வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, October 01, 2008

பெரியாரின் நூல்கள் மற்றும் உரைகள் நாட்டுடமையானால் .............

படைப்பாளிகளின் படைப்புரிமையைக் காக்க, சென்ற மாதத்தில் சென்னையில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள `சித்திர எழுத்து' என்கிற அமைப்பு சென்ற ஆகஸ்ட் 9 அன்று இக்கூட்டத்தை நடத்தியுள்ளது. எழுத்தாளர்கள் சி. மோகன், ராஜகோபால், ரவி சுப்பிரமணியன், கி.அ. சச்சிதானந்தம், ந. முத்துசாமி, தட்சிணாமூர்த்தி, சா. கந்தசாமி முதலியவர்களும், ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோரும் அதில் பங்கு பெற்றுள்ளனர். நேரில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் தனது ஆதரவை கோணங்கி தெரிவித்துள்ளார். பிரபஞ்சன் கட்டுரை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களின் ஓவியமெனப் போலி ஒன்றை சென்னை கண்காட்சிக் கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றதைக் கண்டித்து இக்கூட்டம் நடைபெற்றது.
நான் உள்ளூரில் இல்லாததால் இதில் கலந்துகொள்ள இயலவில்லை. இருந்திருந்தால் நிச்சயம் பங்குபெற்றிருப்பேன். எனக்கும் இதையொத்த ஒரு அனுபவம் சென்ற மாதத்தில் நிகழ்ந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நூற்களை வெளியிட்டு வந்த ஒரு பதிப்பகம் தொடர்ந்து எனக்குத் தெரியாமல் அவற்றை மீண்டும் அச்சிட்டு விற்றுவருவதாக எனக்குப் புகார்கள் வந்த வண்ணமிருந்தன. சென்ற மாதத்தில் ஒருநாள் எனது நண்பர்கள் சிலர் ஒரு அச்சகத்திலிருந்து எனது மூன்று நூற்களையும், ஷோபா சக்தியின் ஒரு நூலையும் தற்போது அச்சாகிக் கொண்டுள்ளது எனக் கொண்டு வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். பழைய தேதியில். ஆனால் கூர்ந்து கவனித்தால் சில வித்தியாசங்களுடன் அந்நூற்கள் அச்சிடப்பட்டிருந்தன.
தொடர்ந்து நம் நூற்களை வெளியிட்டுக் கொண்டுள்ள ஒரு பதிப்பகம் அவ்வாறு செய்திருந்தால்கூட நாம் அதைப் புரிந்துகொள்ள இயலும். பேசி அது குறித்து விளக்கம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தொடர்பும் இல்லாமல் போன ஒரு பதிப்பகம், ஆசிரியர்க்கு `காப்பி ரைட்' உரிமையுள்ள ஒரு நூலைப் பழைய தேதியிட்டு அச்சிடுவது, அவருக்குத் தெரியாமல் அதை விற்பது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது. இது அந்த ஆசிரியரின் உழைப்பைச் சுரண்டுகிற ஒரு விவகாரம் மட்டுமல்ல, அவரது சுயமரியாதையையே கேள்விக்குள்ளாக்கும் மூலதனத் திமிரையும் உள்ளடக்கியுள்ளது. இதை எப்படிச் சகித்துக் கொள்வது.
தமிழ் நூற்பதிப்பு வேறெப்போதையும்விட விரிவடைந்துள்ள நிலை எழுத்துலகைச் சேர்ந்த நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. புத்தகக் கண்காட்சிக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவதும், கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாவதும் நம் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஆனால் இதில் எந்த அளவிற்கு எழுத்தாளர்களுக்கு உரிய பயன்கள் சென்றடைகின்றன என்பது நம் சிந்தனைக்குரிய ஒன்று.
எல்லாப் பதிப்பகங்களும் மோசம் செய்கிறார்கள் என நான் சொல்ல வரவில்லை. பல பதிப்பகங்கள் மிக்க நேர்மையுடன் நடந்துகொள்கின்றன. உரிய `ராயல்டி' கொடுக்கப்படுகிறது. ஆனால் நான் சற்று முன் குறிப்பிட்டவை போன்ற ஒரு சில பதிப்பகங்கள் இப்படி மோசமாக நடந்துகொள்கின்றன. ஏதோ ஒரு சிறிய பதிப்பகம் இப்படிச் செய்துவிட்டது என்பதுகூட இல்லை. வெளிநாட்டுப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தமிழில் நூல் வெளியிடும் ஒரு நிறுவனம் இப்படி எழுத்தாளனின் வயிற்றில் அடிப்பதையும், அவன் சுயமரியாதைக்குச் சவால் விடுவதையும் என்னவென்பது? அவன் எழுதுகிற பேனாவுக்கு `ரீஃபில்' வாங்குவதற்கும் `ஏ4' பேப்பருக்குச் செலவு செய்வதற்குமான காசையாவது கொடுக்கவேண்டும். அனுமதி பெற்று நூல்களை மறுபதிப்புச் செய்யவேண்டும் என்கிற உணர்வு எப்படி அற்றுப் போய்விடுகிறது?
தமிழ் எழுத்தாளர்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். ஒன்றுகூடிப் பேசவேண்டும். இதுபோன்ற மோசடி செய்யும் பதிப்பகங்களுக்குக் குறைந்த பட்சம் தமது நூற்களை வெளியிடக் கொடுக்கக்கூடாது என்றாவது முடிவு செய்யவேண்டும்.
இப்படி ஆசிரியருக்குத் தெரியாமல் நூற்களை அச்சிட்டு விற்பது நான்கு வகைகளில் அவனைப் பாதிக்கிறது.
(1) முதற் பதிப்பு விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளிவருவதில் அவன் அடையும் மகிழ்ச்சி அவனிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.
(2) எழுத்தாளனுக்குச் சேர வேண்டிய உழைப்பூதியம் அவனுக்கு மறுக்கப்படுகிறது.
(3) அந்த நூலை அவன் வேறு பதிப்பகத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் அதனால் அவனது நாணயம் கெடுகிறது. புதிய பதிப்பாளருக்கும் இழப்பு ஏற்படுகிறது. (உண்மையில் மேற்குறிப்பிட்ட எனது மூன்று நூற்களில் இரண்டை மறுவெளியீடு செய்ய நான் `எதிர்வு' பதிப்பகத்திற்கு உரிமை அளித்து நூற்கள் அச்சாகிக் கொண்டுள்ளன).
(4) இந்த மாதிரியான மோசடி அம்பலப்பட்டுப்போகும்போது அதை ஈடுகட்ட வேண்டி, மோசடியாளர் அந்த எழுத்தாளர் குறித்து அவதூறுகளைப் பரப்ப நேரிடுகிறது. ``என்னை அவர் மோசம் செய்து விட்டார். அவரால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம்'' - என்கிற ரீதியில். இதையும் அந்த எழுத்தாளன் எதிர்கொள்ள வேண்டிய கொடுமை. நஷ்டம் என்றால் நீ ஏன் இப்படித் திருட்டுத் தனமாய் அந்த நூலை அச்சிட வேண்டும்?
மீண்டும் எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து நாம் கூடிப் பேச வேண்டும். பிற நாடுகளில் உள்ளதுபோல எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னரே நூலை வெளியிட உரிமை அளிப்பது என்கிற நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
நூலை அச்சிடும் அச்சகங்களுக்கும், `பபாசி' போன்ற அமைப்புகளுக்கும் கூட இதில் பொறுப்பு உண்டு. பதிப்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர். எழுத்தாளர்களுக்கும் அவர்கள் கடமைப்பட்டவர்களே. பழைய தேதியில் ஒருவர் நூலை அச்சிட முனைந்தால் அச்சகத்தார் அதை மறுக்க வேண்டும். பதிப்பாளர்களின் அமைப்பு, `பபாசி' போன்றவைகட்கு இப்படியான புகார் வந்தால், அதை முறைப்படி விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். மோசடி நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய இழப்பீடு பெற்றுத் தருவதோடு, குறிப்பிட்ட ஆண்டுகள் புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க அனுமதி மறுப்பது முதலான தண்டனைகளையும் அளிக்க வேண்டும். நூல் விற்பனை செய்வோரும் கூட இந்த மோசடிகளை அறியும் பட்சத்தில் குறிப்பிட்ட எழுத்தாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.
நான் முன்பே சொன்னதுபோல எல்லாப் பதிப்பாளர்களும் இப்படிச் செய்வதில்லை. மோசடி செய்யும் சில பதிப்பகங்களை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் நீதிபெற வழிசெய்ய வேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்கள், பிரபஞ்சன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உட்பட இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதிக்கு ஒரு முடிவு காண எழுத்தாளர்கள் இயக்கமாக வேண்டும். அறிவுசார் சொத்துரிமை பற்றிப் பேசுகிற ஒரு காலகட்டம் இது. எழுதுபவர்களின் அறிவு மற்றும் உடலுழைப்புகள் இத்தகைய மோசடியாளர்களால் சுரண்டப்படுவதை அனுமதிக்கலாகாது. றீ

நன்றி

தீராநதி செப் 08



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]