காவி பயங்கர வாதத்தைப் பற்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குரல்
கொடுத்தார் என்பதற்காக லிபரான் கமிஷன் குற்றவாளிகள், காமராசரை உயிரோடு
எரிக்க முயன்ற காவிக்கூட்டம், காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காவிக்
கூட்டத்தினர் அவரைப் பதவி விலகச் சொல்வதா? அத்துணை முற்போக்கு கட்சியினரும்
காவிக் கூட்டத்தின் திமிர்வாதப் போக்கைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும்
என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டு
கோள் விடுத்து அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
காவி பயங்கரவாதம் குறித்து பேசிய மத்திய உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம்
செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளதாம்!
இதைவிட முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் மோசடி வேலை அண்மைக்கால அரசியலில் வேறு எதுவும் இல்லை!
காவி பயங்கரவாதம் பற்றி ப. சிதம்பரம்
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கடந்த
புதன்கிழமை டில்லியில் நடைபெற்ற, மாநில காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டில்,
காவி பயங்கரவாதம் புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது என்று கூறியதோடு,
பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம்தான் காரணம் என்று
விளக்கியுள்ளார்!
இதுபற்றி விடுதலையில் கடந்த இரண்டு நாள்களாக விவரமான ஆதாரங்களுடன் தலையங்கமே தீட்டியுள்ளோம்.
ஆத்திரம், பொத்துக் கொண்டு வருவானேன்!
உள்துறை அமைச்சர், காவி பயங்கரவாதம்! என்று
சுட்டிக்காட்டியவுடன், ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க., அதன்
சுற்றுக் கோளான சிவசேனா போன்ற கட்சிகளுக்கு ஆத்திரம் பொங்கி, பொத்துக்
கொண்டு வருவானேன்?
ஊறுகாய் ஜாடியில் போட்டதன் விளைவு
பாபர் மசூதி இடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு வரை
இராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து,
துப்பாக்கிகள், அபிநவ பாரத் என்ற பயங்கரவாதிகள் காவி உடை அணிந்து
பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை உலகே அறியும் உண்மையாயிற்றே!
வழக்குகள் இன்னும் இருக்கிறது! நீதிபதி லிபரான் கமிஷனின் அறிக்கையை, ஆளும்
காங்கிரஸ் கூட்டணி ஊறுகாய் ஜாடியில் போட்டு வைத்ததால், பா.ஜ.க., மற்றும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இப்படி கொக்கரிக்கின்றன.
பதவி விலக வேண்டுமாம்!
உண்மையைக் கூறியதால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்
பதவி விலக வேண்டுமா? இதைக் கேட்க, குற்றவாளிகள் பட்டியலில்
வழக்குமன்றத்தில் உள்ள இவர்களுக்கு எந்த உரிமையும் - தார்மீக உரிமையும்
கிடையாதே!
பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கோலுக்கும் நோகாமல்...
இந்தக் காவிக் கூட்டத்தை மென்மையாக, பாம்புக்கும்
நோகாமல் பாம்படித்த கோலுக்கும் நோகாமல் மத்தியில் உள்ள அய்க்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு - மன்மோகன்சிங் அரசு - நடத்துவதால் தான், சட்டம்
அதன் கடமையைச் செய்வதில் உள்ள மெத்தனம் மேலோங்கியிருப்பதால்தான், இப்படி
உண்மையைக் கூறும் உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லிக் கேட்கிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் கோட்சே
என்பதை அவரது தம்பி கோபால் கோட்சே ஒரு பேட்டியில் கூறியதோடு, கோட்சே வரலாறே
கூறுமே - அவர்தானே காந்தியைக் கொன்ற மதவெறி கொலை பாதகன்? அதுதானே காவி
பயங்கரவாத துவக்கம்?
3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 3 தடவை தடை செய்யப் பட்டதே எதற்காக? அதன் அதீதமான நடவடிக்கைக்குத் தானே!
இந்தியாவில் மூன்றுமுறை தொடர்ந்து மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு -ஆர்.எஸ்.எஸ். காவி அமைப்பு.
காமராசரை கொளுத்த முயன்ற கூட்டம்
பச்சைத் தமிழர் காமராசர் அகில இந்திய காங்கிரஸ்
தலைவராக இருந்தபோது, அவர் வீட்டையே தீவைத்துக் கொளுத்தி, உயிரோடு கொல்ல
முயற் சித்தகூட்டம் இந்த நிர்வாண காவிச் சாமியார் கூட்டம் அல்லவா?
கண்டனம் தெரிவிக்க வேண்டும்
இவர்கள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பதவி
விலக, அல்லது பிரதமரை நோக்கி விலக்குங்கள் என்று கூற எந்த வகையில்
யோக்கியதையோ, உரிமையோ, உடையவர்கள்?
இதனை அத்துணை முற்போக்குக் கட்சிகளும் -
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அத்துணை பேரும் - காவியின்
இந்த திமிர்வாதப் பேச்சை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்ப உடனடியாக முன்வர
வேண்டும்.
அனுமதிக்கக் கூடாது!
இது சிதம்பரம் என்ற தனிநபர், தனி அமைச்சரைப் பொறுத்த
விஷயம் அல்ல; மதவெறிச் சக்திகளின் குரல் ஓங்குவதை, மதச் சார்பற்ற-
செக்யூலர் சக்திகள் அனுமதிக்கலாமா என்கிற பிரச்சனையாகும்!
லாலுபிரசாத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளுக்குத் தடையே விதிக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார்!
அப்படிப்பட்ட நடவடிக்கைகள் வந்தால் ஒழிய, இந்தக் காவி
பயங்கரவாதம் பாபர் மசூதி இடிப்பு முதல் மாலேகான் குண்டு வெடிப்புவரை
தொடரும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட முடியாது.
சமரசம் கூடாது!
பயங்கரவாதத்தில் முஸ்லிம் தீவிரவாதம், இந்து
தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம்
செய்துக் கொள்ளக் கூடாது.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை, உண்மை விளக்கத்திற்காகப் பாராட்டுகிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்.
29.8.2010
1 comment:
காமராஜரை அண்டங்காக்க என மேடையில் பேசிய ஒரு கட்சியை என்ன செய்யலாம்
காமராஜரை பற்றி பேச தமிழனுக்கு தகுதில்லை
மக்களுக்காக உழைத்த ஒரு நல்ல தலைவரை தேர்தலில் தோல்வியடைய செய்த உலக மகா நால்வர்கள் அல்லவே நாம்
Post a Comment