திராவிடர் கழகத்திலிருந்து வெளி
யேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர் கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான வர்களை
யெல்லாம் தேடிப் பிடித்து அவர்கள் எல்லாம் தந்தை பெரியாரைப் பற்றி என்ன
சொன்னார்கள் என்கிற வீண்வேலையில் திருவாளர் கே.சி.லட்சுமி நாராயண
அய்யர்வாள் இறங்கி இருக்கிறார்.
க.. இராசாராம் திராவிடர் கழகத்தி லிருந்து
விலகி, தி.மு.க.வுக்குச் சென்று, அதன் பின் அதனை விட்டு அதிமுகவுக் குச்
சென்று, நால்வர் அணியில் சங்கம மாகி, கடைசியில் தி.மு.க.வுக்கே வந்து -
எல்லாவற்றையும் விட தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைப் பகுத்தறிவுக்
கொள்கைக்கே விரோதமாக சங்கராச்சாரி ஜோதியில் கரைந்தவர். அவரையெல் லாம்
இழுத்துக் கொண்டு வந்து இதோ பார் - இதில் இப்படி எழுதி இருக்கிறார் - அதோ
பார், அதில் அப்படி எழுதி இருக்கிறார் என்று காட்டுவதெல்லாம் அசல்
சிறுபிள்ளைத்தனமே!
பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், முதலில் பார்ப்பானை அடி! என்று தந்தை பெரியார் சொன்னாராம்.
எங்கே சொன்னார்? அப்படி சொன் னதாக எங்கே
இருக்கிறது? ஆதாரம் காட்ட முடியுமா? இப்படிசொல்லி இருந்தால் அது
பெரியாராகத்தானே இருக்கும் என்று குத்து மதிப்பில் எழுதி விடலாமா? அப்படி
பெரியார் சொல்லி இருந்தால் ஒரு பார்ப்பான் மிஞ்சியிருக்க மாட்டானே!
தந்தை பெரியார் நடத்திய போராட் டங்களைப்
பற்றி விமர்சிக்கப்பட்டுள் ளது. அதிலும் குழப்பம். சட்ட எரிப்புப்
போராட்டம் - தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் - காந்தி பட எரிப்புப்
போராட்டம் இவையெல்லாம் _ ஜாதி ஒழிப்புக்காகப் பெரியார் நடத்திய
போராட்டங்களாம்.
இந்தப் போராட்டங்களை பெரியார் அறிவித்து
இருக்கிறார் என்பது மட்டும் செவி வழிச் செய்தியாக அறிந்திருக் கிறார்கள்.
அவ்வளவுதான். எந்தப் போராட்டம் எந்த நோக்கத்துக்காக என்பதில் கூட அடிப்படை
அறிவு இல்லாமல் எழுதுகோல் பிடிக்கலாமா?
காந்தியாரின்மீது இன்று நேற்றல்ல - 1927
ஆம் ஆண்டிலேயே விமர்சனம் வைத்தவர் தந்தை பெரியார். 1927 ஆம் ஆண்டில்
பெங்களூரில் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் நேருக்கு நேர் விவாதம்
செய்து, காந்தி யாரின் வருணாசிரமக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தவர்.
1927 முதல் 1931 வரையிலான குடிஅரசு இதழைப் புரட்டிப் பார்த்தால் காந்தி யார் எதிர்ப்பு அலை அனல் காற்றாக இருக்கும்.
வருணாசிரமக் காவலர் வருகிறார். பகிஷ்கரியுங்கள் என்ற முழக்கங்கள் தமிழ் மண்ணைக் கலக்கின.
டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் அவர்கள்
ஜஸ்டிஸ் ஏட்டில் (8-_9-_1927) காந்தியாரின் வருணாசிரமக் கொள்கையை
எதிர்த்துத் தலையங்கமே தீட்டியுள்ளாரே! வருணாசிரம முறையைக் காப்பாற்றி
இந்து மதத்தை நாற்றம் எடுக்கச் செய்கிறார் காந்தி என்று எழுதவில்லையா?
காந்தியார் பட எரிப்பு என்பது அறிவிப்பு நிலையிலே இருந்ததே தவிர அதனைத் தந்தை பெரியார் நடத்திட இல்லை.
இந்தியத் தேசியக் கொடி எரிப்புப்
போராட்டம் (1_-8_-1955) என்பது ஜாதி ஒழிப்புப் போராட்டம் அல்ல - இந்தி யைக்
கட்டாயமாகத் திணித்தது பற்றியதாகும்.
உங்கள் நண்பர் ஈ.வெ.ரா. நடத்த இருக்கும்
தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித்
தடுக்கக் கூடாதா? என்று பிரதமர் நேரு கேட்டுக் கொண்டபோது கூட, ஈ.வெ.ரா.
எனக்குத்தான் நண்பர், இந்திக்கு நண்பர் அல்ல என்று முதல் அமைச்சர் காமராசர்
சொல்ல வில்லையா?
இந்தி திணிக்கப்படாது என்ற பிரதமரின்
உறுதி மொழியை பிரதமர் சார்பில் முதல் அமைச்சர் காமராசர் அளித்ததன் காரணமாக,
போராட் டத்தை ஒத்தி வைக்கிறேன் என்றுதான் தொலைநோக்கோடு தந்தை பெரியார்
கூறினார் என்பதை நினைவூட்டுகிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் (26-11-1957) என்பது ஜாதி ஒழிப்புப் போராட்டமே!
இலட்சோப லட்ச மக்களை தஞ்சை யில் கூட்டி (ஜாதி ஒழிப்பு - தனி மாநாடு) அதில் எடுக்கப்பட்ட முடிவு அது! (3-11-1957)
ஒரு சுதந்திர நாட்டில் ஜாதியைப்
பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? ஜாதி பாதுகாக்கப் படும்
நாட்டில் சுதந்திரம் இருக்குமா? இந்தக் கேள்விக்கு என்ன பதில்?
இந்திய அரசமைப்புச் சட்டம் 13(2), 25 (1)29 (1) (2) 368 பிரிவுகளைச் சுட்டிக் காட்டி, அந்தப் பகுதிகள்தான் அச்சிட்டு எரிக்கப்பட்டன.
அம்பேத்கர் சொன்னார் பெரியார் செய்தார்
சிலர் நான்தான் இந்த அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள்
நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்கு வதற்கும் முதன்மையான வனாக இருப்பேன்
நான்
அதை முற்றிலும் வெறுக்கிறேன் என்று ஆந்திர மசோதா பற்றிய விலவும்
மாநிலங்களவையில் நடந்தபோது (3.9.1953) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
கூறினார். சட்டத்தை உருவாக்கியவரே சட்டத்தை எரிப்பேன் என்று சொல்ல
வில்லையா? அம்பேத்கர் சொன்னார் _ பெரியார் செய்தார் இதில் என்ன குற்றம்?
இன்னும் சொல்லப் போனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய
காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான மக்கள் பிரதிநிதிகளால்
உருவாக்கப்படாத - மனுநீதியின் மறுபதிப்பு என்று கூறியவர் பெரியார்.
|
தந்தை பெரியார் இந்தப் போராட் டத்தை அறிவித்த கால கட்டத்தில், சட்டத்தை எரித்தால் என்ன தண் டனை என்று சட்டத்திலேயே இல்லை!
அவசர அவசரமாக தமிழ்நாடு சட் டப்
பேரவையில் நிறைவேற்றப்பட்டது - தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச்
சட்டம்(Prevention of Insult to National Honour Act,1957) என்று பெயர்.
அதன்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப் படலாம்.
தந்தை பெரியார் தயங்கினாரா? கருஞ்சட்டைச் சிங்கக் கூட்டம் அஞ்சியதா - பதுங்கியதா?
சிறைக்கஞ்சா சிங்கம் பெரியார் அவர்களின் கர்ச்சனை அறிக்கை இதோ:
நான்
மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும்
பிரிட்டீஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்தவிதமான கொடிய,
தீவிரமான அடக்கு முறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும்
கூட, அவைகளுக்குப் பயன்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத் தையோ மாற்றிக்
கொள்ளப் போவ தில்லை. நீங்கள் 3 ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட
வேண்டியதில்லை. பயந்து விடமாட்டீர்கள்.சட்டத்தைப் பார்த்து பயந்து
விட்டதாகப் பேர் வாங்காதீர்கள்.
ஆகவே இப்படிப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.
- (ஈ.வெ.ரா. விடுதமலை 8-11-1957)
எதிர்த்துக்கூட வழக்காட வில்லையே -
வேண்டாம் என்றாரே வெண்தாடி வேந்தர். ஆச்சாரியார் போல ஆகஸ்டு போராட்டத்தில்
அண்டர்கிரவுண்ட் ஆகவில்லையே!
நீதிமன்றத்தில் என்ன அறிக்கை கொடுப்பது? அதுகூட முன்கூட்டியே
தீர்மானிக்கப்பட்டதே. இதோ அந்த அறிக்கை:
26ந் தேதி கிளர்ச்சியில்
நீதிமன்றத்தில் கூறவேண்டியது
மேன்மை தங்கிய . . . . . . . . . . கோர்ட்டார் அவர்கள் சமூகத்திற்கு
வாதி: (போலீசார்)
எதிரி:
வழக்கு எண்: / 57
சமூகம் கோர்ட்டில் எதிரி வாசித்துக் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்:
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன்.
இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும் அதை உண்டாக்கிய மதத்துக் கும்
பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக
வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தை, திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும்
அறிகுறியாக இச்சட்டத் தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு
உரிமை யுண்டு. இதனால் எந்த உயிருக்கும் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால்
நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள
விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று
கருதப்பட்டால்அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத்
தயாராயிருக்கிறேன்.
இடம்:
தேதி: எதிரியின் கையெழுத்து
(விடுதலை 26-111957)
இப்படி ஒரு இயக்கம் உண்டா?
கர்ப்பிணிப் பெண்கள்கூட ஜாதி
ஒழிப்புக்காகச் சிறைக் கோட்டம் ஏகினரே! சிறையில் பிறந்த குழந்தைக் குச்
சிறைப் பறவை என்றுகூட பெயர் சூட்டப் பட்டதே!
சிறுமிகளும் தண்டனையிலிருந்து
தப்பவில்லையே! நீடாமங்கலம் பிரபசர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள்
செல்விக்கு இரண்டாண்டு தண்டனை. சென்னையில் உள்ள மைனர் பெண்கள் சிறைக்கு
அனுப்பப்பட்டனரே!
கலியபெருமாள், கோவிந்தசாமி ஆகிய இரு
சிறுவர்களும் தண்டனை பெற்று நெல்லை மற்றும் செங்கற்பட்டு சிறுவர்
சிறைகளுக்கு அனுப்பப்பட் டார்களே!
நேரு மாமா 3 ஆண்டு தண்டனை கொடுக்கச்
சொல்லியிருக்கிறார். ஏன் நீதிபதி மாமா ஆறு மாதம் தண்டனை
கொடுத்துள்ளீர்கள்? என்று நீதிபதியைப் பார்த்துக் கேட்ட இளைஞன் - கருஞ்
சட்டைக்காரன் என்று நினைக்கும் பொழுது இப்பொழுது நினைத்தால்கூட உணர்வுகள்
எல்லாம் சிலிர்க் கின்றனவே. இந்தப் போராட்டம் பற்றி ஜீவா அப்படி சொன்னார்.
இப்படி சொன்னார் என்பதெல்லாம் கவைக்கு தவாத ஒன்று.
ஜாதிக்கு ஆதாரமாக இருக்கிறது அரசமைப்புச்
சட்டம். அதனைத் திருத்து. இன்றேல் அதற்குத் தீதான் என் பது புரட்சிகரமான
சிந்தனைதானே! ஜீவா குறை கூறியிருந்தாலும் குற்றம் குற்றம்தான்.
பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.
எனும் நூலை தோழர் ஏ.எஸ்.கே. எழுதியுள்ளார். அந்நூலில் ஓரிடத்தில் (என்னுரை
பகுதியில்) குறிப்பிடுகிறார்.
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பல தடவை என்னிடம் கூறியுள்ளார்:
"நீங்கள் செய்யவேண்டிய வேலைகளை நான் செய்து வருகிறேன்.
அப்படி இருக்க ஏன் திரு . . . . என்னைத் தாக்கிக் கொண்டே இருக்கிறார்?
அதாவது, கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை,
இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலையல்லவா? நான்
அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவ்வாறிருக்க, கம்யூனிஸ்டுக் கட்சி என்னை
எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும்,
உருக்கமாகவும், பன்முறை கேட்டு வந்துள்ளார். இது முற்றிலும்
உண்மை.பெரியார் அவர்களைப் பற்றிச் சரியான கணிப்பு பல தோழர்களுக்கு இல்லை
என்பதுதான் என் கருத்து. இந்நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
தோழர் ஏ.எஸ்.கே.யின் இந்தப் பதில் தோழர் ஜீவாவுக்குப் பொருந்தும்தானே`!
ஜாதிகளை ஒழிக்க ஒரு போராட்டம் நடத்தப்
போவதாக அவர் (ஈ.வெ.ரா.) திடீரென்று அறிவித்தார். 1957 ஆம் வருட ஆரம்பத்தில்
நடந்த தேர்தலில் காமராஜ் தலைமையிலான காங்கிரசை ஆதரித்துத் தீவிரமாகப்
பிரச்சாரம் செய்த ஈ.வெ.ரா. அதே காமராஜின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 1957
நவம்பர் மாதத்தல் ஜாதி ஒழிப்புப் போராட்டம் என்ற ஒரு கிளர்ச்சியை
ஆரம்பித்தார் என்று துக்ளக் (19-_-10_-2011) சொல்லுகிறது.
ஒன்றைக் கூட உருப்படியாகத் தெரிந்து கொள்ளாமல் அரை குறையாக எழுதும் அரை வேக்காட்டுக் கவிச்சி தான் வீசுகிறது.
இந்தப் போராட்டம் இந்திய அரசமைப்புச்
சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிப்பதுதானே தவிர காமராசருக்கு
எதிரானதல்ல. அதனைப் போராட்டம் நடைபெறுவ தற்கு முன்பே தந்தை பெரியார் தெளிவு
படுத்திவிட்டாரே!
பொதுமக்கள் சட்ட எரிப்புப்
போராட்டத்துக்காக இன்றைய மந்திரிசபையையோ குறிப்பாக திரு. காமராசரிடமோ எந்த
விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை.(விடுதலை 6-_11-_1957)
என்று தெளிவுபடுத்தியுள்ள நிலையில் காமராசருக்கு எதிராக இந்தப்
போராட்டத்தை பெரியார் நடத்தினார் என்று எழுதுவது விஷமத்தனம் அல்லது
பூணூல்தனம்தானே! இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் வரை கடும்
தண்டனையைப் பல்லாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர் கள் குடும்பம், குடும்பமாக
அனுபவித்த நிலையிலும் - 20 பேர் இன்னுயிரை நீத்த பிறகும், அடுத்தடுத்து
வந்த 1962 மற்றும் 1967 பொதுத் தேர்தலிலும் காமராசரைத் தானே ஆதரித்தார்
தந்தை பெரியார். விவரம் புரியாமல் கிறுக்க வேண்டாம்.
தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு மசோதா,
தமிழ்நாடு சட்டப் பேரவை யில் 11-_11_-1957 அன்று விவாதிக்கப்பட்ட போது,
அண்ணாதுரை நேற்றைக்குப் பெரியாரின் பேருதவியைப் பெற்றீர்கள். இன்றைக்கு
அவரைப் பிடித்து அடைக் கத் துடிக்கிறீர்களே என்று கேட்டதாக தி.மு.க.
நாளிதழான நம் நாடு (17_-11_-1957) தெரிவித்தது.
ஈ.வெ.ரா. தேர்தலில் காங்கிரசுக்காகப்
பிரச்சார உதவி செய்தாராம். அந்த உதவியைக் காமராசரும், காங்கிரசாரும்
பெற்றுக் கொண்டார்களாம். இப்போது காமராசர் மீண்டும் முதல் அமைச்சர்
பதவியில் அமர்ந்து விட்டதும் ஈ.வெ.ரா.வைக் கைது செய்து சிறையில் அடைக்கத்
துடித்தாராம்! இவ்வாறு சட்டப் பேரவையில் அண்ணாதுரை பேசினார். அமைச்சர்
சுப்பிரமணியம் அவருக்கு உடனடியாகச் சுடச்சுடப் பதில் அளித்தார்.
அண்ணாதுரை வளர்ந்துவிட்டாரே, நம்மிடம்
ஒட்டிக் கொண்டிருந்தவர் இப்போது ஒரு கட்சியின் தலைவராகி விட்டாரே, கட்சி
உறுப்பினர்களோடு தேர்தலில் நிற்கிறாரே என வயிற்றெரிச் சலோடு, அண்ணாதுரையை
வீழ்த்துவ தற்காகத்தான் தேர்தலில் ஈ.வெ.ரா. தாமாக முன்வந்து காங்கிரசை
ஆதரித் தார். நாங்கள் அவரது ஆதரவைக் கோரவில்லை. இதைத் தேர்தலின் போதே நான்
தெரிவித்திருக்கிறேன் என்று சுப்பிரமணியம் பதில் அளித்தார்.
அண்ணாதுரை வாய் மூடி மவுனமாக அமர நேர்ந்தது என்கிறார் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்
(துக்ளக் 9-_10-_2011)
பெரியார் மீது சி.சுப்பிரமணியத் துக்குக்
கோபம் இருப்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதாகும். ராஜாஜி அமைச்சரவையில்
கல்வி அமைச்சராக இருந்து குலக் கல்வி திட்டத்துக்குக் கையொப்பம்போட்டவரும்
அவரே! காமராசர் முதல் அமைச்சர் ஆன நிலையிலும் கல்வி அமைச்சராக இருந்து,
அந்தக் கல்வித் திட்டத்தை ஊற்றி மூடு வதற்கும் கையொப்பம் போட்டவரும் அவரே!
அவ்வளவு அறிவு நாணயஸ்தர்அவர்.
அதனை திராவிடர் கழகம் விமர்சித்ததுண்டு.
ஆச்சாரியார் பதவி விலகி காமராசர் முதல் அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட
போது ராஜாஜியின் வாலாய் காமராசரை எதிர்த்து நின்ற நிலையில் பெரியாரின்
ஆதரவோடு காமராசர் வெற்றி பெற்றாரே -ஆத்திரம் இருக்காதா சி.சு.வுக்கு?
தந்தை பெரியார் குலக்கல்வித் திட்டத்தை
எதிர்த்ததும், காமராசர் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தெரிவித்து,
அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியதும் காமராசரைக் கல்வி வள்ளல் என்றும் பச்சைத்
தமிழர் என்றும், புகழாரம்சூட்டியதெல்லாம் தி.மு.க.வையும், அண்ணாவையும்
நினைத்துத்தானா?
சி.சு. உதிர்த்த அந்தச் சிறுபிள்ளைத் தனக் காய்களை எடுத்து சப்பரம் கட்டுகிறது துக்ளக்!
சி.சுப்பிரமணியம் கூற்றுக்கும், அதனை
எடுத்துக் காட்டி துக்ளக் சிலம்பம் விளையாடுவதற்கும் பதிலடி கொடுக்க
விடுதலை ஏடு தேவை யில்லை. அப்பொழுது அவாள் ஆத்து கல்கியே பதிலடி
கொடுத்துவிட்டதே! இதோ கல்கி பேசுகிறது:
திராவிடர் கழகத் தலைவர் திரு. ஈ.வெ.ரா.
திரு. காமராசரை ஆதரிப் பதற்குக் காரணம் திரு.அண்ணாத் துரைதானென்றும்,
நம்மக் கிட்ட வளர்ந்த பையன், இவன்தலைவனாவ தாவது, கட்சியமைத்துச் சட்ட
சபைக்குப் போவதாவது? இவன் கட்சி ஆட்கள்அதிகம் ஜெயித்தால் என்ன ஆவது? என்று
யோசித்து இவர்களைத் தோற்கடிக்கக் காமராஜ்தான் சரியான ஆள் என்று நினைத்து
அவரை ஆதரிப்பதாகப் பேசி வருகிறார். இவ்வாறு சி.சுப்பிரமணியம் சட்ட சபையில்
கூறினார்.
திரு.சி.சுப்பிரமணியம் மக்களின்
ஞாபகசக்தியில் நம்பிக்கையில் லாததனால்தான் இப்படிப் பேசி யிருக்கிறார்.
தி.மு.கழகமோ, அண்ணாத் துரையோ சட்டசபைப் பிரவேசத்தைப் பற்றிக் கனவில் கூட
நினைக்காத போதிலிருந்தே திரு.ஈ.வெ.ரா. திரு. காமராசரை ஆதரித்து வந்தார்.
திரு. காமராஜ் முதன் மந்திரியானதிலிருந்தே ஆதரித்து வந்திருக்கிறார்.
பச்சைத் தமிழன் ஆட்சி நடைபெறுகிறது என்று பெருமிதம் அடைந்தார். குடியாத்தம்
உபதேர்தலில் திரு. காமராசரை ஆதரித்துப் பேசினார்.
ஆதரிப்பதற்கு உண்மைக் காரணம் ஒரு
சாதியாரைப் பற்றிய வெறுப்பே. அதை மறைப்பதில் பயனில்லை. மேலிடத்தார்
வற்புறுத்தலுக்காக, ஈ.வெ.ரா. வின் பெயரில் நடவடிக்கை எடுத்தாலும் அதை முழு
மனதுடன் எவ்வளவு தூரம் அமுல் நடத்துவார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
(கல்கி _ 10_-11_-1957)
துக்ளக்குக்கு அவாள் ஆத்து கல்கி சவுக்கடி கொடுத்தால்தானே இதமாக இருக்கும்.
நாங்கள்
பெரியாரை ஆதரவு கேட்க வில்லை; அவராகத்தான் காங்கிரசை ஆதரித்தார் என்கிறார்
சி.சு. இது போன்ற வார்த்தை காமராசர் வாயி லிருந்து வருமா?
பெயரியார் நினைப்பதை நான் செய்கிறேன்
என்றவராயிற்றே காம ராசர். கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார்; காரியம் _
-காமராசர் என்று ஆனந்தவிகடன் எழுதவில்லையா? பெரியார் என்ற குயில் கொள்கை
முட்டையிட, அதனைக் காமராசர் என்ற காகம் அடைகாக்கிறது என்று கல்கி
கார்ட்டூன் போட்டதே - இவை யெல்லாம் துக்ளக் எழுத்தாளருக்குத் தெரியாதோ!
சி.சு.வைத் தூக்கிச் சுமந்தால் இந்தக் கெதிதான்!
குடுமிகளை வெட்டுதல், பூணூல் களை அறுத்தல்
போன்றவை கழகத் தலைமை திட்டமிட்டு, ஆணையிட்டு இயக்க ரீதியாகச்
செயல்படுத்தப்பட்ட வையல்ல. மற்றவர்களை இழிவு படுத்தும் இந்த ஜாதி ஆதிக்கச்
சின்னங்களை தன்மான உணர்வோடு எங்காவது சிதைத்திருந்தால் அது ஒன்றும்
குற்றமும் ஆகாது.
முஸ்தபா கமால்பாட்ஷா இத்தகு சீர்திருத்தங்களைச் செய்தவர்தான் - அதற்காக அவரை வரலாறு போற்றிட வில்லையா?
சுடுகாட்டில் கூட சூத்திரர்கள் பகுதி
என்று பொறித்திருந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமும்
இல்லை. சூத்தி ரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சொல்லுவது
எப்படிவன்முறை யாகும்?
- இன்னும் உண்டு.
-----------------
கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர் 15-10-2011,
No comments:
Post a Comment