வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, July 03, 2011

நடிகர் ரஜினிக்கும் பொறுப்புண்டு...செய்திகள் மீதான விவாதங்கள்...

(உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கூட பக்தியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் போக்கு. தமிழ்த் தேசியம் என்ற பெயரால் பார்ப்பன எதிர்ப்பு உணர்வின் அடித்தளத்தைத் தாக்கும் முயற்சிகள் இவற்றின் மீதான விமர்சனமே இக்கட்டுரை)
நடிகர் ரஜினிக்கும் பொறுப்புண்டு

நடிகர் ரஜினி நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். இருக்கட்டும்; அதே நேரத்தில் மக்கள் மத்தியில் மூடநம் பிக்கையை விதைப்பது சமூகத்துக்குச் செய்யும் துரோகமும், பாதகமும் ஆகும். மூடநம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது; - முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. மனித சமூகத்துக்கு மிகப் பெரிய கேடானதும் அறிவை முடக்கும், நாசமாக்கும் தீயக்குணமு மாகும் இது. திரைப்படம் மூலம் நடிகர் ரஜினி இதனைச் செய்து கொண்டிருக்கிறார்.

கயிறு கட்டுவது முதல் கழுத்தில் மாலை போடுவது வரையிலான மடத்தனங்கள் இளைஞர்களை மூழ்கடிக்கிறது.

கடவுளை அவர் நம்புவது உண்மையானது என்றால், ஏன் மருத்துவமனைகளை நாடு விட்டு நாடு தேடித் திரிய வேண்டும்?

நேராக தாம் நம்பும் பாபாக்களிடம் சரணடைய வேண்டியது தானே? இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேல் உயிர் வாழும் மகா சித்தி பெற்ற மகான்கள்தான் அவ ருக்குப் பரிச்சியம் ஆயிற்றே?

ஏன் அதைச் செய்யவில்லை? ஊருக்குத்தான் உபதேசமா? மக்களை மடையர்களாக்கிவிட்டு, தாம் மட்டும் சொந்த விஷயத்தில் கடவுளை மறந்து மனிதனைத் தேடு கிறாரே - ஏன்?

உடல் குணமடைந்து நீண்ட காலம் அவர் வாழ வேண்டும் என் பதே மனித நேயர்களான எங்களின் அவா. அதில் ஒன்றும் நமக்கு மாறு பாடு கிடையாது. சங்கராச்சாரியார் போல நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே (தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734) என்று சொல்லக் கூடியவர்களல்லர் பகுத்தறிவு வாதிகள்.

ரஜினியின் உடல் நலப் பாதிப் பைப் பயன்படுத்தி பிரார்த்தனை என்றும், நேர்த்திக் கடன் என்றும் தொற்று நோயைப் பரப்புவது ஏன்?

விஞ்ஞானம் கண்டுபிடித்த விலை உயர்ந்த மருந்துகளை ஒரு பக்கம் சாப்பிட்டுக் கொண்டு - இன்னொரு பக்கம் பிரார்த்தனைகளை ஊக்கு விப்பது ஏன்? இது இரட்டை வேடம் அல்லவா?

சிங்கப்பூரில் இருந்து ரசிகர் களுக்குத் தெரிவிப்பதில் கூட இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா . . . தலையா என்று தீர்மானிப்பது ஆண்டவன் வேலை! என்று கூறியுள்ளார்.
(ஆனந்த விகடன் 29-6-2011 பக்கம் 6)
கடவுளுக்கு இதுதான் வேலையா? முதலில் தலை விழுந்ததாக வைத்துக் கொள்வோம். திருப்பி ஒரு தடவை போட்டால் அதே தலை மீண்டும் விழுமாறு ஆண்டவன் செய்வாரா? கடவுள்தான் ஒவ்வொன்றையும் முடிவு செய்கிறார் என்றால் ரஜினிக்கு நோய் வந்ததற்கும் கூட கடவுள்தான் மூலம் என்று ஆகாதா?

இதே ரஜினிகாந்த் முன்பு என்ன சொன்னார்?

எல்லாம் தெய்வச்செயல். கடவுள் எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டி ருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோகத்தை விட்டு விட்டு, தைரிய மாகச் சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சி தான்.
(ராணி வார இதழ் 20-7-2008)
சபாஷ்! இதுதான் புத்திசாலித் தனம். தன் முயற்சி, விடாமுயற்சிதான் ரஜினியின் வெற்றிக்குக் காரணமே! தெய்வச் செயல் என்று நம்பாது, தன் வாழ்க்கையை மட்டும் பத்திரப் படுத்திக் கொள்ளும் ரஜினி அடுத்த வர்களுக்கு மட்டும் ஆண்டவனைக் கைகாட்டுவது அறிவு நாணயமா?

தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கரு துவது டாக்டர்களைத்தான். தனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அதே இதழில் ஆனந்தவிகடன் குறிப் பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? இவர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் டாக்டர்களே தவிர கடவுள் அல்ல என்பதுதானே இதன் பொருள்?

உங்களுக்கு ஒரு நீதி, -நியதி! மற்றவர்களுக்கு வேறு மாதிரியா? - மற்றவர்களை வஞ்சிக்க வேண்டாம், அவர்களையும் வாழவிடுங்கள் வைதீகர்களே என்பதுதான் நமது மனிதாபிமான வேண்டுகோள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூட விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை என்று தானே சொல்கிறது. (நான் காம் கி1 பாகம் - அடிப்படைக் கடமைகள் 51 A-(h)

விஞ்ஞானக் கருவியான திரைப் படத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அஞ்ஞான இருளைத் திணிப்பது நியாயம் ஆகுமா?

மக்களை மக்கள் எந்தக் காரியத் திற்கு வேண்டுமானாலும் மன்னிக்க லாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிய தானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வது என்ன வென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள் கிறேன். (விடுதலை 4-4-1968) என்று ஒரு வேண்டுகோளை முன் வைக் கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

95 ஆண்டு வரை உடல் உபாதை களுக்கிடையே மக்களின் மாண் பினை உயர்த்த அயராது பாடுபட்டு, பகுத்தறிவு வெளிச்சத்தை மக் களுக்குத் தந்து, அவர்களின் முன்னேற்றத் திசைக்கு அடி எடுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார்.
மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் பாழ்பட்ட மூடநம்பிக்கை இருள் பள்ளத்தில் தள்ளி மூடிட வேண் டாம்.

காசு சம்பாதிப்பது மட்டும் ஒரு கலைஞனின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. சமுதாயப் பொறுப்பும் தேவை! கலையின் மூலம் மனிதனை கடைத் தேற்றும் முற்போக்குக் கருத்தும் இருக்க வேண்டும் அல் லவா? மக்களை முட்டாள் ஆக்குவது எளிது - அறிவாளியாக்குவதுதான் கடினம்! குயவனுக்குப் பல நாள் வேலை - தடியனுக்கோ ஒரு நொடி வேலை!

சமச்சீர் முறை கல்வி நீக்கம் சரியாகுமா?
பெரியாரைப் பற்றிப் பேசி கை தட்டு வாங்கி, பார்ப்பனர் - தமிழர் பற்றிப் பேசி விளம்பரம் பெற்று, அதன்பின் அவற்றை அடகு வைத்து பார்ப்பன ஊடகங்களால் ஆழ்வார் பட்டம் பெறுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் அதிசயம் இல்லை.
தமிழ்நாட்டு முதல் அமைச்சரைப் பாராட்டுவது, போற்றுவது அத்தகையவர்களுக்கு அவசியமாகவும், ஆதாயமாகவும் இருக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.
சமச்சீர் கல்வியைப் பற்றி கேள்வி கேட் டால் என்ன பதில் தெரியுமா?
சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. அதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் தரமான பாடத்திட்டம் இல்லாமல் எப்படி நடைமுறைப்படுத்துவது? எனவே இந்த வகையில் தமிழக அரசைக் குறை சொல்ல முடியாது- என்பதுதான் இயக்குநர் ஒருவரின் பதில்.
சீமான் வீட்டுப் பிள்ளையும், அன்னக்காவடி வீட்டுப் பிள்ளையும் ஒரே பாடத்தைப் படிப்பதா என்று பூணூலைக் கொடியாக்கித் தூக்கிப் பிடிப்போரின் பாதார விந்தங்களை நோக்கி அனுமார்கள் சரணடையும் படலம் இது.
நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்று புராணம் எழுதி வைத்த பார்ப்பனர்தம் குப்பையைத் தூக்கி எறிந்து, பார்ப்பனர்களின் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை வாழ்த்தி வரவேற்கும் பாடம் சமச்சீர் கல்வியில் இடம் பெறுவது அழிக்கப்பட்டு விட்டதே!

இதற்கு என்ன பதிலாம்?
ஒரு வரியில் இதெல்லாம் தரமான கல்விப் பாடத் திட்டம் அல்ல என்று இந்தத் தரமான மனிதர்கள் கருதி விட்டார்களோ!
மிகப் பெரிய விலை கொடுத்து, பார்ப்பனீய கோர நச்சுப் புழுதியிலிருந்து, பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்வும், தன்மானமும் எடுத்துக் கட்டப்பட்டுள்ளன _- மீட்கப்பட்டுள்ளன!
புரிந்தோ, புரியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ பார்ப்பன வலையில் சிக்கி முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட திராவிடர் இயக்கத்தின் பேருழைப்பை - தியாகங்களைக் கொச்சைப்படுத்தி, எதிரிகளிடம் விலை போக வேண்டாம் என்று எச்சரிப்பது நமது கடமை! தமிழ்த் தேசியம் என்ற பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, பார்ப்பன எதிர்ப்பைப் புறந்தள்ளி, சமூக நீதியை கிடப்பில் போட்டு, ஜாதி ஒழிப்பை நெட்டித் தள்ளி, மூட நம்பிக்கை ஒழிப்பை ஓரங்கட்டி, பார்ப்பனிய ஆதிக்கப் பல்லக்கைத் தூக்கிச் சுமக்க தோள்களைத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள்தாம் இக்கால கட்டத்தில் ஆபத்தானவர்கள் - மிகமிக ஆபத்தானவர்கள்.

தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனிய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.
- தந்தை பெரியார் (விடுதலை 5.3.1969)

 
மண்சோறு என்னாச்சு?
கேள்வி: முதல்வர் அம்மா இருக்கும் இடம்தான் எனக்குக் கோவில். எனவே அவர் ஆட்சி செய்யும் கோட்டையும் சரி, அ.தி.மு.க. தலைமைச் செயலகமானாலும் சரி, போயஸ் கார்டனாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் நான் செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்ட செருப்பு அணியாமல் பவனி வரும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் பற்றி?

பதில்: நல்ல வேளையாக முதல்வர் தலையிட்டு இந்தக் கோமாளித்தனத்தை நிறுத்தி இருக்கிறார். இம்மாதிரி செய்யக்கூடாது என்றும், தான் இருக்கும் இடத்தில் அவர் காலணி அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்றும், அவரிடம் முதல்வர் கண்டிப்பாகக் கூறிவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. அதுவரை நல்லது.
(துக்ளக் - 15-6-2011)
சரிதான். அதோடு, அ.தி.மு.க. பக்தர்கள் அம்மாவுக்காக மண்சோறு தின்கிறார்களே. அது பற்றி ஒன்றும் அம்மா சொல்லமாட்டாரா? துக்ளக் அய்யர்வாளும் அதனைக் கண்டு கொள்ளத்தான் மாட்டாரா?

- மின்சாரம்,ஞாயிறு மலர் (02-07-2011)


1 comment:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

//சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.//

நம்ம கொள்கையும் இதேதாங்க.. சூப்பர் !

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]