பழமையான ஓலைச்சுவடிகள் முதல் டிஜிட்டல் புத்தகங்கள் வரை இடம்பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம் செப்டம்பர் 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் நவீன நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. இந்தப் பணிகள் இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெற்றுள்ளது. இதன் மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலகத்தில் இடம்பெற உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திறக்கப்படுவதற்கு முன்பே யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் கலாசாரமும் பாரம்பரியமும் மிக்க புத்தகங்கள், தகவல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் தொகுப்பதற்காக உலக டிஜிட்டல் நூலகம் (வேர்ல்டு டிஜிட்டல் லைப்ரரி) 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
சர்வதேச கலாசாரங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கலாசாரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் அளிப்பதோடு, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இலவசமாக தகவல் வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளையாட்டுகளுக்கு இடையே புத்தகங்கள் படிக்கும் வகையில் உருவாக்கப்படும் சிறுவர்கள் பிரிவு.
இந்தியாவிலேயே 2-வது நூலகம்...
பல நாடுகளின் தேசிய நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், பாரம்பரிய நிறுவனங்கள் என 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்குதாரர்களாக உள்ளன. இந்தியாவில் இருந்து காஷ்மீரில் உள்ள அல்லாமா இக்பால் நூலகம் மட்டுமே இதில் இணைந்துள்ளது. இரண்டாவதாக, அண்ணா நூற்றாண்டு நூலகம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட உள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல்மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்பட உள்ளன.
4 லட்சம் புத்தகங்களுடன் தொடக்கம்: சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள நூலகம் முதலில் நான்கு லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்துத் தலைப்புகளிலும் 12 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற உள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் தினமணி நிருபரிடம் கூறியது:
முதல்வர் கருணாநிதியின் அறிவுரைப்படி, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள்,அறிஞர்கள், கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறார்கள், முதியோர், சாதாரண மக்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம் உள்பட மொத்தம் 9 தளங்களில் மொத்தம் 3.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழ்த்திசை நூலகத்தில் அரிய ஓலைச் சுவடிகள் முதல் ஆன்லைன் புத்தகங்கள் (இ-புக்ஸ்), பத்திரிகைகள் வரை இதில் இடம்பெறுகின்றன. மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன் இல்லாதவர்கள்), சிறுவர்களுக்கான பிரிவுகள் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இதர வசதிகள்: இதோடு, 1,200 பேர் அமரும் வகையிலான நவீன வசதிகள் கொண்ட அரங்கமும், 800 பேர் அமரும் வகையில் திறந்தவெளி அரங்கமும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கிய நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இவற்றில் நடத்தலாம். அதோடு புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். இதுதவிர, 150 பேர் அமரும் வகையில் மாநாட்டு அரங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம், தெற்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகமாக இருக்கும். இந்த நூலகத்தை முதல்வர் கருணாநிதி செப்டம்பர் 15-ம் தேதி திறந்துவைக்க உள்ளார் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
--------- நன்றி தினமணி (10.09.2010)
1 comment:
கன்னிமரா நூலகத்தைக் கரைத்துக்குடித்த படிப்பாளிக்கு அவரது பிறந்த நாளில் தரப்படும் பரிசு அவர் விரும்பிய நூலகம். அறுவைச் சிகிச்சைக்குக் காத்திருந்த போது கூட அறுவையில் பிழைப்பேனோ இல்லையோ,இந்த அருமையான நூலை முடித்து விட அவகாசம் தாருங்கள் என்று கேட்ட அற்புதத்திற்கு ஒரு அற்புதப் பரிசு.
Post a Comment