Sunday, June 28, 2015
நூல் அறிமுகம்: ராமகோபாலன் மாட்டின் குண்டிபக்கம் குதத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்தார் . ஏன் அப்படிச் செய்தார் ?
சில வருடங்கள் முன்பு மாட்டுப்பொங்கலன்று ராம கோபாலன் கோமாதா பூஜை செய்தார் . உழவர்கள் மாட்டின் உழைப்பை மதித்து அதற்கு படையலிட்டு கொம்புக்கு வர்ணம் பூசி முன்பக்கம் பூஜித்துக்கொண்டிருந்தபோது ராமகோபாலன் மாட்டின் குண்டிபக்கம் குதத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்தார் . ஏன் அப்படிச் செய்தார் ? பசுவின் வாய் அசுத்தமானது என்கிறது மநு .அங்கிரஷர் ,பராசரர்,வியாசர் , யக்ஞவல்லியர் உட்பட பலர் எழுதியுள்ளனர். அதனால்தான் பசுவின் குண்டிப்பக்கம் பூஜை செய்தார் ராமகோபாலன் . இதுதான் பார்ப்பனர் வழக்கம் . அதே சமயம் மாட்டு மூத்திரம், சாணி இவற்றை புனிதம் என்பர். இவையும் இவைதொடர்பான பால், தயிர், நெய் ஐந்தும் கலந்து பஞ்சகவ்யம் எனக்கொண்டாடுவர்.
மருத்துவக் காரணங்களுக்காக இவற்றை பயன்படுத்துவது வேறு ; இதற்கு இல்லாத புனிதத்தைக் கற்பிப்பது வேறு . பசுவதை கூடாதெனக் கூப்பாடு போடும் இந்தக் கொடி யவர் கூட்டம் வரலாறு நெடுகிலும் எப்படி நடந்து கொண்டது ? யாகத்தில் மாட்டை பலியிட்டது. பசு மாமிசம் சாப்பிட்டதற்கு நிறைய அசைக்க முடியாத சான்றுகளை அள்ளித் தொகுத்திருக்கிறது இந்நூல் .பசுவின் புனிதம், பசுவதை, பால், பஞ்சகவ்யம் போன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னாலுள்ள வரலாற்று உண்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி , பேராசிரியர் டி.என்.ஜா அவர்கள் எழுதியுள்ள இந்நூல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த நூலென்று பதிப்புரையில் சொல்லியிருப்பது மிகை அல்ல . 2001ல் வெளியிடப்பட்ட இந்நூல் இந்துமதவெறியர் எதிர்ப்பால்- வழக்கால் வெளிநாட்டுப் பதிப்பாக வெளியிடப்பட்டது . சட்டத்தடை தாண்டி இந்தியாவில் பின்னர் வெளியானது .
2003 ல் தமிழில் முதல் பதிப்பு வெளிவந்தது . “இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.” என ஒரு பேட்டியில் ஆசிரியர் சொல்லியிருப்பதை இந்நூல் நெடுகக்காணலாம் .
“ இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன” என நூலாசிரியர் வாக்குமூலம் தருகிறார். நூல் சாட்சியாகிறது. “ இந்திய நூல்கள் - குறிப்பாக பார்ப்பனிய - தர்ம சாஸ்திர நூல்கள் முன்வைத்துள்ள பசு வடிவமானது பல நூற்றாண்டுகளில் பலவிதமான வடிவங்களை எடுத்துள்ளது என்பதைச் சொல்லத்தேவையில்லை.
ஆயிரமாண்டு வரலாற்றில் பசு குறித்த தகவல்கள் முழுக்க முரண்பாடுகள் கொண்டதாகவே இருந்திருக்கின்றன.” “.. பசுவின் புனிதத்தன்மை என்பது ஒரு ஏமாற்று வித்தையே. காரணம் பசுத் தெய்வமோ, அதன் பேரில் ஒரு கோயிலோ இருந்ததில்லை” என்கிறார் நூலாசிரியர் .‘சிக் குகா’ அல்லது ‘நாம்தாரி’ என்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட ‘இந்து பசுப் பாதுகாப்புப் படை’ தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘முதல் கோ ரக்கினி சபை’ யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத்தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்று’ என்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்து - இசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13 இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் நாடாளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் ‘பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை’ என்பதையும் ‘காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது’ என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இதையெல்லாம் இந்நூல் நிறுவுகிறது . ஆதாரங்களும் குறிப்புகளுமே கடைசி 76 பக்கங்களை நிரப்பி இருக்கிறது என்பதே நூலாசிரியரின் கடின உழைப்பையும் நம்பகத்தன்மையையும் பறை சாற்றுகிறது .பசுவை மீண்டும் மதவெறியர் கொலை வாளாகச் சுழற்றும் இன்றையச் சூழலில் இந்நூல் மிகமிக அவசியமானது. கட்டாயம் படிக்க வேண்டும் .
Subscribe to:
Posts (Atom)