வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, November 25, 2011

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

(உலக வரலாற்றில் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய - ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது. பத்தாயிரம் பேர் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்- மூவாயிரம் பேர் கைதானார்கள். அந்த நாளையொட்டி (நவம்பர் 26) இந்தக் கட்டுரை இங்கே.)

26-11-1957 இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலே எந்த அரசியல், சமூக, சமய சீர்திருத்தப் போராட்டத் தலைவனும் மேற்கொண் டிராத - உயர்ந்தது - புனிதமானது என்று கதைத்து வந்த இந்திய அரசமைப்புச் சட்ட நகலை எரிப்போம் வாரீர் என்று தன் மானத் தலைவர் தந்தை பெரியார் அறிவு ஆசான் அறைகூவல் விடுத்து மேற் கொண்ட அறப்போர் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு சரித்திர வரலாறு.

17-9-1968 ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் அறிவாசான் பெரியார் விடுதலை நாளிதழ் வெளியிட்ட அவர்தம் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் எழுதுகையில், எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்கள்) ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரஸில் கூப்பிட்ட உடன் சேர்ந் தேன். நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்.

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) எனும் பார்ப்பனரல்லா கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்காகத்தான். ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சியின் தலைமையை ஏற்றவுடன் அக்கட்சியின் கொள்கையாக இம்மூன் றையுமே ஏற்படுத்தி விட்டு அரசியலில் எலெக்ஷனில் (தேர்தல்) நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை, பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். காங் கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப் பட்ட போதும், பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியதும் இதற்காகத்தான்.

வெள்ளையன் போனபின்பு 1957இல் நடந்த தேர்தலின் போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்த போது என் கழகத்தில் இருந்து ஒரு வரைக் கூட நிறுத்தாமல் கம்யூனிஸ்டு களுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்துக் காங்கிரசைத் தோற் கடித்ததும் இதற்கு (என்னுடைய மேற் கண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

இப்படி வாழ்நாள் முழுமையிலும் 93 ஆண்டுகளும் சாதிப் பேய்க்கு எதிரா கவே, பகுத்தறிவு தழைக்கவே பாடுபட்ட தலைவர் இந்தியாவில் எங்குத் தேடினா லும் பெரியார் அய்யா ஒருவர் தவிர வேறு ஒருவரைக் காண இயலாது. அவருடைய போராட்டங்களின் உச்ச கட்டம்தான் அரசியல் சட்ட எரிப்பு. இது ஏன்?

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமா கின்றன. இது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச் சாரி முதல் எல்லோரும் எதிரிகள். நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியு மென்று எண்ணினோம். பிராமணாள் என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக் கூடாது; பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்று திட்டங்களை வைத்து முதல் திட்டத் திற்குக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650 பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள்.

இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். ராசகோபாலாச்சாரி சொன்னார். நாங்கள் எப்போது சொன்னோம். ஜாதி ஒழியவேண்டுமென்று எங்கே சொன் னோம்? என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு வனுக்கும் அவனுடைய ஜாதியை, மதத் தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கின் றான். ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம். அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்திரவாதம் அளித்திருக்கிறது.

இந்தச் சட்டம் இருக்கிறவரை ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் வரை,நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும் என்று கேள்வி கேட்ட அறிவு ஆசான், நம்முடைய சூத்திரத்தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா? என்று வினா எழுப்பியதோடு நின்றுவிடவில்லை.

8-10-1957 இல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் - தம் சொற்பொழிவில் முதல் போராட்ட அணுகுண்டை ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க அரசமைப் புச் சட்டத்தை, ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன் என்று அறிவித்த அவர், ஜாதி ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக் கிக் கொள்ளுங்கள்.

இளைஞர்களா கியிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்து போட்டு அனுப்புங்கள் என்றவர். ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மா யிருப்பது? உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங் கள் என்றார்.

இந்த முடிவுக்கு - அரசியலமைப்புச் சட்டத்தையே கொளுத்தும் முடிவிற்கு அவர் சென்றது, வந்தது ஏன்? ஜாதி ஒழிப்புக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவுக்குச் செய்தாய்விட்டது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லோ ரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஒத்துக் கொண்டவர்களும் வெளிப்படை யாகச் சொல்ல வாய்ப்பில்லை என்றாலும், ஜாதியொழிப்பை எதிர்க்க ஆளில்லை. 100-க்கு 97 பேரைப் பற்றிய காரியமாக உள்ளதால் ஜாதி ஒழியவேண்டுமென் பதற்கு எதிர்ப்புக் கிடையாது.

--- கட்டுரையாளர் முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், விடுதலை,25-11-2011

(தொடரும்)


Saturday, November 19, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (19) திருந்தி விட்டனரா பார்ப்பனர்கள்?

அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் பார்ப்பனர்களை விரட்ட வேண்டும் என்றார்; கிளியும் குயிலும் மாடப் புறாவும், மைனாவும் ஒரே சோலையில் உல்லாசமாக வாழும். ஆனால் வல்லூறு வட்டமிடக் கண்டால், அதுவும் நம்மைப் போல் ஒரு பட்சி தானே என்று கருதாது. வட்ட மிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதை அறியும்.

அதேபோலவே திராவிட பெருங் குடிமக்கள் தம்மில் சிற்சில வேறுபாடு கொண்டவராயிருப்பினும், ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூறையாடும் ஆரியருடன் (பிராமணருடன்) வாழ இசையார் என்று அண்ணாதுரை அவரது பத்திரிகையில் எழுதினார் அறிஞர் அண்ணா அவ்வாறு எழுதியதில் என்ன தவறு? இன்றைக்குக் கூட தமிழ் நாட்டு மக்களின் வாழ் வோடு எந்த வகையில் ஒன்றிப் போயிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.

மொழிப் போராட்டத்திலோ, கலாச்சாரப் போராட்டத்திலோ சமூக நீதிக் களத்திலோ, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்கும் உரிமைப் போரிலோ பார்ப்பனர்கள் ஒன்றிப் போராடியதுண்டா? போராடா விட்டாலும் பரவாயில்லை. குறுக்குச் சால் ஓட்டுவது - _ குதர்க்கம் செய்வது _- காட்டிக் கொடுப்பது என்கிற வட் டத்துக்குள்ளே தானே இருக்கின்றனர் -_ மறுக்க முடியுமா?

தமிழ் செம்மொழி அறிவிப்பு; தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, சேது சமுத்திரத் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சினை என்று ஒரு நீண்ட வரிசை யையே எடுத்துக்காட்ட முடியுமே!

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறவிருந்த அந்தக் கால கட்டத்திலே தினமணி (21.6.2010) என்ன எழுதிற்று?

செந்தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம் தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக, செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான். அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது! என்று தினமணி எழுதியதற்கு என்ன பொருள்?

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குத்தான் லாயக்கு என்று துக்ளக் (20.6.2010) இப்பொழுதுகூட எழுதவில்லையா?

விளம்பரப் பலகைகளில் தமிழில் இடம் பெற வேண்டும் என்றால் மொழி நக்சலிட்டுகள் என்று துக்ளக் எழுதுகிறதே! (15.9.2010)

கோவில்களில் தமிழில் வழிபாடு என்றால் மொழி ஆர்வமா? துவே ஷமா? என்று பற்களை நரநரவென்று கடித்துத் தலையங்கம் தீட்டுகிறாரே திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் (துக்ளக் 18.11.1998)

தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாக சொல்கிறாரே முதல் அமைச்சர் என்று கேள்வி கேட்டால் எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான் என்று கல்கி (27.1.2008) கதைக்கிறதே!

இப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டத்தோடு தமிழர்கள் எப்படி இணங்கி வாழ முடியும்?

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் இப்படி எல்லாம் துவேஷ நஞ்சைக் கக்குவார்களா?

இப்பொழுது கூட கேட்கிறோம். பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்று சொல்ல முடியாது -_ குறைந்தபட்சம் தமிழர்கள் என்று கூட சொல்வ தில்லையே! (தேவைப்பட்டால் சந்தர்ப் பவாதமாக அவர்கள் சொல்வது கூடும்!)

கழகம் என்றால் சூதாடும் இடம் என்று எழுதுவார். ஆனால் அண்ணா தி.மு.க.வில் கழகம் இருந்தால் அதற்கு வேறு வியாக்கியானம் கூறத் தயாராகவே இருப்பார் சோ.

பெரியாரும், அண்ணாவும் பார்ப் பனர்கள் பற்றி தாக்கி எழுதுவதாகக் குதிக்கிறதே துக்ளக்

நீண்ட காலத்துக்கு முன்புகூட போக வேண்டாம் சென்னை அண் ணாநகர் ஸ்ரீகிருஷ்ணா கார்டனில் இதே பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி (24,25-.12.2005) எப்படியெல்லாம் தமிழர்களுக்கு எதிராக வெறிக் கூச்சல் போட்டார்கள்?

அரிவாளைத் தூக்கிக் காட்டி மேடையில் எப்படி எல்லாம் வன்முறை நெருப்புத் துண்டங்களை அள்ளி வீசினார்கள்?

1967 பொதுத் தேர்தலில் ஆச்சாரி யாருடன் அண்ணா கூட்டுச் சேர்ந்தது பற்றியும் சிலாகித்துள்ளார் திருவாளர் லட்சுமிநாராயண அய்யர்வாள்.

பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக் கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஆச்சாரி யார் வேண்டுகோள் விடுத்தாரே _ அது எந்த அடிப்படையில்? ஆச்சாரியாரின் ஜாதி உணர்வை இன உணர்வை அது வெளிப்படுத்தவில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் ஆச்சாரி யாரோடு அண்ணா ஏன் தொடர்ந்து உறவு கொண்டாட முடியவில்லை? தேனிலவு முறிந்துவிட்டது என்று ராஜாஜி கூற நேர்ந்தது ஏன்?

சாணக்கியரின் ராஜ தந்திரம் அண்ணாவிடம் புறமுதுகு காட்டித் தோற்று ஓடி விட்டது என்று ஒப்புக் கொள்வார்களா? மாட்டார்கள்.
தி.மு.க. என்பது பெருங்காயம் இருந்த பாண்டம் அதையெல்லாம் துடைத்து எடுத்து விட்டேன் என்று ஆச்சாரியார் எழுதவில்லையா?

அப்படியா? நான் கண் ஜாடை காட்டினால் அவர்கள் (தி.மு.க.) என் பக்கம் வந்த நிற்பார்கள் என்று தந்தை பெரியார் சொல்லவில்லையா? கடைசியில் அதுதானே நடந்தது. பதவியேற்குமுன்பே தமது தலைவர் பெரியார் இருந்த திருச்சி -_ புத்தூர் பெரியார் மாளிகையை நோக்கித்தானே பறந்தார் அறிஞர் அண்ணா!

1971 தேர்தல் என்னாயிற்று? தி.மு.க. ஆச்சாரியாரோடு கூட்டுச் சேர வில்லையே!

சேலத்தில் திராவிடர் கழகம் நடத் திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை மய்யப்படுத்தி பார்ப்பனர்கள் ஆச்சாரி யார் தலைமையில் ஆரிய -_ திராவிடப் போராட்டத்தை நடத்தவில்லையா?

இறுதியில் திராவிடத்துக்குத் தானே வெற்றிமாலை 1967 தேர்தலில் தி.மு.க.வுக்கு 138 இடங்கள் என்றால், வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஆரியர் _ திராவிட போராட்டமாக நடந்த 1971 பொதுத் தேர்தலில் தி.மு.க. 183 இடங்களில் அல்லவா அபார வெற்றி பெற்றது!

இந்த நாடே ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளவில்லையா? இந்த நாட்டை விட்டே வெளியேறப் போவதாக கையொப்பமிட்டு எழுத வில்லையா? (கல்கி 4.4.1971)

அப்பொழுது முதல் அமைச்சர் கலைஞர் எவ்வளவு அழகாகச் சொன் னார்.

பார்ப்பனர் -_ பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் துவக்கினார். இப்போது ஆச்சாரியாரே துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே அம்சம் இதுதான் (3.3.1971) என்று குறள் போலக் கூறினாரே!

வி.பி. இராமன் பிராமணராக இருந்தாலும் நாவலரின் நண்பர் ஆனார். திமு.க.விலும் இணைந்தார் என்றெல்லாம் கல்கி எழுதுகிறதே -_ அந்த வி.பி. இராமன் ஏன் தி.மு.கவில் தொடர முடியவில்லை?

அவர் தி.மு.க.வுக்கு வந்து செய்த ஒரே காரியம் ஆச்சாரியாரையும் -_ அண் ணாவையும் சந்திக்கச் செய்ததுதானே? பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் இது போன்ற வேலை களைத் தான் செய்வார்கள்; அதைத் தான் அவரும் செய்தார். ஆனாலும் ஒட்ட முடியவில்லை. மாடப்புறாவும் மைனாவும் தானே ஒரு சோலையிலே வாழ முடியும் என்றுஅண்ணா எழுதியதை லட்சுமிநாராயணய்யர் இந்த இடத்திலும் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

பார்ப்பனர்கள் எல்லாம் சகோ தரத்துவம் பேசும் பேர் வழிகள்; திராவிடர் இயக்கத்தவர்கள்தான் பிராமணத்துவேஷிகள் என்பது போல பம்மாத்து செய்கிறார்களே!

1971 தேர்தலின் போது சென்னை தியாகராயர் நகரில் போட்டியிட்ட திருவாளர் கே.எம். சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் அவாளுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பியது என்ன?

இதோ படியுங்கள்.

பிராமண தர்மம் ஓங்குக!

பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்; இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!

ஸ்லோகம் சொல்வது போல் பெரிய வர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத் துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!

இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள லாம். தி.மு.க காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்?
நான்காம் வர்ணத்துக்காரன் சூத்திரன் ஆட்சி என்று அர்த்தம்!

அஸிங்கம் பிடித்த குடிசை, சேரிக் காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலை கிறார்கள், இந்த ஆட்சியில்!

அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக் களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே, அர்த்தம் என்ன?

சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே!

இப்படிச் சொன்ன பிறகு பிராமணர் களாகிய நாம் பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்க லாமா?

சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்தி ரர்கள் ஆட்சி வரலாமா? சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.

சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான ஸமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும். இந்த பிராமண புனருத்தாரணத்துக்குத்தான் ஸ்ரீசோ பாடுபட்டு வருகிறார்.

இந்த சூத்ரர்களால்தான் நமஸ்காரம் ஒழிந்து வணக்கம் பிரபலமானது.

பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் சூத்திரர்கள் எண்ணிக்கை அதிகம் தான். இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்ரர்கள் மனதை மாற்றி; நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும்.

காந்தியை கோட்சே ஏன் சுட்டான்? அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலிம்களுக்கு உதவ முயன்றதால்தான்! அதற்குப் பிறகுதான் ஆதரிப்போர் கொட்டம் கொஞ்சம் அடங்கியது. காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?

மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும். இந்த புனித காரியத்தில் ஜனசங்கமும் உதவுவார்கள்.

சூத்ரன் கொட்டம் ஒடுக்க - நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க பிராமண தர்மம் ஒங்க, - மிலேச்ச பாஷையான தமிழ் ஒழிய, -ஆரிய பாஷையான சமஸ்கி ருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்றுபடுங்கள்!
பிரியமுள்ள கே.எம்.சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்
இதற்கு என்ன பதில் திருவாளர் கே.சி. நாராயணன் அய்யர் அவர்களே!

தொடரும்

--- கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர்,19-11-2011


Tuesday, November 15, 2011

திமிர் பிடித்த தினமலரே....வேண்டாம், இந்த விஷப்பரீட்சை!

திமிர் பிடித்த தின மலர் தன் பூணூலை முறுக்கி விட்டுக் கொண்டு, சிண்டை ஒரு தட்டுத் தட்டிக் கொண்டு தமிழர்கள் மீது திட்ட மிட்ட வகையில் போர் தொடுத்தே விட்டது.

நேற்றைய தினமலர் (14-11-2011 - பக்கம் 2) செந்தமிழர்கள் இன் னும் கொந்தளிக்காதது ஏன்? என்று பெயர் போடாமல் செய்திக் கட்டுரை ஒன்றை 8 பத்தி தலைப்பிட்டு வெளியிட் டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஒருவர் தமிழராம். அவ ருக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து விட்டதாம். ஒரு தமிழர், அதுவும் தாழ்த்தப்பட்ட தமிழருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப் பட்டு விட்டதே - செந் தமிழர்கள் ஏன் கொந் தளித்து எழவில்லை என்று கேவலமான வகையில் கேலி செய்கிறது இனமலர் - இது ஒரு துக்ளக் பாணி கட்டுரை. துக்ளக்கில் புழுத்த இந்த வியாதி தின மலர், தினமணி என்று பரவிக் கொண்டிருக்கிறது.

எந்த உள்நோக்கத் தோடு இனமலர் இப்படி எழுதுகிறது என்பது எளி தாகப் புரிந்து கொள்ளப் படக் கூடியதே!

கற்பழித்த ஒருவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்ததையும், ராஜீவ் காந்தி கொலையில் சம் பந்தம் இல்லாதவர்களுக் குத் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டதையும் சம நிலையில் வைத்து கட்டுரை தீட்டும் தினமலரின் கொச் சைத் தனத்தைத் தமிழர் கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டதே!

அப்படியென்றால் கேரளாவில் தமிழர் ஒருவ ருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர் மானம் ஏன் நிறைவேற்றப் படவில்லை என்று இன மலர் எழுதுமா? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.

காரணம் தெரிந்ததே!

சங்கராச்சாரியார் சிறீரங்கம் மாமியிடம் பல மணி நேரம் அலைப்பேசி யில் பேசும், சல்லாபம், ஜொள்ளுகளைப் பற்றி ஒரு வரி எழுதுமா இந்த இன மலர் கூட்டம்? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.

காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்த காம காவிவேட்டி ஜாமீனில் இருக்கும்போதே கோயில் கும்பாபிஷேகம் செய்வது பற்றி ஒரே ஒரு வரியை எழுதச் சொல் லுங்கள் பார்க்கலாம். எழு தாது - எழுதவே எழுதாது.

காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடிக்கும் மர்மத்தைப் பற்றி, டீக்கடை பெஞ்சில் சிலாகிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். எழுதாது - எழுதவே முடியாது.

காரணம் தெரிந்ததே!

தமிழ், தமிழர் என்றால் இந்தப் பார்ப்பனக் கூட்டத் துக்கு அவ்வளவு இளக் காரம். புலியின் வாலை மிதிக்க ஆசைப்படுகிறார் கள். தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கிண்டல்.

பெங்களூரில் திருவள் ளுவர் சிலை மீது கல் லெறி யாமல் இருந்தால் சரி என்று தூண்டுதல் (துக்ளக்கில்).

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டானால் கத்தரிக் காய் விலை குறையுமா என்று கேள்வி.

தமிழர்களின் தோல் தடித்துவிட்டது என்று பார்ப்பனர்கள் நினைக் கிறார்கள் போலும்!

பார்ப்பனர்களுக்கு வெண்சாமரம் வீசிட தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் ஒரு சிலர் புறப் பட்டுவிட்டனர் என்கிற தைரியத்தில் தின மலர்கள் தினவெடுத்துக் கிளம்பிவிட்டதோ!

ஆட்சி மாற்றம் ஏற் பட்டு விட்டது என்ற நினைப்பில் அக்கிரகாரம் வீண் வம்புகளை விலைக்கு வாங்குகிறதோ!

வேண்டாம், இந்த விஷப்பரீட்சை!

ஆனானப்பட்ட ஆச்சாரியாரே துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று விரட்டப் பட்டார் என்பதை நினை வூட்டுகிறோம்.

தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டும்? உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தினமலர் எதிர் பார்க்கிறதோ?

--------விடுதலை, 15-11-2011


Saturday, November 05, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (17) ஆச்சாரியார் ஆகஸ்டு துரோகிதானே?

இனநலனைக் காட்டிக் கொடுக்கும் கோடரிகள் யார் இருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்கள் ஏதாவது கிறுக்கி நூலாக வெளியிட்டுள்ளார்களா? என அலைந்து திரிந்து தேடி, அதிலிருந்து பொறுக்கி தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் தாக்குவதாக நினைத்துக் கொண்டு ஏதோ எழுதித் தொலைக்கிறார் திருவாளர் லட்சுமிநாராயண அய்யர்.

இந்த இதழ் துக்ளக்கில் (2--_11-_2011) காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் கூறிவிட்டாராம். அது தமிழகக் காங்கிரசாரில் கணிசமானவர் களிடையே அதிருப்தியை உண்டாக் கியதாம். அந்தக் கணிசமானவர்கள் யார்? யார்? பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா?

கடைசிக் கடைசியாக அவாளுக்குக் கிடைத்தவர் திருவாளர் சி.சுப்பிர மணியம்தான்.

ஈ.வெ.ரா. எந்த அர்த்தத்தில் காமராஜரைப் பச்சைத் தமிழர் என்று சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.  காமராசர் பச்சைத் தமிழர் என்றால், நான் வெள்ளைத் தமிழனா? ஆர்.வெங்கட்ராமன் நீலத்தமிழரா? பக்தவத்சலம் சிவப்புத் தமிழரா? கக்கன் ஊதா தமிழரா? இதோ நிற்கிறாரே மாணிக்கவேலு நாயக்கர் இவர் மஞ்சள் தமிழரா? இப்படியெல்லாம் சொல்வது சரியில்லை என்றே எனக்குத் தோன்று கிறது.

நாங்கள் எல்லோரும் தமிழர்கள். உண்மையில் எல்லோரும் இந்தியர்கள். இதுதான் எனக்குத் தெரிந்த விளக்கம் என்று சுப்பிரமணியம் கூறினார்.
காமராஜரை மட்டுமே பச்சைத் தமிழர் என்று ஈ.வெ.ரா. கூறுகிறாரே? என்று ஒரு நிருபர் கேட்டார். அதுபற்றி அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார் என்றது துக்ளக் கட்டுரை.
எந்த அர்த்தத்தில் பச்சைத் தமிழர் என்று காமராசரை பெரியார் சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று சொன்னதாக முதல்வரியில் காணப் படுகிறது. இந்த நிலையில் அவர் சொன்னதை யெல்லாம் எடுத்துக் காட்டுவது வெட்டி வேலை என்பதல்லாமல் வேறு என்ன?

எனக்குத் தெரியாது என்கிறார் ; பிறகு பெரியாரைத் தான் அது பற்றி கேட்கவேண்டும் என்கிறார். அப்படிப் பட்ட மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா திருவாளர் லட்சுமிநாராயணர்?

அதுவும் ஆச்சாரியாரின் சீடரிடமா பெரியாரைப் பற்றிக் கேட்பது? ஆச்சாரியாரை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல், ஆச்சாரியாருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவிக்கு காமராசரை எதிர்த்து  சி.சுப்பிரமணியம்  போட்டி யிட்டபோது, காமராசருக்கு ஆதரவாக இருந்தார் பெரியார் என்ற கோபம் சி.சு.வுக்குக்கடைசி வரை இருந்து வந்ததே! அப்படிப்பட்டவருக்கு பச்சைத் தமிழர் என்று காமராசரைப் பெரியார் பாராட்டினால் பிடிக்குமா?

பார்ப்பனர்களுக்குக் கைத்தடியாக இருந்த அதே சி.சுப்பிரமணியம் கூட பார்ப்பான் - தமிழன் என்ற ஒரு முக்கியமான பிரச்சினையில் சிக்குண்டு மூச்சுத் திணறும் ஒரு சம்பவம் நடந்ததே!  பெரியார் பார்ப்பனர் பற்றி ஏன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதை அனுபவத்தில் சி.சு. அறிந்து கொண்டாரே!

சி.சுப்பிரமணியம் அவர்களின் சிபாரிசுப்படி தமிழ் நாடு அரசின் வழக் கறிஞராக அழகிரிசாமி அவர்கள் நியமிக்கப் பட்டபோது பார்ப்பனர்கள் ஆர்த் தெழுந்து அமர்க்களம் செய்தபோது சி.சுப்பிரமணியம் பூணூல் மகாத் மியத்தின் பூரணத்துவத்தைப் புரிந்து கொண்டாரே! கல்கி இதழில் கண்ட னங்கள் தெரிவித்து எழுதினாரே ராஜாஜி.

அரசு வழக்கறிஞராக்கப்பட்ட  அழகிரிசாமியை எதிர் காலத்தில் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க மாட்டோம் என்று உத்தர வாதம் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பன வழக்கறிஞர்கள் அமைச்சர் சி.சு.விடம் கோரிக்கை வைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கி எழுந்ததே!
அழகிரிசாமியின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

10-_8-_1960 அன்று மனு விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள். டி.வி.பாலகிருஷ்ண அய்யர் மற்றும் ஜி.ஆர்.ஜெகதீசன் அய்யர்.

ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட் டாலும் பார்ப்பன நீதிபதிகள் சன்ன மாக தங்கள் விஷக் கொடுக்கைக் காட்டினர் தீர்ப்பில்.

அழகிரிசாமி நியமனம் செய்யப் படுவதற்கு சட்ட அமைச்சர் சி.சுப்பிர மணியம்தான் முழுக் காரணம். ஜனநாயக அரசு இயங்கும் நாடுகளில் நியமனங்களில் தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு சலுகை காட்டுவது சகஜம் தான். அழகிரிசாமியின் பெயர் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால், அதைக் குடியரசுத் தலைவர் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பில் அடங்கி யிருந்த மணி வாசகமாகும்.
நீதிபதியின் வாசகங்கள், அரசு வழக்கறிஞர் நியமன விஷயத்தில் சட்டமன்றத்தின் உரிமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளன. ஆகவே நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் தாக்கீது (Notice) ஒன்றைக் கொடுத்தார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.லாசர்.

இது நீதிபதியை அவமதிக்கும் செயல் என்று வழக்குரைஞர் ராமச்சந்திர அய்யர் எனும் பார்ப்பனர் புதிய ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக சபா நாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. 7-_10_-1960 அன்று சபாநாயகர் உயர்நீதி மன்றத்துக்கு வருமாறு கூறப்பட்டு இருந்தது.  அரசமைப்புச் சட்டத்தின்படி என்னை யாரும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று சபாநாயகர் யூ.கிருஷ்ணராவ் கறாராகக் கூறிவிட்டார்.
சி.சுப்பிரமணியனாருக்கு பார்ப்பன நஞ்சின் டிகிரி என்பது எத்தகையது என்பது அப்போதுதான் புரிந்தது.

பச்சைத் தமிழர் காமராசர் என்றால் அங்கு நிறப் பிரச்சினை கிடையாது. பச்சையான உண்மை, பச்சையான பொய் என்று சொன்னால் இந்த இடத்தில் என்ன பொருள்? கறுப்பு, சிகப்பு, மஞ்சள், வெள்ளை என்ற அர்த்தத்திலா? தமிழில் ஒரு பொருள் பன்மொழி, பல் பொருள் ஒரு மொழி உண்டே!
காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக் கும் (ராஜாஜிக்கும்) காமராசருக்கும் இடையே நடைபெற்ற சண்டை ஒன்றும் இரகசியமானதல்லவே! காந்தியார் வரை சென்று சிரித்த விவகாரம்தானே அது.

ஆகஸ்டு துரோகி என்று அழைக்கப் பட்ட ஆச்சாரியார் வழக்கம் போல கொல்லைப் புற வழியாக அகில இந்திய காங்கிரஸ் வழியாக காங்கிரசில் நுழைந்த போது, மதுரை திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற (31-10-1045) காங்கிரஸ் மாநாட்டில் (காமராசர்தான் காங்கிரஸ் தலைவர்) கல்தா கொடுக்கப்படவில்லையா?

அந்த மாநாட்டுக்குத் தம்மை காமராசர் அழைக்க வேண்டும் என்று ராஜாஜி கெஞ்சவில்லையா?

திருச்செங்கோடு தாலுகா காங்கிரஸ் கமிட்டியினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் ராஜாஜியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப் பினராக தேர்வு செய்தது செல்லாது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதே!

1942 முதல் 1945 வரை ராஜாஜி ஆங்கிலேய ஆட்சிக்கு எப்படியெல் லாம் விசுவாசமாக இருந்தார் என்பதெல்லாம் நாறிப்போன சங்கதி யாயிற்றே!
இந்த யோக்கியதையில் ஆச்சாரி யாரை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுவதும், நீதிக்கட்சியை வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவான கட்சி என்று பிலாக்கணம் பாடுவதும் அவாளின் பாச உணர்வுக்கும், மோச உணர்வுக்கும் முறையே எடுத்துக் காட்டுகள் ஆகும்.

ஆச்சாரியாருக்கும் காமராசருக்கும் இடையே நிலவி வந்த இந்தப் போராட்டத்தின் பின்னணியையும், ஆச்சாரியார் 1952 இல் வழக்கம் போல கொல்லைப்புற வழியாக சட்டப் பேரவையில் நுழைந்து முதல அமைச்சர் ஆன நிலையையும், ஆட்சியில் அமர்ந்த பின், அசல் அக்கிரகாரப் புத்தியோடு, மனுதர்ம நோக்கத்தோடு அவர் ஆட்சி செய்ததையும், வருணாசிரம திட்ட மானகுலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததையும், தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்து முறியடித்த வரலாற்றையும், அதன் காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு ஓடிய நிலை யையும், அதனைத் தொடர்ந்து காம ராசர் முதல் அமைச்சர் ஆனதை யும், பார்ப்பன வட்டாரங்கள் காம ராசரைக் கடுமையாக விமர்சித்ததையும், காமராசர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்விப் பாட்டையை  கண்ணை மூடிக் கொண்டு திறந்துவிட்டதையும் முறை யாகத் தெரிந்து வைத்திருந்தால், பெரியார் பச்சைத் தமிழர் காமராசர் என்று சொன்னதற்கான அழுத்தமான வரலாற்றுப் பின்னணியும், காரணமும், காரியமும் கண்டிப்பாகத் தெரிந்து விடுமே!

(அது குறித்தும் மேலே பேசுவோம்)

---- விடுதலை ஞாயிறு மலர்,05-11-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]