வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 04, 2016

மாலன் செய்கிற வாதம் மொக்கையானது

குஜராத் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் பி.பி. படேல் உட்பட 36 பேர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். சதித்திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டை நீதிபதி பி.பி. தேசாய் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார்.இது பற்றிய விவாதம் தந்தி தொலைக்காட்சியில் கடந்த 3 ம் தேதி காலையில் நடைபெற்றது. கருத்து சொன்னவர் பிரபல எழுத்தாளர் மாலன் .

இந்தத் தீர்ப்பின் விவரங்களைச் சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 60 பேரில் 36 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்களே இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நெறியாளர் கேட்கிறார்.“நீதிமன்றம் என்ன செய்யும், சாட்சிகள் அடிப்படையில் தான் அது தீர்ப்பு சொல்ல முடியும். நமது நீதி முறை அப்படி இருக்கிறது.” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொன்னார் மாலன். ஆமாம் ஆமாம் என்று நெறியாளரும் தலையாட்டி ஆமோதித்துவிட்டார். அவரின் வயதுக்கு அதைத்தான் செய்ய முடியும். கடந்த கால அனுபவங்களை எடுத்துச்சொல்லி மாற்று வினா தொடுக்க இயலாத அளவுக்கு இளம் வயது நெறியாளருக்கு .ஆனால் ‘அனுபவசாலி’யான மாலனின் பதில் தான் சில சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது. நீதிமன்றங்கள் எப்போதுமே சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறதா?மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினார்கள். இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தை தனது நிலைக்கு ஏற்ப வியாக்கியானம் செய்தது. அதாவது மக்கள் அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்று சொல்வதால் எந்த வகையிலும் இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காடு என்ற அளவைத் தாண்டக் கூடாது என்றது.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இடஒதுக்கீட்டிற்கு மட்டும் தான் பொருந்துமா? செல்வ வளத்தில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்து அளித்துவிடுமாறு நீதிமன்றம் சொன்னதா? ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய நிலப் பகிர்வு மிகமிக முக்கியம் என்று மண்டல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளதே! அதனை அரசு செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதா? இல்லையே ! மாறாக 50 விழுக்காடு அளவுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றதால் தமிழகத்தின் 69 விழுக்காடு ஒதுக்கீடு இப்போதும் தொங்கலில் தான் இருக்கிறது.

அப்படியென்றால் தேவைப்படும் போது நீதிமன்றம் சட்டத்தை வளைத்துக் கொண்டு வியாக்கியானம் அளிக்கும் என்பது விளங்குகிற தல்லவா?இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற மாதிரி ஒரு தீர்ப்பைத் தமிழகம் சந்தித்தது.1968 ஆம் ஆண்டு கீழ வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கோர சம்பவம் தொடர்பான வழக்கில் நாகை விசாரணை நீதிமன்றம் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரும் மற்ற குற்றவாளிகளும் மேல் முறையீடு செய்தனர். கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சொன்ன காரணம் என்ன தெரியுமா?“இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விசயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள் . முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்.”(நின்று கெடுத்த நீதி பக்கம் 435)நிலம் வைத்திருப்பவர்களும் கார் வைத்திருப்பவரும் குற்றச் செயலில் ஈடுபடமாட்டார்கள் என்று எந்த சட்டமாவது சொல்லியிருக்கிறதா? ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குஜராத் படுகொலை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலிருந்து அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதையும் இந்தப் பின்னணியுடன் எண்ணிப்பார்ப்பதில் தவறு இல்லை.எனவே சட்டம், சாட்சிகள் இவை மட்டுமே நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் இயக்குகின்றன என்று மாலன் மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிற வாதம் மொக்கையானது என்பது தெளிவு.`இயற்கை நீதி, சூழ்நிலை சாட்சியங்கள் என்பதும் கூட நீதிமன்ற மொழிகளில் உண்டு. இதையும் மாலன் மறந்து விட்டுத் தான் பேசுவார் அவரது ``சார்பு’’ அத்தகையது.

குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகள் படுகொலை வழக்கின் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடி மீது படிந்துள்ள கறை. ஏனென்றால் சம்பவம் நடந்த 2002 ல் அவர் தான் குஜராத் முதலமைச்சராக இருந்தார் என்று தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திரசச்சார் கூறியிருப்பதும் இந்த வழக்கில் குற்றச்சதிக்கான (120-பி) காரணங்களை விசாரணை அறிக்கையில் விரிவாகக் கூறியிருந்தேன். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டதற்குகாரணம் தெரியவில்லை. தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் கூறியிருப்பதும் இணைத்தே பார்க்க வேண்டியவை. மாலனின் பார்வைக் கோளாறு ஒதுக்கப்பட வேண்டியது.

-மயிலை பாலு

நன்றி: தீக்கதிர்,05-06-2016


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]