“சமத்துவத்திற்கான உங்களது உரிமைகோரல் தான் அவர்களைக் காயப்படுத்துகிறது.இதுவரையிலான தங்களது ஆதிக்க நிலையை அவர்கள் தக்கவைக்க நினைக்கின்றனர்.எவ்வித எதிர்ப்புமின்றி உங்களது இழிநிலையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வீர்கள் எனில்அழுக்கானவர்களாக, அறிவற்றவர்களாக, வறுமையில் உழல்பவர்களாக ஒற்றுமை இல்லாதவர்களாக நீங்கள் தொடர்ந்து இருப்பீர்கள் எனில் அமைதியாக வாழ அவர்கள் உங்களை அனுமதிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளதொடங்கும் அந்நொடி போர் தொடங்குகிறது”. -டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர். தலித் மக்கள் மீதான பத்தாண்டு தொடர் வன்முறைகளை ஒருசேரப் படிக்கும் போது உள்ளமும் உடலும் பதறுகிறது. முண்டம் சாலையோரமும் தலை கிணற்றிலும் வீசப்பட்ட மேலவளவு முருகேசனின் சகதோழர்களின் - உயிரின் துடிப்பு மின்சாரமாய்த் தாக்குகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரைதாமிரபரணிக் கரையில் படுகொலை செய்த தமிழக காவல்துறையின் ஆதிக்க சாதி மனோபாவமும் அன்றைய முதல்வரின் நயவஞ்சக உரையாடல்களும் அருவருப்பையும் குமட்டலையும் ஏற்படுத்துகிறது.
திண்டுக்கல் கவுண்டன் பட்டியிலும்திருச்சி திண்ணியத்திலும் மனிதக்கழிவுகளை மனிதர் வாயில் திணித்த நெறியற்ற செயல்களின் கசப்பூறி முகத்தில் உமிழ்கின்றன.ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளும் மேலெழும் ஜனநாயக உணர்வுகளும் கொலை ஆயுதங்களைச் சொருகிவீழ்த்தப்படுவதன் ஓலம் செவிகளில் அறைகின்றன. ‘சாதி ஒடுக்குமுறையை ஒழிப்போம்! சாதிமோதல்களைத் தடுப்போம்!” எனும் தோழர் என்.சங்கரய்யாவின் முழக்கம் திசைகளெங்கும் எதிரொலிக்கிறது.தலித்மக்களின் வழிபாட்டுரிமையை, பொது வெளியில் புழங்கும் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும் போதெல்லாம் கொடிய வன்முறையின் மூலம் முறியடிக்கிறார்கள். வாழும் உரிமையை சிதைத்து அழிக்கும் நோக்கில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
கொலை செய்வது, கொடுங்காயப்படுத்துவது அல்லது ஊனப்படுத்துவது முதன்மை நோக்கமாக இருக்கிறது.அச்சுறுத்துவது அவமானப்படுத்துவதுபெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவது, நிலம், வீடு முதலிய சொத்துக்களை அபகரிப்பது, விலை உயர்ந்த வீட்டு உபயோகப்பொருட்களை அழிப்பது, திருடுவது, கூட்டாகக் கொள்ளையிடுவது குறிப்பாக மாணவர்களின் பாடநூல்களை, கல்விச் சான்றிதழ்களை தீயிட்டுப் பொசுக்குவது எனதாக்குதல்களின் வன்மம் தொடருகிறது. இத்தாக்குதல் முறை தலித்துகளின்வளர்ச்சியை, உரிமை கோரலை பொறுக்கமுடியமால் அரங்கேற்றப்படுபவை என்பதை உறுதிசெய்கிறது.தலித் மக்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகையோடும் சமூகநிலையோடும் ஒப்பிடும் போது அவர்களின் வளர்ச்சி மிகச்சிறு அளவே. இச்சிறு முன்னேற்றத்தைக் கூடஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினரின் சகிப்புத்தன்மையற்ற நிலையே தலித்மக்கள் மீதான வன்முறையின் வேராக இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மனிதனின் கண்ணியத்தை அவமதிக்கும் சாதி அடிப்படையிலான தீண்டாமை கருத்து நிலையிலிருந்தே இவ்வன்முறைகள் வெடித்தெழுகின்றன.“ஒடுக்குதல்களையும் அவமானங்களையும் துக்கங்களையும் ஓயாது சந்திக்கும்ஒரு தலித் மாறுபட்ட மன நிலையை எட்டசாத்தியம் இருக்கிறது. ஒரு கலவரத்தின் பிறகான மரண ஓலம், மரண பயம், சவ மௌனம் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சூழலில் சிக்கிக் கிடக்க நேரும் ஒரு தலித்தின் மனம் கொந்தளிப்புடன் இருக்கின்ற கடல்போல இருக்கும்” (எழுத்தாளர் அழகிய பெரியவன், தலித் இலக்கியம் எனது அனுபவம் -நூலில்). கலவரத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிகப்பெரிய உளவியல்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். ஏமாற்றத்தை,கையறுநிலையை உணர்கிறார்கள். “ஏதாவது செய்யுங்க சாமி’ என்கிறார் வடக்கம்பட்டியைச் சார்ந்த ஒரு மூதாட்டி. ‘வாழ்க்கை என்பது இங்கே நெருப்புக்கு மத்தியிலே இருப்பது போல’ என்கிறார் சிறுதொண்டமாதேவியைச் சார்ந்த பழனியம்மாள்.பெரும்பாலான வன்கொடுமைகள் காவல்துறையாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. வனத்துறை, நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறைகள் என அரசின் பிற துறைகளும் பல நேரங்களில் காவல்துறையோடு இணைந்து கைகோர்த்திருக்கின்றன. தலித்மக்கள் மீதான தாக்குதலை நிகழ்த்தும் போது தமிழக காவல்துறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, காவல்துறைக்கு அதிகாரமளிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளை, நீதித்துறையின் அறிவுரைகளை, மனிதாபிமானத்தை, குறைந்தபட்சமாக மனிதன் என்கிற உணர்வைக் கூடபல்லுபடாமல் விழுங்கி, செரித்து ஏப்பமும்குசுவும் விட்டுத்திரியும் நர பிண்டமாய்காட்சியளிக்கிறது. சாதி ஆதிக்கமனோபாவமும் மமதையும் அதன் கோரமுகத்தை வடிவமைக்கின்றன. ‘சவட்டி நசுக்க வேண்டும்’ என்கிற மனோநிலை ஒடுக்குமுறையின் ஊற்றாகப் பீறிடுகிறது. இங்கே அடிக்கோடிட வேண்டியது - “ஆளுகிறவர்களின் மனோநிலையைப் பிரதிபலிப்பதாகவே காவல்துறையின் நடவடிக்கைகள் அமை யும்” என்கிற கருத்தை.தங்களின் வாழ்வியல் கோரிக்கைகளுக்காகவும் பண்பாட்டுக் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும்பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளே வன்முறையைக் கையாளும் ஆதிக்க சாதியாய் இந்நூல் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
வாழ்நிலையில் தலித்மக்களுக்கு இணையான அல்லது சற்று மேம்பட்ட வாழ்க்கையை வாழ்பவர்களே அவர்கள். பெரும்பாலோர் தங்கள் உழைப்பை விற்றுப் பிழைப்பவர்களே.“சாதியத்தின் தனிச்சிறப்புகளுள் ஒன்றான படிநிலை வரிசையே சாதியத்தை கட்டிக்காக்கும் அதிகார அமைப்பாக விளங்குகிறது. தம்மை விட மேல்சாதியின் பண்பாட்டு உரிமைகளைக் கோரும் ஒருசாதி, அதற்கான வலிமையாகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கூட தம்மைவிட தாழ்ந்த சாதி அத்தகைய பண்பாட்டு உரிமைகளைக் கோரி போராடினால் அதை மிகவும் அதிக ஆற்றலோடும் வலிமையோடும் எதிர்க்கிறது. இதுசாதியத்தைக் கட்டிக் காப்பாற்ற சாதியத்துக்குள்ளே அதிகாரம் உள்ளார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” (முனைவர் கோ.கேசவன் ‘சாதியம்’ நூலில்) ஆக இச்சமூகம் சாதியச்சமூகமாக இருப்பதாலேயே இக்கொடூரங்கள் மிக எளிதாக நிகழ்த்தப்படுகின்றன. இவ்வன்முறைகள் நிகழ்ந்த அதே
பத்தாண்டு காலகட்டத்தில் அமெரிக்க வர்த்தகப் பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ வெளியிட்ட புள்ளி விவரப்படி, இந்திய ரூபாயில்4000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் 90 சதவீதம் பார்ப்பனர், பனியா, தாக்கூர் எனும் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். புதுடில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாகக் கல்வி நிறுவனத்தின் பெரிய நிறுவனங்களைப் பற்றிய ஆய்வுப் பிரிவின் 1992ம் ஆண்டைய தரவுகளைப் பயன்படுத்தி டாக்டர் சந்தோஷ் கோயல் வெளியிட்டுள்ள விவரப்படி முதன்மையான 1100 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரமிக்க பதவிகளில் 95 விழுக்காடு பேர் மேற்கண்ட மூன்றுஉயர் சாதியைச் சார்ந்தவர்கள். அதே விவரப்படி 1985ம் ஆண்டில் அரசு இயந்திரத்தில் ஆட்சிப்பணி அலுவலர்களாக பணிபுரிந்த 3235 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 66 பேர்மட்டுமே சூத்திரர்கள். (2.04 சதவீதம்) மீதமுள்ளவர்களின் 78 சதவீதம் பேர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். (ப.கு.ராஜன், சாதியும் வர்க்கமும் கட்டுரையில்)இந்த தேசத்தின் சொத்தை அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் வேறு வேறு அல்ல என்பதை இப்புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.
பத்து விழுக்காடு மட்டுமே வாழும் ஆதிக்க சாதியினரின் சொத்துக் குவியலும் அதிகார இணைப்பும் தொண்ணூறு சதவீதஏழைகளுக்கு வறுமையையும் வன்முறையையும் பரிசளித்திருக்கிறது. இப்புரிதலின் அடிப்படையில் நடைபெற வேண்டிய சமூகப் போரை மடைமாற்றம் செய்து தலித் மக்கள் மீதான பிற்படுத்தப்பட்ட மக்களின் வன்முறையாக மாற்றியிருக்கிறது சாதியம் என்பதை நிறுவுகிறது
இக்கலவரங்கள்.அக்காலகட்டத்திற்கு சாதியத்திற்கு எதிராக சவால்விட்ட ஜனநாயகப்பூர்வ முயற்சிகளையும், சாத்தியங்களை உருவாக்க நடைபெற்ற இயக்கங்களையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். தலித்மக்களின் எதிர்த்தாக்குதலையும் சட்டரீதியான சில வெற்றிகளையும் மிக்க மகிழ்வோடு பதிந்திருக்கிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித்மக்களுக்கு ஆதரவாக, அவர்களோடு இணைந்து போராடிய - தலித் அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இடதுசாரிகள் அதில் குறிப்பாகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் செயல்பாடுகள் குறித்து வலுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சேஷ சமுத்திரம்வரை நீண்டகாலமாக நடைபெற்றுவரும் சாதிய மோதல்கள், ஏழை உழைப்பாளர்களை, விவசாயத் தொழிலாளர்களை ஒருவர்க்கம் என்ற முறையில் ஒன்றுசேர விடாமல் தடுத்து வைத்துள்ளது. சாதியத்தின் இத்தந்திரம் முறியடிக்கப்பட வேண்டும்.கட்டுரை உருவாவதற்கும் வெளியாவதற்கும் முக்கிய காரணமாயிருந்த ப்ரண்ட்லைன் ஆங்கில இதழின் நிர்வாகிகள் வணக்கத்திற்குரியவர்கள். இந்நூலின் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் அவர்களும், தமிழாக்கித் தந்த த.நீதிராஜன் மற்றும் தயாரிப்பில்ஈடுபட்ட அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்.
தலித் மக்கள் மீதான வன்முறை
ஆங்கிலத்தில்:எஸ்.விஸ்வநாதன்
தமிழில்: த.நீதிராஜன்
வெளியீடு: சவுத் விஷன் புக்ஸ்251,(132),
அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை - 600 086
பக்: 340 விலை ரூ. 200/-
நன்றி: தீக்கதிர், 04-10-2015