வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 09, 2010

திராவிடரின் அறிவை அழிப்பதுதான் ஆரியம் தழைக்க வழி

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு தி.மு.க. தொழிலாளர் அணி மாத ஏடான உழைப்பாளி இதழில் 40 மாதங்கள் எழுதிய நீதிக்கட்சி வரலாறு தொடர் நீதிக்கட்சி வரலாறு என்ற பெயரில் இரு தொகுதிகளாக, நூலாக வெளிவந்துள்ளன. 1078 பக்கங்களைக் கொண்ட இந்த இரு தொகுதிகள் நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1200 விலையுள்ள இந்த இரு தொகுதிகளும், வெளியீட்டு விழா நடைபெற்ற நேற்று (8.6.2010) ரூபாய் ஓராயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நூலுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர், நிதியமைச்சர் மானமிகு மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆகியோர் அணிந்துரைகளை வெகுசிறப்புடன் அளித்துள்ளனர்.
நீதிக்கட்சி _ அது தோன்றுவதற்குரிய சூழல் தொடங்கி, நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றதுவரை (1944) 108 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத் தலைவர்களின் அரிய படங்கள், அறிக்கைகள், நீதிக்கட்சியின் சட்ட திட்டங்கள், தலைவர்களின் முக்கிய உரைகள் பிற்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழர் இல்லத்து நூலக அலமாரியில் இடம்-பெறவேண்டிய வைப்பு நிதி என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் அணிந்துரை வழங்கப்பட்ட இந்த இரு தொகுதிகளின் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தில் நேற்று மாலை (8.6.2010) 7 மணிக்கு நடைபெற்றது.

சென்னையில் மய்யப் பகுதியில் குளிரூட்டப்பட்ட அருமையான இந்த அரங்கம் இதுபோன்ற அறிவு சான்ற விழாக்களுக்கு வெகு பொருத்தமானதாகும்.
மாலை 6 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. பல்துறைப் பெருமக்கள் சங்கமித்தனர்.

நிகழ்ச்சிக்கு தொ.மு.ச. தலைவர் மக்களவை முன்-னாள் உறுப்பினர் செ. குப்புசாமி தலைமை வகித்தார். அவர்தன் உரையில் சுயமரியாதை உணர்வும், இனமான உணர்வும் நம் மக்களிடம் வளர்ந்திட இந்த இரு நூல்களையும் படிக்கவேண்டும் என்று கேட்டுக்-கொண்டார். தொடக்கத்தில் தொ.மு.ச. பொதுச்-செயலாளர் மு. சண்முகம் வரவேற்புரை வழங்கினார்.

தொ.மு.ச.வின் உழைப்பாளி இதழில் வெளிவந்த கட்டுரைகள் இரு தொகுதிகளாக வெளிவருவது எங்-களுக்குக் கிடைத்த பெருமை என்றார் வரவேற்புரை ஆற்றிய தோழர் மு. சண்முகம்.

தொ.மு.ச. செயலாளர் பேரூர் நடராசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
தொ.மு.ச. பொருளாளர் சிங்கார ரத்தின சபாபதி வாழ்த்திப் பேசினார்.

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு

நூலாசிரியர் க. திருநாவுக்கரசு தமது உரையில் திராவிட இயக்க வரலாறு மொத்தம் பத்து தொகுதி-களாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், இப்பொழுது முதற்கட்டமாக இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நூலாசிரியர் திருநாவுக்கரசு அவர்களுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதி அமைச்சருமான பேராசிரியர் பொன்னாடை அணிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும் ஆடை போர்த்திப் பாராட்டினார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்-தவர்கள் சால்வைகளையும், கைத்தறி ஆடை-களையும் அணிவித்து தத்தம் அன்பினைப் பொழிந்தனர்.

நூல்கள் வெளியீடு

இரு தொகுதிகளையும் மாண்புமிகு நிதியமைச்சர் க. அன்பழகன் வெளியிட வடசென்னை மக்களவை உறுப்பினரும், தி.மு.க. அமைப்புச் செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் பணம் கொடுத்து முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.
ரூபாய் 800 அளித்து முன்பதிவு செய்து கொண்டவர்-களும், மற்றவர்களும் விழா மேடைக்கு வந்து பேரா-சிரியர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

டி.கே.எஸ். இளங்கோவன்

முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட டி.கே.எஸ். இளங்கோவன் தன்னுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

தி.மு.க. இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது என்றால், அதற்கு மூல வித்து நீதிக்கட்சியே! தேவதாசி முறை ஒழிப்பு, பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளும் கட்டாயம் சேர்ப்பு, பேருந்துகளில் தாழ்த்-தப்-பட்டவர்களை அனுமதிக்கவில்லை என்றால், பேருந்து-களின் உரிமம் பறிப்பு, இந்து அறநிலைய சட்டம், இட ஒதுக்கீடு என்கிற அரிய சட்டங்களையும், திட்டங்களை-யும் கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சியே என்று குறைந்த நேரத்தில் செறிவாகப் பல தகவல்களையும் எடுத்துக் கூறினார்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்-செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நூலினைத் திறனாய்வு செய்தார்.

எடுத்த எடுப்பிலேயே ஒரு கைதட்டல் அவருக்காகக் காத்திருந்தது. இங்குக் கூடியிருக்கும் அனைவரும் பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னதுதான் அந்தக் கைதட்டலுக்குக் காரணமாகும்.

தமிழர்களுக்கு அரிய சொத்தினைக் கொடுத்ததற்காக நூலாசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சுமக்கக் கூடாதா?

தொகுதிகள் இரண்டும் கனமானவைதான். சுமந்து செல்லுவதற்குக் கஷ்டம்தான் என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இழிவைச் சுமந்து கிடந்த மக்கள் _ அந்த இழிவைத் துடைக்கும் உந்து சக்தியாக வெளி-வந்திருக்கும் இந்த இரு தொகுதிகளையும் சுமக்கக் கூடாதா என்ற நியாயமான வினாவையும் நயமாகத் தொடுத்தார்.

திராவிடரின் அறிவை அழிப்பதுதான் ஆரியம் தழைக்க வழி என்று வைதீகம் நினைத்தது _ செய்தது என்று பேராசிரியர் அவர்கள் அணிந்துரையில் குறிப்-பிட்டதைப் பீடிகையாகக் கொண்டு தன் திறனாய்வைத் தொடர்ந்தார் சுப.வீ.
இரு தொகுதிகளிலும் உள்ள சில பகுதிகளைச் சுவைபட எடுத்துக்காட்டவும் செய்தார்.

1938 இல் இந்தி எதிர்ப்பின் காரணமாக தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார். பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஏ.டி. பன்னீர்செல்வம் அதுபற்றிக் கருத்துக் கூறினார்.

பெரியாருக்குச் சிறையில் ஏதாவது நேர்ந்துவிட்டால், காங்கிரஸ் சர்க்காருக்குப் பெரிய அபகீர்த்தி வரும். அதற்குப் பயந்து கொண்டு விடுதலை செய்து-விட்டார்கள் என்று கூறினார் பன்னீர்செல்வம்.

அதற்கு ஆனந்தவிகடன் எழுதிய பதில் என்ன தெரியுமா? அபகீர்த்திக்குப் பயப்படுபவர்கள்தான் காங்-கிரஸ்காரர்கள். ஆனால், அபகீர்த்தியைப்பற்றிப் பயப்-படாத-வர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் உத்தியோகம், பதவி, பட்டம், சம்பளம் இவ்வளவுதான் என்று ஆனந்தவிகடன் தலையங்கம் தீட்டியது எல்லாம் இந்நூலில் பதிவாகியுள்ளது. இதன்மூலம் அக்கால பார்ப்பனர்களின் மனப் போக்கைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நீதிக்கட்சி இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்ததையும், அதனையொட்டி இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததையும் ஒப்பிட்டார் சுப.வீ.
சிதம்பரம் கோயிலில் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37,000 என்றும், மீதி வெறும் ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கணக்குக் கொடுத்தார்கள் அக்கோயில் தீட்சதர்கள். அக்கோயில் இந்து அறநிலை-யத் துறையின்கீழ் வந்ததும், வெறும் 14 மாதங்களிலேயே ரூபாய் 29 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது என்ற விவரத்தைப் பொருத்தமாகக் கூறினார்.

கலைஞர் இவ்வளவு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறாரே_ இதற்கெல்லாம் வருவாய் எங்-கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், இதுபோல்தான் கிடைக்கிறது (பலத்த கைதட்டல்) என்றார்.

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் என்பதை_ இந்த நூலில் குறிப்பிடப்-பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார்.

ஜஸ்டீஸ் கட்சிக்காரர்கள் இதுவரை கல்வி, உத்தி-யோகத்தைப் பற்றித்தான் பேசி வந்தார்கள். இப்பொழுது கடவுள்மீதும், கை வைத்துவிட்டார்கள். இனியும் இவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று பேசினார்.

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதம அமைச்சர் பனகல் அரசர் எவ்-வளவு லாவகமாக அதனைச் செய்தார் என்று நூலி-லிருந்து எடுத்துக்காட்டினார். கோபால்சாமி அய்யங்கார் என்ற பார்ப்பனரை சிறப்பு உறுப்பினராக (Expert Member) நியமித்துக் கொண்டுதான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதேபால, அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறை-வேற்றியவுடன், அதன் முதல் தலைவராக நியமிக்-கப்பட்டவரும் ஒரு பார்ப்பனரே _ உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சதாசிவ அய்யர்தான் அவர்.
(யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது என்பது இதுதானோ!)
பனகல் அரசரைப்பற்றி பார்ப்பனர்கள் மகாமகா தந்திரசாலி என்று சொல்லுவார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
அது இதுதான் போலும்!

நீதிக்கட்சிக்காரர்கள் வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசிகளாக இருந்தனர் என்ற காங்கிரஸ் குற்றச்சாற்று. உண்மை என்னவென்றால், காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளைக்காரர்களுக்கு ராஜ விசுவாச தீர்மானம் நிறைவேற்றியது போன்ற தகவல்களையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.

ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றம், குறவர் மக்களுக்கு 22 சலுகைகள் போன்ற நீதிக்கட்சி ஆட்சி-யின் சாதனைப் பட்டியல் சுப.வீ. உரையில் இடம்-பெற்றிருந்தது.

இனமான பேராசிரியர் க. அன்பழகன்

தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இறுதியாக ஆற்றிய உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

நூலாசிரியரின் முயற்சி என்பது பெரிய முயற்சி. தேடித்தேடி ஆதாரங்களைக் குவித்து நூல் உரு-வாக்கப்பட்டுள்ளது. வெறும் உரைகள்மூலம் விளங்கிக் கொள்ள முடியாது. படிப்பதன்மூலமாகத்தான் தெரிந்து-கொள்ள முடியும். திராவிட இயக்கத்துக்குக் காப்பு அரண் இந்நூல்.

யாருக்கு அய்யம் ஏற்பட்டாலும், புரிந்துகொள்ளவும், தெளிந்து கொள்ளவும் இந்நூல் பயன்படும்.

சமூகநீதிக்காகத் தோன்றியதுதான் நீதிக்கட்சி. அந்நாளில் வெள்ளைக்காரனை விரட்டத் தோன்றியது காங்கிரஸ் கட்சி.

கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் முன்னாள் நீதிபதி சங்கரன் நாயரும் கலந்துகொண்டார். காங்கிரஸ்காரரான சீனிவாசய்யரும் போயிருந்தார். மாநாடு முடிந்தது. சங்கரன் நாயரைப் பார்த்து சீனிவாசய்யர் சொன்னார்: சங்கரா நீ உன் பந்திக்குப் போ! நான் எங்கள் பிராமணன் பந்திக்குப் போகிறேன் என்றார். காங்கிரஸ் மாநாட்டிலே இப்படி ஒரு பேதமா? உறுத்தியது சங்கரன் நாயருக்கு.
சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயர். பெரும் தனவந்தர். சென்னை மயிலாப்பூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.500 நன்கொடையும் வழங்கி இருந்தார். அந்தக் காலத்தில் 500 ரூபாய் என்றால், இப்பொழுது ரூபாய் 5 லட்சத்துக்குச் சமம்.

புத்தி வந்தது தியாகராயருக்கு

கும்பாபிஷேகத்தன்று என்ன நடந்தது? சென்னை கார்ப்பரேஷனில் தியாகராயருக்கும் கீழே வேலை செய்யும் பார்ப்பனர்கள் விழா மேடைக்குச் சென்றார்கள். நானும் வரலாமா? என்று கேட்டார் தியாகராயர். நீங்கள் எல்லாம் வரக்கூடாது _ மீறி வந்தால் தோஷம் ஏற்பட்டுவிடும் என்றார்கள். அப்பொழுதுதான் முதன்முதலாகப் புத்தி வந்தது தியாகராயருக்கு.

டாக்டர் டி.எம். நாயர் மலையாள நாட்டைச் சேர்ந்த-வர். மாரவாட் மாதவநாயரான டி.எம். நாயர் மருத்துவத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். பட்டம் பெற்ற-வுடன் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கிருந்த நம்-பூதிரிகள் நாயரைப் பார்த்துக் கேட்டனர்.

சூத்திரனாகிய நீ எல்லாம் வெளிநாடு சென்று படிக்கலாமோ? என்று கேட்டனர். உறுத்தியது டாக்டர் நாயருக்கு.

அப்பொழுதெல்லாம் சென்னையில் பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் முதலியார், பிள்ளை, செட்டியார் என்று எந்தப் பயலும் உள்ளே சென்று சாப்பிட முடியாது.

அந்த நேரத்தில்தான் டாக்டர் சி. நடேசனார் தமிழின மாணவர்களுக்காக விடுதி _ ஹாஸ்டல் ஒன்று ஏற்பாடு செய்தார்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கோயில்களில் பெண்களைப் பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு சென்றார்.

சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தனர். தேவதாசி முறை என்பது தெய்வகாரியம்; அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று வாதாடினர்.
முத்துலட்சுமி அம்மையார்தான் பதிலடி கொடுத்தார் சட்டசபையில், அந்தத் தெய்வ காரியத்தை இதுவரை நாங்கள் செய்து வந்தோம்; இனிமேல் அந்தத் தெய்வ காரியத்தை உங்கள் குடும்பப் பெண்கள் செய்யட்டுமே! என்றார் (பலத்த கரவொலி) அடங்கிப் போனார்கள்.

குடந்தையிலே அரசு கல்லூரியில் பார்ப்பன மாணவர்-களுக்குத் தனித் தண்ணீர்ப் பானை. பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தண்ணீர்ப் பானை. அதனை எதிர்த்துத் தோன்றியதுதான் திராவிடர் மாணவர் கழகம்.

சேரன்மாதேவியில் நடந்தது என்ன?

சேரன்மாதேவியில் காங்கிரஸ் சார்பில், அதன் நிதியில் குருகுலம் நடத்தப்பட்டது. வ.வே.சு. அய்யர்தான் அதன் நிருவாகி. பார்ப்பனர்களுக்குத் தனிப் பந்தி, முதல் பந்தி, பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு பந்தி. ஏன் இந்தப் பேதம் என்று எதிர்த்துக் கேட்டார் பெரியார்.

இதுதான் அய்தீகம் என்றார் வ.வே.சு. அய்யர். பெரி-யாருக்குக் கோபம் வந்தது, இழுத்து மூடினார்.

1905 இல் நீதிபதி சங்கரன்நாயர் ஒரு கருத்தைச் சொன்னார். இந்தியாவில் ஜாதி ஏற்ற தாழ்வு இருக்-கிறது. மேநாடுகள்போல ஜனநாயக அரசாங்கத்தை நாம் நடத்த முடியாது. நாம் சுதந்திரம் பெறவும், அனு-பவிக்-கவும் தகுதி உள்ளவர்கள்தானா? என்ற கேள்வியை எழுப்பினார்.

ஹிந்து பத்திரிகை கண்டித்தது. ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் எழுதினார்கள்.
ஒரு நீதிபதியாக இருந்துகொண்டு சுதந்திரத்துக்கு விரோதமாகப் பேசலாமா? என்றெல்லாம் ஆத்திரம் பொங்க எழுதித் தீர்த்தார்கள்.

அப்பொழுது பாரதியாரும் ஒரு கடிதத்தை எழுதினார் இந்து ஏட்டுக்கு. இந்து ஏட்டில் அது வெளிவந்தது.

நீதிபதி சங்கரன் நாயர் அப்படி என்ன சொல்லி-விட்டார்? இங்கிலாந்து நாட்டில் செருப்புத் தைக்கும் ஒரு தொழிலாளி பிரதமராக வர முடியும்; இந்தியாவில் அந்த நிலை உண்டா?

சமஸ்கிருதம் படித்த ஒரு பார்ப்பனர் அல்லாதார் சங்கராச்சாரியாராக வர முடியுமா? என்று அந்தக் கடிதத்தில் பாரதியார் குறிப்பிட்டு இருந்தார்.

உண்மையைச் சொல்லப்போனால், நீதிக்கட்சியை உண்டாக்கக் காரணமாக இருந்தவர்களே பார்ப்பனர்கள்தான் (பலத்த கரவொலி!).

நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியராக வந்தவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே.
38 ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் பணியாற்றி-னார்கள் என்றால், இரண்டே இரண்டு பேர்கள்தான் பார்ப்பனர் அல்லாதார். ஒருவர் மேன்யுவல் டிராயிங் ஆசிரியர்; இன்னொருவர் தமிழாசிரியர்.

எங்கள் ஆசிரியர் வகுப்பிலேயே எப்படியெல்லாம் பேசுவார்? பார்ப்பன மாணவன் சரியாகப் படிக்கா-விட்டால், நீ ஒழுங்காகப் படிக்காவிட்டால், தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டுதான் போகவேண்டும். அப்படிப் போகத்தான் உனக்கு ஆசையா? என்று கேட்பார்.

பார்ப்பனர் அல்லாத மாணவன் ஒழுங்காகப் படிக்காவிட்டால், மாடு மேய்க்கப் போகவேண்டியவன் எல்லாம் படிக்க ஆசைப்படலாமா? சுடுகாட்டில் வேலை செய்கிறவன் பிள்ளை படிக்க வந்தால், படிப்பும் சுடுகாட்டுக்குத்தான் போகும் என்று வெளிப்படை-யாகவே வகுப்பில் பேசுவார்கள்.

அப்படியெல்லாம் அவர்கள் பேசியதால்தான் நான் இந்த இயக்குத்துக்கு வந்தேன் (பலத்த ஆரவாரம்!).

சூத்திரன் என்று அப்பொழுதெல்லாம் வெளிப்-படையாக சொல்லுவார்கள். டாக்டர் படித்த பார்ப்-பான்கூட, எதிரே ஒரு சூத்திரன் வந்தால், ஏன் தள்ளிப் போகக்கூடாதா? உரசிக்கிட்டுத்தான் போகவேண்டுமா? என்று கேட்பார்.
இப்பொழுது சூத்திரன் என்று சொல்லத் தைரியம் உண்டா? இதுதான் நீதிக்கட்சியின்,
சுயமரியாதை இயக்கத்தின் சாதனை.ஆனால், நம்ப ஆளு இதனை மறந்துவிட்டானே!
நாம் இன்று அமைச்சராக இருக்கலாம். நம் பதவிகள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது.

இந்த நிலை எல்லாம் எப்படி வந்தது? எப்பொழுது வந்தது? பட்டம் பெற்று இருக்கிறான். பெரிய பெரிய உத்தியோகங்களிலும் இருக்கிறான். இவை எல்லாம் எந்தப் பயலின் சொந்த யோக்கியதையில் வந்தது? (கைதட்டல்).
நீதிக்கட்சி போட்ட பிச்சையல்லவா இவை எல்லாம்? (பலத்த கைதட்டல்) என்று கூறினார் பேராசிரியர்.

இறுதியாக உழைப்பாளி இதழின் துணை ஆசிரியர் ஆ.சீ. அருணகிரி நன்றி கூறிட, இரவு 8.45 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நேர்த்தியாக நிறைவுற்றது.
பாராட்டு

ஒளி அச்சு_ டி. சீனிவாசன், ஓவியர் _ அலாய் சியஸ், நக்கீரன் பதிப்பகம் _ தி. சிற்றரசு ஆகியோர்க்கு நிதி அமைச்சர் பேராசிரியர் சால்வைகள் போர்த்திச் சிறப்பு செய்தார்.

----- மின்சாரம், விடுதலை (09.06.2010)



1 comment:

Anonymous said...

Super! மிக நல்ல article. நீதி கட்சி இல்லையேல் நான் இன்று இந்நேரம் இந்த பின்னூட்டத்தை இட்டு கொண்டு இருக்க மாட்டேன்! பிராமணன் கூட சரிக்கு சமமாக வேலை செய்து கொண்டு இருக்க மாட்டேன் !

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]