பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள் தலித் - தலித் அல்லாதார் என்ற அமைப்பினை உருவாக்கி வரும் இந்தக் கால கட்டத்தில் அவருக்கு ஒரு வக்கில் கிடைத்துள்ளார். அவர்தான் திருவாளர் துக்ளக் சோ ராமசாமி அய்யர்வாள்!
அதுதானே பார்த்தோம். ஜாதிக்கு எள் மூக்கு அளவுக்கு எங்கேனும் உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?
இந்த வார துக்ளக் இதழில் (19.12.2012) நினைத்தேன் என்று எழுதுகிறாராம். திருவாளர் சோ.
எடுத்த எடுப்பிலேயே பொய்யான தகவல் ஒன்றை முதலாகப் போட்டு அதற்கு மேல் அடுக்கடுக்காக தனக்கே உரித்தான பித்தலாட்ட பின்னல் கணக்குகளைப் போட்டுக் கொண்டே போகிறார்!
சில ஜாதி அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு தலித்களுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க வாருங்கள் _ தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு எதிராக ஒரு அணி அமைப்போம் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறவில்லை. ஆனால் பல ஜாதிகளை இணைத்து, ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முன்வந் துள்ளது இந்த எண்ணத்தில் தான் என்பது எல்லோருக்கும் புரிகிறது! அந்த அடிப் படையில் பல கட்சிகளைச் சார்ந்த தலை வர்கள் அவருடைய முயற்சிகளைக் கண் டித்துள்ளனர். ஆனால் ராமதாஸ் செய்கிற முயற்சிக்கு ஒரு பின்னணி இருக்கிறது. இவ்வாறு திருவாளர் சோ எழுதி யுள்ளார்.
மருத்துவர் இராமதாசு அவர்கள் சொன்னதைக் கூட சொல்லாததாக ஆக்க வேண்டும் என்பதிலே இந்த சோவுக்கு அப்படி என்ன அக்கறை!
12.11.2012 அன்று மருத்துவர் இராமதாசு அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன? சென்றவர்களுக்கு நன்கு தெரியும்.
அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி சொன்னது தலித் அல்லாதார்கள் ஒன்று சேர்ந்து ஓர் அணி அமைக்கப்படும் என்று கூறியிருக்க, சோ அதனை ஏன் இருட்டடிக்க முயற்சிக்கிறார்?
இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் மருத்துவரை ஒரு துருப்பாகப் பயன்படுத்தி தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் உரச முடியாதே!
அதுவும் திராவிடர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி மருத்துவர் புறப்பட்டுள்ள இந்த நேரம் _ அவரைப் பயன்படுத்திக் கொண்டால் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் தமிழ் நிலத்தின் புயல் காற்றைப் புறந் தள்ளிவிட முடியாதா என்ற நப்பாசை!
சும்மா ஆடுமா சோவின் குடுமி என்று ஒரு நூலை எழுதினார் தோழர் தினகரன் சின்னராசு.
அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து , டாக்டராக வேலை பார்த்த தில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும். படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னி யர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்குக் காதல் - வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக் கும்போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஒட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஒட்டுப் போடுங்கள்.
ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வர வேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி பறக்க வேண்டும்.
2016ஆம் ஆண்டு நடக்கும் சட்ட மன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் அப்படியே வெற்றி பெறு வோம். எல்லோரும் விழிப்பாக இருங் கள் சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்று பேசியதுகூட சோ வாளுக்குத் தெரியாதா?
ஜாதிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முனைந்துள்ளதாக சோ சொல்லுகிறாரே. அதுகூட அந்தரங்க சுத்தியல்ல என்பது இந்தப் பேச்சு வெளிப்படுத்திடவில்லையா? புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்ற கதை யல்லவா இது! நியாயமாக துக்ளக் எப்படி விமர்சித்திருக்க வேண்டும்? இதே துக்ளக் (15.10.2003 பக்கம் 21) பா.ம.க. பற்றி எப்படி விமர்சித்து இருந்தது?
இதோ: வன்னியர் கட்சியா, வித்தியாச மான கட்சியா - எனும் தலைப்பில் இதே துக்ளக் (15.10.2003 - பக்கம் 21) என்ன எழுதிற்று?
வன்னியர் சங்கமாக சுமார் ஒன்பது ஆண்டுகள் செயல்பட்டு வந்த அமைப்பு 1989ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி சீரணி அரங்க கூட்டத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்தது. தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மதவழிச் சிறுபான்மையினர் ஆகியோ ருக்காக - பாடுபடுவதே கட்சியின் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. அப் போது எழுப்பப்பட்ட சமூக நல்லிணக்கம் என்ற பா.ம.க.வின் கோஷம் பல தரப்பிலும் வரவேற்கப் பெற்றது. என்று எழுதப்பட்டு இருந்ததே துக்ளக்கில்
தாழ்த்தப்பட்டோரையும் பிற்படுத்தப் பட்டோரையும் சிறுபான்மையினரையும் இணைத்து அரசியல் நடத்தப் போவதாகச் சொன்னவர்கள், இப்பொழுது அதற்கு முரண்பாடாக தாழ்த்தப்பட்டோரைத் தவிர்த்து வெறும் ஜாதிக் கட்சிகளோடு கூட்டு அமைப்பது பற்றி துக்ளக் தனக்கே உரித்தான பாணியில் கேலி செய்யாதது ஏன்?
மாறாக அதனை நியாயப்படுத்தி எழுத வேண்டிய அவசியம் ஏன்? தாழ்த்தப்பட்ட மக்களை மருத்துவர் கைவிட்டு விட்டாரே என்ற ஆனந்தத்தில் மருத்துவரைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கூட்டணி இந்துத்து வாவுக்கு எதிரானதாயிற்றே! பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களே!
எப்படியோ அந்த முயற்சியைக் கைவிட்டு வெறும் ஜாதி டப்பாவுக்குள் மருத்துவர் அடங்கி விட்டால் அக்கிரகார ஏட்டுக்கு ஆனந்தம் புடைத்துக் கொண்டு கிளம்பாதா?
வெகு தூரம் போக வேண்டாம். இந்த ஆண்டு துவக்கத்திலேயே கூட (22.1.2012) சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறு பான்மை சமுதாய மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி இந்த அணியை பலப்படுத்துவோம் என்று கூறவில்லையா?
(தமிழ் ஓசை 23.1.2012 பக்கம் 4)
இந்த 11 மாத இடைவெளியில்தான் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட் போட்டு கூலிங் கிளாஸ் போட்டு வன்னிய சமூகப் பெண்களை மயக்குகிறார்களா?
சகோதரர் திருமாவளவன் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம் என்று சொன்னதெல்லாம் ஏமாற்று வேலையா? ஏன் இதைப்பற்றி எல்லாம் துக்ளக் விமர்சிக்கவில்லை?
இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட ஷெட்யூல்டு சிறுபான்மை இன மக்கள் ஆதிக்க சக்தியான பாரதீய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு எதிராக மதசார்பற்ற தன்மை, சமூக நீதி சனநாயகம், சமத்துவம் இவைகளைப் பெறுவதற்கு ஓரணியில் திரளுவது அவர்களது தலையாய கடமையாகும்.
இதே எண்ணம் கொண்ட தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று தீய சக்திகளை எதிர்க்க தயாராக இருக்க வேண்டும்! -
இதையும் சொன்னவர் சாட்சாத் மருத்துவர்தான். (தினப்புரட்சி 9.11.1990 பக்கம் 1)
தேர்தலின் போது 3 தொகுதி ஒதுக்குவ தாக வாங்கிய ரூ.2½ கோடியை டாக்டர் ராமதாஸ் திருப்பித் தர வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி பேட்டி அளித்தாரே (தினத்தந்தி 11.10.2010).
கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னைத் தோற்கடித்தவர் ராமதாஸ்தான் என்னுடைய தோல்விக்கு முழு முதற் காரணமான இருந்தது மட்டுமின்றி திமுக கூட்டணியில் இடம் பெற்ற எங்களுக்கு மூன்று தொகுதி ஒதுக்குவதாக உறுதியளித்து என்னிடம் 2½ கோடி ரூபாய் வாங்கினார்.
3 சீட்டுக்காக எங்கள் கட்சிப் பணத்தை ராமதாசிடம் கொடுத்தோம். உறுதியளித்தபடி சீட்டுத் தரவில்லை. என் தோல்விக்குக் காரணமான ராமதாஸ் தேசிய ஜனநாயக முன்னணி தலைவர்களான பிரதமர் வாஜ்பாய், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.
ராமதாஸ்மீது வன்னிய சமுதாய மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது. அவர் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று அதே பேட்டியில் கூறியனாரே வாழப்பாடி ராமமூர்த்தி (தினத்தந்தி 11.10.2000) இதெல்லாம் சோவுக்குத் தெரியா?
22.2.1991 நாளிட்ட தினப்புரட்சி நாள் ஏட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எழுதிய கடிதம்.
எங்களை கூடத்தான் கேட்கிறார்கள் பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு என்று தீர்மானம் போடுகிறீர்களே அதனால் ஓட்டு உங்களுக்குப் பாதிக்காதா? என்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லையா?
பார்ப்பனர்களுக்குப் மற்ற உயர் சாதியினருக்கும் தமிழகத்தில் 8%(அ)10% ஒதுக்கீடு கேட்பதே பாட்டாளி மக்கள் கட்சிதான் என்றார்.
இது யாருடைய அறிக்கை?
இடஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்றால், அதனால் பலனடைந்திருப்பது குறிப்பிட்ட ஒரு ஜாதி மட்டுமல்ல, ஏறக்குறைய 107 ஜாதிகள் பலனடைந்திருக்கின்றன. ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த ஜாதிகள் இன்று பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம் பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கின்றன. அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களின் போர் முரசாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு இந்த இரு இயக்கங்களும் வளர்ச்சியின் சிகரத்தை நோக்கி தொடர்ந்து வீறுநடை போட்டு வருகின்றன. உலகத் தமிழர்களின் அடையாளம் அழிந்து போகாமல் தடுக்கவும், உள்ளூர்த் தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கும், பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சக்திகள் கடந்த காலங்களில் ஜாதி எனும் முத்திரை குத்தி தோற்றுப் போயிருக்கின்றன. துருப்பிடித்துப் போன அந்த ஆயுதத்தை வீசி எங்களை அழிக்க முயன்று அவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்.
- _ பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை இது (25.2.2008) இந்த அறிக்கைக்கு என்ன பதில்? மருத்துவர் கூறுவாரா -_ அவரின் வக்கில் சோதான் கூறுவாரா?
|
இதோ மருத்துவர் மேலும் பேசுகிறார்: பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு, சிறுபான்மை வெகு மக்களின் (90%) முன்னேற்றத்தை எதிர்ப்பதால் தான் நாங்களும் அந்த ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எங்கள் தயவில் வாழ வேண்டிய பார்ப்பனர்கள் எங்களுக்கே குழி பறிக்க நினைத்தால், ஆபத்து அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கல்ல.
இதனால் பார்ப்பனர் ஒட்டுப் போட மாட்டார்கள் என்றால் அதிலும் எங்களுக்கு நட்டம் இல்லை. 3% பார்ப்பனர் ஒட்டைவிட 97% மற்ற சாதியினர் முன்னேற்றமும் அவர்களின் வாக்குகளுமே எங்களுக்கு முக்கியம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு தம் கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
அதில் ஒன்று பார்ப்பனர்களை எக்காரணம் கொண்டும் உறுப்பினராகக் கட்சியில் சேர்ப்பதில்லை.
இன்னொன்று பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு இன மொழி வாரி, மதவாரிச் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளாரே.
அந்த மருத்துவர் இராமதாசை சோ கூட்டத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது.
தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி, சிறுபான்மை மக்களையும் கை விட்டு, வெறும் ஜாதிக் கட்சியாகப் பலகீனப்பட்டு பா.ம.க. நிற்கும்போது சபாஷ் போடுவது - பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியும் _- தந்திரமும் தவிர வேறு என்ன?
ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு தான் ஜாதி அமைப்புகள் பல தோன்ற ஆரம்பித்து விட்டன. ஒருஅமைப்புக்கு ஜாதி விரோதம் தான் அடிப்படை எனும்போது இன் னொரு அமைப்புக்கு ஜாதிப்பற்றுதான் அடிப்படை என்று அமைவதில் வியப் பில்லை அல்லவா! என்று மருத்துவரின் ஜாதிக்கட்சிக்கு வக்காலத்துப் போட்டுப் பேசுகிறார் சோ.
எவ்வளவுப் பெரிய திரிபு வேலை! ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதாம்!
பார்ப்பனர்கள் என்பவர்கள் ஒரு ஜாதியா? இனமா? வருணமா? முதலில் அதில் தெளிவு இருக்க வேண்டும்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத்துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று லாலாலஜபதிராய் கூறுவதைத்தான் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
பார்ப்பனர்கள் தங்களைப் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்பார்கள் இந்த உலகத்தையே பிராமணர்களுக்காகப் பிர்மா படைத்தான் என்பார்கள்.
கடவுளுக்கு மேலே பிராமணன் என்று இவர்களின் சங்கராச்சாரியார்கள் கூறுவார்கள்.
பெரும்பான்மையான சமூக மக்களைப் பார்த்து சூத்திரர்கள் என்பார்கள். தங்களின் வேசி மக்கள் என்று எழுதி வைப்பார்கள்.
இதனைக் கேட்டுக் கொண்டு எருமை மாடு மாதிரி இருந்தால் துவேஷ மற்றவர்கள்; - எதிர்த்துக் கேட்டால் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று குரல் கொடுத்தால் ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டது திராவிடர் கழகம் -தலைவர் ஈ.வெ.ரா. என்று இந்த 2012லும் எழுதக் கூடிய துணிவு மருத்துவர் இராமதாசு போன்றவர்களால் வந்தது என்று கருதுவதற்கு இடம் உண்டு.
In Fact in one Occasion Rajaji proudly said he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan Appril (1) 1978.
முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று சொன்ன ராஜாஜி துவேஷியல்லவாம் ;- இப்படி சொல்லுகின்றவரை எதிர்த்தால் அது ஒரு ஜாதி மீதான விரோதமாம்.
இதே துக்ளக் சோ ராமசாமி, திராவிடர் கழகத் தலைவரிடம் பேட்டி கண்டபோது திராவிடர் கழகத் தலைவர் ஒரு கேள்வி கேட்டு மடக்கினாரே!
நீங்கள் உங்கள் சட்டையைக் கழற்றுங்கள்; நான் என் சட்டையைக் கழற்றுகிறேன் யார் முதுகில் ஜாதி சின்னம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற வினாவை எழுப்பியபோது விழி பிதுங்கி நின்றவர்தானே இந்த சோ ராமசாமி
எங்கள் வீட்டுப் பெரியவர்களை நான் அதிர்ச்சிக்கு ஆளாக்க விரும்பவில்லை என்று கூறித் தானே சமாளித்தார். இவர்கள் வீட்டுப் பெரியவர்கள் மகிழ வேண்டும் என்றால் நாம் எல்லோரும் வேசி மக்கள் ஆக வேண்டுமாம்.
இந்த லட்சணத்தில் பெரியார் ஒரு ஜாதிமீது வெறுப்புக் கொண்டார். என் றெல்லாம் எழுதுவது அசல் போக்கிரித் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
ஒரு சமூக அமைப்பில், அந்தச் சூத்திர, பஞ்ச மக்களுக்காக கல்வி வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் மற்றவர் களுக்கு உள்ளது போன்ற அனைத்து உரிமைகளும் சட்டப்படி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போராடினால் அது எப்படி துவேஷமாகும்?
அது மனித உரிமையாகும்.
இதனை எதிர்ப்பவர்கள்தான் துவேஷத்தின் ஊற்றுக் கண்ணாவார்; இன்னும் அந்த விடாப்பிடி வர்ண திமிரோடு இருக்கக் கூடியவர்கள் என்று பொருள்.
அதன் வடிவமாகத் தான் இன்று வரை சோ ராமசாமிகள் உருவங்களில் நடமாடிக் கொண்டும் இருக்கின்றனர்.
மற்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதாம். ஆனால் நிராதரவாக பிராமணப் பசங்கதான் இருக்கிறார்களாம். ரிட்டையரான பிராமண பென்ஷன்னர்கள் உதவ வேண்டும் என்று சொல்லும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரகேசரேந்திர சரஸ்வதி இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கம் யூனல் பேஸிஸில் பேசியாக வேண்டி யிருக்கிறது என்று சொல்லுகிறாரே! (தெய்வத்தின் குரல் - 3ஆம் பகுதி)
எல்லாவற்றையும் துறந்த ஒரு லோகக் குரு கம்யூனலாகப் பேசுகின்றேன் என்று ஒப்புக் கொள்கிறாரே _ இதற்கு சோவின் பதில் என்ன?
எல்லாவற்றையும் கடந்தவர்தானாம் -_ தான் ஒரு பிராமணன் என்பதைத்தவிர; இப்படிப்பட்ட யோக்கிதையில் உள்ளவர்கள்தான் பெரியாரைப் பார்த்துக் கம்யூனல் என்கிறார்கள்.
வாயால் சிரிக்க முடிகிறதா?
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்டீன் என்ற பாடிய திருமூலர் இனத் துவேஷியா?
இந்தியாவின் சமூகப் புரட்சியாளர்கள் நாராயணகுரு, மகாத்மா பாபூலே, அண் ணல் அம்பேத்கர் உள்பட அனைவரும் பார்ப்பனர் எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தனரே!
ஏன் - இவர்களின் விவேகானந்தர் பார்ப்பனர்கள்மீது வீசாத வெடி குண்டா?
சித்தர்கள் எப்படி?
சித்தர்கள் சுளுக்கு எடுக்கவில்லையா? மறைமலை அடிகள் கா.சு. பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் பார்ப்பனர்களை வெளுத்து வாங்கவில்லையா? அவ்வையார் நூலெனிலோ கோல் சாயும் என்று கூற வில்லையா?
கல் மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்? என்று விவேக சிந்தாமணி (பாடல் எண் 82) பாடவில்லையா?
வேமன்னா தோலுரிக்கவில்லையா? புத்தர் புரட்டி எடுக்க வில்லையா?
இவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் வைக்கப் போவதாக துக்ளக் கூட்டத்துக்கு உத்தேசம்?
நீங்கள் ஏன் ஆன்டிபிராமின் (Anti Brahmin) என்று திருவாளர் சோ கேட்ட கேள்விக்கு வீஆர் புரோ ஹீயுமன் (Pro Human) அதனால் ஆண்டி பிராமின் என்று பதில் சொன்னாரே தமிழர் தலைவர் கி.வீரமணி அதனை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.