வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, October 09, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (13) சூத்திரன் கல்விக் கண்ணைக் குத்திய சூத்ரதாரி!

ராஜாஜிதான் நாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்றியது போலவும், அவர்தான் தலைசிறந்த அறிவாளி போலவும் அவர் போல ஆளப் பிறந்தவர்கள் வேறு யாரும் இலர் என்பது போலவும், ஊடகங்களின் மூலம் காற்றடித்து ஊதிப் பெரிய பிம்பமாகக் காட்டத் துடிக்கின்றனர்.

அரசியல்வாதியான அவர் ஒரு முறை கூட தேர்தலில் நின்று, மக்களைச் சந்தித்து, வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திடும் செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்ததில்லை.

கொல்லைப் புறமாக பதவி நாற் காலியைப் பிடித்த அவர் முழு காலமும் ஆட்சி செய்யும் திறமை உடையவ ராகவும் இருந்ததில்லை.

தன் ஆட்சித் திறனைப் பற்றி அவரே கூட வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாடாள எனக்குத் தெரியாது!

நாங்கள் கஷ்டமான வேலையை மேல்போட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். தேச நிர்வாக அனுபவம் எனக்குக் கிடையாது. கோர்ட்டில் கேசு நடத்திட எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. அந்த அனுபவம் தேச நிர்வாகத்துக்கு உதவி புரியாது. ஒரு கட்சிக்காகப் பரிந்து பேசும் வழக்கம் நிர்வாக விஷயத்தில் பிரயோஜனப்படாது. 20 ஆண்டுகள் என் வக்கீல் தொழில் அனுபவம் எனக்கு இப்பொழுது பிரயோஜனப்படவில்லை.

அந்தப் பழக்கம் என் வேலைக்குத் தடையாக நிற்கிறது. ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு ஓயாமல் பேசுவது எனது வாடிக்கையாகிவிட்டது. தேச நிர்வாகத்திற்கு நான் ஜவாப்தாரியாக இருக்கும்வரை அந்த வாடிக்கையை ஒழிக்க வேண்டியதுதான் (அனந்தப்பூரில் 12-7-1938 -இல் ராஜாஜி பேசியது).

இதற்கு எந்தவித பதவுரை பொழிப் புரை தேவைப் படாது. தன்னிலை விளக்கமே கொடுத்துவிட்டார் காந்தி யாரின் சம்பந்தி.

இப்படிப்பட்டவரைத்தான் அக்கிரகாரம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது.

ஆட்சித் திறன் இல்லாவிட்டாலும் இரண்டு முறை அவர் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பார்ப்பனீயத்துக்குப் பால் வார்த்தார். பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக ஆட்சியை நடத்தினார்.

1937-38 அமைச்சரவையில் மொத்தம் 10 பேர் அமைச்சர்கள் என்றால் அதில் 4 பேர் பார்ப்பனர்கள். 3 சதவிகிதத்தி னருக்கு 40 சதவிகித இடங்கள். 1952_54 இல் முதல் அமைச்சராக வந்தபோது மொத்தம் 13 பேர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். 3 சதவிகித பார்ப்பனர்களுக்கு 24 சதவிகித இடங்கள் அமைச்சரவையில்.

1937_-39 இல் பிரதம அமைச்சராக இருந்தபோது 2500 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். மது விலக்கினை அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யவே பள்ளிகளை மூடுவதாகக் கார ணம் சொன்னார். தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று ஒரு திருடனைக் கேட்டபோது புல் பிடுங்க ஏறினேன் என்று சொன்னானாம். அந்தக் கதையாக அல்லவா இது இருக்கின்றது. ஆச்சாரியாரின் இந்தச் சூழ்ச்சியை விளக்கி மது விலக்கின் இரகசியம் என்று குடிஅரசு இதழில் (24-10-1937) தந்தை பெரியார் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937-_39 கால கட்டத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே குறைவு.
அந்த நேரத்தில் 2500 தொடக்கப் பள்ளிகளை மூடுகிறவர்க்குப் பெயர் தான் மூதறிஞரா? நிதியைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிய ஆச்சாரி யார் பார்ப் பனர்கள் படிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்து சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தாரே!

நீதிக்கட்சியின் ஆட்சியின்போது ஏ.பி.பாத்ரோ அவர்களால் செயல்படுத் தப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தை நிறுத்தினார். சேலம் ஜில்லா போர்டார் தங்கள் வட்டாரத்தில் அனைவருக்கும் கட்டாய மாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக ரூ 13,500 தொகையை ஒதுக்கி இருந்தார்கள். அதற்கான அனுமதியையும் அரசிடம் கேட்டார்கள். பிரதம அமைச்சர் ஆச் சாரியார் என்ன செய்தார் தெரியுமா?

நிதிநிலை இடம் தராது. அதனால் அனுமதி அளிக்க முடியாது என்று ஒரு வரியில் பதில் எழுதிவிட்டார்.

எல்லா செலவினங்களையும் கணக் கிட்டுதான் இந்தத் தொகையை கல்விக்காக ஒதுக்கி உள்ளோம் என்று மறுபடியும் அரசுக்கு எழுதினர். அந்த முறையீட்டையும் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார்.

ஈரோடு நகராட்சியார் வீட்டு வரியைக் குறைத்துக் கொள்ள நூற்றுக்கு 2 ரூபாய் - வரவு செலவுகளை சரிக் கட்டக் கொடுத்து அரசிடம் அனுமதி கேட்டனர் . மனுவாதி ஆச்சாரியார் என்ன பதில் எழுதினார்? வீட்டு வரியைக் குறைக்க முடியாது; வேண்டுமானால் கல்வி வரியைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பதில் எழுதினார்.

கல்வி ஒழிப்புக் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவர் இந்த ஆச்சாரியார்.

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்கு குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிகளும் 60 பிள்ளை களுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட காட்டுத்துறைக் கல்லூரியை (Forest College) இழுத்து மூடினார்.

நம் பிள்ளைகள் படிப்பதைத் தடுக்க பள்ளிக் கல்வி சம்பளத்தை ((Tuition Fees) உயர்த்தினார். முசுலிம்கள், கிறித் தவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெற்று வந்த உதவித் தொகையையும் (Stipend) நிறுத்தினார்.

ஏழு வயதானால்தான் பள்ளியில் சேரமுடியும் என்றார். பாடங்கள் ஏதாவது ஒரு கைத்தொழிலை அனுசரித் ததாக இருக்க வேண்டும் என்றார். அதன் மூலம் வரும்படி வருமாறு செய்து, அந்த வருமானத்தின் மூலமே பள்ளிக் கூடங்கள் நடத்த வேண்டும் என்றார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையையொட்டி தமிழர்களாகிய நமது பிள்ளைகள் கல்லூரிகளில் நுழைவதற் காக நீதிக்கட்சி ஆட்சியின்போது அறிமுகப் படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்குழுவினை (College Selection Committee) ஒழித்துக் கட்டினார் ஆச்சாரியார். நேர்முகத் தேர்வுக்கு இருந்து வந்த 150 மதிப்பெண்களை 50 ஆகக் குறைத்த புண்ணியவான் இந்த ராஜாஜிதான்.
சூத்திரர்களுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்பதிலே கண்குத்திப் பாம்பாக, கண்களில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு சதா அதே சிந்தனையிலும், செயலிலுமாக இருந்தார் என்பதுதான் சுருக்கமான கணிப்பாக இருக்க முடியும்.

இந்த அணுகுமுறைதான் தமக்கு நெருக்கமான நண்பராக இருந்த ஆச்சாரியாரை - வீழ்த்தும் நிலைக்கு தந்தை பெரியாரை வேகமாகத் தள்ளிவிட்டது. காமராசரைப் பச்சைத் தமிழராகப் பெரியார் ஆக்கியதும் இந்த அஸ்திவாரத்தின் மீதுதான்.

காமராசரை ஒரு காலகட்டத்தில் கருப்புக் காக்கை என்று சொல்லி, கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் நிதானத்தை முற்றிலும் இழந்த ஆத்திரத்தின் புயலாக, அக்கிரகாரத்தின் அக்னிக் குழம்பாகச் சீறி எழுந்தவர். சூத்திரர், பஞ்சம மக்களின் கல்விக் கண்களைப் பிடுங்குவதற்கு நாம் போட்ட திட்டத்தையெல்லாம் இந்த நாயக்கரும், நாடாரும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்களே என்ற ஆத்திரத்தில் காந்தாரி போல வயிற்றில் குத்திக் கொண்டார். அவரின் வாரிசுகள் தான் இந்த லட்சுமிநாராயணன், சோ ராமசாமி, குருமூர்த்தி கம்பெனிகள் - வகையறாக்கள்!

அரசுப் பணிகளை வழங்குவதிலும் ஆச்சாரியார் எப்படியெல்லாம் அப்பட் டமாக பூணூல் புத்திரராக சண்ட மாருதம் செய்தார் என்பதை அளந்து கொட்ட ஏடுகளும் போதாது - எழுத்தாணிகளாலும் ஆகாது!

உடல் நோயைத் தெரிந்து கொள் வதற்கு ஒரு துளி ரத்தத்தைத்தானே குத்தி எடுக்கிறார்கள். இதோ சில துளிகள். (தனியே பெட்டி செய்தி 6ஆம் பக்கம் காண்க). பார்ப்பனர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கும் வங்காளக் குடாக் கடலாக ஆச்சாரியார் இருக் கிறாரே, அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
இந்த இடத்தில்தான் அவருக்குரிய வக்கீல் புத்தி வகை துகையாக, வாட்ட சாட்டமாக உதவி புரிந்திருக்கிறது!

பார்ப்பனர் ஒருவரை ஒரு பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றால் ராஜாஜி எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்?

ராஜாஜியின் ஆப்த நண்பரான பெரியார் அவர்களை விட்டே பதில் சொல்ல வைப்போம்.

இதோ ஒரு தமிழனுக்கு டாக்டர் தாயுமானசாமி டைரெக்டர் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (இயக்குநர், மக்கள் நலவாழ்வு) உத்தியோகம் போட்ட தற்குச் சுதேசமித்திரன் (நாளிதழ்) மிரட்டுகிறான். இப்போது நீ சந்தோஷப் படலாம்.

அவர்கள் கைக்கு அதிகாரம் வந்தால் உங்களை ஒழித்துக் கட்டிவிடுவோம் என்கிறானே? காம ராசர் இதில் அக்கிரமாகக் குறுக்கிட் டிருக்கிறார் என்கிறான்; என்ன அக்கிர மமான குறுக்கீடு? முன்பு ராஜகோ பாலாச்சாரியார் காலத்தில் ஒரு பப்ளிக் பிராசிகியூட்டர் (அரசு வழக்குரைஞர்) நியமிக்க வேண்டியிருந்தது! திருச்சி கைலை அனந்தரை கலெக்டர் (மாவட்ட ஆட்சியர்) சிபாரிசு செய்து அனுப் பினார்.

இவர் 100-க்கு இத்தனை கிரிமினல் கேஸ்களில் (வழக்குகளில்) ஆஜராகி இருக்கிறார்.

ஆகையால் இவரைத் தவிர தகுதி உடையவர் யாரும் இல்லை என்று எழுதினார். ராஜாஜி அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவரை நியமித்துவிட்டார்! சட்டசபையில் கேள்வி வந்தது. அப்போது சொன்னார், தகுதி இருந்தால் போதுமா? சர்க்கார் (அரசு) தனக்கு நம்பிக்கையான வரைத்தானே நியமிக்கும்? உனக்கு ஒரு வக்கீல் வேண்டுமானால், உனக்கு நம்பிக்கையானவரைப் பார்ப்பாயா? இல்லை இவன் கெட்டிக்காரன் என்பதற்காக அவனிடம் போவாயா? என்றார்.

மேலும், ஏதாவது கேட்டால் கைலை அனந்தர் எதற்கும் லாயக்கில்லை என்றாகிவிடும். வாயை மூடிக்கொள் என்றார். இது போல ஒரு பார்ப்பானுக்கு வேலை வர வேண்டு மென்றால் தகுதி முக்கியமல்ல. நம்பிக்கைதான் முக்கியம் என்கிறார்கள். அந்த வேலை நமது ஆளுக்குக் கிடைப்பதாயிருந்தால் தகுதிதான் முக்கியம் என்கிறார்கள். இவற்றை யெல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டும்.

(21-9-1957 சேலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: விடுதலை 12-10-1957)
இதன் பொருள் என்ன? பார்ப்பனர் ஒருவர் பார்ப்பனர் அல்லாத ஒருவர் போட்டிக்கு வந்தால் அந்தப் பார்ப் பான் தகுதி உள்ளவர் அதனால் பார்ப் பனரை நியமிக்கிறேன் என்பார். பார்ப்பனர் அல்லாத ஒருவர் தகுதி உடையவர் என்றால், தகுதி முக்கியமா? நம்பிக்கைதான் முக்கியம் என்று கூறி பார்ப்பனரை நியமிப்பார்.இதுதான் ராஜாஜியின் அணுகு முறை மட்டு மல்ல. எல்லாப் பார்ப்பனர்களின் அணுகுமுறையும் இன்று வரையும்கூட.

ராஜாஜியைப் பற்றி முக்கிய சான்று ஒன்று இருக்கிறது. அதுவும் மோதிரக் கை அது. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால்தான் குட்டுப்படவேண்டும். இதோ அந்தக் குட்டு!

காங்கிரஸ்காரர்களைக் கண் காணித்து வருமாறும் சோஷலிஸ்டு களைக் கைது செய்யுமாறும் போலீசுக்கு உத்தர விட்டார். இந்திய சுதந்திர நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்வதன் மீது பிரிட்டீஷ் அரசாங்கம் பிறப் பித்திருந்த தடையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். ஒரு சோஷலிசப் பத்திரிகை பிணைத் தொகைக் கட்டும் படி செய்தார். முந்தைய ஆண்டுகளில் காங்கிரசால் கடுமையாகக் கண்டனம் செய்யப்பட்டு வந்த கிரிமினல் சட்ட திருத்தத்தை இந்தி எதிர்ப்பு மறியல் செய்தவர்கள் மீது பயன்படுத்தினார்.

கடுமையான நடவடிக்கைகள் தான் இந்தியாவில் பலிக்கும் என்றும், சட்டமறுப்பு இயக்கங்களின்போது பிரிட்டிஷார் மிகவும் மென்மையாக நடந்து கொண்டனர் என்றும் ஆளுநர் எர்ஸ்கினிடம் கூறினார். ஆந்திர மாநிலம் ஏற்படுவதைத் தடுத்து தனது சொந்தக் கட்சிக்கு எதிராகவே ஆளுநருடன் சேர்ந்து சதி செய்தார். ஒரு மாத விடுமுறையில் செல்லும் போது தனது அரசாங்க அலுவலர் களில் பெரும்பாலானவற்றை ஆளுநரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது அமைச்சரவை சகாக்களைக் காட்டிலும் எர்ஸ்கின் (ஆளுநர்) மீதுதான் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார். தனது ஆதர வாளர்கள் சிலருக்கு பிரிட்டிஷ் சக்கர வர்த்தி வழங்கும் சர் பட்டங்களும் இதர பட்டங்களும் வழங்கவேண்டும் என்று பரிந்துரைக்க விரும்பினார்.

ராஜாஜி பற்றி இப்படி எழுதியிருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அய்யர் அவர்களின் அருமருந்தன்ன புத்திரர் வரலாற்றாளர் சாட்சாத் சர்வபள்ளி கோபால்தான்! லட்சுமி நாராயணர்களுக்கு அக்குளில் தேள் கொட்டிய மாதிரி இருக்கிறதா? ஆப்பதனை அசைத்து விட்ட கதை யாகத் தோன்றுகிறதா? என்ன செய் வது? உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்!

பேராசை நாயகர்

ஆச்சாரியாரைப் பெரும் தியாகி என்பார்கள். 1942ஆம் ஆண்டு போராட்டத்தின் போது காங்கிரசைக் காட்டிக் கொடுத்தவர். ஆகஸ்டு துரோகி என்று காங்கிரஸ்காரர்களே தூற்றினர்.

அப்படிப்பட்ட ராஜாஜிதான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். அவர் பேராசைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு: 1973-74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளை கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது: ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும் அக்காலம் முழுதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகைகளை கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது
எப்படி இருக்கிறது?

(குங்குமம் 7.4.2000)
-----விடுதலை ஞாயிறு மலர்,08-10-2011(மேலும் உண்டு) 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]