வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, October 15, 2008

தீபாவளியா?

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமோ?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்றுகேட் பவனை, "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணரு நாள் இந்தநாள்
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவரெ!

- பாவேந்தர் பாரதிதாசன்



இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.


இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]