விஷ வித்துக்கள் அடங்கிய கொத்து என்கிற தலைப்பில் பாஜக வின் தேர்தல் அறிக்கை பற்றிய தீக்கதிரின் (25-03-2021) சிறப்பான தலையங்கம்.
ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை என்பதுஅந்த கட்சி எந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம்கொடுக்கிறது; யாருடைய நலனை பிரதிபலிக்கிறது; எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது; எந்த திசைவழியில் மாநிலத்தை கொண்டு செல்லமுனைகிறது என்பதை காட்டுவதாக இருக்கும்.
அந்த வகையில் தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மாட்டிறைச்சிக்கு தடை, மதமாற்றத்திற்கு தடை, சிஏஏ அமல், நீட் நிச்சயம், பள்ளி பாடத்தில் ஆன்மீகம் என விஷ வித்துகள் தூவப்பட்டிருக்கிறது. தமிழகத்தை கற்காலத்திற்கு பின்னோக்கி இழுக்கும் சூட்சமங்களும் உள்ளடக்கியிருக்கிறது.ஆர்எஸ்எஸ் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் முயற்சியின் முதல் படியாக பாஜகவின் தேர்தல்அறிக்கை இருக்கிறது.
உணவு என்பது உழைப்பு சார்ந்தது. மதம் சார்ந்தது அல்ல. ஆனால் பாஜக மதம் சார்ந்ததாக மாற்றி உணவு சங்கிலியை உடைக்க முற்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம்; ஆனால் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என்கிற சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம் எனகூறுகின்றனர். ஆனால் மறுபுறம் ஓட்டுக்காக இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறி தமிழர்களை ஏமாளிகளாக்க முனைகின்றனர். அவ்வளவு ஏன், இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பை புறக்கணித்து தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்ததுதான் பாஜக அரசு.மருத்துவப் படிப்பிற்கு மட்டுமின்றி அனைத்துஉயர் படிப்புகளுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு என்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம்கொஞ்ச நஞ்சம் கிடைத்து வந்த கீழ்த்தட்டு மக்களின் உயர்கல்வி வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது பாஜக. பள்ளிக் கல்வியிலேயே ஆன்மீகத்தை திணித்து, பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் திட்டத்தையும் முன் வைத்திருக்கிறது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. அதை நிராகரித்து தமிழ்மொழியை சீரழிக்கும் விதத்தில் புதிய எழுத்துருக்களை முன் மொழிந்திருக்கிறது. இது முத்தமிழ்மீதான மூர்க்கத் தாக்குதல் ஆகும்.
அடுத்து, பட்டியலின மக்களின் பஞ்சமி நிலத்தை மீட்போம் என பாஜக கூறுகிறது. இதுநாள் வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தவர் தற்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் தானே! பஞ்சமி நிலத்தை மீட்க அவரை யார் தடுத்தது?பட்டியலின மக்களின் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை ரத்து செய்து அறிவித்தது பாஜகவின் இதே மோடி அரசுதான். கடும் எதிர்ப்புக்கு பின்னர் 5 ஆண்டு நீட்டித்து காலக்கெடுவோடு சவப்பெட்டியும் செய்து வைத்திருப்பதை ஒரு போதும் பட்டியலின மக்கள் மறக்க மாட்டார்கள்.நாளொரு வேடமும், பொழுதொரு பொய்யுமாக தேர்தல் களத்தில் பாஜகவும் - அதிமுகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளும் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்பதற்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒன்றே போதும். அதுவே அவர்கள் கூட்டணியை ஒட்டு மொத்தமாக தோற்கடிக்கும்.
நன்றி: தீக்கதிர் தலையங்கம்,24-03-2021
No comments:
Post a Comment