ஆழம் நிறைந்த கருத்துகளை ஆவேசத்துடன் வெளிப்படுத்த இயன்ற அரசியல் வாதியும் பத்திரிகையாளரு மான அருண் ஷோரி அண்மையில் கரண் தாபருக்கு அளித்த நேர்காணல் உடனடியாக உலகெங்கும் ஒளிபரப்பப் பட்டது. அனைவராலும் பெரிதும் மதிக்கப் பட்ட இந்த அரசியல் விமர் சகர், கரண் தாபரின் கேள்விகளால் தூண்டுதல் பெற்று, பிரதமர் நரேந்திர மோடி பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியபோது அனல் கக்கினார் என்றே கூறவேண்டும்; தனது கருத்து களை வெளிப்படுத்தியபோது, வார்த்தை களை அறைகுறையாக மென்று விழுங்காமல், சற்றும் தயக்கம் இல்லால் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அவரது பேச்சு ஒரே சீராக ஆற்றொழுக்கு போல அமைந்திருந்தது. நாட்டில் எப்படிப் பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிய தனது கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரி வித்த அவரது நேர்காணல் காட்சி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தது.
அவரது சொற்கள் மட்டுமல்ல; அவரது அங்க அசைவு களும் பெரும் அளவிலான மக்களின் கவனத்தையும், கருத்தையும் ஈர்ப்பதாக இருந்தன. அது ஒரு நேர்காணலைப் போலவே இல்லை; துணிவு மிகுந்த மாவீரர் ஒருவரின் தீரம் மிகுந்த செயலைப் போலவே இருந்தது. தூண்டுதல் பெற்றவராக மட்டுமன்றி, தடுத்து நிறுத்த இயலாதபடி ஒரு நாடக பாணியில் அந்த நேர்காணல் அமைந்திருந்தது.
அவரது கைகளும், விரல்களும் பல வளைவுகளையும், நிழல் களையும் உருவாக்கிக் காட்டின. மோடி அரசின் பல தவறான செயல்களைப் பற்றி அவர் விவரித்தபோது, அவரது கண்கள் மின்னல் அடித்து ஒளிர்ந்தன; அவரது உதடுகளில் குறும்புத்தனமான புன்னகை தவழ்ந்தது.
ஒரு பத்திரிகை ஆசிரியரும் நுண்ண றிவாளருமான அவரது நேர்மையான நடத்தைக்காக பலராலும் அஞ்சப்பட்டு, ஈர்க்கப்பட்டவர் அவர். நேர்மையும் நேசமும் கொண்ட ஒரு மாமனிதர் அவர். இந்தியா முன்னேற்றம் அடைந்து வளம் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பது பற்றியோ, பொதுவாழ்க்கையில் நிலவும் ஊழல் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பைப் பற்றியோ சந்தேகம் எழுப்புவதற்கு இதுவரை எவரும் துணிந்ததில்லை.
இம்முறையும் தனது கருத்தை வெளிப்படுத்த அவர் சற்றும் தயங்கவே இல்லை; தன்னால் குறை காணப்பட்ட எவரைப் பற்றியும் விமர்சனம் செய் யாமல் விட்டுவிடவுமில்லை. சிந்தனை யைத் தூண்டும் கூரிய நேர்காணல் ஒன்றை அவர் அளித்தார். குறிப்பாக, நீங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி எங்கே? என்று கேட்ட ஷோரி,
பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்போது மட்டும்தான் ஊழலுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் வெற்றி பெற இயலும் என்றும் கூறினார். இதற்கு லலித் மோடி போன்றவர்களின் பெயர்களை எடுத்துக் காட்டாகக் கூறினார். மேலும் ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பு களின் அடிப்படையில்தான் ஊழல் புகார்களின் மீதான நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அதன் பின்னர்தான் நரேந்திர மோடியின் மீதான ஒட்டு மொத்த தொடர் தாக்குதல் வந்தது. மோடி ஆட்சி செய்யும் பாணியைப் பற்றி கண்டனம் தெரிவித்த ஷோரி, மோடியின் ஆட்சியில் எவரையும் கலந்தாலோசிப்பது என்பதே இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
தந்திரமும் வஞ்சனையும் கொண்டவர் என்று மோடியைப் பற்றி வர்ணித்த அவர், தான் செய்த தவறுகளுக்கு சற் றுமே வருந்தாதவர்தான் மோடி என்று குற்றம் சாட்டினார். வேண்டு மென்றே இந்திய மக்களிடையே பிளவை மோடி ஏற்படுத்துவதாக கூறினார். துடைத் தெறியப் பயன்படுத்தப்படும் காகித கைக்குட்டைகளைப் போலவே மக் களைக் கருதி மோடி நடத்துவதாக ஷோரி கூறுகிறார்.
ஒவ்வொருவருட னும் மோடி குத்துச் சண்டைப் போட்டி நடத்துவதாக அவர் கூறு கிறார். தன்னால் வெற்றி பெற முடியும் என்பதை ஒவ்வொரு இரவும் தனக்குத்தானே உறுதி செய்து கொள்ள முனையும் காதல் மன்னன் மோடி என்று மிகத் துணிவுடன் ஷோரி கிண்டல் செய்தார். ஒரு தனி நபர் ஆட்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சிக்கு எந்த வித கட்டுப் பாடோ, சமன்பாடோ கிடையாது என் றும் கூறினார். தனது கருத்தை ஏற்றுக் கொள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் கூறுவதைத்தான், அதுவும் அவர் கேட்க விரும்புவதைக் கூறுபவர்களது பேச்சை மட்டும்தான் மோடி கேட்பதாக ஷோரி கூறுகிறார்.
மோடியின் ஆட்சியை ஷோரி கடுமையாக விமர்சித்திருந்தது, மிகத் துணிவுடனும், வெளிப்படையாகவும், எத்தகைய முக்கியமான நம்பிக்கை களோ, மதிப்பீடுகளோ பின்பற்றப்பட வில்லை. அவர்களது ஒரே நோக்கம் அடுத்த தேர்தலில் எப்படியாவது, என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்று கூறி யதே ஆகும். அதைப் பற்றி மேலும் விவரிக்கும்படி கேட்கப்பட்டபோது,
இதற்கு முன் எப்போதுமே எவருமே கூறியிராத கருத்தை மிகுந்த துணிவுடன் கூறி, இதற்கும் மேலான முறையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும், மக்களின் அன்றாட நல்வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும், வன்முறைச் செயல்களை கட்டவிழ்த்துவிடும், மதத்தின் அடிப்படையில் மேலும் மக்களை பிளவு படுத்தும் முயற்சிகள் போன்ற ஆபத்துகள் எதிர்காலத்தில் நிகழ உள்ளன என்று மக்களை அவர் எச்சரித்தார்.
மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பசுபாதுகாப்பு என்ற ஏமாற்று செயல்திட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு செயல்திட்டம் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார். பசுபாதுகாப்பு திட்டம் எதிர்பார்த்த அளவில் பயன்தரவில்லை என்பதே இதன் காரணம் என்றும் அவர் கூறினார். ஆட்சியாளர்களுக்கு சங்கடம் அளிக்கும் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டு எழுப்புபவர்களின் குரல்வளை நெறிக் கப்படும்.
பிரதமர் மோடி இந்தியாவுக்கு ஏற்ற நல்ல பிரதமர் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்களா என்று தாபர் கேட்டபோது, இந்தியா இப்போது ஆபத்து நிறைந்த வழியில், திசையில் நடத்திச் செல்லப்படுகிறது என்று ஷோரி பதிலளித்து, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் எதிர்காலம் இல்லை என்ற எதிர் மறை எண்ணத் துடன் தனது நேர்காணலை நிறைவு செய்தார். இந்த ஒளிவு மறைவு அற்ற நேர்காணலில், பல முக்கியமான செய்திகள் முதன் முதலாக இடம் பெற்றுள்ளன. என்றாலும், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகத்தான் ஷோரி இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று காரணம் கற்பிக்க முயலும் சந்தர்ப்ப வாதிகளும் இருக்கவே செய்வர்.
ஆனால் இதில் உள்ள உண்மை என்ன வென்றால், ஆற்றல் மிகுந்த தடை களை உடைத்தெறிந்து விட்டு உள்ளே நுழைந்து, தான் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்வதில் ஷோரி வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான். அவரிடமிருந்து வெடித்து வெளிவந் துள்ளவை எல்லாம், ஏமாற்றம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் புலம்பல் அல்ல. அவருக்கு நிதி அமைச்சர் பதவி அளிக்காத காரணத்தால்தான் மோடி மீது ஷோரி குறை கூறுகிறார் என்று சில சில்லறை விமர்சகர்கள் கூறவும் கூடும். ஆனால் அவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.
ஷோரி அமைச்சர் பதவியை விரும் பியிருக்கவும் கூடும்; அது கிடைக்க வில்லை என்று ஏமாற்றம் அடைந்து வருந்தியும் இருக்கலாம்; அவர் தொடர்ந்து கோபமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் கூறியதன் பின்புலத்தில் உள்ள கவலையை எவராலாவது மறுக்க முடியுமா? மக்கள் எதையெல்லாம் உணர்கிறார்களோ, எதையெல்லாம் அனுபவிக்கிறார்களோ அவற்றைத்தான் அவர் கூறியிருக்கிறார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கான ஒரு சீரான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறுவதை எவராலாவது மறுக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இயலுமா?
தனது மனதில் உள்ளதையெல்லாம் அருண்ஷோரி கொட்டித் தீர்த்து விட்டார். அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேருமா என்பது அய்யத்திற் கிடமான கேள்வியாகும். அவர் ஒரு மூத்தகுடிமகன்; அவர் உடலால் மெலிந்து தளர்ந்துள்ளவர். நோயாளி யான மனைவியையும், மாற்றுத் திறனாளியாக உள்ள ஒரு மகனையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர் அவர். தனது மனதைத் திறந்து பேசியதற்காக அவருக்கு என்ன தீங்கு அவர்களால் செய்துவிட முடியும்? எதுவுமே செய்யமுடியாது.
வரித்துறை யினரால் தொல்லைப் படுத்தப்பட இயன்ற அளவுக்கான சொத்தோ, வருமானமோ அவருக்கு இல்லை. அவரது கடந்த காலத்தைப் பற்றி தோண்டி எடுக்க மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ளக் கூடிய எந்த ஒரு முயற்சியும், காலத்தை வீணாக்கக் கூடிய வீண் முயற்சியே. போராட்டக்காரர் களாலும் பேரணிகளினாலும் ஷோரியைப் போன்ற மக்களை அச்சுறுத்த முடியாது. அவரது வாழ்க்கையில் இதைப் போன்றவைகளையும், இன்னமும் அதிகமானவை களையும் கூட அவர் பார்த்திருக்கிறார்.
இதில் உள்ள விஷயம் என்ன வென்றால், நம்மால் அருண் ஷோரி யையோ அவரது இந்த நேர்காண லையோ அலட்சியப்படுத்தி விட முடியாது என்பதுதான். மோடியாலும் அலட்சியப் படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அவருக்கு சங்கடம் அளிக்கும், ஆனாலும் அவரால் எதிர்கொண்டே ஆக வேண்டிய உண்மைகள் ஆகும். அதைத்தான் நாம் இங்கே, இப்போதே செய்கிறோம். இவை ஏதோ கசப்புணர்வு கொண்ட, ஏமாற்றத்தால் கோபமடைந்துள்ள ஒரு கிழவர், தனது கோபத்தை வெளிப் படுத்த அரசின் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை, தனது சுயவிளம்பரத் துக்காக கூறுபவை அல்ல.
அவர் அளித்துள்ள பல எச்சரிக்கைகள் பற்றியும், அவரது நெஞ்சார்ந்த அறிவுரைகள் பற்றியும் நாம் நெருங்கிய கவனம் செலுத்தத் தவறினோமானால், நமக்கு நாமே பெருந்தீங்கு இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம். ஷோரி கவலை அடைந்துள்ள ஒரு மனிதராகும். அவரைப் போலவே நாமும் கவலைப் படுபவர்களாக இருக்க வேண்டும். அவர் நமக்கு எச்சரிக்கை அளிக்கும்போது, அதனை நாம் கவனிக்க வேண்டும்.
ஷோரியின் சொற்களைக் கேட்காமல் முதுகைத் திருப்பிக் கொண்டு நாம் செல்வோமானால், அதற்கு நாம் மிக அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு செய்வது நம்மால் இய லாததும், தேவையற்றதும் ஆகும். மோடி யாலும் கூட அதனை கவனிக்காமல் புறக்கணித்துவிட முடியாது.
நன்றி : டெக்கான் கிரானிகிள் 14-05-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
Source: http://www.viduthalai.in/page2/123455.html