வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, September 30, 2009

வன்னி அகதிகள் சிறைவைப்புக்கு சமாதானம் கூறும் காரணங்கள்

வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களையும் அங்கு தொடர்ந்து முடக்கி வைத்திருப் பதில் அவர்களை விடுவிப்பதில்லை என்பதில் கொழும்பு மிகமிக உறுதியாக இருக்கின்றது.
தன்னுடைய இந்தப் பிடிவாதப் போக்கை நியாயப்படுத்துவதற்காக எந்தவித காரணங்களையும் விளக் கங்களையும் தருவதற்கு அது பின்நிற்பதில்லை.
"வன்னி நிலப்பரப்பு எங்கும் அங்குலம் அங்குல மாகக் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டி ருக்கின்றன. இந்த மக்களைத் தற்போதைய முகாம்க ளில் இருந்து விடுவித்து அந்தக் கண்ணிவெடிகள் மீது தள்ளிவிட நாம் தயாரில்லை. அரசியலை விட மக்களின் உயிர்களே எமக்கு முக்கியம்.'' என்று முழங்கியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆஹா, இந்த வன்னி மக்கள் மீதும் அவர்களின் உயிர்கள் மற்றும் பாதுகாப்பு மீதும் ஜனாதிபதிக்கு எத்துணை கரிசனை.........!
இதே மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த சமயம் அவர்களின் உயிருக்கு வழங்கப்பட்ட மதிப்பும், அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை அப்பிர தேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்ட முன்னுரிமையும் தமிழ்ச் சமுதாயம் எளிதில் மறக்கற்பாலவையல்ல. இப்போது கரிசனை பொத்துக்கொண்டு வந் துள்ளது போலும்...
வன்னி இறுதி யுத்தத்தின் போது இந்த மக்களின் பாதுகாப்புக் குறித்துக் காட்டப்பட்ட கரிசனையுடன் ஒப் பிடும்போது இப்போது வன்னியில் புதைக்கப்பட் டுள்ளவை என்று கூறப்படும் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒன்றும் அப்படி மோசமானதல்ல. இத்தகைய கண்ணிவெடி புதை யுண்ட பிரதேசத்துக்குள் வாழ்ந்துகாட்டி மீண்டவர்கள் தான் இந்த மக்கள் என்பதும் மறைக்கக் கூடியதல்ல.
நல்லது. ஜனாதிபதியும் அவரது அரசும் கூறுவது போல கண்ணிவெடிகள் இருப்பதால் இந்த மக்களை வன்னிப் பிரதேசத்துக்குள் மீளக் குடியேற்ற அனுமதிக்க முடியாது என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம். அதற்காக அந்த மக்களை வவுனியாப் பகுதியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள் அரசு அமைத்துக் கொடுத்த கொட்டகைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்று உத்தரவிட்டு சிறைவைக்கவேண்டும் என்பதல்ல. அப் படி சிறை வைக்கப்படுவதற்கான தவறு ஏதும் இழைத் தவர்களும் அல்லர் அவர்கள்.
அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என அரசு கூறுவது உண்மை என்றால் ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்கு உள்ள உரிமை போல அவர்களும் நாட்டின் ஏனைய எந்த இடத்துக்கும் செல்லவும், வதி யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, அவர்கள் விரும்பினால் யாழ்.குடாநாட் டுக்கோ, அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஏனைய தமிழர் தாயகப் பகுதி களுக்கோ, தென்னிலங்கைக்கோ செல்லத் தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக்கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்ல வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் விரும்பினால் தம் இச்சையின் அடிப்படையில் அவ்வாறு வெளிநாடு செல்லவும் அவர்களுக்கு உரிமையுண்டு.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கண்ணிவெடி, மிதி வெடி புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று மீளக் குடியேறவிடாமல் தடுப்பது வேறு. அதற்காகப் பிற இடங்களுக்கோ, பிற தேசங்களுக்கோ செல்லவிடாமல் வவுனியாவில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முகாம்களுக்குள் வெளியேறவிடாது சிறைவைப்பது வேறு.
இந்த அகதிகளைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்றால் அங்கு நிலக்கண்ணி வெடி எனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். சரி. தடுப்பு முகாம் சிறைவைப்பிலிருந்து பிற இடங்களுக்கு வெளி யேற விடுங்கள் என்றால், அவர்களுடன் புலிகளும் கலந்திருக்கின்றாகள். எனவே அவர்களை அங்கிருந்து வெளியே விடமுடியாது என்று அடம்பிடிக்கின்றார்கள் அரசின் தலைவர்கள்.
இப்படி இரண்டு பக்கத்தாலும் விளக்கம், வியாக்கியா னம் கூறி, இந்த மக்களை சிறைவைத்திருக்கின்றமை அந்த சிறைவைப்பைத் தொடர்ந்து இழுத்தடித்தபடி அதற்கு அபத்தமான விளக்கங்களையும், காரணங் களையும் கூறுகின்றமை இறுதியில் இந்த விவகாரத்தை விபரீதத்தை நோக்கியே இட்டுச் செல்லும்.
இந்த அகதிகள் சிறைவைப்புத் தொடர்பில் அதி கரித்து வரும் சர்வதேச அழுத்தங்களின் தாற்பரியங் களைக் கொழும்பு புரிந்ததாக இல்லை.
இவ்விடயத்தில் "மொட்டந் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் விதத்தில்' கொழும்பு அரசு கூறி வரும் விளக்கங்களை சர்வதேச சமூகம் இனியும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருக்குமா என்பது சந்தேகமே:
இவ்விடயத்தை ஒட்டி சர்வதேச தரப்புகளால் பிரதி பலிக்கப்பட்டுவரும் கருத்துகள் அத்தகைய உணர் வைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஐ.நா.செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை போல கசப்புணர்வு வளரவும், நாட்டின் ஐக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தவுமே இத்தகைய கெடுபிடிப் போக்கு வழிவகுக்கும

நன்றி :உதயம் தலையங்கம்

Monday, September 21, 2009

ஆயுதபூசைபற்றி அண்ணா


எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்-டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனி-தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்-பவர்கள் எல்லாம்.

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம், ஆயுதபூசை செய்தவர்களல்ல!

நவராத்திரி கொண்டாடினவர்-களல்ல!

சரஸ்வதி பூசை இல்லை!

ஓலைக் குடிசையும் கலப்பையும், ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள் தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்-துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்.

நீ, கொண்டாடுகிறாய்,

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!

ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைப், பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்-குத் தந்தோம். என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி _ உன்னை-யுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடி-யிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்-சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டு-பிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது _ என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் _ தந்தி முறை _ அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை, சிபி, சினிமா பார்த்தில்லை!

தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது _ அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள், சரஸ்வதி பூசை ஆயுத பூசை!

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இதுமுறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த

சரஸ்வதி பூசை ஆயுத பூசை _

நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்-களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதை-யும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் _ அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

Monday, September 07, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 94 : பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா


படம்: ப.சிதம்பரம், ஜெயவர்த்தனா

"ஆபரேஷன் லிபரேஷன்' வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன.

இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின் புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது. (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின் பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு அதிர்ந்தனர்.

இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த "வீக்எண்ட்' சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில் குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு "நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?' என்பதாகும். கட்டுரையின் முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்:

""நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும்.

ஸ்ரீலங்கா, இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத் தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

இன்றைய நிலையில், "ஆபரேஷன் லிபரேஷன்' பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும் சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம், பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், "எவ்வாறு சிங்கள அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?' என்று என்னைக் கேட்டது. அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி செய்தியாளர், "தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்?' எனக் கேட்டார்.

உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர் யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப் பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார்.

இது கேட்ட ஒரு பத்திரிகையாளர், "இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே சான்றாக உள்ளது' என்றார்.

நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும் நம்பிக்கையும்தான்'' என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது.

விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல், இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால் தடுக்கமுடியவில்லை.

காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில் பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத் தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும் ஜெயவர்த்தனா பயந்தார்.

புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர். இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும் சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப் பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப் பொட்டலங்கள் போட்டதை "அத்துமீறல்' என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.

அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார்.

"ராணுவத்தின் மூலமே தீர்வு என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். இறுதிவரை போர்தான் - சமாதானம் இல்லை' என்று அடம்பிடித்த ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். "இறுதிவரைப் போர்' என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் எழுதிய, "அசைன்மெண்ட் கொழும்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.

இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில் ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப் பறந்தனர். இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.

இந்த நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கே முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார். அவர் உட்கார்ந்ததுமே ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், "இப்பொழுது பிரபாகரன் எங்கே? திடீரென மாயமாக மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே? எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?' என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:

""எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்லவேண்டியதாயிற்று.

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது'' இப்படியான ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. ""சரி, பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறி என்னை மடக்க முயன்றார்.

முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.

முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், "சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை. மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள் என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்' என்றேன்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார். அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.

""பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?'' என்று கேட்டார். தொடர்ந்து, "அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்' என்றார்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-93: பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்

இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:
""அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.
தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்; புலிகளாக மாறுங்கள்; புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள். நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது. ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், "பிளாட்' இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பையொட்டி, "பிளாட்' இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.
பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.
அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, ""நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம். ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்'' என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, ""தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்'' என்றார்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது "செல்வகுமார்' என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.
அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).
சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.
எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.
இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று. 1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்' என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).
கேள்வி : எதிர்காலத் தமிழீழத்தில், "ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்' என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன் :"எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.'
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?
பிரபாகரன் : சோசலிசமும் - தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?
பிரபாகரன் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.
எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம். எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.
மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில், "தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம். எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்' (வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி - பக்.28-29/ ஆதாரம்"" பழ.நெடுமாறன்).
கேள்வி : "உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?'
பிரபாகரன் : "உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் - அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும். எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி' என்றார்.

நன்றி தினமணி

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 92: சகோதர இயக்கங்களிடையே மோதல்

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும். இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:
""தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது. ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை உறுதி செய்தது'' என லண்டனில் இருந்து வெளிவந்த "ஈழ பூமி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
""ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் ("ரா' அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்''
""டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது''
""பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்''
""(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்''
""இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்''
""வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) - என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார். பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலில்,
""நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன? அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும். இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்'' என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், "தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை' என்று பொபி கூறினார்.
விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:
""எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு "கோண்டாவில்' என்ற ஊருக்குப் போனோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்''
இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.
மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, ""ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்'' என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.
இதன் பின்னணி என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.
இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார் (தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).
இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், "லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.
இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்- பழ.நெடுமாறன் -பக்.51).

நன்றி தினமணி

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-100: ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!


1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும் அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.
2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின் பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களின்போது அதனை மேற்பார்வையிட இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை இலங்கை அதிபர் அழைக்கவும் ஏற்றுக்கொண்டனர்.
3. மாகாணசபைத் தேர்தல் நடைபெற உகந்த நிலையை உருவாக்க, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் இருந்து ஊர்க்காவல் படையினரும் துணை ராணுவப்படையினரும் திருப்பி அழைக்கப்படுவர். இதனைச் செய்ய ஜனாதிபதி உடன்படுகிறார்.
இன வன்முறையின்போது கொண்டு நிறுத்தப்பட்ட துணை ராணுவத் துருப்புகளை இலங்கையின் நிரந்தரப் பாதுகாப்புப் படையாக ஏற்றுக்கொள்வது அதிபரின் அதிகாரத்திற்கு உரியது.
4. தமிழ்ப் போராளிகள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பதை இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்றுக் கொள்கின்றனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய இரு அமைப்புகளின் மூத்த பிரதிநிதி ஒருவரின் முன் இந்த ஆயுத ஒப்படைப்பு நடைபெறும்.
5. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்திய - இலங்கை கூட்டு கண்காணிப்புக் குழு ஒன்று அமைப்பதையும், 1987 ஜூலை மாதம் 31-ஆம் தேதி முதல் ஏற்படும் போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்கின்றனர்.
6. ஒப்பந்தத்தில் பத்தி எண் 2.14, 2.16 (இ)யில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி போர் நிறுத்தம் நடவடிக்கையை உறுதிப்படுத்த, இந்திய அமைதி காக்கும் படை ஒன்றை, தேவைப்பட்டால் இலங்கை அதிபர் அழைக்கக்கூடும். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு ராஜீவ் காந்தி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த சில கவலைகளும், உணர்வுகளும் இன்றைக்கும் கூடப் பொருத்தமானதாகவே இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசு இந்தியாவைப் பல விஷயங்களில் வஞ்சித்து வருகிறது என்பதை உறுதியும் படுத்துகிறது.
ராஜீவ் எழுதிய கடிதத்தில் காணப்பட்ட முக்கியமான அம்சங்கள் வருமாறு:
1. மிகுந்த அக்கறையுடன் இரு நாடுகளுக்குமிடையே நூற்றாண்டுகளாய் பேணி பாதுகாக்கப்பட்டுத் தொடர்ந்து வரும் நம் நட்புறவு... இந்த வேளையில் அது இன்னும் வலுப்பெற்று அதை மீண்டும் இருநாடுகளும் நிரூபிக்கும் வகையில் நம் இரு நாடுகளின் அதன் எல்லைப் பகுதிக்குள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு எதிராக, சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சக்திகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
2. இதே உத்வேகமும் எண்ணமும் கொண்டுள்ளதை நம் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்திய நீங்கள்... இந்தியாவின் சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.
அ.) நீங்களும் நானும் முன்பு பேசி ஒத்துக்கொண்டது போல இலங்கைக்காக மற்ற நாடுகளின் ராணுவத்தினரையோ அல்லது வல்லுநர்களையோ இந்தியாவைப் அனுமதித்ததுபோன்று, அனுமதிக்காமலிருப்பதே இந்திய இலங்கை உறவுக்குப் பாலமாகும்.
இ.) திருகோணமலை அல்லது ஏனைய மற்ற பகுதிகளில், மற்ற நாடுகளின் ராணுவ பயன்பாட்டிற்கு அனுமதிக்காமலிருப்பது இந்தியாவின் எண்ணத்திற்கு ஒத்துப்போவதாகும்.
உ.) மீண்டும் திருகோணமலை ஆயில் நிறுவனக் கிடங்குப் பணி இருநாட்டு கூட்டு முயற்சியுடன் தொடரும்.
இலங்கை அரசு வெளிநாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் அங்கு செயல்பட்டு வருவதை மறுபரிசீலனை செய்து இந்தத் தகவல் ஒலிபரப்பு பொதுவான துறையாக மட்டும் செயல்படவேண்டும். ராணுவ மற்றும் வல்லுநர் தன்மைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
3. அதே உத்வேகத்துடன் இந்தியாவும் செயல்படும்.
அ.) தீவிரவாதச் செயல்கள், தனி நாடுவேண்டி போராடுபவர்கள், குழுக்களைச் சேர்ப்பவர்கள் இந்த மாதிரி செயல்களைச் செய்பவர்கள் என கண்டுபிடிக்கப்படும் இலங்கைப் பிரஜைகள் நாடு கடத்தப்படுவர்.
இ.) இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவி மற்றும் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும்.
4. இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து பொதுவான விஷயங்களில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில்கொண்டு இருவரும் கலந்துபேசி இருதரப்பைப் பலப்படுத்தியும் மேலும் இந்தக் கடிதத்தில் கண்டுள்ள மற்ற விஷயங்களைப் பற்றியும் கவனிக்கவேண்டும்.
5. நம் இருவருக்குமிடையே உருவான ஒப்பந்தப்படி மேலே குறிப்பிட்டவைகள் சரியானபடி இருப்பதாக தயவுகூர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். எனது மிக, மிக உயர்வான சலுகைகளின்படியான வாக்குறுதிகளை மனதில் கொண்டு தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
(ஒப்பந்த நகல் உதவி : ஏன் எரிகிறது ஈழம்-கே.கே.ரமேஷ்)
இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட இருந்தது. பல்வேறு ஒத்திகைக்குப் பின்னர் அந்த நேரமும் வந்தது. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுப்பு குறித்து ஆய்வு செய்து ஒப்புதலும் அளித்தனர்.
அவர்கள் ஆய்வு செய்த முக்கிய விஷயம் என்னவென்றால், அணிவகுப்பு மரியாதையில் வீரர்கள் பிடித்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான்! இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் எகிப்து அதிபர் அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி நடைமுறைக்கு வந்தது.
1978-இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலியப் பிரதமர் பெனகம் பெகினுடன், அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். "காம்ப் டேவிட் ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அரபுநாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக எகிப்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், 1981-ஆம் ஆண்டில் எகிப்து அதிபர் அன்வர் சதாத், தனது நாட்டின் அணிவகுப்பில், தனது வீரனாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் உலகநாடுகள் அணிவகுப்பு துப்பாக்கிகளில் குண்டு நிரப்புவதைத் தடைசெய்தனர்.
இதே நடைமுறைப்படிதான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பிரிவினரும் சோதனை மேற்கொண்டனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அணிவகுப்பு மரியாதைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா.
அவர் ராணுவத்தினருக்கு அணிவகுப்பில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் குண்டுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டபோது சிங்கள ராணுவத் தலைமை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ராணுவ வீரர்களின்மீது அவநம்பிக்கை கொண்டதாக இச்செயல் அமையும் என வாதிட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி அணிவகுப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று ரவி ஜெயவர்த்தனா, குண்டுகளை அகற்றும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு வருகையில், கடற்படையைச் சேர்ந்த விஜயமுனி விஜிதா ரோகண டி சில்வா என்கிற சிப்பாய் தான் பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால், ராஜீவ் காந்தியின் பின்தலையில் வேகமாகத் தாக்க முயன்றார். பின்தலையில் தாக்கினால் ஒரு மனிதன் செயலிழப்பான் என்பது ராணுவப் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும் சூத்திரங்களில் ஒன்று. இவ்வாறு சிங்களச் சிப்பாய் தாக்குவதை உணர்ந்த ராஜீவ் காந்தி தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். துப்பாக்கியின் அடிக்கட்டை அவரது தோளில் பட்டது.
ராணுவ உயர் அதிகாரிகள், ஜெயவர்த்தனாவின் சகாக்கள் முன்னிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. ஆனால் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிதான் ஓடோடிச்சென்று அந்தச் சிங்களச் சிப்பாயை இயங்கவிடாமல் பிடித்து அமுக்கினார்.
சிங்களப் படையினர் எத்தகைய கொடூரமான மனநிலையினர் என்பதையும் கொலைவெறி மிகுந்தவர்கள் என்பதையும் இச்சம்பவம் உலகத்திற்கு அடையாளம் காட்டியது.
இந்நிலையில், இந்த சம்பவங்களின் பின்குறிப்பாக கீழ்க்கண்டவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்:
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில், இதில் கலந்துகொள்ளவிரும்பாத அந்நாட்டின் பிரதமர் பிரேமதாச தாய்லாந்து சென்றுவிடுகிறார். ஒரு நாட்டின் பிரதமர், தனது நாட்டுக்கு வேறொரு நாட்டின் பிரதமர் வரும்போது, வெளிநாட்டுக்குச் செல்வது என்பது, உலகில் வேறெங்கும் நடைபெறாத சம்பவமாகும்.
அதுமட்டுமன்றி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் முக்கிய அமைச்சர்களும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததும் புதுமையானதுதான். இச்செயல் அனைத்தும் இந்தியாவை அவமானப்படுத்தவேண்டும் என்பதே ஆகும்.
ராஜீவ் காந்தியை அணிவகுப்பின்போது தாக்கிய விஜயமுனி பிரேமதாசவின் ஆதரவாளர் என்றும் அப்போது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அவரது தூண்டுதலின்பேரிலேயே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நடைபெற்றது என்றும் விமர்சித்தவர்களும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போன்றே, பிற்காலத்தில் பிரேமதாசா அந்நாட்டின் அதிபராக வந்ததும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய விஜயமுனியை நிபந்தனை ஏதுமின்று விடுதலை செய்த நிகழ்ச்சி அமைந்தது.
"ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, பதவி விலக வேண்டும்' என்றார் இலங்கை நிதியமைச்சர் ரோனி டிமெல். ரோனி டிமெல்லின் கருத்துக்கு அதலத் முதலி சூடாகப் பதிலளித்தார். "இலங்கைக் கடற்படை, அதிபர் ஜெயவர்த்தனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரோனி டிமெல் இப்படியெல்லாம் கோரிக்கை வைத்து அதிபரைச் சிறுமைப்படுத்துகிறார்.'
ஆனால் அதுலத் முதலியின் பாதுகாப்பு இலாகா பறிக்கப்படவும் இல்லை, இந்தியாவும் அந்த சம்பவத்தைப் பெரிது படுத்தவில்லை.
ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டு அதனால் மரணமடைந்திருந்தால்! இந்த விஷயத்தில் இந்திய அரசின் மௌனமும், ஜெயவர்த்தனா அரசின் கண்டும் காணாமலும் இருந்த போக்கும் விடையில்லாத புதிர்களாக இன்றுவரை தொடர்கின்றன...

நன்றி தினமணி

Sunday, September 06, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 91: பிரபாகரனின் தளபதிகள்


படம்: கிட்டு - மாத்தையா - கே.பி. கரிகாலன் - பொட்டு அம்மான் - சுப.தமிழ்ச்செல்வன் - காசி ஆனந்தன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீச்சும் பிரபாகரனின் சாதனைகளும் ஒப்பிட முடியாதவை. இயக்கமும், பிரபாகரனும் வெற்றியடைய பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். போராளிகளாக பல்லாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயிற்சி பெற்று பல்வேறு பகுதிகளில் செயலாற்றியும் வந்திருக்கிறார்கள்.


தமிழீழம் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிக்கென தளபதிகளும் நியமிக்கப்பட்டார்கள்.


இந்தத் தளபதிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் மாத்தையா, கிட்டு, விக்டர், புலேந்திரன், குமரப்பா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் பிரபாகரனின் பால்ய கால நண்பர்கள் ஆவர்.


இயக்கத்தில் பெரும்பாலும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக ஒரு பிரசாரம் எழுந்தது.


இதுகுறித்து யாழ்த் தளபதியாக இருந்த கிட்டு ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:


வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறியதோடல்லாமல், அதற்கு மேலும் சென்று ஒரு குறிப்பிட்ட சாதியினரே அதிகம் உள்ளனர் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என்னவென்றால், தமிழ்ச் சமுதாயம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் இணைந்து விடக் கூடாது என்பதுதான்.


உண்மையான செய்தி என்னவென்றால், பிரபாகரன் இந்த இயக்கத்தை முதலில் ஆரம்பித்தபோது, அவரோடு இணைந்தவர்கள் அவரது நண்பர்கள், பள்ளியில் படித்தவர்கள், உறவினர்கள் மற்றும் ஊரார்தான்.


அதுமட்டுமல்ல; இயக்கமும் வல்வெட்டித் துறையிலேயே ஆரம்பமானது. நாங்கள் வளர்ந்தோம் - பின்னர் தமிழீழத்தைச் சேர்ந்த பலர் இயக்கத்தில் இணைந்தனர். எங்கள் இயக்கத்தில் "சீனியாரிட்டிபடி' முதலில் இணைந்தவர்களுக்கு முன்னுரிமைகள் அதாவது பதவிப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது இயல்பான ஒன்று.


முதலாவது படையணியிலுள்ளவர்கள் பயிற்சி பெற்று தளபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு "சீனியாரிட்டிபடி' பதவிப் பொறுப்புகள் நாளடைவில் கிடைக்கும். சாதி அடிப்படையில் இயக்கம் இயங்குவதாகச் சொல்வது சுத்தப் பொய்.


பிரபாகரனுக்கும் இயக்கத்துக்கும் உறுதுணையாக பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.


பேபி சுப்ரமணியம்: கிருபாகரன் என்பது இவரின் முழுப்பெயராகும். இளங்குமரன் என்றும் பிற்காலத்தில் அறியப்பட்டார். காங்கேசன் துறையைச் சேர்ந்தவர். குடும்பமே கோயில் பணியில் ஈடுபட்டிருந்தது. அம்மா, பார்வையற்ற அண்ணன், இரு சகோதரிகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் பங்கு பெற்று அதன் தலைவர் செல்வநாயகத்தின் கூடவே இருந்தவர். பின்னர் பிரபாகரனுடன் இணைந்தார். விடுதலைப் புலிகளின் பிரசாரப் பணியில் இருந்தார். சாதாரணமாக இவரைப் பார்க்கும்போது "போராளி' என நினைக்கவே முடியாது. அவ்வளவு சாதுவாக இருப்பார்.


கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்: யாழ்ப்பாணம் தளபதியாக இருந்தவர். இவரின் தாயார் ராஜலட்சுமி தமிழரசுக் கட்சியின் மாதர் பிரிவில் தலைவராக இருந்தவர். கிட்டுவுக்கு ஒரு வயது நடக்கையில், அறப்போராட்டத்தில் அம்மாவுடன் சிறை சென்றவர் (1961இல்), பின்னர் 1987-இல் யாழ் நகரை சிங்கள ராணுவப் பிடியில் இருந்து மீட்டவர். சிங்கள ராணுவத்தை யாழ் கோட்டைக்குள்ளேயே சுருண்டு கிடக்கச் செய்தவர். ஒரு சமரில் தனது காலை இழந்தார். 1993-இல் இந்தியக் கடற்படையினரிடம் சிக்கி, மரணத்தைத் தழுவினார்.


மாத்தையா என்கிற மகேந்திர ராஜா: வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். வெளிநாடு போக இருந்தவர் பிரபாகரனால் ஈர்க்கப்பட்டார். மென்மையாகப் பேசுவார். பிரபாகரனுடன் நீண்டநேரம் உரையாடும் உரிமை பெற்றவர்களில் ஒருவர். பிரேமதாசா-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற அரசியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். வவுனியா தளபதியாக இருந்தார். கிட்டுவுக்குப் பிறகு யாழ்ப்பாணப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.


சங்கர்: பிரபாகரனின் பால்யகால நண்பர். மெய்க்காப்பாளர்களில் ஒருவர். வல்வெட்டித் துறையில் 1982-இல் சங்கர் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்ததும், அந்த வீட்டில் இருந்து தப்பிக்கும்போது, வயிற்றில் குண்டு பாய்ந்தது. மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபாகரன் சங்கரின் கையை எடுத்து, தன் கையில் வைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கையிலேயே, அந்த இருபத்திரண்டு வயது இளைஞனின் உயிர் பிரிந்தது. அவர் உயிர்த் துறந்த நவம்பர் 27-ஆம் தேதி, மாவீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.


கேபி (எ) பத்மநாதன்: குமரன் பத்தன், கேபி, குட்டி என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் பத்மநாதன் மயிலிட்டியைச் சேர்ந்தவர். சர்வதேச நடவடிக்கைகளுக்காக இவர் பணிக்கப்பட்டார். ஆயுதங்கள் பற்றிய விவரம் இவரது விரல் நுனியில்; கொள்முதல் பொறுப்பாளர்.


கரிகாலன்: திருகோணமலையைச் சேர்ந்தவர். பள்ளியில் இருந்து நேரே பிரபாகரனிடம் வந்தவர். பிரேமதாசாவுடன் அமைதி உடன்பாடு ஏற்பட்டபோது எதிர்த்தவர். பிரபாகரனுடன் நேரடியாக வாதிக்கும் உரிமை பெற்றவர்.


அன்டன் பாலசிங்கம்: வடமராட்சியைச் சேர்ந்தவர். வீரகேசரி, பிரிட்டிஷ் தூதரகம் முதலியவற்றில் பணிபுரிந்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு லண்டன் சென்றார். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். லண்டனில் மாணவர் பேரவைக் கிளையில் பங்காற்றினார். பிரபாகரன் தொடர்பு கிடைத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வகுப்பாளராக, அரசியல் ஆலோசகராக மாறினார். ஆங்கில வெளியீடுகள் அனைத்திலும் இவரது பார்வை இருக்கும். சமரசப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.


பொட்டுஅம்மான் (எ) சிவசங்கரன் சிவலிங்கம்: அரியாலையைச் சேர்ந்தவர். பதினெட்டு வயதில் இருந்தே மாணவர் பேரவையில் பங்கு பற்றினார். தெற்காசியா மட்டுமல்ல வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், கீழைத் தேசங்களின் அரசியலும் அத்துப்படி. புலனாய்வில் புலி. இவர் கணிப்பு என்பது இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர், இவருக்கும் பிரபாகரன்தான் நம்பிக்கை.


சுப. தமிழ்ச்செல்வன்: தென்மராட்சியைச் சேர்ந்தவர். பின்தங்கிய சமூகத்தவர். பொதுவுடைமைவாதி. கிட்டுவுக்குப் பிறகு அதிகார பூர்வ யாழ் பொறுப்பாளர் ஆனார். அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆகி, அன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றி பேச்சுவார்த்தைகளிலும் பங்கு பெற்றார். ஸ்ரீலங்கா ராணுவத் தாக்குதலில் மரணமடைந்தார்.


காசி ஆனந்தன்: மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 7 ஆண்டுகள் கண்டியிலும் கொழும்பிலும் இலங்கை அரசின் சிறைகளில் வாடியவர். தமிழீழம் என்ற சொல், தமிழ் விடுதலைப்புலிகள் என்ற இயக்கப்பெயர் யாவும் இவர் தந்தவை. பிரபாகரனின் நெருங்கிய சகா. "மாமனிதர்' என்ற பட்டம் பிரபாகரன் இவருக்கு வழங்கியது.

நன்றி தினமணி

Tamil 10 top sites [www.tamil10 .com ]