வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 27, 2011

திராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதி - பாரதிதாசன்

பாரதிதாசன் என்றால் அவர் ஒரு கவிஞர் _ பெரியார் பற்றாளர் _ பகுத்தறி வாளர் என்கிற அளவில் தான் நம் கழகத் தோழர்கள் உட்பட பலராலும் பொதுவாக அறியப்பட்டுள்ளார்.

அதையும் தாண்டி அவர் ஒரு இயக்கவாதியாக கருஞ்சட்டைத் தளபதியாக _ திராவிடர் கழகச் சீரிய போர்வாளாக இருந்தார் என்பதுதான் உண்மை.

தொடக்கத்தில் ஆன்மீகவாதியாக இருந்தவர்தான் இந்த கனக சுப்பு ரத்தினம்.

புதுவை மாநிலம் காரைக்காலை யடுத்த நிரவியில் ஆசிரியராக இருந்த போது மயிலாடுதுறையில் (1928-இல்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் உரையை முதன் முதலாகக் கேட்ட மாத்திரத் திலேயே இவர்தான் நம் தலைவர்; நமக்குரிய மய்யக் கருத்து இவரிடம் கிடைத்து விட்டது! என்ற உணர்வு பெற்று, அதுவரை அவர் மண்டைக்குள் புதைந்திருந்த பழைய பத்தாம் பசலி புராணக் குப்பை மேடுகளை ஒரு நொடியில் தூக்கி எறிந்தார் _ பெரியார் தொண்டர் ஆனார்!

மயிலம் சுப்பிரமணிய துதியமுது களைப் பாடிக் கொண்டிருந்த இந்தப் புலவனின் எழுதுகோல் அது முதல் புரட்சிப் படைப்புகளைப் பிரசவிக்க ஆரம்பித்தது. புராணப் புலவன் புரட்சிக் கவிஞன் ஆனதன் தொடக்கம் இதுதான்.

உண்டென்பார் சிலர்
இல்லை என்பார் சிலர்
எனக்கில்லை கடவுள் கவலை

என்ற நோக்கில் (Agnostic)இருந்த கவிஞர் நாளடைவில் தந்தை பெரியார் அவர்களின் நுட்பமிகு கருத்துக் கருவூ லங்களை அசை போட்டு அசல் நாத்தி கன் ஆனார்..

1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட்சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.

கடவுள் இல்லை என்பான் யாரடா?
தில்லை கண்டு பாரடா!

என்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக

இல்லை என்பேன் நானடா - அத்
தில்லை கண்டு தானடா!

என்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதி தாசன்.

பாடல் பெறும் பொருள்களிலே கடவுள் ஒன்று;
பாடலெல்லாம் கடவுளுக்கு என்று இருக்கு மட்டும்
பாடலிலே புதுப்பாங்கும், புதுக் கருத்தும் பல்பொருளின்
நல்லழகும் உயர்வும் இந்த நாடு பெறல் முடியாது...
தன்னிலூறும் நல்நூற்றுக் கவிஞரும் தோன்ற மாட்டார்
மாடுகளும் வழக்கத்தால் செக்குச் சுற்றும்
மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்

என்று தந்தை பெரியாரின் கருத்து அடிச்சுவட்டில் தன் கொள்கைப் பயணத்தைத் தொடங்கினார் புரட்சிக் கவிஞர்.

சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கமானார். இதோ கவிஞர் எழுதுகிறார்:

அலைக் கூட்டத்தைக் கடல் என்பது உன் பிழை. நட்டுப் பார்ப்பதைவிட்டு நிமிர்ந்து நோக்கு; கடல் தெரியும். அது எத்தனை பெரிது; எத்தனை ஆழ முடையது; எத்தனை தெளிவுள்ளது; சமத்துவமுடையது; விடுதலையுடையது! சுயமரியாதைக் கடல் -_ மற்றொரு முறை கூறுகின்றேன்; அது பெரு நோக்க முடையது; ஆழ்ந்த கருத்துக்களுள்ளது. சமத்துவமும் விடுதலையுமுடையது.. சுயமரியாதைக் கொள்கையின் அளவு உன் கருத்தைப் பரப்பு; நீ அறிஞரால் அறிஞன் என்று கருதப்படுவாய்; அப்போது நீ ஓர் குள்ள மனிதனாய் இருக்க வழியில்லை; நீ பேரறிஞன் (பாரதிதாசன், புதுவை முரசு 27.4.1931) புரட்சிக் கவிஞர் குயில் இதழை நடத்தினார். அதில் திராவிடர் கழகச் செய்திகளை வெளியிட்டார்.

சாதி ஒழிக _ தமிழ்நாடு மீள்க என்னும் உயிர் மருந்தே கொள்கை யாகக் கொண்டு தமிழர் மானங் காக்கும் பெரியார் இயக்கத்தில், தி.க. இயக்கத்தில் உண்மைப் பற்றுடைய வர்கள் மட்டும் குயிலை எழுத்தால் பிற வகையால் ஆதரித்தால் போதும், அக்கொள்கையை இனி ஆதரிக்க எண்ணுவோரும் எழுதும் எழுத்துகள் வரவேற்கப்படும்
_ (குயில் 22.7.1958)
தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய இயக்கச் செய்திகளை சுருக்கமாக எழுதியனுப்புக. செய்திகளை அஞ்ச லட்டையில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.

குயில் 15.7.1958

கழகத் தோழர்களுக்கு புரட்சிக் கவிஞர் கட்டளை!

நன்றே செய்க! அதையும் இன்றே செய்க!

திராவிடர் கழக நிர்வாகிகள் (மாவட்ட ஒன்றிய, நகர) எப்படி துரிதப் பணி புரிதல் வேண்டும் என்பதை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமது குயில் ஏட்டில் எழுதியுள்ளார். இப்போதும் அது நமது பொறுப் பாளர்களுக்கு தேவை என்பதால் கீழே தருகிறோம்).

எந்த வட்டாரத்தில் திராவிடர் கழகக் கொள்கை பரவவில்லை? அந்த வட்டாரத்தில் விரைவில் பணி தொடங்குதல் வேண்டும்.

எந்த வட்டாரத்தின் தலைவரிட முள்ள உறுப்பினர் பட்டியல் குறுகலாய் இருக்கின்றது? -_ அந்தத் தலைவர் அப்பட்டியலை விரிவுபடுத்த வேண்டும்.

எந்தப் பகுதியில் கழகக் கொடி பறக்கவில்லை? _ அங்குக் கழகக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியில் விடுதலை பரவவில்லை? _ அங்கு விடுதலையைப் பரப்பக் கண்ணும் கருத்துமாய்ப் பணி செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியில் கழகக் கொள்கை பற்றிய நூற்கள் பரவவில்லை? _ அங்கு நல்லெண்ணத்தோடு பொறுப்போடு பரப்ப வேண்டும்.

இப்படியெல்லாம் நாம் கூறுவதால், எந்த வட்டாரத் தலைவரும், உறுப்பினரும் வருத்தப்பட மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

இன்று இந்த உலகத்தில் திராவிடர் கழக உறுப்பினர் போன்ற தன்னல மறுத்த தவத் திருவாளர்களைக் காண முடியாது. உடல், பொருள், ஆவி மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழர்களின் பொது நலத்திற்கு அளித்த - அளிக்கின்ற தவத்திருவாளர்களைப் பெரியார் விலாப் புறத்திலன்றி வேறு எங்கு காண முடியும்?

இத்தகைய மேன்மைப் பண்புடையவர்கள் சிறிது சோர்வு கண்டு நினைவுறுத்தினால், வருத்தமா அடைவார்கள்? மகிழ்ச்சியல்லவா கொள்வார்கள்!

ஒரு வட்டாரத்தில் கூட்டம் நடக்கிறது இருபத்தையாயிரம் பேர் ஆர்வத்தோடு ஆடாமல் அசையாமல் இருந்து கேட்கின்றார்கள். கூட்டம் முடிகிறது. அந்தக் கூட்டத்தைக் கூட்டிய வட்டாரத் தலைவரை நோக்கி, உங்கள் தலைமையின் கீழ் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? என்று கேட்டால் _ அவர், நான் ஒருவன் தான் இருந்து தொண்டு செய்து கொண்டிருக்கின்றேன் என்கிறார். இன்னும் சில தலைவர்கள் அய்ந்து பேர் பத்து பேர் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

உறுப்பினர் கணக்கு இப்படியானால், கழகக் கொடிக் கணக்கு எப்படி என்றால் நல்ல பார்வையான இடத்தில் பல கட்சிகளின் கொடிகள் காட்சியளிக்கின்றன. தி.க. கொடி எங்கே என்றால் கொடி எதற்கு என்று திருப்பிக் கேட் கிறார்கள். கொடிக் கணக்கு இப்படியானால், விடுதலைக் கணக்கு எப்படியென்றால், தலைவரை நோக்கி, இந்த ஊர்ப் புகைவண்டி நிலையத்தில்தான் விடுதலை கிடைக்கவில்லை. இங்கிருந்தால் ஒன்று கொடுங்கள் என்றால் (ஏஜெண்டு) முகவர் இந்த ஊரில் இல்லை என்கின்றார்

இந்த நிலைக்கு அந்தந்த வட்டாரத் தலைவருக்கு நாணம் இருக்க வேண்டாமா? தலைவர் என்போரும், கழக உறுப்பினர் என்போரும், இரவு வரக் கண்டவுடன், இன்று நாம் கழகத்திற்கு _ கழக வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?

(ஆதாரம்: 1.7.1958 குயில் புதுவை)
இந்த அளவுக்குக் கழகச் செயல்பாட்டில் நேரடியாகப் புரட்சிக் கவிஞர் ஈடுபாடு கொண்டார் என்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும். புதுப்போர் என்னும் தலைப்பில் புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இதோ:

புதுப்போர்

சாதி ஒழிய வேண்டும் என்பதும்
தமிழக விடுதலை வேண்டும் என்பதும்
குள்ளக் கருத்தா? வெள்ளம் போன்ற
தமிழர் நலத்துக்குத் தக்கன அன்றோ?
ஒழியாச் சாதி ஒழிய வேண்டும்
தமிழகம் அடிமை தவிர்தல் வேண்டும்
இன்னும்இக் கொள்கை எல்லாத் தமிழரின்
கொள்கை அன்றோ? இந்தக் கொள்கை
வெல்லு மாயின் எல்லாத் தமிழர்க்கும்
அல்லல் தீரும் இழிவும் அகலும்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
தமிழ்ப்பெரு மக்களே, சற்று எண்ணுமின்;
பெரியார் சொன்னார் பெரியார் ஆதலின்!
அரிய இவற்றை அவரை அல்லால்
எவரால் இங்கே சொல்ல முடிந்தது?
எவர்தாம் இதுவரை சொல்ல லானார்?
சொன்னார் பெரியார் என்பது மட்டுமா?
செய்தார் பெரியார் செய்வார் பெரியார்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
ஆயிரம் ஆண்டுகள் அகன்றன! வரலாறு
சாகவில்லை இருக்கக் கண்டோம்.
அவ்வர லாற்றில் ஓர் தமிழர் தலைவனைக்
கண்டதுண்டோ? காதுதான் கேட்டதா?
பெற்றோம் இன்றுதான் பெறற்கரும் பேற்றை!
பெற்றோம் இன்று தான் பெரியார் தம்மை!
அன்புடையீரே அறிவுடைத் தமிழரே
பெரியார் எண்பது வயதும் பெற்றார்
இருக்கும் போதே விடுதலை எய்தலாம்
கட்சி வேண்டாம் கலகம் வேண்டாம்
எப்பிரி விற்கும் ஆட்படல் இன்னலே!
எல்லா மக்களும் இரும்புக் குண்டுபோல்
ஒன்று படுதல் வேண்டும் இன்றே!
நன்று பெறுதல் வேண்டும் அனைவரும்!
திராவிடர் கழகம் சிறிய தன்றே,
அஃது பெரியார்க் குரிய தன்றே,
சாற்றுவேன்: அஃது தமிழரின் உடைமை!
பொதுவாம் இயக்கம்! பொதுவாம் நிறுவனம்
அங்கி ருந்து கிளம்பும்! அரும்போர் நிறுவனம்!
பொதுப்போர்! புதுப்போர்! எழுக எழுக!

திராவிடர் கழகம் சிறியதன்று -_ அது தமிழரின் உடைமை என்று கூறுகிறார் புரட்சிக் கவிஞர்.

கழகத்தைப்பற்றிப் பாடிய புரட்சிக் கவிஞர் கழகக் கொடியைப் பற்றியும் பாடி மகிழ்கிறார்.

வைகறை இருட்டையும் செங்கதிர் நகைப்பையும்
திராவிடர் மணிக்கொடி குறிக்கும்!
வாழ்விருள் தவிர்ப்பதோர் தனிப் பெரும் புரட்சியை
வரவேற்றல் கொடியின் நோக்கம்!
துய்யபன் னூறாயி ரந்திரா விடமக்கள்
கொடிநெடுந் தறியினைச் சூழ்ந்தே
தோய்கருஞ் சட்டையால் துயருளங் காட்டியும்
சுடர் விழிகள் நாளின்மேல் வைத்தும்
எய்யகோ வாரிரோ திராவிட மக்களே
ஆனஉம் மானத்தைக் காப்பீர்
அடிமையினை மிடிமையினை மாற்றுவீர் என்னவே
அழைத்தனர் இதை மறுத்தே
வையகம் எதிர்க்கட்டும்! அதிகார மக்கள்தாம்
வாட்படை யொடும்வரட்டும்
வன்சிறை இதோஎன்று காட்டட்டும்! திராவிடம்
மீட்பதெம் குறியாகு மே!

புதுச்சேரியில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது (1.10.1944).

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்கள் பங்கு கொண்டனர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்பட பெண்கள் ஏறி வந்த குதிரை வண்டி கலகக் காரர்களால் தாக்கப்பட்டனர். விரைந்தார் புரட்சிக் கவிஞர் 100 பேர்கள் கொண்ட கலகக் கும்பல் புரட்சிக் கவிஞரைத் தாக்கியது (கலைஞர் அவர் களும் இம்மாநாட்டின் போது தாக்கப்பட்டார்).

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட் டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1957 நவம்பர் 26) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் முதல் மூன்றாண்டு வரை கடுங் காவல் தண்டனை ஏற்றனர். பலரும் சிறையில் செத்தும் மடிந்தனர்.

கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழி வாளர்கள் எல்லாம் சிறைப்பட்ட அந்தக் கால கட்டத்தில் தமிழ்நாடெங்கும் ஜாதி ஒழிப்பு மாநாடு கள் நடைபெற்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அத்தகு மாநாடுகளில் எல்லாம் பங்கேற்று சங்கநாதம் செய்தார். கடலூர் கி. வீரமணி, (அப்பொழுது அப்படித்தான் அழைக்கப்பட்டார்) டாக்டர் இரா. இராசமாணிக்கனார் ஆகியோர் அந்தக் கால கட்டத்தில் கழக மாநாடுகளில் பங்கேற்று கழகத்தில் தொய்வு விழாமல் பாடுபட்டனர்.

திருச்சிராப்பள்ளியில் 19.1.1958 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் புரட்சிக் கவிஞர் உரையாற்றினார்.

ஆதிக்கமில்லாத ஆட்சியொன்றே சுதந்திரம் ஆகும். அந்நியன் வெளியேறினால் மட்டும் போதாது; மக்கள் பிரதிநிதிகளால் வகுக்கப்பட்ட சட்டங்கள்தாம் மதிக்கத்தக்கவை. தமிழராயினும், முஸ்லிம், கிறித்தவராயினும் எல்லோரும் - _ இந்நாட்டின் தூய மக்களே ஆவர். பிறவியில் உயர்வு தாழ்வென்பது பயித்தியக்காரத்தனம்.

இதை நீக்கி தமிழர் பொது நலம் காணுவதே பெரியாரின் இயக்கம். அவர் முறைப்படி சாதிக்கு வழிகாணும் அத்தனை ஏடுகளும் திருத்தப்பட அன்றி எரிக்கப் பட வேண்டும். புரோகிதர் ஆட்சி ஒழிந்து மக்கள் நல ஆட்சி மலர வேண்டும்

(விடுதலை 25.1.1958) என்று அம்மாநாட்டுத் தலைமை உரையில் கர்ச்சித்தவர் நமது கவிஞர் பெருமான்.

வ.வெ.சு. அய்யரை வாங்கினார்!

புதுவையிலே ஒருநாள் சுப்பிரமணிய பாரதி, வ.வெ.சு. அய்யர், பாரதிதாசன் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு வந்த அவர்களின் நண்பர் கிருட்டினசாமியின் கையிலே அப்பொழுது வந்த ஐஸ்டிஸ் பத்திரிகை இருந்தது. அதைக் கையில் வாங்கிய வ.வெ.சு. அய்யர் ஒரு புரட்டு புரட்டி விட்டுச் சொன்னார். என்ன கிருஷ்ணா! உத்தியோகம், பொருளாதாரத் துறைகளில் பிராமணரல்லாதார் முன்னேறி, பிராமணருடன் சமநிலை அடைய வேண்டும் என்பதுதானே ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம். பிராமணரல்லாதார் அந்தச் சமநிலையை அடைய முயலும் காலமெல்லாம் பிராமணர்கள் சும்மாவா இருந்து விடுவார்கள்? அவர்களும் முன்னேறிக் கொண்டு தானே இருப்பார்கள்? எனவே, எக்காலத்திலும் பிராமணரோடு சமநிலை அடைய முடியாது! என்று அய்யர் கூறிவிட்டுச் சிரித்தார்.

அப்பொழுது பாரதிதாசன் நல்ல துடிப்பான இளைஞர். அவரால் பொறுக்க முடியவில்லை _ பொங்கி எழுந்து வெடுக்கென்று கன்னத்தில் அறைவதுபோல் கூறினார்:

பார்ப்பனரல்லாதார் மிகப் பெரும்பாலோர்; அவர்கள் உண்மையை உணர்ந்து அடிதடியில் கிளம்பி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று வீரமுடன் கேட்டார். பாரதியின் முன்னிலையிலேயே நடந்த நிகழ்ச்சி இது.

பாரதிதாசனின் இன உணர்ச்சிக்கும் சுயமரியாதை உணர்வுக்கும் தந்தை பெரியார் அவர்களின் விழுமிய தொண்டர் என்பதற்கும் சிறந்து எடுத்துக்காட்டு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக _ முத்தாய்ப்பாக _ திராவிடர் கழகம் இருக்கையில் தமிழா, உனக்கு ஏன் வேறு ஒரு கட்சி _ இயக்கம்? என்று புரட்சிக் கவிஞர் எழுப்பும் வினாவின்மூலம் அவர் அப்பழுக்கற்ற திராவிடர் கழக மாவீரர், கறுஞ்சட்டைத் தீரர் என்பது விளங்கும்.

இதோ அந்தப் பாடல்:

உனக்குமா ஓர் இயக்கம்? - அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழ்நா டென்று பேர்வை என்றார்
வரலா றில்லை என்றான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம்பெரியார் இயக்கம் இருக்க உனக்குமா ஓர் இயக்கம்?
காங்கிரசுக் காரா உனக்குத்
தமிழன் என்று பேரா?
தீங்கிழைக்கும் தில்லி காலைச்
சேருவது உன் சீரா?
உனக்குமா ஓர் இயக்கம்?
தனியுடைமை பழித்தாய் - இது
வரைக்கும் என்ன கிழித்தாய்?
இனிய தமிழை அழிக்கும் தில்லியை
ஏத்தி வாலைக் குழைத்தாய்
உனக்குமா ஓர் இயக்கம்?
பார்ப்பானுக்குப் பிள்ளை நீ
தமிழர் நலத்தில் நொள்ளை
பார்ப்பான் கொள்ளை தனில் அசைக்க
முடியுமா ஓர் எள்ளை?
உனக்குமா ஓர் இயக்கம்?
செட்டுத் தமிழர் நெல்லை - சேர்த்தான்
மலையாளத்தின் எல்லை
கொட்டம் அடிக்கும் ஆட்சித் தொல்லை
குறைக்க உன்னால் ஆவ தில்லை
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழரசி கூலி - இங்கே
உனக்கு மென்ன சோலி?
தமிழ் ஒழிப்பானோடு கூடி
தமிழைச் செய்தாய் கேலி!
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழ் பெருமை துணித்தான் - இந்தி
தமிழகத்தில் திணித்தான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம் பெரியார் இயக்கம் இருக்க
உனக்குமா ஓர் இயக்கம்?
நாம் தமிழர் தானா - இல்லை
நல்ல தலைக்குப் பேனா
ஏந்தியகை இட்ட கையை
ஒடிப்பதுவே கொள்கை ஆனால்
உனக்குமா ஓர் இயக்கம்?

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
(குயில் 3.3.1959)


இதற்கு மேலும் ஆதாரம் தேவையா _ புரட்சிக் கவிஞர் கடைந்தெடுத்த இயக்கவாதி என்பதற்கு? திராவிடர் கழகத்தின் தீர மிக்க தளபதி என்பதற்கு?

----- விடுதலை,ஞாயிறு மலர் (27-04-2011)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]