வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, October 27, 2009

கலசம் விழுந்தது - கலக்கம் பிறந்ததோ!


கைப்பேசியில் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்தாலும் வந்தது _ எது எதற்கெல்லாமோ பயன்பட ஆரம்பித்துவிட்டது _ கடவுள் சமாச்சாரங்கள் உள்பட!

ஒரு செய்தி: கோவை மாவட்டம் காங்கயம் சிவன் மணிமுருகன் கோயில் கொடிமரம் சாய்ந்தது!

இன்னொரு செய்தி: இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்துவிட்டது!

மற்றும் ஒரு செய்தி: திருவண்ணாமலை, திருச்செந்தூர் கோயில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்துவிட்டன.

இந்தச் செய்திகள் காட்டுத்தீபோல் பரவின. பக்தர்கள் மருண்டனராம்.

அய்யய்யோ, ஆபத்து, ஆபத்து! ஏதோ நடக்கப் போகிறது என்று பக்தர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். வீட்டில் உள்ள ஆண்களின் ஆயுளுக்குக் கேடு என்று யாரோ சொல்ல, அப்படியே இடிந்துபோய் விட்டார்களாம்.

அடுத்து என்ன நடக்கும்? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், காணிக்கைகள் இன்னோரன்ன சுரண்டல் விசேஷங்கள் ஜோராக நடந்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்குமுன் திருமானூர் தாயாரம்மாள் தாலி அவிழ்ந்து விழுந்துவிட்டதென்று கூறி, அடேயப்பா எவ்வளவு களேபரம்!

பெண்கள் தங்கள் தாலி கயிறுகளைப் புதிதாகக் கட்டிக் கொண்டார்களாம்.

மக்களின் மூடத்தனத்தை_ பக்தியை எப்படியெல்லாம் ஒரு வணிகத் தன்மையில் மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

முதலில் ஒன்றை அவர்கள் சிந்திக்கவேண்டாமா?

சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு அதன் கோபுரம் இடிந்தது, கலசம் விழுந்தது, கொடிமரம் சாய்ந்தது என்பதெல்லாம் நடக்கும்போது பக்தர்கள் சிந்தனையில் எத்தகைய எண்ணம் ஏற்படவேண்டும்?

சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்றால், இவையெல்லாம் எப்படி நடக்கும் என்ற வினா எடுத்த எடுப்பிலேயே தோன்றியிருக்கவேண்டாமா?

அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால், கோபுரம் இடிந்ததற்கும், கலசங்கள் விழுந்ததற்கும், கொடிமரங்கள் சாய்ந்ததற்கும் கடவுள்தானே பொறுப்பு என்ற வினா இரண்டாவதாக ஏற்பட்டிருக்கவேண்டாமா?

மூன்றாவதாக இவை நடந்ததால் அதே கோயிலுக்குச் சென்று பூஜை போடுவதில், காணிக்கைகள் கொடுப்பதில் அர்த்தம் உண்டா?

நான்காவது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது _ இந்த சிறப்பு வழிபாடுகளும், காணிக்கைகளும் யாருக்குப் போய்ச் சேர்கின்றன?

கடவுள் சக்தி கேள்விக்குறியாகும்போதுகூட, அதன் பலன் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகப் போகாமல் (நியாயமாக அப்படித்தானே போகவேண்டும்) அந்தக் கடவுள் சம்பந்தமான கூடாரத்துக்கே இலாபமாக வருமானமாகப் போவதன் தன்மையை_ சூழ்ச்சியை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இதற்குப் பெயர்தான் பக்தி மயக்கும் என்பது _ மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்பது; கடவுள் நம்பிக்கை. பக்தி என்று வந்துவிட்டால் சிந்தனைக்கே சிறிதும் இடமில்லாமல் ஒரு வழிப்பாதை என்பது இதுதான்!

எது நடந்தாலும் அதனை சொந்த இலாபகரமாக, சுயநலமாக ஆக்கிக் கொள்ளும் ஒரு புரோகிதச் சுரண்டல் முறை இதற்குள் மிகவும் பத்திரமாக இருப்பதை மக்கள் என்றைக்கு உணரப் போகிறார்கள்?

இந்தப் பாதுகாப்பில்தான் பார்ப்பனியம் மிகக் கெட்டியாக பலத்த அஸ்திவாரத்துடன் _ மற்றவர்களைப் பார்த்து கேலி செய்யும் தன்மையில் அமர்ந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு அதிக வேலைகள் இன்னும், இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன. கழகத் தோழர்கள் ஆங்காங்கே பரப்பப்படும் இதுபோன்ற செய்திகளை தோலுரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாக!

சுயமரியாதை!

ஒவ்வொரு கிராமத்-திலும் கோயில் உள்ளது. ஆனால், புரோகிதர் மகன் புரோகிதம் செய்ய வருவ-தில்லை. கிராமத்தில் உள்ள புரோகிதனுக்கு 500 ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து வைத்துவிடுவர். புதிதாகப் புரோகிதம் செய்யப் புறப்பட்டுள்ளவர்கள் வந்தால் 50 ஆயிரம் ரூபாய் செல-வாகும். கட்_அவுட் வைக்கவேண்டும் என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். இராமகோபாலன்-வாள் திருவாய் திறந்து தீர்த்தம் கொடுத்துள்ளார் காஞ்சி-புரத்தில் நடந்த புரோகிதர்கள் மாநாட்டில்.

புரோகிதப் பார்ப்பனர்கள் தட்சணை வாங்கிக்கொண்டு மனிதர்களுக்கு மட்டுமா கல்யாணங்களை நடத்தி வைக்கிறார்கள்? நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும்கூட மந்திரங்-களைச் சொல்லி நடத்தி வைத்துக்கொண்டுதானிருக்-கிறார்கள்.

சுயமரியாதைத் திரு-மணம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை-யல்ல. அது ஓர் இனத்தின் சுயமரியாதைப் பிரச்சினை. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லக்கூடாது என்பதற்-காக ஒரு முகூர்த்த நாழி-கைக்கு மணமகனுக்குப் பூணூல் மாட்டி, தற்காலிக வருணப் பதவி உயர்வு கொடுத்து, மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை முடித்தவுடன், மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பைக் கூடையில் போடு-வதன் பொருள் என்ன? பூணூலார் விளக்குவாரா?

அவர்கள் நடத்தும் கல்-யாணத்தில் எந்த வகை மந்-திரங்கள் சொல்லப்படுகின்-றன? கீழாத்தூர் சீனிவாசாச்-சாரி-யார் பி.ஓ.எல். என்ற பார்ப்-பனரால் மொழி பெயர்க்கப்-பட்டு விவாஹ சுபமுகூர்த்த போதினி என்ற பெயரால், பார்ப்பன நிறுவனமான தி லிட்டில் ஃப்ளவர் பதிப்-பகத்தால் வெளியிடப்பட்-டுள்ள நூல் 22 ஆம் பக்-கத்தில் அந்தக் கல்யாண மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஸோம; ப்ரதமோ விவிதே

கந்தர்வ விவத உத்தர: த்ருதீயோ

அக்னிஷ்டபதி: துரீயஸ்தே

மநுஷ்ய ஜா

இதன் பொருளும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஸோமன் முதலில் இவளை (மணமகளை) அடைந்தான். பிறகு கந்தர்-வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னு-டைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளது

பார்ப்பனப் புரோகிதனை அழைத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னால், மண-மகள் அதற்குமுன் மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தாள் என்பதை ஒப்புக்-கொள்ளவேண்டுமே!

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது பார்ப்பனர்களின் கலாச்சாரத்துக்கு வேண்டு-மானால் பொருத்தமாக இருக்கலாம். தமிழர்களுக்குப் பொருந்துமா?

பார்ப்பனர்களை அழைத்து தமிழர்கள் கல்-யாணத்தை நடத்தினால் மணமகளை விபச்சாரி என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள். மானம் கருதி அதனை ஒதுக்கி சுயமரியா-தைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி-னார் என்பதை ராமகோபால-னின் கூட்டம் தெரிந்து-கொள்ளட்டும்!

திருமணச் செலவுகூட ஒரு குடும்பத்தின் பத்து அல்லது 15 நாள் வரும்படிக்-குமேல் செல்லக்கூடாது என்பதுதான் தந்தை பெரி-யார் அவர்களின் கருத்தா-கும். (விடுதலை, 10.6.1970).

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

நன்றி விடுதலை 26-10-2009

Monday, October 26, 2009

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை


சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத்தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவு பெறாமல் இருக்கும் பொழுதே தமிழ்நாடு பத்திரிகையும் இது தான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக் கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலியவரும் சண்டைகளுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ் நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக் கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப் படுத்திக்கொண்டு ஸ்தலஸ்தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்துவரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்-கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நமது முயற்சிக்குக் கெடுதலாவது செய்யாது இருக்க வேண்டாமா என்றுதான் பிராமணரல்லாத தலைவர்களிடம் நாம் உண்மையாய் எதிர்பார்த்தது. இந்தநிலையில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் தேர்தல் சம்பந்தமான அபிப்பிராயங்கள் நமது முயற்சிக்கு சில இடங்களில் கொசவனுக்குப் பல நாளைக்கு வேலை, தடியடிக்காரனுக்கு ஒரே நாள் வேலை என்பது போல் பல தொந்தரவுகளை விளைவிப்பதாகப் பட்டதால் ஸ்ரீமான் நாயுடுவின் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. அதற்கு, சரியான சமாதானம் ஒன்றும் சொல்லாமல் ஸ்ரீமான் பட்டாபிராமய்யர் அவர்கள் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சுயராஜ்ய கட்சி தேசத்து ரோகம் செய்து விட்டது என்று சொன்ன பொழுது ஸ்ரீமான் நேரு அதற்கு தகுந்த சமாதானம் சொல்வதற்கு யோக்கியதையில்லாமல் நான் உன்னை ஒரு தூசி போல் மதிக்கிறேன் என்று சொன்ன அகம்பாவமும்.... பொருந்திய பதில்போல் ஸ்ரீமான் நாயக்கரின் கோபத்திற்கும், பயமுறுத்தலுக்கும் பயந்து ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தம்முடைய கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு பத்திரிகை வம்புச் சண்டைக்கு இழுக்கின்றது. சாதாரணமாக பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத்தலைவர்களும், தான் ஒருவரைப்பற்றி ஏதேனும் குறைகூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டால் ஒருவர் என்ன சொன்னார் என்ன பேசினார் என்பதை தங்கள் பத்திரிகையில் எடுத்துக் காட்டாமலும், அதைப் பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமலும் தங்களுக்குத் தோன்றியபடி பத்திரிகைகளில் எழுதி அவர்கள் இஷ்டத்திற்கு அனுசரணையான பிரச்சாரம் செய்வது வழக்கம், அதைப் பற்றி நாமும் பலதடவை கண்டித்திருக்கிறோம். அதே கொள்கையை தமிழ்நாடு பத்திரிகையும் பின்பற்றுவதென்றால் பிறகு நாம் அதை என்னவென்று நினைப்பது? அதனிடத்தில் இனி என்ன தான் எதிர்பார்க்க முடியாது? எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயக்கர் கோபித்துக் கொண்டார் எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயுடுவை பயமுறுத்தினார் என்று எழுதி அதன் பேரில் ஸ்ரீமான் நாயுடுவின் வீரப்பிரதாபத்தைக் காட்டியிருந்தால் ஒழுங்காயிருக்கும், அப்படியில்லாமல் வீண் வம்புச் சண்டைக்கு இழுப்பது தர்மமா?

நாம் எழுதியதில் ஏதேனும் குற்றமிருக்கின்றதா என்பதை பொது ஜனங்கள் அறியும்படி மறுபடியும் எழுதி இதற்குத் தமிழ்நாடு பத்திரிகை சொல்லும் பதிலையும் சொல்லி விட்டு நிறுத்திக் கொள்கிறோம். இதைப்பற்றி மறுபடியும் தமிழ்நாடு கண்டனமோ மறுப்போ சமாதானமோ எழுதுகிற பொழுது முன்போல் நடந்து கொள்ளாமல் நாம் எழுதியதைப் போட்டு சமாதானமோ கண்டனமோ, மறுப்போ எழுதுமென்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீமான் நாயுடுவின் பழைய அபிப்பிராயமாவது;

கோயமுத்தூர் தேர்தலின் பொழுது தேர்தலுக்கு நிற்பவர்களின் யோக்கியதையை அறிந்து ஓட்டுச் செய்ய வேண்டுமென்ற ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்த பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ்காரருக்கே வெற்றி ஏற்படுமாறு ஈசனைப்பிரார்த்திக்கிறேன் என்று ஒரு ஸ்ரீ முகம் விடுவித்தார்.

அதற்கு எதிர்க்கட்சியாளர் ஒரு கடித மெழுதியபொழுது (அக்கடிதம் ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையின் 9-ஆவது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர ஜனங்களை போலிகள் ஏமாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது தேசியவாதிகளின் கடமையாகும்.... சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குச் சென்று அதை ஓடவிடாது தடுக்கவே கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்ட சபைகளைத் தவிர முனிசிபாலிட்டிகளில் ஒத்துழையாமைக்கோ, முட்டுக்கட்டைக்கோ வழி இல்லை. நகர சபைகளில் எந்த விதத்தில் ஜனங்களுக்கு வேலை செய்யலாம் என்பதே அங்கத்தினர்களின் வேலையாயிருக்கிறதே ஒழிய எதிர்த்துப் போராடுவதற்கு அதிகாரவர்க்கம் அங்கு இல்லை. இதனால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டும் ஓட்டுக்கொடுத்து விடக்கூடாது. ............. அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டுக்கொடுக்க வேண்டும். நீடித்த காங்கிரஸ்வாதியாயும், வெளிவேஷத்திற்கு மாத்திரமல்லாமல் எப்பொழுதும் கதர் கட்டிக்கொண்டிருப்பவராகவும் பார்த்து ஓட்டுச் செய்யவேண்டும் என்று 30-.8.19-25 தமிழ்நாடு பத்திரிகையில் மேற்படி கோயம்புத்தூர் நண்பருக்கு பதில் கூறு முகத்தான் ஒரு வியாசம் வரைந்துள்ளார். அதற்கு நான்கு நாளைக்குள் திருச்சியில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ்கூடிய ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஜாதி பேதமின்றி காங்கிரஸ்காரருக்கே ஓட்டுச் செய்ய வேண்டுமென்று ஒரு செய்தி அனுப்பினார். பாம்பன் பிரசங்கத்தில் காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித்திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றி விடக்கூடாது.... நான் ஒரு கட்சியிலும் சேர்ந்தவனல்ல....... எனது வேலைத் திட்டம் எனது நண்பர்களின் யோசனையிலிருந்து வருகிறது .......... என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நகரசபையில் வேலை செய்யத்தகுதியுள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் அபேட்சகர்களாய் நிற்பார்களானால் கட்சிப்போக்கை கவனியாமல் பிராமணரல்லாதாருக்கேதான் ஓட்டுச் செய்ய வேண்டும். (இது சென்னையில் இரண்டு கனவான்கள் நேரில் கண்டு கேட்டபோது சொல்லியது.)

அதற்கு அடுத்த நாள் தமது அன்புள்ள ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நிர்மாண-திட்டத்தில் நம்பிக்கை இருப்பதாகத்தான் நம்புவதாயும், நிர்மாணத் திட்டத்தை நம்புபவரும் அனுஷ்டானத்தில் செய்து காட்டுபவரும் காங்கிரஸ் அபேட்சகர் என்று தான் நம்புவதாகவும், அவரை ஆதரிக்கவேண்டுவது பொது ஜனங்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராய-மாவது;

1. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ்வாதிகளை ஸ்ரீமான் நாயுடு ஆதரித்து எழுதிய கடிதங்களை ஸ்ரீமான் நாயக்கர் கண்டிக்கப் புறப்பட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.

2. உண்மை தேசியவாதியான ஒரு பிராமணனும் காங்கிரசைச் சேராத ஒரு தமிழனும் தேர்தலுக்கு நின்றால் தேசிய பிராமணனைத்தான் தேசம் ஆதரிக்க வேண்டும். உண்மை தேசிய-வாதியான ஒரு பஞ்சமனுக்கும், மிதவாதியான ஒரு பிராமண-னுக்கும் போட்டி ஏற்பட்டால் பஞ்ச-மனைத்தான் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.

3. ஸ்தலஸ்தாபனங்களில் முட்டுக் கட்டைக்கு இடமில்லை என்பது வாஸ்தவமே. அவ்வித அபிப்பிராயம் நாம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அடிமைப்பட்ட நாட்டில் சர்க்காரால் ஏற்பட்டிருக்கும் சகல ஸ்தாபனங்களிலும் தேசியவாதிகள் நுழைந்து உட்கார்ந்து கொண்டால் சமயம் வாய்ந்த போது உள்நோக்கமும் சர்க்காரைத் காக்க அனுகூலமாகுமன்றோ?

4 அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டுமாம்.

5 ஆனால் ஒருவர் ஒழுக்கத்தில் தர்ம ராஜனாயிருந்தாலும் சர்க்காருக்குச் சாதகமானவ-ராயிருந்தால் அவருக்கு ஓட்டு கொடுக்கக்கூடாதாம்.

6 வேறொருவர் ஒழுக்கத்தில் குறைந்த வராயிருந்தாலும், தேசிய வாதியாயிருந்து நம்-முடைய ஓட்டினாலும், பேச்சினாலும், சர்க்காரின் செல்வாக்கைக் குறைக்கக் கூடியவராயிருந்தால், ஜனங்கள் அவரை ஆதரிக்க வேண்டுமாம்.

காங்கிரஸில் உயர்வு, தாழ்வு கொள்கையை பிராமணர்கள் செய்கையில் காட்டினால், நிர்தாட்சண்யமாக அப்படிப்பட்டவர்களை, காங்கிரசினின்று துரத்திவிடவேண்டுமாம். இதைக் குருகுலப் போராட்டத்தில் செய்து காட்டியிருக்கிறாராம் ........... மேற் கூறியவைகள்தான் ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாம். மேலும் இவ்வித அபிப்பிராயங்கள் ஸ்ரீமான் நாயுடுவுக்கு எவ்வளவு தெளிவான அபிப்பிராய-மாய் இருந்த போதிலும் பொது-ஜனங்களுக்கு எவ்வளவு தெளிவைக் கொடுக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேணுமாய் கோருகிறோம்.

மற்றபடி இவ்வபிப்பிராயத்தின் தத்துவங்-களைப் பின்னால் எழுதுவோம்.

ஸ்ரீமான் நாயுடு: தன்னைப்பற்றி அதிகமாய் நினைத்து கொண்டார் என்பதற்குபதில், நாயக்கர் நாயுடுவைப் பற்றி அதிகமாய் நினைத்தாராம், அதனால் தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக் கொள்வது மேலோர்தன்மை போலும்!

- குடிஅரசு, துணைத் தலைப்பு, 27.09.1925

Sunday, October 25, 2009

பரிகாரம்என்ன?


உலகில் நானறிந்த வரையில் நம் நாட்டு மக்களிடம் இந்துக்கள் என்பவர்களிடம் தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?

நமக்கு கடவுள் இல்லையா? நாம் கடவுள் பக்தி இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்குக் கடவுள்பயம் இல்லையா? கடவுள் நெறி இல்லையா? நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும் என்கின்ற-தான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுப-வர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? நமக்கு நற்கதி அளிக்கும்-படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவையும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு, நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன-உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப் பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்-டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தனம், இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை - முக்கிய லட்சிய-மாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்-கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.

எனது இத்தனை ஆண்டு வாழ்க்கையில் - 80 ஆண்டு உலக அனுபவத்தில் - நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து?

இது பற்றி நான் மிகவும் கவலையடை-கிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகவும் கவலைப்-படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் 30_-40 ஆண்டுகள்- இதற்காகவே நான் செய்து கொண்டு வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகவும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கிறேன்.

நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டுகொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலை-யில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதால் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில் எல்லா மக்களை-யும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுய நலமில்லாமல் - எனக்குள்ள சகலத்-தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மை-யாகவே ஒரு தொண்டன் - தொண்டனாகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்-னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என்று கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை -அதாவது நம் மக்களில் யோக்கியமானவன் நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூடக் காண-முடியவில்லையே? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லையே? - என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.

இந்த நீண்ட நாள் கவலையில் - சிந்தனையின் பயனாக இதற்கு- அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்க-மானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளான-வன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் : நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலிவைகள்-தாம் என்கிற முடிவுக்கு வரவேண்டிய-வனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை - நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட-முடியாது என்துடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டிய-னாகி விட்டேன்.

நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்க-மாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்-பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடிய-வில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்கம் ஈனம், யோக்கிய ஈனம், நாணயமான காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத நிலைமை-யில்தானே நம் கடவுள்கள் இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்-கணக்கான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுள்களில் ஒரு கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது குருமார்களினா-லாவது கடவுள் கதைகளினாலாவது காட்ட-முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

மற்றும் வேத சாஸ்திர - தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத்-தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்-மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

தந்தை பெரியார் (விடுதலை தலையங்கம் 31-7-1942)

Friday, October 23, 2009

தீக்கதிர்

தீக்கதிர், தீபாவளி வர்த்தக மலரின் நோக்-கம் குறித்து அதன் முன்-னுரையில் சமாதானம் கூறிவிட்டதாம். விடு-தலைக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது தீக்கதிர். அடேயப்பா, என்ன சமாதானமோ!
கும்பமேளா நடத்து-கிறவர்களும் சமாதா-ன-மும், சாங்கியமும் கூறத்-தான் செய்கிறார்கள். அய்யப்பன் கோயி-லுக்குச் செல்லுகின்றவர்-களும் கொட்டி அளக்-கும் சரக்குகள் கொஞ்-சமா, நஞ்சமா?
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரம் என்-றால், சாதாரணமா? ஆமை, மீன் என்று கூறுவதெல்லாம் பரி-ணாம வளர்ச்சியின் தத்-துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா? அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது! சிரிப்பு வருகுது!! விலா நோகச் சிரிப்பு வருகிறது!!!
மக்களின் இனிய கொண்டாட்டப் பொழுது களில் நமக்குரிய விதத் தில் நாமும் பங்கேற் பது தேவையன்றோ?
அடேயப்பா! எப்படிப்-பட்ட டயலிட்டிக் மெட்-டிரியலிசம்!
கந்த சஷ்டி, சூரசம்-ஹாரம், கார்த்திகை தீபம், நவராத்திரி, சிவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, கள்ளழகர் திருவிழா, மாசி மகம் இப்படி மாதந்தவறாமல் பக்தர்கள் மூழ்கிக் கிடப்பதெல்லாம் இனிய கொண்டாட்-டங்கள்தாம்.
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்-தில் வரும் மகாமகத்தில் இலட்சக்கணக்கான மக்-கள் கூடி மகிழ்கிறார்கள். அதிலும் மார்க்சிஸ்ட்கள் சங்கமமாகி விடுவார்-களோ! அதற்கும் மலர் வெளியிடுவார்களோ!
மூட நம்பிக்கை-களைத் தவிர்த்து தீபா-வளி கொண்டாடலாமாம்! அப்படி ஒரு தீபாவளி-யிருக்கிறதோ?
தீபாவளி என்றாலும், சூரசம்ஹாரம் என்றா-லும், நவராத்திரி என்-றாலும் அசுரர்கள் வதம் செய்யப்படுவதாகக் கூறு-கிறார்களே, அந்த அசு-ரர்கள் என்றால் யார்? சுரர்கள் என்றால் யார்?
வரலாற்றை வகை-யாகப் படிக்கவேண்-டியவர்களுக்கு அரிச்-சுவடி சொல்லிக் கொடுக்-கும் நிலை ஏற்பட்டு-விட்டதே!
மூடச் சேற்றினில் மூழ்கிக் கிடக்கும் மக்-களைக் கரையேற்றுவது மார்க்சிஸ்ட்களின் கட-மையா? அல்லது அந்த மூடச் சேற்றில் தாமும் உருண்டு புரண்டு கோவிந்தா போடுவது மார்க்சிஸ்ட்களின் செயலா?
கம்யூனிசம் பர-வாமல் இருப்பதற்குத்-தான் கம்யூனிஸ்ட் கட்-சியோ!

விடுதலை 23-oct-2009

Wednesday, September 30, 2009

வன்னி அகதிகள் சிறைவைப்புக்கு சமாதானம் கூறும் காரணங்கள்

வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களையும் அங்கு தொடர்ந்து முடக்கி வைத்திருப் பதில் அவர்களை விடுவிப்பதில்லை என்பதில் கொழும்பு மிகமிக உறுதியாக இருக்கின்றது.
தன்னுடைய இந்தப் பிடிவாதப் போக்கை நியாயப்படுத்துவதற்காக எந்தவித காரணங்களையும் விளக் கங்களையும் தருவதற்கு அது பின்நிற்பதில்லை.
"வன்னி நிலப்பரப்பு எங்கும் அங்குலம் அங்குல மாகக் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டி ருக்கின்றன. இந்த மக்களைத் தற்போதைய முகாம்க ளில் இருந்து விடுவித்து அந்தக் கண்ணிவெடிகள் மீது தள்ளிவிட நாம் தயாரில்லை. அரசியலை விட மக்களின் உயிர்களே எமக்கு முக்கியம்.'' என்று முழங்கியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆஹா, இந்த வன்னி மக்கள் மீதும் அவர்களின் உயிர்கள் மற்றும் பாதுகாப்பு மீதும் ஜனாதிபதிக்கு எத்துணை கரிசனை.........!
இதே மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த சமயம் அவர்களின் உயிருக்கு வழங்கப்பட்ட மதிப்பும், அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை அப்பிர தேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்ட முன்னுரிமையும் தமிழ்ச் சமுதாயம் எளிதில் மறக்கற்பாலவையல்ல. இப்போது கரிசனை பொத்துக்கொண்டு வந் துள்ளது போலும்...
வன்னி இறுதி யுத்தத்தின் போது இந்த மக்களின் பாதுகாப்புக் குறித்துக் காட்டப்பட்ட கரிசனையுடன் ஒப் பிடும்போது இப்போது வன்னியில் புதைக்கப்பட் டுள்ளவை என்று கூறப்படும் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒன்றும் அப்படி மோசமானதல்ல. இத்தகைய கண்ணிவெடி புதை யுண்ட பிரதேசத்துக்குள் வாழ்ந்துகாட்டி மீண்டவர்கள் தான் இந்த மக்கள் என்பதும் மறைக்கக் கூடியதல்ல.
நல்லது. ஜனாதிபதியும் அவரது அரசும் கூறுவது போல கண்ணிவெடிகள் இருப்பதால் இந்த மக்களை வன்னிப் பிரதேசத்துக்குள் மீளக் குடியேற்ற அனுமதிக்க முடியாது என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம். அதற்காக அந்த மக்களை வவுனியாப் பகுதியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள் அரசு அமைத்துக் கொடுத்த கொட்டகைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்று உத்தரவிட்டு சிறைவைக்கவேண்டும் என்பதல்ல. அப் படி சிறை வைக்கப்படுவதற்கான தவறு ஏதும் இழைத் தவர்களும் அல்லர் அவர்கள்.
அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என அரசு கூறுவது உண்மை என்றால் ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்கு உள்ள உரிமை போல அவர்களும் நாட்டின் ஏனைய எந்த இடத்துக்கும் செல்லவும், வதி யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, அவர்கள் விரும்பினால் யாழ்.குடாநாட் டுக்கோ, அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஏனைய தமிழர் தாயகப் பகுதி களுக்கோ, தென்னிலங்கைக்கோ செல்லத் தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக்கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்ல வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் விரும்பினால் தம் இச்சையின் அடிப்படையில் அவ்வாறு வெளிநாடு செல்லவும் அவர்களுக்கு உரிமையுண்டு.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கண்ணிவெடி, மிதி வெடி புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று மீளக் குடியேறவிடாமல் தடுப்பது வேறு. அதற்காகப் பிற இடங்களுக்கோ, பிற தேசங்களுக்கோ செல்லவிடாமல் வவுனியாவில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முகாம்களுக்குள் வெளியேறவிடாது சிறைவைப்பது வேறு.
இந்த அகதிகளைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்றால் அங்கு நிலக்கண்ணி வெடி எனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். சரி. தடுப்பு முகாம் சிறைவைப்பிலிருந்து பிற இடங்களுக்கு வெளி யேற விடுங்கள் என்றால், அவர்களுடன் புலிகளும் கலந்திருக்கின்றாகள். எனவே அவர்களை அங்கிருந்து வெளியே விடமுடியாது என்று அடம்பிடிக்கின்றார்கள் அரசின் தலைவர்கள்.
இப்படி இரண்டு பக்கத்தாலும் விளக்கம், வியாக்கியா னம் கூறி, இந்த மக்களை சிறைவைத்திருக்கின்றமை அந்த சிறைவைப்பைத் தொடர்ந்து இழுத்தடித்தபடி அதற்கு அபத்தமான விளக்கங்களையும், காரணங் களையும் கூறுகின்றமை இறுதியில் இந்த விவகாரத்தை விபரீதத்தை நோக்கியே இட்டுச் செல்லும்.
இந்த அகதிகள் சிறைவைப்புத் தொடர்பில் அதி கரித்து வரும் சர்வதேச அழுத்தங்களின் தாற்பரியங் களைக் கொழும்பு புரிந்ததாக இல்லை.
இவ்விடயத்தில் "மொட்டந் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் விதத்தில்' கொழும்பு அரசு கூறி வரும் விளக்கங்களை சர்வதேச சமூகம் இனியும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருக்குமா என்பது சந்தேகமே:
இவ்விடயத்தை ஒட்டி சர்வதேச தரப்புகளால் பிரதி பலிக்கப்பட்டுவரும் கருத்துகள் அத்தகைய உணர் வைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஐ.நா.செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை போல கசப்புணர்வு வளரவும், நாட்டின் ஐக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தவுமே இத்தகைய கெடுபிடிப் போக்கு வழிவகுக்கும

நன்றி :உதயம் தலையங்கம்

Monday, September 21, 2009

ஆயுதபூசைபற்றி அண்ணா


எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்-டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனி-தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்-பவர்கள் எல்லாம்.

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம், ஆயுதபூசை செய்தவர்களல்ல!

நவராத்திரி கொண்டாடினவர்-களல்ல!

சரஸ்வதி பூசை இல்லை!

ஓலைக் குடிசையும் கலப்பையும், ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள் தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்-துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்.

நீ, கொண்டாடுகிறாய்,

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!

ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைப், பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்-குத் தந்தோம். என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி _ உன்னை-யுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடி-யிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்-சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டு-பிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது _ என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் _ தந்தி முறை _ அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை, சிபி, சினிமா பார்த்தில்லை!

தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது _ அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள், சரஸ்வதி பூசை ஆயுத பூசை!

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இதுமுறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த

சரஸ்வதி பூசை ஆயுத பூசை _

நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்-களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதை-யும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் _ அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

Monday, September 07, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 94 : பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா


படம்: ப.சிதம்பரம், ஜெயவர்த்தனா

"ஆபரேஷன் லிபரேஷன்' வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன.

இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின் புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது. (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின் பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு அதிர்ந்தனர்.

இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த "வீக்எண்ட்' சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில் குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு "நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?' என்பதாகும். கட்டுரையின் முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்:

""நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும்.

ஸ்ரீலங்கா, இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத் தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

இன்றைய நிலையில், "ஆபரேஷன் லிபரேஷன்' பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும் சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம், பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், "எவ்வாறு சிங்கள அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?' என்று என்னைக் கேட்டது. அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி செய்தியாளர், "தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்?' எனக் கேட்டார்.

உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர் யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப் பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார்.

இது கேட்ட ஒரு பத்திரிகையாளர், "இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே சான்றாக உள்ளது' என்றார்.

நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும் நம்பிக்கையும்தான்'' என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது.

விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல், இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால் தடுக்கமுடியவில்லை.

காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில் பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத் தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும் ஜெயவர்த்தனா பயந்தார்.

புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர். இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும் சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப் பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப் பொட்டலங்கள் போட்டதை "அத்துமீறல்' என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.

அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார்.

"ராணுவத்தின் மூலமே தீர்வு என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். இறுதிவரை போர்தான் - சமாதானம் இல்லை' என்று அடம்பிடித்த ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். "இறுதிவரைப் போர்' என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் எழுதிய, "அசைன்மெண்ட் கொழும்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.

இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில் ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப் பறந்தனர். இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.

இந்த நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கே முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார். அவர் உட்கார்ந்ததுமே ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், "இப்பொழுது பிரபாகரன் எங்கே? திடீரென மாயமாக மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே? எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?' என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:

""எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்லவேண்டியதாயிற்று.

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது'' இப்படியான ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. ""சரி, பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறி என்னை மடக்க முயன்றார்.

முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.

முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், "சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை. மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள் என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்' என்றேன்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார். அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.

""பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?'' என்று கேட்டார். தொடர்ந்து, "அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்' என்றார்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-93: பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்

இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:
""அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.
தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்; புலிகளாக மாறுங்கள்; புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள். நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது. ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், "பிளாட்' இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பையொட்டி, "பிளாட்' இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.
பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.
அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, ""நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம். ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்'' என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, ""தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்'' என்றார்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது "செல்வகுமார்' என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.
அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).
சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.
எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.
இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று. 1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்' என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).
கேள்வி : எதிர்காலத் தமிழீழத்தில், "ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்' என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன் :"எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.'
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?
பிரபாகரன் : சோசலிசமும் - தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?
பிரபாகரன் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.
எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம். எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.
மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில், "தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம். எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்' (வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி - பக்.28-29/ ஆதாரம்"" பழ.நெடுமாறன்).
கேள்வி : "உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?'
பிரபாகரன் : "உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் - அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும். எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி' என்றார்.

நன்றி தினமணி

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 92: சகோதர இயக்கங்களிடையே மோதல்

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும். இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:
""தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது. ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை உறுதி செய்தது'' என லண்டனில் இருந்து வெளிவந்த "ஈழ பூமி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
""ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் ("ரா' அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்''
""டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது''
""பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்''
""(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்''
""இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்''
""வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) - என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார். பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலில்,
""நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன? அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும். இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்'' என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், "தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை' என்று பொபி கூறினார்.
விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:
""எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு "கோண்டாவில்' என்ற ஊருக்குப் போனோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்''
இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.
மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, ""ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்'' என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.
இதன் பின்னணி என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.
இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார் (தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).
இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், "லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.
இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்- பழ.நெடுமாறன் -பக்.51).

நன்றி தினமணி

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-100: ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!


1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும் அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.
2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின் பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களின்போது அதனை மேற்பார்வையிட இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை இலங்கை அதிபர் அழைக்கவும் ஏற்றுக்கொண்டனர்.
3. மாகாணசபைத் தேர்தல் நடைபெற உகந்த நிலையை உருவாக்க, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் இருந்து ஊர்க்காவல் படையினரும் துணை ராணுவப்படையினரும் திருப்பி அழைக்கப்படுவர். இதனைச் செய்ய ஜனாதிபதி உடன்படுகிறார்.
இன வன்முறையின்போது கொண்டு நிறுத்தப்பட்ட துணை ராணுவத் துருப்புகளை இலங்கையின் நிரந்தரப் பாதுகாப்புப் படையாக ஏற்றுக்கொள்வது அதிபரின் அதிகாரத்திற்கு உரியது.
4. தமிழ்ப் போராளிகள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பதை இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்றுக் கொள்கின்றனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய இரு அமைப்புகளின் மூத்த பிரதிநிதி ஒருவரின் முன் இந்த ஆயுத ஒப்படைப்பு நடைபெறும்.
5. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்திய - இலங்கை கூட்டு கண்காணிப்புக் குழு ஒன்று அமைப்பதையும், 1987 ஜூலை மாதம் 31-ஆம் தேதி முதல் ஏற்படும் போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்கின்றனர்.
6. ஒப்பந்தத்தில் பத்தி எண் 2.14, 2.16 (இ)யில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி போர் நிறுத்தம் நடவடிக்கையை உறுதிப்படுத்த, இந்திய அமைதி காக்கும் படை ஒன்றை, தேவைப்பட்டால் இலங்கை அதிபர் அழைக்கக்கூடும். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு ராஜீவ் காந்தி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த சில கவலைகளும், உணர்வுகளும் இன்றைக்கும் கூடப் பொருத்தமானதாகவே இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசு இந்தியாவைப் பல விஷயங்களில் வஞ்சித்து வருகிறது என்பதை உறுதியும் படுத்துகிறது.
ராஜீவ் எழுதிய கடிதத்தில் காணப்பட்ட முக்கியமான அம்சங்கள் வருமாறு:
1. மிகுந்த அக்கறையுடன் இரு நாடுகளுக்குமிடையே நூற்றாண்டுகளாய் பேணி பாதுகாக்கப்பட்டுத் தொடர்ந்து வரும் நம் நட்புறவு... இந்த வேளையில் அது இன்னும் வலுப்பெற்று அதை மீண்டும் இருநாடுகளும் நிரூபிக்கும் வகையில் நம் இரு நாடுகளின் அதன் எல்லைப் பகுதிக்குள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு எதிராக, சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சக்திகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
2. இதே உத்வேகமும் எண்ணமும் கொண்டுள்ளதை நம் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்திய நீங்கள்... இந்தியாவின் சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.
அ.) நீங்களும் நானும் முன்பு பேசி ஒத்துக்கொண்டது போல இலங்கைக்காக மற்ற நாடுகளின் ராணுவத்தினரையோ அல்லது வல்லுநர்களையோ இந்தியாவைப் அனுமதித்ததுபோன்று, அனுமதிக்காமலிருப்பதே இந்திய இலங்கை உறவுக்குப் பாலமாகும்.
இ.) திருகோணமலை அல்லது ஏனைய மற்ற பகுதிகளில், மற்ற நாடுகளின் ராணுவ பயன்பாட்டிற்கு அனுமதிக்காமலிருப்பது இந்தியாவின் எண்ணத்திற்கு ஒத்துப்போவதாகும்.
உ.) மீண்டும் திருகோணமலை ஆயில் நிறுவனக் கிடங்குப் பணி இருநாட்டு கூட்டு முயற்சியுடன் தொடரும்.
இலங்கை அரசு வெளிநாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் அங்கு செயல்பட்டு வருவதை மறுபரிசீலனை செய்து இந்தத் தகவல் ஒலிபரப்பு பொதுவான துறையாக மட்டும் செயல்படவேண்டும். ராணுவ மற்றும் வல்லுநர் தன்மைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
3. அதே உத்வேகத்துடன் இந்தியாவும் செயல்படும்.
அ.) தீவிரவாதச் செயல்கள், தனி நாடுவேண்டி போராடுபவர்கள், குழுக்களைச் சேர்ப்பவர்கள் இந்த மாதிரி செயல்களைச் செய்பவர்கள் என கண்டுபிடிக்கப்படும் இலங்கைப் பிரஜைகள் நாடு கடத்தப்படுவர்.
இ.) இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவி மற்றும் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும்.
4. இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து பொதுவான விஷயங்களில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில்கொண்டு இருவரும் கலந்துபேசி இருதரப்பைப் பலப்படுத்தியும் மேலும் இந்தக் கடிதத்தில் கண்டுள்ள மற்ற விஷயங்களைப் பற்றியும் கவனிக்கவேண்டும்.
5. நம் இருவருக்குமிடையே உருவான ஒப்பந்தப்படி மேலே குறிப்பிட்டவைகள் சரியானபடி இருப்பதாக தயவுகூர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். எனது மிக, மிக உயர்வான சலுகைகளின்படியான வாக்குறுதிகளை மனதில் கொண்டு தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
(ஒப்பந்த நகல் உதவி : ஏன் எரிகிறது ஈழம்-கே.கே.ரமேஷ்)
இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட இருந்தது. பல்வேறு ஒத்திகைக்குப் பின்னர் அந்த நேரமும் வந்தது. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுப்பு குறித்து ஆய்வு செய்து ஒப்புதலும் அளித்தனர்.
அவர்கள் ஆய்வு செய்த முக்கிய விஷயம் என்னவென்றால், அணிவகுப்பு மரியாதையில் வீரர்கள் பிடித்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான்! இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் எகிப்து அதிபர் அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி நடைமுறைக்கு வந்தது.
1978-இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலியப் பிரதமர் பெனகம் பெகினுடன், அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். "காம்ப் டேவிட் ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அரபுநாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக எகிப்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், 1981-ஆம் ஆண்டில் எகிப்து அதிபர் அன்வர் சதாத், தனது நாட்டின் அணிவகுப்பில், தனது வீரனாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் உலகநாடுகள் அணிவகுப்பு துப்பாக்கிகளில் குண்டு நிரப்புவதைத் தடைசெய்தனர்.
இதே நடைமுறைப்படிதான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பிரிவினரும் சோதனை மேற்கொண்டனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அணிவகுப்பு மரியாதைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா.
அவர் ராணுவத்தினருக்கு அணிவகுப்பில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் குண்டுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டபோது சிங்கள ராணுவத் தலைமை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ராணுவ வீரர்களின்மீது அவநம்பிக்கை கொண்டதாக இச்செயல் அமையும் என வாதிட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி அணிவகுப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று ரவி ஜெயவர்த்தனா, குண்டுகளை அகற்றும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு வருகையில், கடற்படையைச் சேர்ந்த விஜயமுனி விஜிதா ரோகண டி சில்வா என்கிற சிப்பாய் தான் பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால், ராஜீவ் காந்தியின் பின்தலையில் வேகமாகத் தாக்க முயன்றார். பின்தலையில் தாக்கினால் ஒரு மனிதன் செயலிழப்பான் என்பது ராணுவப் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும் சூத்திரங்களில் ஒன்று. இவ்வாறு சிங்களச் சிப்பாய் தாக்குவதை உணர்ந்த ராஜீவ் காந்தி தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். துப்பாக்கியின் அடிக்கட்டை அவரது தோளில் பட்டது.
ராணுவ உயர் அதிகாரிகள், ஜெயவர்த்தனாவின் சகாக்கள் முன்னிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. ஆனால் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிதான் ஓடோடிச்சென்று அந்தச் சிங்களச் சிப்பாயை இயங்கவிடாமல் பிடித்து அமுக்கினார்.
சிங்களப் படையினர் எத்தகைய கொடூரமான மனநிலையினர் என்பதையும் கொலைவெறி மிகுந்தவர்கள் என்பதையும் இச்சம்பவம் உலகத்திற்கு அடையாளம் காட்டியது.
இந்நிலையில், இந்த சம்பவங்களின் பின்குறிப்பாக கீழ்க்கண்டவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்:
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில், இதில் கலந்துகொள்ளவிரும்பாத அந்நாட்டின் பிரதமர் பிரேமதாச தாய்லாந்து சென்றுவிடுகிறார். ஒரு நாட்டின் பிரதமர், தனது நாட்டுக்கு வேறொரு நாட்டின் பிரதமர் வரும்போது, வெளிநாட்டுக்குச் செல்வது என்பது, உலகில் வேறெங்கும் நடைபெறாத சம்பவமாகும்.
அதுமட்டுமன்றி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் முக்கிய அமைச்சர்களும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததும் புதுமையானதுதான். இச்செயல் அனைத்தும் இந்தியாவை அவமானப்படுத்தவேண்டும் என்பதே ஆகும்.
ராஜீவ் காந்தியை அணிவகுப்பின்போது தாக்கிய விஜயமுனி பிரேமதாசவின் ஆதரவாளர் என்றும் அப்போது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அவரது தூண்டுதலின்பேரிலேயே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நடைபெற்றது என்றும் விமர்சித்தவர்களும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போன்றே, பிற்காலத்தில் பிரேமதாசா அந்நாட்டின் அதிபராக வந்ததும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய விஜயமுனியை நிபந்தனை ஏதுமின்று விடுதலை செய்த நிகழ்ச்சி அமைந்தது.
"ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, பதவி விலக வேண்டும்' என்றார் இலங்கை நிதியமைச்சர் ரோனி டிமெல். ரோனி டிமெல்லின் கருத்துக்கு அதலத் முதலி சூடாகப் பதிலளித்தார். "இலங்கைக் கடற்படை, அதிபர் ஜெயவர்த்தனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரோனி டிமெல் இப்படியெல்லாம் கோரிக்கை வைத்து அதிபரைச் சிறுமைப்படுத்துகிறார்.'
ஆனால் அதுலத் முதலியின் பாதுகாப்பு இலாகா பறிக்கப்படவும் இல்லை, இந்தியாவும் அந்த சம்பவத்தைப் பெரிது படுத்தவில்லை.
ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டு அதனால் மரணமடைந்திருந்தால்! இந்த விஷயத்தில் இந்திய அரசின் மௌனமும், ஜெயவர்த்தனா அரசின் கண்டும் காணாமலும் இருந்த போக்கும் விடையில்லாத புதிர்களாக இன்றுவரை தொடர்கின்றன...

நன்றி தினமணி

Sunday, September 06, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 91: பிரபாகரனின் தளபதிகள்


படம்: கிட்டு - மாத்தையா - கே.பி. கரிகாலன் - பொட்டு அம்மான் - சுப.தமிழ்ச்செல்வன் - காசி ஆனந்தன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீச்சும் பிரபாகரனின் சாதனைகளும் ஒப்பிட முடியாதவை. இயக்கமும், பிரபாகரனும் வெற்றியடைய பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். போராளிகளாக பல்லாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயிற்சி பெற்று பல்வேறு பகுதிகளில் செயலாற்றியும் வந்திருக்கிறார்கள்.


தமிழீழம் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிக்கென தளபதிகளும் நியமிக்கப்பட்டார்கள்.


இந்தத் தளபதிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் மாத்தையா, கிட்டு, விக்டர், புலேந்திரன், குமரப்பா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் பிரபாகரனின் பால்ய கால நண்பர்கள் ஆவர்.


இயக்கத்தில் பெரும்பாலும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக ஒரு பிரசாரம் எழுந்தது.


இதுகுறித்து யாழ்த் தளபதியாக இருந்த கிட்டு ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:


வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறியதோடல்லாமல், அதற்கு மேலும் சென்று ஒரு குறிப்பிட்ட சாதியினரே அதிகம் உள்ளனர் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என்னவென்றால், தமிழ்ச் சமுதாயம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் இணைந்து விடக் கூடாது என்பதுதான்.


உண்மையான செய்தி என்னவென்றால், பிரபாகரன் இந்த இயக்கத்தை முதலில் ஆரம்பித்தபோது, அவரோடு இணைந்தவர்கள் அவரது நண்பர்கள், பள்ளியில் படித்தவர்கள், உறவினர்கள் மற்றும் ஊரார்தான்.


அதுமட்டுமல்ல; இயக்கமும் வல்வெட்டித் துறையிலேயே ஆரம்பமானது. நாங்கள் வளர்ந்தோம் - பின்னர் தமிழீழத்தைச் சேர்ந்த பலர் இயக்கத்தில் இணைந்தனர். எங்கள் இயக்கத்தில் "சீனியாரிட்டிபடி' முதலில் இணைந்தவர்களுக்கு முன்னுரிமைகள் அதாவது பதவிப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது இயல்பான ஒன்று.


முதலாவது படையணியிலுள்ளவர்கள் பயிற்சி பெற்று தளபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு "சீனியாரிட்டிபடி' பதவிப் பொறுப்புகள் நாளடைவில் கிடைக்கும். சாதி அடிப்படையில் இயக்கம் இயங்குவதாகச் சொல்வது சுத்தப் பொய்.


பிரபாகரனுக்கும் இயக்கத்துக்கும் உறுதுணையாக பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.


பேபி சுப்ரமணியம்: கிருபாகரன் என்பது இவரின் முழுப்பெயராகும். இளங்குமரன் என்றும் பிற்காலத்தில் அறியப்பட்டார். காங்கேசன் துறையைச் சேர்ந்தவர். குடும்பமே கோயில் பணியில் ஈடுபட்டிருந்தது. அம்மா, பார்வையற்ற அண்ணன், இரு சகோதரிகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் பங்கு பெற்று அதன் தலைவர் செல்வநாயகத்தின் கூடவே இருந்தவர். பின்னர் பிரபாகரனுடன் இணைந்தார். விடுதலைப் புலிகளின் பிரசாரப் பணியில் இருந்தார். சாதாரணமாக இவரைப் பார்க்கும்போது "போராளி' என நினைக்கவே முடியாது. அவ்வளவு சாதுவாக இருப்பார்.


கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்: யாழ்ப்பாணம் தளபதியாக இருந்தவர். இவரின் தாயார் ராஜலட்சுமி தமிழரசுக் கட்சியின் மாதர் பிரிவில் தலைவராக இருந்தவர். கிட்டுவுக்கு ஒரு வயது நடக்கையில், அறப்போராட்டத்தில் அம்மாவுடன் சிறை சென்றவர் (1961இல்), பின்னர் 1987-இல் யாழ் நகரை சிங்கள ராணுவப் பிடியில் இருந்து மீட்டவர். சிங்கள ராணுவத்தை யாழ் கோட்டைக்குள்ளேயே சுருண்டு கிடக்கச் செய்தவர். ஒரு சமரில் தனது காலை இழந்தார். 1993-இல் இந்தியக் கடற்படையினரிடம் சிக்கி, மரணத்தைத் தழுவினார்.


மாத்தையா என்கிற மகேந்திர ராஜா: வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். வெளிநாடு போக இருந்தவர் பிரபாகரனால் ஈர்க்கப்பட்டார். மென்மையாகப் பேசுவார். பிரபாகரனுடன் நீண்டநேரம் உரையாடும் உரிமை பெற்றவர்களில் ஒருவர். பிரேமதாசா-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற அரசியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். வவுனியா தளபதியாக இருந்தார். கிட்டுவுக்குப் பிறகு யாழ்ப்பாணப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.


சங்கர்: பிரபாகரனின் பால்யகால நண்பர். மெய்க்காப்பாளர்களில் ஒருவர். வல்வெட்டித் துறையில் 1982-இல் சங்கர் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்ததும், அந்த வீட்டில் இருந்து தப்பிக்கும்போது, வயிற்றில் குண்டு பாய்ந்தது. மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபாகரன் சங்கரின் கையை எடுத்து, தன் கையில் வைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கையிலேயே, அந்த இருபத்திரண்டு வயது இளைஞனின் உயிர் பிரிந்தது. அவர் உயிர்த் துறந்த நவம்பர் 27-ஆம் தேதி, மாவீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.


கேபி (எ) பத்மநாதன்: குமரன் பத்தன், கேபி, குட்டி என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் பத்மநாதன் மயிலிட்டியைச் சேர்ந்தவர். சர்வதேச நடவடிக்கைகளுக்காக இவர் பணிக்கப்பட்டார். ஆயுதங்கள் பற்றிய விவரம் இவரது விரல் நுனியில்; கொள்முதல் பொறுப்பாளர்.


கரிகாலன்: திருகோணமலையைச் சேர்ந்தவர். பள்ளியில் இருந்து நேரே பிரபாகரனிடம் வந்தவர். பிரேமதாசாவுடன் அமைதி உடன்பாடு ஏற்பட்டபோது எதிர்த்தவர். பிரபாகரனுடன் நேரடியாக வாதிக்கும் உரிமை பெற்றவர்.


அன்டன் பாலசிங்கம்: வடமராட்சியைச் சேர்ந்தவர். வீரகேசரி, பிரிட்டிஷ் தூதரகம் முதலியவற்றில் பணிபுரிந்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு லண்டன் சென்றார். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். லண்டனில் மாணவர் பேரவைக் கிளையில் பங்காற்றினார். பிரபாகரன் தொடர்பு கிடைத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வகுப்பாளராக, அரசியல் ஆலோசகராக மாறினார். ஆங்கில வெளியீடுகள் அனைத்திலும் இவரது பார்வை இருக்கும். சமரசப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.


பொட்டுஅம்மான் (எ) சிவசங்கரன் சிவலிங்கம்: அரியாலையைச் சேர்ந்தவர். பதினெட்டு வயதில் இருந்தே மாணவர் பேரவையில் பங்கு பற்றினார். தெற்காசியா மட்டுமல்ல வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், கீழைத் தேசங்களின் அரசியலும் அத்துப்படி. புலனாய்வில் புலி. இவர் கணிப்பு என்பது இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர், இவருக்கும் பிரபாகரன்தான் நம்பிக்கை.


சுப. தமிழ்ச்செல்வன்: தென்மராட்சியைச் சேர்ந்தவர். பின்தங்கிய சமூகத்தவர். பொதுவுடைமைவாதி. கிட்டுவுக்குப் பிறகு அதிகார பூர்வ யாழ் பொறுப்பாளர் ஆனார். அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆகி, அன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றி பேச்சுவார்த்தைகளிலும் பங்கு பெற்றார். ஸ்ரீலங்கா ராணுவத் தாக்குதலில் மரணமடைந்தார்.


காசி ஆனந்தன்: மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 7 ஆண்டுகள் கண்டியிலும் கொழும்பிலும் இலங்கை அரசின் சிறைகளில் வாடியவர். தமிழீழம் என்ற சொல், தமிழ் விடுதலைப்புலிகள் என்ற இயக்கப்பெயர் யாவும் இவர் தந்தவை. பிரபாகரனின் நெருங்கிய சகா. "மாமனிதர்' என்ற பட்டம் பிரபாகரன் இவருக்கு வழங்கியது.

நன்றி தினமணி

Tuesday, April 28, 2009

பாவேந்தர் பிறந்த நாளில் அவர் பற்றி ஒரு பதிவு.................


1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.
1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.
1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.
1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.
1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.
1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.
1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.
1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.
1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.
1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.
1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.
1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.
1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..
1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.
1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.
1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.
1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.
(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)
1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)
1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.
1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.
1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".
1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.
1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.
1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.
1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.
1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.
1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.
1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.
1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.
1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.
1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.
1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.
1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.
அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.
1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.
1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.
1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.
1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.
1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.
1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.
1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.
1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.
1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.
1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.
"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.
1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.
1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.
1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.
1970, சனவரி - இரமணி மறைவு.
1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.
1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.

நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து


Monday, April 27, 2009

தள்ளாத வயதிலும் அய்யா.............................




Monday, April 20, 2009

காட்டிக்கொடுக்கும் கருணா...... ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.




இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.



சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.



லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.



அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.


வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.



இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.


இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.



கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.


இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.


காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.


கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.


பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.



பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.



கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.



தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.



நன்றி -- காலச்சுவடு .


Friday, April 17, 2009

புத்தகங்களை நேசிப்போம்

ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)

தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள்! 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம்! குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை! ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா. விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா. துப்பாக்கிகளைவிட பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங். எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் சில முகவரிகளைக் கொடுத்தபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர். தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம். உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்.

நன்றி - கீற்று

Tamil 10 top sites [www.tamil10 .com ]