Saturday, February 20, 2016
மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள உதவும் இந்தியத் தத்துவ மரபுகள்
1977ல் வெளியான பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்தியத் தத்துவ மரபும் இயக்கவியலும் எனும் நூல் பல்கலைப் பதிப்பகத்தின் மூலம் மீண்டும் நம் கைகளுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இயக்கவியல் குறித்த தமிழ் நூல்கள் மிகக் குறைவே. ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சிய மெய்ஞானம் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள எவ்வாறு துணை நிற்கிறதோ, அதேபோல் இந்திய தத்துவ மரபுகளை உள்வாங்கி மார்க்சியத்தை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.மனம், ஆன்மா, சாந்தி, பிரம்மம், முக்தி என பல்வேறு வார்த்தைகள் இன்றும் சத்குருக்களாலும், நித்தியானந்தர்களாலும், ஸ்ரீஸ்ரீக்களாலும் போதிக்கப்படுகின்றன. ஒரு பெருங்கூட்டம் அங்குதான் நிம்மதி விற்கப்படுவதாக நினைத்துக் கொண்டு படை எடுக்கிறது. தத்துவமும் ஞானமும் கூட ஏதோ வானத்தில் இருந்து கொட்டுவதாகவும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்ற பிற்போக்கான கருத்துக்களுக்கு எதிரான போராட்டம், இந்திய தத்துவ வளர்ச்சியின் தொடக்க காலம் தொட்டு இருந்துள்ளது. எல்லாம் மாறும் என்கிற கோட்பாட்டை பௌத்தமும், பொருள்தான் பிரதானம் என்பதை சாங்கியமும், அணு, அதன் இயக்கம், பிரம்மமோ, கடவுளோ உலக இயக்கங்களுக்கு காரணமில்லை என வைஷேசிகமும் கூறுகிறது. லோகாயதம் அதையும் கடந்து ஐம்பூதங்கள்தான் உலகிலுள்ள அனைத்திற்கும் மூலமான பொருள்கள், இதன் கூட்டுகளினால் உணர்வு தோன்றுகிறது. இவ்வுணர்வுதான் பிரபஞ்சத்தை அறிகிற ஆற்றல் என்கிறது. இந்திய தத்துவத்தில் இருந்த கருத்து முதல்வாத சிந்தனைகளுக்கு ஆரம்பகாலம் தொட்டு பொருள் முதல்வாதிகள் முன்வைத்த எதிர்வினையே மேற்கண்ட தத்துவ சிந்தனையாகும். இந்திய தத்துவத்தின் பொருள் முதல்வாத சிந்தனைகள் பதில் சொல்ல முடியாத அம்சங்களுக்கு மார்க்சியமும், வளரும் அறிவியலும் பதில் தருகிறது.தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் இன்று நேற்றல்ல, அது தொடர்ந்து நடந்து கொண்டேதான் உள்ளது. மார்க்சியத்தை எதிர்கொள்ள அமெரிக்கா சுமார் 130 தத்துவ வெளியீட்டகங்களை நடத்தி வந்தது என்று வானமாமலை தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று அனுபவங்களாலும், விஞ்ஞானப் புதுமைகளாலும் வளரும் மார்க்சியத்தை அந்தப் பொய் புனைவுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒன்பது இயல்களாகப் பிரித்து மார்க்சியம், லெனினின் பங்களிப்பு, இந்தியத் தத்துவம், இயக்கவியல் என அனைத்தையும் மிக எளிமையாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள முக்கியமான அம்சங்களை கேள்வி பதில் வடிவில் கீழே தொகுப்பதன் மூலம் தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இப்புத்தகத்திற்குள் நுழைய வழி கிடைக்கும் எனக் கருதுகிறேன்.
மார்க்சியம் ஏன் பிற்போக்குத்தனத்தை எதிர்க்கிறது?
மார்க்சியம், முன்னோக்கி வளர்ச்சி பெறாத, பின்னுக்கு இழுக்கிற எந்த சக்தியையும் எதிர்க்கிறது.
மார்க்சியம் முடிந்து போன ஒன்றா?
மார்க்சியம் வறட்டு சித்தாந்தம் அல்ல. அது செயலுக்கான வழிகாட்டி. மார்க்சிய கொள்கைகள் வளர்ச்சியடைய முடியாத இறந்து போன கருத்தல்ல. அது விஞ்ஞானத்தின் அஸ்திவாரம், அதைப் பல திசைகளில் சோசலிஸ்டுகள் வளர்க்க வேண்டும்.புதிய சமூக நிலைமைகளில் புதிய பிரச்சனைகளும், புதுமுறைப் போராட்டங்களும், பாட்டாளி வர்க்கத்தை எதிர்நோக்கும். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் வளர்த்தால்தான் அது ஜீவ சக்தியுள்ள சமூகத்தை மாற்றும் சக்தியுள்ளதாக அமையும்.
தற்போதைய அறிவு வளர்ச்சி பூரணமானதா?
நமது அறிவு பூரணமானது அல்ல. உண்மையை நெருங்கிச் செல்லுகிற தன்மையுடையது. நெருங்கி செல்லச் செல்ல, பொருளின் தன்மைகளைக் கண்டறிய முடியும்.
மதத் தீமைகளை எதிர்க்காமல், ஆளும் வர்க்கத்தை மட்டும் எதிர்த்தால் என்ன?
சமயம் பொதுவாக ஆளும் வர்க்கத்தோடுதான் சேரும். ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும்பொழுது சமயத்தையும் எதிர்க்க வேண்டி வரும்.
அனுமானம்-கற்பனை-கருத்து இவைகள் தானே மனித சிந்தனையை வளர்த்து புதிய பொருட்களை உருவாக்கஉதவுகிறது?
அனுமானத்தால் அனுபவ எல்லைக்கு உட்பட்டவற்றை மட்டுமே யூகம் செய்ய முடியும். வரம்பற்ற அனுமானங்களை அல்லாமல், பௌதிக நிரூபணத்திற்கு உட்பட்ட அனுமானங்களே நிரூபிக்கப்படும்.புறச்சூழ்நிலையே மனிதனின் உணர்வை உருவாக்குகிறது. எதிர்வினையை அது நிகழ்த்தும் போதே அது அறிவு பெறுகிறது. இயற்கை சூழலும், குடும்ப சூழலும், சமூக சூழலும்தான் ஒருவரது உணர்வை (கருத்தை) உருவாக்குகிறது. மேற்படியான சூழ்நிலைகளின் எந்த அனுமானமும் கருக்கொள்வதில்லை. உணர்வென்பது புற உலகின் அகவய படிமம்.
பொருள், கருத்து: எது முதன்மை?
பொருள் என்பது புறநிலையில் உள்ள எதார்த்தம். அது மனத்தைச் சார்ந்திராமல் சுதந்திரமாக இருப்பது. அது இருப்பதற்கு மனம் அவசியம் இல்லை. பொருள் புலன்கள் வழியாக அகவுலகக் கருத்தமைப்பாக மாறுகிறது. புறநிலை யதார்த்தத்தை நமது புலனுணர்ச்சிகள் அறிவதிலிருந்து பொருளைப் பற்றிய கருத்தமைப்பு உருவாக்கப்படுகிறது.
பொருள் - இயக்கம், காலம் - இடம்?
இயக்கம் என்பது பொருளில் இருப்பின் பொது இயல்பாகும். உலகில் எங்கும் இயக்கமற்ற பொருள் இல்லை. அது போலவே பொருள் இல்லாத இயக்கமும் இல்லை.உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் தவிர வேறெதுவும் இல்லை. காலத்திலும் இடத்திலும் தான் அவை இயங்குகின்றன. காலத்திற்கும், இடத்திற்கும் வெளியே பொருள் இருக்க முடியாது. அது போலவே பொருளுக்கு வெளியே காலமும், இடமும் இருக்க முடியாது.
மனிதனின் அறிவு வளர்ச்சி எதற்கானது?
ஒரு செயல் பொருளுள்ளதாகவும், நோக்கமுடையதாகவும் இருக்க வேண்டும். அறிவிற்காக மனிதன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை. புறவுலகை மாற்றுவதற்காகவே மனிதனுக்கு அறிவு தேவைப்படுகிறது. மனிதனது உணர்வு புறவுலகைப் பிரதிபலிப்பது மட்டுமல்ல, அதனைப் படைக்கவும் செய்கிறது. மனிதன் தான் வாழும் உலகைப் பற்றி திருப்தியடைவதில்லை தனது செயலால் அதனை மாற்ற முடிவு செய்கிறான்.இப்படி தத்துவம் குறித்து நமக்கிருக்கும் கேள்விகளை எழுப்பினால் அதற்கான அர்த்தம் பொதிந்த பதில்களை நா.வானமாமலை அவர்களின் இந்தியத் தத்துவ மரபும் இயக்கவியலும் என்கிற இப்புத்தகத்தில் கண்டடையலாம்.
இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்
ஆசிரியர்: நா.வானமாமலை
வெளியீடு: பல்கலைப் பதிப்பகம்
97/55,
என்.எஸ். கிருஷ்ணன் சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024பக்:192
விலை: ரூ. 100/-
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான கட்டுரை, வெளியிட்ட தீக்கதிருக்கும் உங்களுக்கும் நன்றி.
பேரா.நா.வா. தமிழர்களுக்குக் கிடைத்த ஒளிவிளக்கு. மற்றொரு ஒளிவிளக்காய் எழுதிக்கொண்டிருப்பவர் பேராசிரியர் அருணன். நன்றி
Post a Comment