என்றால் தாழ்வானவர்கள் என்ற மனப்பான்மை; தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே அவர்களும் கோயிலுக்குப் போகக் முடியாத நிலை, அப்படிப்பட்ட நிலையில் சுயமரியாதை மாநாட்டு விளம்பரத்தை இப்படிசெய்கிறார்! ஆனால் காங்கிரஸ் மாநாட்டிலே ஆச்சாரம், ஜாதி பார்த்து தனி இடங்கள் ஏற்பாடாம்! புரிந்து கொள்ள வேண்டாமா பூணூல் கூட்டத்தின் பூர்வோத்திரத்தை? நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் பந்தியில் தாழ்த்தப்பட்டோர் சாப்பிட் டனர் என்பதற்காக அவர்களைக் கட்டி வைத்து அடித்து மொட்டை யடித்து அவமானப்படுத்தவில்லையா? 1885 இல் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் 1929 ஆம் ஆண்டில்தான் பூரண சுதந்திரம் என்ற தீர்மானத்திற்கு வந்தது.
1942 ஆகஸ்டுப் போராட்டம் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் எந்த முடிவுக்கு வந்தது?
முழு சுதந்திரம் வேண்டாம். சிவில் நிருவாகம் கொண்ட தேசிய நிருவாகம் போதும் என்று பிளேட்டைத் திருப்பிப் போடவில்லையா?
ஆகஸ்டு 15 _- 1947 இல் பெறப்பட்ட சுதந்திரம் கூட டொமினியன் அந்தஸ்து தானே தவிர முழு சுதந்திரம் அல்லவே!
ஒரு கால கட்டத்தில் அயர்லாந்து மாதான அன்னிபெசண்ட் தான் காங் கிரஸ் கட்சியின் மாதா! அக்கிரகாரத் தில் செல்லப் பெண்மணி! அவர் கேட்டது என்ன? தனி சுயராஜ்ஜியமா?.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு உட் பட்ட சுயாட்சி அந்தஸ்து இந்தியா வுக்கு வழங்கப்பட வேண்டும் (25.9.1915) என்றுதானே கேட்டுக் கொண்டார். ஜாலியன்வாலா படுகொலையை வெள்ளைக்காரர் சார்பில் ஆதரித் தவர்தானே இவர்? மறுக்க முடியுமா?
இந்திய மந்திரியின் நேர்ப் பார்வை யின்கீழ் திராவிட நாடு ஒரு தனி நாடா கப் பிரிக்கப்பட வேண்டும் என்று நீதிக் கட்சி கோரினால் அது குற்றம்; அதே கோரிக்கையை வேறு வார்த்தைகளில் காங்கிரஸ் கோரினால் அது சிலாக் கியமா? மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்கிற நீசத்தனம் தானே இது!
1916 இல் தொடங்கப்பட்ட நீதிக் கட்சி 1940 ஆகஸ்டு நான்கில் திருவாரூ ரில் நடைபெற்ற 15 ஆவது மாகாண மாநாட்டில், திராவிடர்களுக்கான கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகி யவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது உண்மை தான்.
1944 ஆகஸ்டு 27 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு திருச்சி புத்தூர் மைதானத்தில் (29-5-1945) நடைபெற்ற 17 ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைத்து எழுதுவது ஏன்?
1 (அ) திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில் துறை, வியாபாரம் ஆகிய வற்றில் பூரண சுதந்திரமும் ஆதிக்கமும் பெறவேண்டும்.
(ஆ) திராவிட நாடும், திராவிட நாட்டு மக்களும், திராவிட நாட்ட வரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்தி லிருந்தும் விடுவிக்கப் பட்டுக் காப்பாற் றப்பட வேண்டும்.
(2) திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு, அவை சம்பந்த மான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமு தாயத்திலும், சட்டத்திலும் சம உரிமை யும், சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைத்து எழுதினால்தான் மறைய வர்களின் பிழைப்பு நடக்குமோ!
அதே நேரத்தில் காங்கிரஸ் மாநாட்டின் யோக்கியதை என்ன? 1900_த்துக்குப் பின்னாலே நடந்த பல காங்கிரஸ் மாநாடுகளில் இந்து மகாசபை மாநாட்டையும் அதே காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலேயே நடத்தினார்களே! இதன் பொருள் என்ன? காங்கிரஸ் என்பது குறிப்பிட்ட மதத்தின், குறிப்பிட்ட உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் நலனுக்காக, வளமைக்காக நடத்தப்பட்டது என்பது விளங்கவில்லையா?
காங்கிரசின் போக்கு இந்து மகா சபையை அண்டி இருப்பதைப் பார்த்த பிறகும், முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனி அமைப்பைத் தோற்றுவித்தது எப்படி தவறாகும்?
அந்த ஜாதி அபிமானத்துடன்தான் துக்ளக்கும், லட்சுமி நாராயணன்களும் நீதிக்கட்சியைத் தூற்றியும், அன்றைய காங்கிரசின் கால் பிடித்தும் எழுது கின்றனர். பஞ்சாபைப் பொருத்தவரை இந்து மகாசபைக்கு யார் தலைவரோ அவரேதான் காங்கிரசுக்கும் தலைவர்!
கல்கத்தாவில் முதல் காங்கிரஸ் மாநாடு. பம்பாயில் இரண்டாவது மாநாடு, மூன்றாவது மாநாடோ சென்னையில். இம் மாநாடு பற்றி சுதேசமித்திரனில் வெளிவந்த விளம்பரம் என்ன தெரியுமா?
இவ்வருஷத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புது அம்சம். சாதி, ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் பிரத்தியேகமாக ஒரு பங்களாவை அவர்களுடைய சாதி, ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றன - என்பதுதான் சுயஜாதி மித்திரனின் அறிவிப்பு.
இந்த யோக்கியதையில் இவர்கள் கதை ஊளை நாற்றம் எடுக்கிறது. அதே நேரத்தில் நீதிக்கட்சியின் கோட்பாடு என்ன?
வெள்ளுடை வேந்தர் நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான பிட்டி தியாகராயர் என்ன சொல்லுகிறார்?
பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை; பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகை சாதி இந் நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ் வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார்; முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன் றனர்; தோற்றனர்.
இராமானுஜரும், புரோகிதர் கொடுமைகளைக் களைந் தெறிய ஒல்லும் வழி முயன்றார்; தோல் வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேலும் மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண் டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந் திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு -(1917-_இல் நடை பெற்ற சென்னை மாகாண முதலாவது ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் பேசியது.)
காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலேயே இந்து மகா சபை மாநாடு நடத்திய பார்ப்பன காங்கிரஸ் எங்கே ? சமத்துவ சங்கநாதம் செய்யும் இந்த நீதிக்கட்சி எங்கே?
காங்கிரஸ் மாநாட்டில் ஆச்சாரம் பேணும் அவர்களுக்கு தனி பங்களா ஏற்பாடு செய்யும் போக்கு எங்கே? ஜாதியைக் களைந்து சமத்துவப் பயிர் வளர்க்கும் பெருமகனார்களின் நீதிக் கட்சி எங்கே?
திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பிலே தீண்டாமை ஒழிப்பு மாநாடு மதியம் தடபுடலான விருந்து பிரபல தேசப்பக்தரான விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமி நாடார் சாப்பாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தார். அப்பொழுது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சொன்னார்கள். நாடாரே! உங்களுக்கு சாப்பாடு இங்கு இல்லை; அங்கே போங்கள் என்றார்கள்.
அதற்கு அவர் நானும் சைவம்தானே என்றார். சைவத்திற்கு இல்லை; நீங்கள் அங்கே போங்கள் என்று உரக்கச் சத்தம் போட்டுச் சொன்னார்கள் பார்ப் பனர்கள்.
கோவிந்தசாமி நாடாருக்கோ ஆத்திரம்! மாநாட்டை விட்டு வெளி யேறி தான் அணிந்திருந்த கதர்ச் சட் டையை நடுத் தெருவிலே கொளுத் தினார்.(Genisis of the Self - Respect Movement page 53) இவ்வளவுக்கும் அது தீண் டாமை ஒழிப்பு மாநாடே! இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக்கட்சிபற்றியும் சுயமரியாதை இயக்கத்தை பற்றியும் நாக்கூசாமல் உளறலாமா?
1927ஆம் ஆண்டு மதுரையில் நெல்லை எஸ். குமாரசாமி ரெட்டியார் தலைமையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் சென்னை மாநில கவர்னர்மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் போட்டார்களே பார்ப்பனக் காங்கிரசு அப்பொழுது நினைத்தும் பார்க்க முடியுமா?
இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும் என்று குடிஅரசு இதழில் (29.10.1933 பக்கம் 10,11) எழுதியதற்காக பிரிட்டீஷ் அரசால் அரசு வெறுப்புக் குற்றஞ்சாட்டப் பெற்று, தந்தை பெரியாருக்கு ஒன்பது மாத தண்டனை, ரூ.300 அபராதம் செலுத்தாவிடில் மேலும் ஒரு மாதம் தண்டனை குடிஅரசின் பதிப்பாளர் என்கிற வகையில் தந்தை பெரியார் அவர்களின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கும் 6 மாதத் தண்டனை ரூ.300 அபராதம், கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதத் தண்டனை என்கிற வரலாறு எல்லாம் தெரியாமல் வாய்ப் புளித்ததோ மாங் காய் புளித்ததோ என்று பார்ப்பனர்கள் கிறுக்கலாமா?
சென்னை மாநாட்டில் சென்னை யிலிருந்து கூடிய பிரதிநிதிகள் 361 என்றால், அதில் பார்ப்பனர்கள் மட்டும் 138 என்றால், அந்தக் காலத்தில் அது அவாள் காங்கிரசாகவே இருந்தது என்பதற்கு வேறு அத்தாட்சியும் தேவையோ?
இந்த மாநாட்டில் கும்பகோணம் சங்கரமடத்துப் பிரதிநிதியும் கலந்து கொண்டார் என்றால் அந்த மாநாடு அசல் அக்கிரகாரத்து உக்கிராணம் தானே! இப்படிப்பட்ட காங்கிரசைப் பார்ப்பனர்கள் அந்தக் காலத்தில் கட்டிக் கொண்டு அழுததில் ஆச்சரியம் ஏது? அசல் அக்கிரகார அந்த கால கட்டக் காங்கிரசை இந்த 2011லும் துக்ளக் தூக்கிச் சுமக்க ஆசைப்படு வதன் சூட்சமமும் இதுதான்!
பாலகங்காதர திலகர் மறைந்த போது காந்தியார் அங்கு சென்றார் (1-8-1920). திலகரின் பாடையைத் தூக்குவதற்குக் காந்தியார் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன்; இந்தப் பாடையைத் தொடக் கூடாது என்று கூறினார்களே! காந்தியாருக்கே அப்பேர்ப்பட்ட அவமரியாதை வருணாசிரமத்தின் பெயரில்!
இந்த நிலையில் பூணூல் தைரி யத்தில் இடக்கு மடக்காக எழுதினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ராஷ் பிகாரி கோஷ் என்பவர். அந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் மேடை மீது செருப்புகளை வீசியக் கூட்டத்திற்குத் தலைமை வகித் தவர் தான் இந்த பாலகங்காதர திலகர்.
காரணம் மகாசபைக்குத் தலைமை வகிப்பவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதுதான். இந்த நிகழ்ச்சியை பல பொதுக்கூட்டங்களிலும் விரிவாக எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார்.
இந்தத் திலகர்தான் அரசியலில் இந்து மத நஞ்சை வெகுவாகத் திணித்தவர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் முன் னோடிப் பிதாமகர். விநாயகக் கடவுளை முன்நிறுத்தி அரசியலை மாசுபடுத்திய முதல் குற்றவாளி. விநாயகர் ஊர்வலம் என்ற நோய் நாடெங்கும் பரவச் செய்து அதன் மூலம் பார்ப்பனீய இந்து மத ஆதிக்கத்தினைத் தூக்கி நிறுத்தியவர்.
புனேயில் பிளேக் நோய் மூண்டது. அதற்குக் காரணம் எலிகள்தானே? அவற்றை வேட்டையாடியது வெள்ளை அரசாங்கம். அப்பொழுது திலகர் என்ன செய்தார் தெரியுமா?
அநியாயம்! அநியாயம்!! வெள்ளைக் காரன் நமது விநாயகரின் வாகனமான எலிகளைக் கொல்லுகிறான்; நமது கலாச்சாரத்தில் தலையிடுகிறான் என்று வெறியைக் கிளப்பி விட்டார். அதன் விளைவு இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், இந்தத் தேசப் பக்தித் திலகத்துக்குப் பதினெட்டு மாதம் தண்டனை! அசிங்கத்துக்குப் பொட்டு வைத்த கதையல்லவா இது?
எவ்வளவு ஜாதி வெறி பிடித்தவர் என்பதற்கு எடுத்துக் காட்டுகள் உண்டு.
சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி தலை தூக்கிய கால கட்டம். பார்ப்பனர் அல்லாதாரும் சட்டமன்றம் செல்லத் தீர்மானித்த அந்தப் பொழுதில் திலகர் என்ன சொன்னார் தெரியுமா?
இப்பொழுது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்பு தைக்கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், சிறு கடைக் காரனும், (The Cobblers, The Oil Mongers, and petty-traders) சட்டசபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய் கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்ற வரைமுறை கிடையாதா? என்று பேசினாரே!
இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்ட வர்களுக்குச் செய்தது என்ன? (What Gandhi and Congress have done to untouchables) என்ற நூலில் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளாரே!
குளவிக் கூட்டில் கைவைக்கும் வேலையில் பார்ப்பனர்கள் இறங்கினால் அதன் வீச்சை, விளைவைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.
துக்ளக் மூலம், லட்சுமி நாராயண அய்யர் பார்ப்பன நச்சுத் தலையைக் காட்டுவதும் ஒரு வகையில் நல்லதுதான்.
அப்பொழுதுதானே பார்ப்பனர் அல்லாத நல்லிளஞ் சிங்கங்கள் அடையாளம் காணமுடியும்!
--------------- - கலி.பூங்குன்றன் (மீண்டும் சந்திப்போம்), விடுதலை ஞாயிறு மலர், 13-08-2011
No comments:
Post a Comment